Contact Us

Name

Email *

Message *

Tuesday 22 October 2013

சந்திரசேகரம் - Vol 4

விஜயவாடா அன்பர்களிடம், ‘தேவைப்படும்போது பணத்தை வாங்கிக் கொள்கிறேன்’ என்றார் பெரியவர். ஆனால், அவர்கள் செய்து வைத்திருந்த தங்கக் கிரீடத்தை அப்படித் தட்டிக்கழிக்க முடியவில்லை. அந்தக் கிரீடத்தை தன் சஷ்டியப்த பூர்த்திக்கான ஒரு கௌரவமாக கருதி, அதை அவர் ஏற்றுக்கொள்ள சம்மதித்துவிட்டார்.

இது ஒரு ஆச்சரியமான விஷயம்தான். பணத்தை வேண்டாமென்று மறுத்த இந்த உத்தமத்துறவி, பொன்னுக்கு மட்டும் எப்படி சம்மதித்தார்? ஒருவேளை தங்கத்தின்பாலான பற்றுதல் இவரையும் விடவில்லையோ என்றுதான் நம்மை எண்ணவைக்கும்.

ஆனால், அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள், பொருளும் பொன்னும் அவருக்கு ஒன்றே என்பதை நிரூபிப்பது போல் அமைந்துவிட்டன.
‘ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவர் ஞானியர்’ என்பது சான்றோர் வாக்கு.

அதாவது, தங்கள் கைவசம் உள்ள பிச்சைப் பாத்திரமாகிய திருவோட்டைப் போன்றதுதான் தங்கமும். தங்கம் என்பதற்காக மயங்கிவிடுவதோ, இல்லை அது ஒரு உலகப்பணம் என்று கருதி, பாளம் பாளமாக அடுக்கி வைத்துக் கொள்வதெல்லாம் பேராசையின் விளைவுகள்.

பேராசை எல்லாம் பெரியவரிடம் ஏது?

ஓராசையைக் கூட அவரிடம் தேடினாலும் பார்க்க முடியாதே? அன்பர்கள் செய்து தந்த அந்த தங்க கிரீடத்தை அவர் தன் பொருட்டு ஏற்கவில்லை. அதை சூட்ட வைதீக பெரியவர்கள் தாயாரான போது, அவர்களை சற்று தடுத்து நிறுத்திவிட்டு, தன் முன் இருந்த ருத்ராட்ச மாலை ஒன்றை எடுத்து, சிரசின் மேல் வேகமாக தரித்துக் கொண்டார் பெரியவர். அதன்பின் அவர்களை கிரீடத்தை வைக்கப் பணித்தார். அந்த தங்கக் கிரீடமும், சிரசின் மேல் உள்ள ருத்ராட்ச மாலை மேல் ஜம்மென்று அமர்ந்துகொண்டது.

அதாவது கிரீடம் அவருக்கல்ல;

சிவாம்சமான ருத்ராட்சத்துக்கு…!

சொல்லாமலே எல்லோருக்கும் புரிந்துவிட்டது. அந்த கிரீடம் அவர் சிரசின் மேல்தான் இருந்தது. ஆனால், அவர் மேனி மேல் படவேயில்லை. அதன்பின் அவர் பேசியதுதான் சிலிர்க்க வைக்கும் விஷயமாகும்.

‘தினந்தோறும் பக்தர்கள் வந்து எனக்கு தேங்காய் பழம் காணிக்கை செலுத்துகின்றனர். ஏராளமான புஷ்பமாலைகள் துளசி, வில்வம் என்று சமர்ப்பணம் செய்கின்றனர். இதுபோக, பண்டிதர்கள் புகழ் மொழிகளை தலை குளிரக்குளிர மாலையாகவே போடுகிறார்கள். கவிஞர்களும் பாமாலை சூட்டுகின்றனர். இதெல்லாம் போதாதென்று கனகாபிஷேகம், தங்கக் கிரீடம் என்று தங்கள் அன்பை என்மேல் பொழிகிறார்கள்.

இவற்றை எல்லாம் பெற, எனக்கு என்ன யோக்யதை இருக்கிறது என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். துறவி என்றால், எல்லாவற்றையும் துறந்தால்தானே அவன் துறவி?

துறவி என்று சொல்லிக்கொண்டு, இவைகளை எல்லாம் ஏற்றுக்கொள்வது எந்த வகையில் சரி? இந்த கேள்விக்கு எனக்கு விடை கிடைத்தது. இங்கே என் முன் வைக்கப்படும் எதுவும், எனக்கானதே அல்ல. சங்கரர் என்று எனக்கொரு சன்யாசப் பெயர் இருக்கிறது பாருங்கள்… அதுதான் காரணம்!

இந்த சங்கர நாமம், ஆதிசங்கர பகவத் பாதாளின் புண்ணிய நாமமாயிற்றே? அந்த ஒன்றுக்காகத்தான் இத்தனை மரியாதைகள்!

அவர் எப்படிப்பட்டவர்? ஸ்ருதிகள் எல்லாம், ஸ்மிருதிகள் எல்லாம், புராணங்கள் எல்லாம் அவருக்குள்ளே அடக்கம். சகல ஜீவராசிகளிடமும் பாகிற கருணை முழுதும் அவருக்குள் அடக்கம். அப்படிப்பட்டவரின் வழியில் அவர் பெயரை கொண்டிருப்பதற்காகவே, எனக்கு கனகாபிஷேகம் நடக்கிறது. தங்க கிரீடமும் சூட்டப்படுகிறது.

அவர் பெயரை வைத்துக்கொண்டிருப்பதற்கே இத்தனை பெருமை என்றால், அவர் வகுத்து தந்த வழியில் நடந்தால் நித்தமும் பொன்மாரியல்லவா பொழியும்?’

பெரியவரின் இந்தக் கேள்விதான் என்னை வெகுவாக யோசிக்க வைத்தது.
அவர், சங்கரர் வழியில் தான் நடந்து, தானும் சங்கரராக ஆகிவிட்டதுபோல் பொருள் தரும்படியாக, எங்கேயும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ஆனால், சங்கரர் வழியில் அவர் நாளெல்லாம் நடந்ததை இந்த உலகம் நன்கு அறியும்.
ஒருவேளை, தான் நடப்பதை தன் வாயால் கூறுவது சரியல்ல என்கிற பண்பாட்டில் அவர் கூறாமல் விட்டிருக்கலாம். ஆனால், அவரிடம்தான் எத்தனை தன்னடக்கம் – ஜாக்கிரதை உணர்ச்சி!

இப்படி தனக்கான மரியாதை மதிப்பு ஆதிசங்கரரை உத்தேசித்தே என்று கூறியவர், அடுத்து சொர்ணமாகிய தங்கம் பற்றிக் கூறியதுதான் உச்சபட்ச சிறப்புடையதாகும்.

‘அறம் பொருள் இன்பம் வீடு என்று மனித வாழ்க்கைப் பயன்களாக நான்கு உள்ளன. இவற்றைப் புருஷார்த்தங்கள் என்பார்கள். அவற்றில் இப்போது பண்ணுகிற கனகாபிஷேகம் வெறும் பொருளான (அர்த்தமான) தங்கத்தால் மட்டுமே செய்யப்படுவதாக இருக்கிறது.

ஆதிசங்கரர் வழி நடந்தாலோ, நம் மீது தங்கமழை மட்டுமல்ல; தர்மமழை, இன்ப மழை, மோஷ மழை என்று எல்லாமே பெய்துவிடும். நம்மீது மட்டுமல்ல; இந்த உலகில் உள்ள எல்லோரின் மீதும் பொழியும்.
இந்த உலகத்து தங்கம் அத்தனை விஷேசமானதில்லை. ஜென்ம விடுதலைக்கு இது பயன்படாது. ஆனாலும், இது மங்களமான ஒன்று. இருந்தாலும் இது பெரும்பாலும் படாடோபம், பவிஷூ, பொறாமை, பேராசை என்கிற உணர்ச்சிகளுக்கும், ஆசையை தூண்டி அனர்த்தம் பண்ணு வதற்கும்தான் பயன்படுகிறது. இருந்தும், இதை உயர்வாக சொல்லக் காரணம், இது தாதுப்பொருளிலே உச்சமாக – கருத்து விடாமல், எப்போதும் ஒளியோடு இருக்கிறது. ஆகையால்தான் மனசில் ஒளியோடு உத்தமமாக திகழ்கின்றவர்களை தங்கமான மனுஷன் என்கிறோம். மனசுக்குள் ஒளி தரும் கருத்துக்களை யாராவது சொன்னால், ‘தங்கமான உபதேசம்’ என்கிறோம். அவ்வளவு ஏன்? நமக்கு கிடைத்த காலத்தையே பொன்னாகத்தானே கருதச் சொல்கிறோம்.

இதனால்தான், நம் ஜென்ம விடுதலைக்கு பயன்படும் விஷயங்களையும் உயர்வான பொன்னாக கருத வேண்டியிருக்கிறது.
அவ்வகையில்தான் தர்மமும் அர்த்தமும் காமமும் மோஷமும் கூட பொன்னாகி விடுகின்றன. அதாவது, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்குமேகூட பொன் போன்றவைதான்.

ஆனால்…’ என்று ஒரு இழு இழுக்கிறார் பெரியவர். இந்த ‘ஆனாலு’க்கு பிறகு, அவர் சொல்லப்போவதில்தான் பெரும் பொருளும் இருக்கிறது.
‘எப்படி இந்த மண்ணில் தோண்டி எடுக்கப்படும் தங்கம், மண்ணோடு மண்ணாக கிடந்தால் பிரயோஜனமில்லையோ, அப்படி இந்த அறம், பொருள், இன்பம் வீடும் அதற்கான முடிவை காணாவிட்டால் பிரயோஜனமில்லை.
அதாவது நம்மிடம் பொருள் இருக்கிறது – அது தர்மத்துக்கு பயன்பட்டாலே அந்த பொருள் பொன் போன்றாகும். அதை நாம் சுயநலத்தோடு சேர்ப்பது பாவம்.

அந்தத் தர்மத்தையும் அளவறிந்து செய்ய வேண்டும். இதை உத்தேசித்தே ‘ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு’ என்றனர். இல்லாவிட்டால், எல்லாம் இழந்து பிச்சை எடுக்கும் நிலை வரலாம்.

எனவே, பொருளாகிய வஸ்து தர்மம் புரியப்படுவதால் அறமாகிறது. அதை அறிவோரும் புரிவோரும் செய்யும்போது தான் அர்த்தம் உண்டாகிறது.

அடுத்து காமம். துறவிகள் சகலத்தாலும் ஒதுக்கவேண்டிய உணர்வு. ஆனால், உலகத்துக்கு தேவைப்படுகிறது. இது இல்லாவிட்டால் மனிதப் பிறப்பு எப்படி தொடர முடியும்? ஆக அதற்காக இது தேவை. ஆனால், இதைக் குடும்ப வாழ்வில் சாஸ்திர பூர்வமாக ஒரு கட்டுப்பாட்டோடு பயன்படுத்தும்போது இந்த காமமும் பொன்னாகி விடுகிறது. இதை ஒரேயடியாக அடக்குவதற்கும், அனுபவித்து அடக்குவதற்கும் வித்தியாசமுண்டு. துறவி இதை ஒரேயடியாக அடக்க வேண்டும். அது கருதியே பால்யகாலம் தொட்டே, துறவு நிலை பூணப்பட்டு உடம்பிலும், அது முளையிலேயெ கிள்ளப்படுகிறது. இது துறவிக்கான தர்மம். இதை அவன் மீறினால் பாவம்.

லௌகீகவாசிகளுக்கு இல்லறம் மூலமாக இது பேணப்படுகிறது. பெண்கள் இதை கற்புநெறியோடு ஒழுகியும் ஆண்கள் தங்களை ஸ்ரீராமனாக வரித்துக் கொண்டும் வாழ்ந்திட இது அழகாய் வெளிப்பட்டு, அழகாகவே அடங்கியும் விடுகிறது. பின் மோட்சம் அடைவதும் சுலபம்.

இப்படிப் பார்த்தால் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கும் பொன்தானே?’ - கேட்கிறார் பெரியவர். 

என்ன ஒரு ஆழமான பார்வை. என்ன ஒரு ஆனந்தமான விளக்கம். ஒரு தங்கக் கிரீடம், அறம், பொருள், இன்பம், வீட்டுக்கே நமக்கு தங்கமாய் பொருள் கூறிவிட்டதே…?!

இப்படி போகிற போக்கில், பெரியவர் கூறிய கருத்துக்களில் சத்தியமும் உண்மையும் ஜொலிக்கின்றன. இப்படிப்பட்டவர் எங்கேயும் தன்னை ஒரு சத்தியத் துறவியாகவோ, பெரும் ஞானியாகவோ, தன் வாயால் கூறிக் கொண்டதேயில்லை!

ஆனாலும் என்ன… இவரின் தவசீலம், நம் போன்ற அறிவுள்ள மனிதர்களை மட்டுமல்ல ஓரறிவு, ஈரறிவு உயிர்களையும் கவர்ந்து இழுத்தது என்பதுதான் ஆச்சரியமான விஷயம். அது ஒரு அதிசயமான சம்பவமும்கூட!
ஒருமுறை, தம் யாத்திரையில் ஒரு கிராமத்தில் பெரியவர் தங்க நேர்ந்தது. அங்கே மடத்துக்கு சொந்தமான நிலத்தில் அந்த வருடம் அமோகமாக கடலை விளைந்திருந்தது. குத்தகைதாரர் அவ்வளவையும் அறுவடை செய்து விற்றும் விட்டார். பெரியவரின் தரிசனத்தின்போது, மகிழ்வோடு அதை குறிப்பிட்டார். அப்போது அவருக்கு படைப்பதற்காக எல்லாவிதமான பழங்களுடனும், முந்திரி, கற்கண்டு போன்ற பதார்த்தங்களுடனும் பலர் காத்துக் கொண்டிருக்க, அவைகளை ஏறெடுத்தும் பாராமல், அந்த நிலத்தில் நன்கு விளைந்ததாக சொன்ன கடலையில் ஒரு கைப்பிடியை ஆசையாகக் கேட்டார் பெரியவர்.

குத்தகை விவசாயி ஆடிப்போய்விட்டார்.

இப்படிக் கேட்பார் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை.

அதேசமயம், அவ்வளவையும் விற்று விட்டதால் கைவசமும் கடலையில்லை. இது என்ன சோதனை என்று அவர் தவித்தாலும், அவருக்குள் ஒரு உபாயம் தோன்றியது. ‘இதோ போய் கொண்டு வருகிறேன்’ என்று ஓடினார். திரும்பி வரும்போது, ஒரு கைப்பிடி என்ன பல கைப்பிடி கடலை அவரிடம்! அதில் ஒன்றை எடுத்து பெரியவர் பார்த்தார். அந்த ஒன்றில் ஒரு ஓரமாய் எலி கொரித்தது போன்ற அறிகுறி. உடனேயே கேட்டார் பெரியவர்: இது பறிச்சதா? கொரிச்சதா?” என்று…!



நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)



No comments:

Post a Comment