Contact Us

Name

Email *

Message *

Sunday 13 October 2013

பெரியவாளைப் பார்த்த பிரஞ்சு பேராசிரியர்கள்

அன்று காலையில் தான் நமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய ஜனாதிபதி ஆ.ர். வெங்கட்ராமன் அவர்கள் காஞ்சீபுரத்தில் ஸ்ரீமடத்தில் பரமாசார்யாளை தரிசித்துவிட்டு அவர்களது ஆசியைப் பெற்று சென்றிருந்தார்கள். ஆசார்யாள் சற்று ஓய்வு கொண்டிருந்தார்கள். ஸ்ரீ மடத்துக்கு வந்தவர்கள் எல்லாம் ஜன்னல் வழியாக தரிசித்துவிட்டு சென்று கொண்டிருந்தனர். நானும் பரமாசார்யாளை ஜன்னல் அருகில் நின்று தரிசித்துவிட்டு வெயில்தாழக் கிளம்பலாம் என்று ஒரு ஓரமாக அமர்ந்திருந்தேன். மாலை சுமார் 4 மணியிருக்கும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ள பிரஞ்சு பேராசிரியர்கள் பெரியவாளை தரிசிக்க இப்பொழுது வரப்போகிறார்கள் நீங்கள் இருந்துவிட்டுப் போங்களேன் என்றார் ஸ்ரீமடத்தில் இருந்த ஒருவர். அதுவும் நல்ல யோசனை தான் என்று தங்கினேன்.

சில நிமிடங்களுக்குள்ளாக எதிர்பார்த்த பேராசிரியர்கள் வந்தனர். அவர்கள் வந்ததை பெரியவாளிடம் சொல்லச் சென்ற ஒருவர் பெரியவாளை பார்க்க அவர்கள் வரலாம் உங்களையும் பெரியவாள் கூடவரச்சொன்னார்கள் என்றார். எனக்கும் பெரும் மகிழ்ச்சி. உடன் சென்றேன். பெரியவாள் எளிமையே உருவாக தரையில் அமர்ந்திருந்தார்கள். தரிசிக்க வந்த பேராசிரியர்கள் ஐந்து பிரஞ்சு பேராசிரியர்களையும் எதிரில் அவர்கள் வசதிக்கேற்ப அமரும்படி கூறினார்கள். என்னை தமக்கு அருகில் வந்து அமரும்படி சைகை செய்தார்கள். பெரியாவாள் கூறுவதை அவர்களுக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்லும் பணி எனக்கு கிடைத்தது.

வந்த மேலை நாட்டார்களில் மூவர் பெண்கள், இருவர் ஆண்கள். அவர்களின் தலைவராக வந்தவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்திருப்பதாகவும் பெரியவாளைத் தரிசித்திருப்பதாகவும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையால் வந்திருப்பதாகவும் கூறினார். பெரியவாள் சிரித்துக் கொண்டே ஒவ்வொருவருடைய பெயரையும் அவர்கள் எந்த துறையில் பேராசிரியர்களாகத் திகழ்கிறார்கள் என்பதையும் கேட்டறிந்து கொண்டார். வந்தவர் ஒருவர் தத்துவ பேராசிரியர், மற்றவர் (லைப்ரரி சயின்ஸ்) நூலகத் துறையிலும் அடுத்தவர் பல்வகைக் கல்வி ஒப்பாய்வுத் துறையிலும், மற்றவர் பொதுத்துறையிலும், இன்னும் ஒருவர் தத்துவத்துறையிலும் பேராசிரியர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் தங்கள் துறைகளைக் கூறிவரும் போது பெரியவர்கள் சட்டென்று அவர்களில் ஒரு பெண்மணியை பார்த்து நீங்கள் இத்தாலியிலிருந்து வந்தவர்களா என்று கேட்டார். அந்த பெண்மணிக்கோ ஆச்சர்யமாகப் போய்விட்டது. அவர் பிரஞ்சுநாட்டு பாரீஸ் மாநகரைச் சார்ந்தவர். அங்கு பேராசிரியை. அப்படி இருக்கும் போது ஏன் இப்படிக் கேட்கிறார் என்று எண்ணினேன். அந்த பெண்மணி கூறிய பதில் எங்களை வியப்பில் ஆழ்த்திவிட்டது. எங்கள் முன்னோர்கள் இத்தாலியை சார்ந்தவர்கள் தாம் என்றார். அடுத்து பெரியவாள் கேட்ட கேள்வி மேலும் எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

பாரீஸுக்கு வடக்கில் லுக்ஸம்பர்க் என்ற நகருக்கு தெற்கில் வாழ்ந்தவர்களா என்று கேட்டார். அந்த பெண்மணி ஆச்சர்யத்தில் மூழ்கி தன்னுடன் வந்தவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து ஆமாம் என்று கூறினார். இதற்கு முன் இப்பெண்மணி இந்தியா வந்ததே இல்லை. அப்பெண்மணியைப் பற்றி யாருக்கும் தெரியாது. அப்படியிருக்க பெரியவாள் எப்படி பிரான்சு ஜெர்மனி நாடுகளின் அமைப்பையும் இந்தப் பகுதிதான் என்று வரையறுத்துக் கூறம் பாங்கையும் பார்த்து வாய்புதைத்து நின்றோம். எங்கள் முகபாவங்களை பார்த்து பெரியவாளே அது எப்படி என்று விரித்து உரைத்தார்.

இத்தாலி நாட்டினர்க்கும் பாரிஸ்ஸில் வடக்கே லுக்ஸம்பர்க்கும் தெற்கில் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் தலைக்கேசம் கருப்பாக இருக்கும். இத்தாலியர்கள் லத்தீன் மொழியினால் உச்சரிப்பு ஒருவிதமாக இருக்கும் என்றார்கள். அதைக்கேட்டு அந்த பெண்மணி ஆமாம் ஆமாம் என்று வேகமாகத் தலையை ஆட்டியது பெரியவர்கள் கூறியது எவ்வளவு பொருத்தம் என்று புலப்படுத்தியது. காஞ்சீபுரத்தில் ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் பெரியவர்கள் உலகில் எங்கிருந்து வந்தாலும் எம்மொழி பேசினாலும் இந்தப் பகுதியிலிருந்து வந்தவர் இந்த மொழிப் பிண்னணி கொண்டவர் என்று சொல்லும் பாங்கையும் பார்க்கும் போது வேத காலத்தில் அனைத்தையும் அறிந்த மகரிஷிகள் இருந்தார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம் அந்த மகரிஷிகள் எல்லாம் ஒருங்கே இணைந்து இன்று பெரியவர்கள் உருவில் ஒப்பற்ற பரமஞானியாக திகழ்வதை உணர்ந்தேன். நான் இத்தாலி, ஜெர்மனி, பிரான்சு முதலிய நாட்டினருடன் பழகியிருக்கிறேன். அவர்களில் ஒருவர் கூட தங்களின் இச்சிறப்பு பற்றி இவ்வளவு தெளிவாக அறிந்திருக்கவில்லை. நானே இந்த நாடுகளுக்கு பல முறை சென்றிருக்கிறேன் எனக்கு இது தெரியவே தெரியாது.

பிறகு பெரியவாள் தத்துவத்தை படித்தால் இக்காலத்தில் என்ன பயன் என்று கேட்டார். தத்துவ பேராசிரியர் ஒரு விளக்கம் அளித்தார். ஆனால் அது தெளிவற்ற பதிலாக எனக்குப் பட்டது. பெரியவாளைப் பார்த்தேன். பெரியவாள் சிரித்துக் கெண்டே சொல்ல ஆரம்பித்தார். "இக்காலத்தில் விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கிறது. அதன் பயனாய் மனித சமுதாயத்தின் இடர்பாடுகள் குறைந்து நலமாக செக்கியமாக வாழ வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் நம் வசதிகள் பெருகியுள்ளன. ஒரு நாட்டிலிருந்து எவ்வளவோ தூரம் தள்ளியுள்ள நாட்டுக்கு மிக விரைவில் செல்லலாம். அங்குள்ளவர்களுடன் பேசலாம். அங்குள்ளவர்களை இங்கிருந்தே பார்க்கலாம். இதனால் ஜனங்களுக்கு எவ்வளவோ நன்மை ஏற்பட்டுள்ளன.
இருந்தாலும் கூட ஆங்காங்கே ஒருவருக்கொருவர் போட்டிகள் எற்படுகின்றன. ஒரு நாட்டிற்கும் மறு நாட்டிற்கும் போர்கள் நடக்கின்றன. மனிதர்க்குள் போதும் என்ற மன அமைதி நிறைவதில்லை. பல இடங்களில் ஜனங்கள் இன்னும் கொல்லப் படுகன்றார்கள். இந்த விஞ்ஞானம் அந்த அழிவுக்கும் காரணமாக அமைகிறது. இந்த போராட்டத்தை தவிர்க்க தத்துவம் (phylosophy) உதவுகிறது. இந்த பிணக்குகளை குறைக்க (soften நிவர்த்தி செய்ய என்று பெரியவாள் மீண்டும் கூறினார்கள்) தத்துவம் உதவுகிறது என்றார்கள். வந்திருந்த தத்துவப் பேராசிரயருக்கு தத்துவத்தின் பயன் என்ன என்று இப்பொழுது தான் புரிந்தது என்று தெரிந்தது.

பெரியவர்கள் தொடர்ந்தார்கள் 50-60து ஆண்டுகளுக்கு முன்னர் கம்யூனிஸம் ஒருபக்கம் மிகவும் ஓங்கியிருந்தது. மறுபக்கம் கேபிடலிஸம், முதலாளித்துவம் என்று கூறுவர் ஓங்கியிருந்தது. இரண்டும் தங்கள் கொள்கைகளில் தீவிரமாக இருந்தன. அதனால் ஒருவர் மற்றவர் கொள்கைகளை வன்மையாக கண்டித்தனர். இதனால் உலகில் பல இன்னல்கள் சூழ்ந்தன. இந்த சூழ்நிலையில் பிரஞ்சு நாடு தான் இரண்டுக்கும் நடுவான ஒரு கொள்கையை சோஷலிஸம் எனப் பின்பற்றி இரண்டு தீவிரவாதத்தையும் இணைக்கும் பாலமாகத் திகழ்ந்தது இப்பொழுது கம்யூனிஸம் தனது தீவிரவாதத்தை விட்டுவிட்டு சற்று சாதுவாக மாறிவருகிறது.

அதேபோல் இத்தாலி நாட்டில் போப்பைத் தலைவராக கொண்டு கத்தோலிக்க மதம் சிறந்தது. அதை எதிர்த்து ஜெர்மனியில் தோன்றிய மார்டின் லூதர் "பிராடெஸ்டண்ட்" மதத்தை நிறுவினார். இதனால் இரு பிரிவினர்க்கும் ஒரே சண்டை. எத்தனையோ ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையிலும் பிரெஞ்சு நாடு இரு சமயத்துக்கும் ஒரு பாலமாக திகழ்ந்தது. சமயத்தைப் பின்பற்றுவதில் ஒரு மிதமான போக்குடயதாய் இருந்தது. என்று அனைத்துலக ரீதியில் "பிரஞ்சு" நாடு புரிந்துள்ள சமாதானத் தொண்டுகளை பெரியவர்கள் நினைவு படுத்தினார்கள்.

இவர்களுக்கு புரெபஸர் பிலியோசாவைத்த தெரியுமா என்று கேட்டார்கள். அந்தக் குழுவின் தலைவர், பிலியோசாவும் நானும் நெருங்கிய நண்பர்கள். ஒரே பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறோம். நன்றாகத் தெரியும் என்றார். அதற்கு பெரியவாள் சொன்னது பிரஞ்சுக்காரர்கள் இந்தியாவில் பாண்டிச்சேரி, காரைக்கால் முதலிய பகுதிகளை ஆண்டு கொண்டிருந்தார்கள். இந்த பகுதிகளை இந்திய மக்களிடமே ஒப்படைத்துவிட்டார்கள். அதன் பிறகும் கூட தம் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் உள்ள நட்பை சிறப்பாக வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிரஞ்சு அரசாங்கம் தமது சொந்தப் பணத்தை ஏராளமாக செலவழித்து பாண்டிச்சேரியில் ஒரு நிறுவனம் வைத்து சம்ஸ்கருதம் தமிழ் இன்னும் இந்திய மொழிகளில் ஆராய்ச்சி செய்து சிறந்த நூல்களை வெளியிட்டு வருகிறார்கள். பிலியோசா இந்த பிரஞ்சு-இந்திய ஆராய்ச்சிக் கழகத்தை நடத்தி வந்தார் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் நல்லம் ஞானம் உடையவர். அதே போல் பல கீழை நாடுகளில் உள்ள ஜனங்களிடம் நெருங்கிய உறவை வளர்த்து கொண்டு வருகிறார்கள். பிரஞ்சு நாட்டு மக்கள் உலக சமாதானத்துக்கு செய்துள்ள தொண்டு மகத்தானது. அதை நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள் என்று கூறி வந்திருந்த பிரெஞ்சு பேராசிரியர்களை ஆசீரவதித்து அனுப்பினார்கள். பெரியவர்கள் இடையிடையே பிரஞ்சு சொற்களை பயன்படுத்தி இந்த செய்திகளை கூறினார்கள். அப்பொழுது பெரியவாளுடைய பிரஞ்சு சொற்களையும் உச்சரிப்பையும் கேட்டு வந்திருந்த பேராசிரியர்கள் பெரியவாளுக்கு பிரஞ்சு மொழியிலிருந்த புலமையைக் கண்டு வியப்பில் மூழ்கினார்கள்.

உலக வரலாற்றையும் அதில் ஒவ்வொரு நாட்டின் பங்கையும் உலக மக்கள் அனைவரும் எப்பொழுதும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற சதா தியானமும் உள்ள பெரியவாளை வந்திருந்த பிரஞ்சு பேராசிரியர்கள் மீண்டும் மீண்டும் நமஸ்காரம் செய்து கொண்டே விடை பெற்றுச் சென்றார்கள்.

அருகிலிருந்த அவர் எனக்கு உலகப் பேராசிரியர்களுக்கு எல்லாம் பேராசிரியராக காட்சியளித்தார்கள். நானும் அவர்களுடன் செல்ல விடை கேட்டேன். நீ உட்கார் அப்புறம் போகலாம் என்று உட்காரச் சொல்லி விட்டார்கள். அதன் பிறகு என்னிடம் பல செய்திகளை எடுத்துச் சொன்னார்கள். அதை தனியாகவே ஒரு கட்டுரையாகக் கூறலாம்.



நன்றி: டாக்டர். இரா. நாகசாமி, தமிழ்நாடு தொல்பொருள் துறை இயக்குனர் (ஓய்வு)

No comments:

Post a Comment