Contact Us

Name

Email *

Message *

Friday, 18 October 2013

மாயூரம் துலா ஸ்நானம்

ஸ்ரீ மயூரநாதர் கோயில் - துலா தீர்த்தவாரி

திருஞானசம்பந்தர் திருமயிலாடுதுறை திருமுறை பதிகம்

ஊனத்து இருள் நீங்கிட வேண்டில்
ஞானப் பொருள் கொண்டு அடி பேணும் 
தேன் ஒத்து இனியான் அமரும் சேர்வு
ஆன மயிலாடுதுறையே.

பாடல் விளக்கம்‬: இப்பிறப்பில் நமக்குள்ள குறைபாடாகிய ஆணவம் என்னும் இருள் நம்மை விட்டு நீங்க வேண்டில், ஞானப்பொருளாய் உள்ள சிவபெருமான் திருவடிகளை வணங்குங்கள். தேனை ஒத்து இனியனாய் விளங்கும் அப்பெருமான் தனக்குச் சேர்வான மயிலாடுதுறையில் விரும்பி உறைகிறான்.

மாயூர க்ஷேத்ரம் 

காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை:

1. திருவையாறு, 
2. திருவெண்காடு, 
3. திருவிடைமருதூர், 
4. திருவாஞ்சியம் 
5. திருசாய்க்காடு ஆகும். 

மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும். ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற பழமொழியே இதன் பெருமையைக் காட்டுகிறது. பிரம்ம தேவனால் உருவாக்கப்பட்ட இந்த ஊரில் பிரம்மா இத்தலத்து இறைவனாம் மாயூரநாதரை பூஜித்தான் என்று புராண வரலாறு கூருகிறது. அம்பாள் பார்வதி மயில் உருவில் சிவபெருமானை பூஜை செய்ததாக கருதப்படும் இரண்டு சிவஸ்தலங்களில் மயிலாடுதுறை ஒன்றாகும். மற்றொன்று தொண்டை நாட்டு சிவஸ்தலமான திருமயிலை ஆகும். சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில் இறைவன் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக கலந்து கொண்டு அவமானப்பட்ட பார்வதியை சிவன் சபித்து விடுகிறார். காவிரிக்கரையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தவம் செய்து தன்னை மீண்டும் அடையுமாறு சிவன் பார்வதியை சபித்து விடுகிறார். மயில் ரூபம் பெற்று சிவபெருமானை வெகுகாலம் பூஜை செய்து அம்பிகை சுய உருவம் அடைந்து பாவங்கள் நீங்கப்பட்டு சிவனை அடைந்தாள். மயில் ரூபத்தில் அம்பிகை சிவனை வழிபட்டதால் இத்தலம் மயிலாடுதுறை எனப்பட்டது. சிவநிந்தனையுடன் செய்யப்பட்ட தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் யாவரும் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் தாம் செய்த பாவம் நீங்க மயிலாடுதுறை வந்து மயூரநாதரை வழிபட்டு நலன் பெற்றனர்.

ஸ்காந்தம், சிவரகசியம், துலா காவேரி மகாத்மியம், ஸ்ரீ சிதம்பர புராணம், வட மொழியில் ஸ்ரீ மாயூரப் புராணம், ஸ்ரீ ரிஷப தீர்த்த மகாத்மியம், நானூறு ஆண்டு களுக்கும் முற்பட்ட மொழி பெயர்ப்பு நூல்களில் பொன்விளைந்த களத்தூர் ஆதியப்ப நாவலர் இயற்றிய புராணம், 170 ஆண்டுகளுக்கு முற்பட்ட மீனாட்சி சுந்தரம்பிள்ளை இயற்றிய மாயூரப் புராணம் ஆகியவையும் மாயூரத்தின் புகழை எடுத்துரைக்கின்றன. 

திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களிலும், திருநாவுக்கரசர் ஒரு பதிகத்திலும் மாயூரத்தானைப் பாடியுள்ளனர். திருக்கோடிக்கா, திருவீழிமிழலை, திருவெண்ணியூர், திருக்கடம்பந்துறை முதலிய தேவார தலப்பாடல்களிலும் மயிலாடுதுறை வைப்புத்தலமாகப் போற்றப்படுகின்றது. 

கி.பி.1907, 1911-ம் ஆண்டு இந்தியத் தொல்லியல் ஆய்வறிக்கை மூலம் மன்னர்கள் காலத்து 17 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. பராந்தகச் சோழன் (10-ம் நூற்றாண்டு), இரண்டாம் ராஜாதி ராஜன் (கி.பி. 1177), மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1201), ராஜராஜ தேவன் (கி.பி. 1228), மூன்றாம் ராஜராஜன் (கி.பி.1245), ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், விஜயநகர மன்னர்கள் என பல்வேறு மன்னர்களும் இந்த திருக்கோவிலுக்குத் திருப்பணி செய்துள்ளனர்.

காவிரி மஹத்வம்

மருத் வ்ருதே! மஹாதேவி மஹாபாகே மநோஹரே
ஸ்ரீகாவேரி நமஸ்துப்யம் மம பாபம் வ்யபோஹய 

"பரமேஸ்வரனின் சிரஸில் இருந்து பூமிக்கு வந்த மஹா பாக்யம் உடையவளே, பார்க்கப் பார்க்க தெவிட்டாத உருவம் கொண்டவளே, ஹே காவிரி! உன்னை நமஸ்கரிக்கிறேன், எனது பாபங்களைப் போக்கியருள்வாய்."

இடபதீர்த்தம் 

இடப தீர்த்தம் (நந்தியின் கர்வபங்கம்)

பார்வதி மயில் வடிவில் இருந்த காலத்தில், பரமன் பூவுலகைச் சுற்றிப் பார்க்க எண்ணி ரிஷபத்தில் ஏறிப் புறப்படும்போது, மற்ற தேவர்களும் தங்கள் வாகனங்களிலேறிப் பின்தொடர்ந்தார்கள். அனைவரையும் முந்திக் கொண்டு வேகமாகச் சென்று காவேரியின் நடுவில் நின்ற ரிஷபம், "சிவபெருமானைச் சுமக்கும் நான்தான் பெரிய வாகனம்' என்ற கர்வத்துடன் மற்ற வாகனங்களைப் பார்த்தது. இதை கவனித்த இறைவன் நந்தியின் கர்வத்தை அடக்க சிறிது அழுத்தம் தரவே, ரிஷபம் பாதாளத்தில் சென்று துன்பப்பட்டது. உடனே ரிஷபம் பரமனிடம் மன்னிப்புக் கேட்க, "நீ காவிரி நதியின் நடுவே மேற்கு முகமாய் இருந்து இங்கு நீராட வருபவர்களுக்கு வேண்டியதை அளிப்பாய்' என்று ஆசி தந்து, ரிஷபம் மேலே வர அருளினார். இதனால் மயிலாடுதுறையிலுள்ள இத் துறை ரிஷபத்துறை என்று பெயர் பெற்றது.

துலா ஸ்நானம் 

ஒருமுறை கன்வ முனிவர் கங்கையில் நீராடச் செல்லும் போது எதிரில் சண்டாளக் கன்னிகள் மூவர் வருகின்றனர். அவர்கள் கன்வ முனிவரை வணங்கி தாங்கள் மூவரும் கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற நதிகள் என்றும், தங்களிடம் நீராடிய மக்களின் பாவக்கறை படிந்து தங்கள் உருவம் இவ்வாறு ஆகிவிட்டதென்றும் கூறினர். அவர்களுடைய பாவம் நீங்கி அவர்கள் சுய உருவம் பெற தென்திசையில் உள்ள மாயூரத்தில் துலா மாதத்தில் காவிரியில் மூழ்கி நீராட முனிவர் ஆலோசனை கூற அவ்வாறே செய்து பாவங்கள் நீங்கி சுய உருவம் பெற்றனர்.


துலாக் கட்டம் (லாகடம்)

இந்த ஐப்பசி மாதத்தில் மஹா நதிகளுக்கெல்லாம் மட்டுமல்லாது மனிதர்களுக்கும் பாப விமோசனம் அருளுகிறாள் காவிரி. இந்த மாதத்தில் காவிரி நதியில் குறைந்த பக்ஷமாக மூன்று நாட்களாவது ஸ்நானம் செய்வது மிகுந்த நற்பலனைத் தரும் என்று கூறியுள்ளனர் ஆன்றோர். காவிரி மஹாத்மியத்திலும் இது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

ஐப்பசி 30 நாட்களும் காவிரியில் நீராடுவது சிறப்பென்றாலும், அமாவாசை போன்ற நாட்களில் மிகச்சிறப்பு. தென் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் கூட, காவிரிக்கரை சார்ந்த க்ஷேத்திரங்களுக்குச் சென்று சில தினங்கள் தங்கி இந்த ஸ்நானத்தை சங்கல்பத்துடன் செய்வது வழக்கம். பிரயாணிக்க இயலாத பெரியோர்கள் தாங்கள் தினமும் நீராடும் நீர்நிலைகளில் காவிரியை பிரார்த்தித்து எழுந்தருளச் செய்து நீராடுகின்றனர்.

தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசையைப்போல் இத்தலத்தில் ஐப்பசி மாத அமாவாசை மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது. அன்று புனித நீராடல், சிரார்த்தம், தர்ப்பணம் முதலிய நீத்தார் கடன்களை அளித்து, தம் முன்னோர்களின் பாவங்களையும் போக்க சிறப்பு பூஜை செய்து புண்ணியம் தேடிக் கொள்கிறார்கள்.

ஐப்பசியில் காவிரியில் ஒருமுறை நீராடினால் காவிரியில் மூன்று முறை நீராடிய பலனும்  யமுனையில் ஐந்து முறை நீராடிய பலனும் கிட்டும்.

உத்தரவாகினி

பாரதத்தில் உள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவிரியில் நீராடி, தங்களிடம் மக்கள் கரைத்த பாவக் கறைகளைப் போக்கிக் கொள்வதால், காவிரியானவள் தன்னிடம் நதிகள் மற்றும் மக்கள் கரைத்த பாவச் சுமைகளை திருமங்கலக்குடி திருத்தலத்திலும் மாயூரத்திலும் உத்தரவாகினியாக (தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்ந்து) போக்கிக் கொள்வதாக ஐதீகம்.

தீர்த்தவாரி தீபாராதனை 

தீர்த்தவாரி 

ஐப்பசி அமாவாசையன்று இங்குள்ள காவிரி ரிஷபக் கட்டம் விழாக் கோலம் காணும். அன்று கங்கையை விட மிக உயர்ந்தவளாகக் காவிரி திகழ்கிறாள். மேலும் மயூரநாதர் கோவிலில் உற்சவமும் நடைபெறுவதால், சுற்று வட்டாரத்திலுள்ள கோவில்களிலிருந்து உற்சவமூர்த்திகள் ரிஷபக் கட்டத்திற்கு வந்து தீர்த்தவாரி காண்பார்கள்.

மயூரநாதர் கோவிலில் ஐப்பசி முதல் தேதி தீர்த்தவாரியுடன் உற்சவம் ஆரம்பமாகும். அமாவாசை தீர்த்தவாரியும், ஐப்பசி முப்பதாம் தேதி துலா உற்சவமும், கடைமுகத் தீர்த்தவாரியும் மிகச்சிறப்பாக நடைபெறும். தீர்த்தவாரியை முன்னிட்டு அபயாம்பிகை சமேத மயூரநாதஸ்வாமி, அறம் வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பஸ்வாமி, விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதஸ்வாமி, ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரஸ்வாமி, மாயூரம் பரிமள ரங்கநாதஸ்வாமி ஆகிய பஞ்ச மூர்த்திகளும் காவிரி துலாக் கட்டத்தில் (லாகடம்) எழுந்தருளியதும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரியில் நீராடி புனிதம் பெறுகிறார்கள்.

ஐப்பசி கடைசி நாளில் ஸ்நானம் செய்வதை "கடைமுழுக்கு" (அ) "கடைமுகம்" என்கிறார்கள். மாயவரம் என்று கூறப்படும் மயிலாடுதுறையில் இருக்கும் சைவ-வைஷ்ணவ ஆலயங்களில் உள்ள மூர்த்திகளும் கடைமுகத்தன்று தீர்த்தவாரி செய்தருளுகிறார்கள்.

கடைமுகம் 

துலா மாதத்தின் கடைமுக நாளான கடைசி நாளில் காவிரியில் நீராட நாதசர்மா, அநவித்யாம்பிகை எனும் தம்பதியர் உறுதியுடன் மாயூரம் நோக்கி வந்தார்கள். அவர்கள் வருவதற்குள் 30ம் நாள் நீராடல் முடிந்து விட்டது. எனவே வருத்தத்துடன் இங்கு சிவனை வேண்டி தங்கினர். அன்றிரவில் நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவன், மறுநாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு நீராடினாலும், பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்றார். அதன்படியே மறுநாள் அத்தம்பதியர் காவிரியில் மூழ்கி பாவம் நீங்கப்பெற்றனர். இதன் அடிப்படையில் கார்த்திகை முதல் நாளன்று, அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது.

நாதசர்மா, அநவித்யாம்பிகை தம்பதியருக்கு இறைவன் முக்தி கொடுத்ததின் பொருட்டு அவர்களுக்கு அம்பாள் சந்நிதியின் தெற்கே சன்னிதி உள்ளது. தம்பதியரை லிங்கத்தில் ஐக்கியமாக்கி முக்தி வழங்கிய இறைவன், அதுமட்டுமன்றி "அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு முடிந்த பின்பு உங்களையும் வழிபட்டால் மட்டுமே என்னை வழிபட்ட பலன் கிடைக்கும்" என்ற வரத்தையும் அவர்களுக்கு ஈசன் அருளினார். லிங்கத்தில் ஐக்கியமான அடியாரான அநவித்யாம்பிகையை கௌரவிக்கும் விதத்தில் சிவலிங்கத்தின் மீது புடவை சாத்தப்படுகிறது.

முடவன் முழுக்கு

மறுநாள் கார்த்திகை மாதத்தின் முதல் நாள் "முடவன் முழுக்கு" என்று கொண்டாடப்படுகிறது. துலா நீராடலைக் கேள்விப்பட்டு, தன் பாவத்தினைப் போக்க முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு வந்தான். தன் இயலாமையால் தாமதமாக வந்து சேர்ந்தான். அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் ஆகி விட்டது. முடவனான தன்னால் மீண்டும் அடுத்த ஆண்டு வந்து மூழ்கிச் செல்வது இயலாது என இறைவனிடம் அவன் முறையிட்டதால், இறைவன் அவனுக்கு ஒருநாள் நீட்டிப்பு தந்தார். முடவனும் காவிரியில் மூழ்கி எழுந்தான். அவனது பாவமும் நீங்கியது. முடவனுக்காக சிவன் வழக்கமான நேரத்தை முடக்கி வைத்ததால் இதனை, "முடவன் முழுக்கு" என்கின்றனர்.

தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோர் மாயூரத்திலுள்ள காவிரிக்கரையில் நீராட வருகின்றனர். ஆகையால் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும். அதிலும் ஐப்பசி கடை முழுக்கு, கார்த்திகை முடவன் முழுக்கு ஆகிய நாட்களில் காவிரி நதியில் நீராடினால் அற்புதப் பலன்கள் கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது.

குதம்பை சித்தர் ஜீவ சமாதி 

குதம்பைச் சித்தர்

மயூரநாதர் கோயிலில் சிவன் சன்னதி சுற்றுப்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் குதம்பை சித்தர் ஜீவ சமாதி உள்ளது. சமாதி மீது சந்தன விநாயகர் எழுந்தருள தனி சன்னதியும் உள்ளது. மழை வேண்டி இவருக்கு விசேஷ பூஜை செய்தால், பெய்யெனப் பெய்யும் மழை!

No comments:

Post a comment