தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)
இப்படிச் சொன்னால் உடனே திருப்பிக் கொள்கிறார்கள். "மிருகம் பக்ஷி மட்டும்தானா? மரம், செடி, கொடி, பயிர் இவையும் ஈசன் குழந்தைகள்தான். அவற்றுக்கும்தான் உயிரும், உணர்ச்சிகளும் இருக்கின்றன. ஜகதீஷ்சந்திர போஸ் முதலியவர்கள் சொல்லியிருக்கிறார்களே! அதனால் சாக உணவு என்பதும் ஜீவஹத்திதான்" என்கிறார்கள்.
இதற்கு நான் ஸமாதானம் சொல்லியாக வேண்டும். ஜே.ஸி.போஸுக்கு எத்தனையோ யுகம் முந்தியே வேதாதி சாஸ்திரங்கள் பயிர், பச்சை, மரம், மட்டை எல்லாம் உயிருள்ளவை என்று சொல்லித்தான் வந்திருக்கின்றன. ஆனாலும் ஈஸ்வர நியதியில் நல்லது போலவே கெட்டது, ஸெளக்யம் போலவே கஷ்டம் எல்லாமும் சேர்ந்து சேர்ந்துதான் இருக்கிறது. 'இன்ஸ்டிங்க்டிவ்' ஆகவும் (உள்ளுணர்ச்சிப் பிரகாரமும்), தேஹத்தின் இயற்கையான தன்மையைப் பொருத்தும் சிங்கம், புலி முதலான பிராணிகள் ஜீவஹிம்ஸை பண்ணித்தான் ஜீவிக்க வேண்டும் என்று ஈஸ்வர நியதியே இருக்கிறது. மநுஷ்யன் விஷயத்தில் மாத்திரம் இவன் எதையும் ஆலோசித்துத் தெளிந்து முடிவு எடுக்கும்படியாக அறிவு விசேஷத்தை (ஈசன்) கொடுத்திருக்கிறான். அதனால், இந்த பிரபஞ்ச நாடகத்தில் இவன் முழுக்கவும் நல்லதுதான் வேண்டும், ஸெளக்யம்தான் வேண்டும் என்று பண்ணிக்கொள்ள முடியாமல் 'நேச்சர்' என்ற பெயரில் ஈஸ்வரன் கட்டிப் போட்டாலும், இப்படிக் கட்டிப்போட்ட கயிறு நீளுகிற எல்லைக்குள்ளாவது இவன் கூடியமட்டும் கெட்டதைத் தள்ளி நல்லதையும், கூடியமட்டும் கஷ்டத்தைத் தள்ளி ஸெளக்யத்தையும் தேடி அடைய வேண்டியவனாக இருக்கிறான். எதையோ தின்று தானாக வேண்டும். இல்லாவிட்டால் சாக வேண்டியதுதான் என்ற necessity இவனுக்கு இருக்கிறது - இயற்கை அப்படிக் கட்டி வைத்துருக்கிறது. எங்கேயோ லக்ஷத்தில் ஒருத்தனாக லோக வாழ்க்கையைப் பொருட்படுத்தாமலே உதறி விட்டுப் போகிறவனைத் தவிர மற்ற எல்லாரும் இந்த யதார்த்தத்தை அநுஸரித்துத்தான் போகணுமே தவிர, 'சாலஞ்ஜ்' பண்ணி முடியாது. 'ஸரி, எதையோ தின்னத்தான் வேண்டுமென்றால், கூடியவரை கெடுதலை, கஷ்டத்தை உண்டாக்காமல் அமைத்துக்கொள்ளக்கூடிய ஆஹார முறை என்ன?'என்று பார்ப்பதே இவன் செய்ய வேண்டியது. இருப்பதில் குறைச்சலான ஹிம்ஸை தருவது பயிர் பச்சைகளையும் காய்கறிகளையும் சாப்பிடுவதுதான்.