Contact Us

Name

Email *

Message *

Sunday 27 October 2013

அம்பாள் தான் கீதோபதேசம் செய்தாள்

அம்பாள் தான் கீதோபதேசம் செய்தாள் : என்ற ஒரு புதிய விஷயத்தை மஹா பெரியவா ஒரு குரு ஆராதனை தினத்தில் கூறினார்கள் . என்னிடம் பேனா பேப்பர் கொண்டு வர கூறினார்கள். தேனம்பாக்கத்தில் குளகரையில் தண்ணீரில் ஒரு காலும் தரையில் ஒரு காலுமாக வைத்துகொண்டு உட்கார்ந்து, ஒவ்வொரு வார்த்தையாக (சம்ஸ்கிருதத்தில் ) கூறி என்னை எழுதி வருமாறு கூறினார்கள். அப்படி வார்தையாக கோர்த்து எழுதியதும் 5 ஸ்லோகங்கள் உற்பத்தி ஆயின. இவை தான் துர்கா பஞ்சரத்னமாக இப்போது ஸ்ரீ காமாக்ஷி கோவிலினுள் நுழைந்ததும் இடதுபுறம் சலவை கல்லில் பொறிக்கபட்டுள்ளன.. "தே தியான யோகனுகதா அபச்யன்" என்று இந்த பஞ்ச ரத்தினம் துவங்குகிறது . ஒவ்வொரு ஸ்லோகத்தின் கடைசி பாகத்திலும் "தவம் பாஹி விஷ்வேஸ்வரி மோக்ஷ தாத்ரீ" என்று முடிகிறது. இதில் கீதோபதேசம் செய்தவளே - உபதிஷ்ட கீதா என்று கூறப்படுகிறது .

இந்த வார்த்தையை மஹாபெரியவா எழுதியதும், கீதையை அம்பாள் உபதேசித்ததாக தெரியவில்லையே என்று யோசிக்கிராயா? என்று கேட்டு விட்டு, இது பற்றி பகவத் கீதையில் குறிப்பு வந்துள்ளதாகவும் பாஷ்யத்தில் எடுத்து காட்டி உள்ளதாகவும் கூறியதும் எனது திகைப்பிற்கு எல்லையே இல்லை. உடன் ஒருவர் மூலம் கீதா பாஷ்ய புத்தகத்தை எடுத்து வரும்படியும் ஸ்ரீ மடம் ஆஸ்தான வித்வான் பிரமஸ்ரீ ராமகிருஷ்ண சாஸ்திரிகளை அழைத்து வரும் படியும் உத்தரவிட்டார்கள். அவர்கள் வந்ததும் மேற்கண்ட விஷயத்தை அவரிடம் வினவினார்கள் . பிறகு தானாகவே கீதா பாஷ்ய புத்தகத்தை புரட்டி புரட்டி, ஓரிடத்தில் நிறுத்தி, என்னிடம் கொடுக்குமாறு கூறினார்கள் . அது 14 ம் அத்தியாயத்தின் கடைசி ஸ்லோகம்

"ப்ரம்மனோ ஹி ப்ரதிஷ்டாஹம் அம்ருதச்யாவ் யயஸ்யா
சாஸ்வதஸ்ய ச தர்மஸ்ய சுகஸ்யை காந்திகஸ்ய"

என்று இருந்தது. அதற்கு பாஷ்யத்தில் விளக்கம் கொடுக்கும் போது , "சக்தியும் சக்தியை உடையவரான தானும் ஒன்று தான்".. "சக்தி சக்திமதோரபேதா த" என்று பாஷ்யத்தில் இருப்பதாய் உரக்க படிக்குமாறு கூறினார்கள் . பிறகு சக்தி என்கிற ஸ்ரீ அம்பாளும் ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிய தானும் ஒன்று தான் என்று கிருஷ்ணன் இங்கு கூறியதாக ஆதிசங்கரர் கூறியுள்ளதால்தான் கீதோபதேசம் செய்தவள் அம்பாளே என்று விளக்கம் சொன்னார்கள். ஸ்ரீ மஹாபெரியவர்களின் மேதா விலாசம் சர்வஞத்வம் எத்தனை பெரியது? எத்தனை அரியது ?



- வேதா பாஷ்ய ரத்னம் முல்லை வாசல் ஸ்ரீ ர.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் (சென்னை சம்ஸ்க்ருத கல்லூரி)

No comments:

Post a Comment