Contact Us

Name

Email *

Message *

Thursday, 17 October 2013

கோடி சிவ தரிசன பலன் தரும் அன்னாபிஷேகம்

ல்லினுள் தேரை முதல் கருப்பை உயிர்வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் ஈசன். அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்கைக்கு அச்சாணி. அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம். அம்மை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும் தானே காசியிலே அருட்காட்சி தருகின்றாள்.

அந்த இறைவனின் அருவுருவமான லிங்க மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே ஐப்பசி பௌர்ணமி. அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது. ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகளின் அருளாணையின்படி, பல்வேறு சிவாலயங்களில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது.

Also read: The story of Iyppasi Annabishekam


ஐப்பசி மாத பௌர்ணமி சிறப்பு 


ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான் அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.

ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான்.

அது என்ன சாபம்?

சந்திரன், அஸ்வினி முதல் ரேவதி வரையிலான தனது நட்சத்திர மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பு செலுத்தி மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டியதால், மாமனார் தட்சனால் உடல் தேயட்டும் என்று சாபம்.

சந்திரனுக்கும் ஒவ்வொரு கலையாக தேய ஆரம்பித்தது. அவன் மிகவும் வருந்திக் கெஞ்சவே, திங்களூரில் சிவனை பூஜித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார், தட்சன். உடனே அவன் திங்களூர் வந்து சிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான். அவன் மேனியின் ஒளி நாளுக்கு நாள் மங்கத் துவங்கியது. மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருக்கும் போது சிவனார், அவன்பால் மனமிரங்கி அந்தப் பிறையைத் தனது தலையில் அணிந்து கொண்டார்.

கொடுத்த வாக்கை மீறிய அவனுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும் முழுப்பொலிவும் வருடத்தின் ஒருநாள் அதாவது ஐப்பசி பௌர்ணமி அன்று மட்டுமே கிடைக்கும். அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்து பின் படிப்படியாக வளரும். இது எப்போதும் நடக்கும் ஒரு சுழற்சியாக இருக்கும் என்று அருளிச் செய்தார் விடைவாகனர்.

திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு!

ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. ஐப்பசி (அக்டோபர்-நவம்பர்) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல்.

அன்னத்தின் சிறப்பு


தைத்ரீய உபநிஷத், சாம வேதம் போன்ற ஸ்ம்ருதிகள் அன்னத்தின் புகழைப் பறை சாற்றுகின்றன.

अन्नं न निन्द्यात्।
அன்னம் ந நிந்த்யாத்
annaṅ n nindyāt.

அன்னத்தை நிந்தனை செய்யக் கூடாது.

प्राणो वा अन्नम्।
ப்ராணோ வா அன்னம்
prāṇo vā annam.

எது உயிர் கொடுக்கின்றதோ அதுவே அது இல்லாமல் போனால் உயிர் எடுக்கின்றது. எது ஒன்றை ஒருவர் உண்கின்றாரோ அதுவே அவரை உண்கின்றது.

अहमन्नमहमन्नमहमन्नम्।
அஹமன்னம் அஹமன்னம் அஹமன்னம்
ahamannam ahamannam ahamannam.

அன்னமே இறை வடிவம். மஹேஸ்வரப் பெருமானே அன்னத்தின் வடிவத்தில் இருக்கின்றார். அன்னமே தானாக இருக்கின்றேன் என்று வேதநாயகனே கூறுவதாக வேதங்கள் விளக்குகின்றன.

சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 70 பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம்.  ஆலய வழிபாட்டில் மாத பௌர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விஷேமானதாகும்.

அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம். சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும். ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.

நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்தினார்கள். 

சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.

நித்ய அன்னாபிஷேகம் 


திருநாவுக்கரசர் அருளிய தேவாரத் திருப்பதிகம்
ஐந்தாம் திருமுறை, 5.1 கோயில், திருக்குறுந்தொகை பாடல் எண்: 1071

அன்னம் பாலிக்கும் தில்லைசிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண்டு இன்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே?

தெளிவுரை: தில்லைச் சிற்றம்பலத்தில் திருநடனம் புரியும் நடராசப் பெருமானைத் தரிசிக்க, உயிர்க்கு அமுதாகிய வீட்டின்பம் கிடைக்கும்; உடலின் வளமைக்குரிய உணவு கிடைக்கும்; பொன்னுலகமாகிய தேவர் உலக வாழ்வு கிடைக்கும். இப்பூவுலகில் கண்டு இன்புறுவதற்குரிய திருக்காட்சியைக் கண்டு தரிசித்தவர்களுக்கு யாவும் கை வரப்பெறும். எம் பெருமானைத் தரிசித்தவர்களுக்கு மீண்டும் இப்பிறவி வாய்க்குமோ ?

தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. 

கோடி சிவ தரிசன பலன்


அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்குச் சமம்.

சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப் போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட்கருணையினால் குளிர்வது இயற்கைதானே.

ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்ப்டுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது.எனவே அவனே பரம்பொருள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.

அன்னாபிஷேகம் செய்த பிரசாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.

அன்னாபிஷேகம் எவ்வாறு நடைபெறுகின்றது?


ஐப்பசி பௌர்ணமியன்று காலையிலே எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது பின் எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் வடித்து லிங்கம் முழுவதும் மறையும் அளவிற்கு சாற்றுகின்றனர். இது அன்னாபிஷேகம் எனப்படுகின்றது. சாயரட்சை பூஜை அன்னாபிஷேகம் கொண்ட பெருமானுக்கு நடைபெறுகின்றது. பின் இரண்டாம் காலம் வரை (மாலை 6.00 மணியிலிருந்து 8:30 மணி வரை) அன்னாபிஷேகராக அருட்காட்சி தருகின்றார் எம்பெருமான். இரண்டாம் காலம் பூஜை முடிந்த பின் அன்னம் கலைக்கப்பட்டு பிரசாதமாக பகதர்களுக்கு வழங்கப்படுகின்றது. பொதுவாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம். குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப் படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.

கங்கைகொண்ட சோழபுரம்


சர்வ சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் மிகவும் சிறப்பாக நடைபெறும் தலங்களுள் சில தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்திலே உள்ள தலங்களில் சிறப்பாககொண்டாடப்படுகின்றது. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்கள் ஆகும் இவ்விரு ஆலயங்களிலும் எம்பெருமானின் லிங்கத் திருமேனி பெயருக்கேற்றார்ப் போல பெரியதாகியதால் (கங்கை கொண்ட சோழபுரத்தின் லிங்கத்தின் ஆவுடை 43 முழம் நீளம்.) காலையிலேயே அன்னாபிஷேகம் தொடங்குகின்றது புது அறுவடையான அரிசி மூட்டை மூட்டையாக வந்து குவிகின்றது 100 மூட்டை வரை அபிஷேகத்திற்காக தேவைப்படுகின்றது, உழவர் பெருமக்கள் நெல்லை கோவிலுக்கு இலவசமாக வழங்குகின்றனர் அத்தனை அன்னமும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது., அவ்வரிசியைக் கண்டு சமைக்கப்பட்ட அன்னம் கொப்பரை கொப்பரையாக அன்னம் வந்து கொண்டிருக்கும் எம்பெருமானின் திருமேனி மேல் சிறிது சிறிதாக அன்னம் சாற்றப்படுகின்றது. எம்பெருமானின் திருமேனி முழுவது அன்னாபிஷேகம் ஆக மாலை ஆகும். பின்னர் மாலை பூஜைகள் முடிந்து அர்த்த சாமத்திற்கு பின் அன்னம் அனைவரும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

செந்தலை 


அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும் மற்றோர் தலம், குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள செந்தலை என்னும் தலம் ஆகும். அன்னாபிஷேகத்தன்று பகல் 11 மணிக்கு முதலில் திருநீற்றால் அபிஷேகம் நடைபெறுகின்றது பிறகு மற்ற திரவியங்களால் எப்போதும் போல அபிஷேகங்கள் நடைபெறுகின்றது. மாலை ஐந்து மணிக்கு எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னத்தாலும் மற்றும் காய்கறிகளாலும் அலங்காரம் செய்யப்படுகின்றது. பூர்ண அலங்காரத்தில் விளங்கும் எம்பெருமானுக்கு சோடச உபசாரங்களும் சிறப்பு தீபாராதணையும் நடைபெறுகின்றது. இரவு 9 மணி அளவில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் அன்னாபிஷேக திருமேனியின் மீது பூரண சந்திரன், தனக்கு சாப விமோசனம் அளித்து தன்னை ஜடா முடியிலே சூடிக் கொண்ட அந்த சந்திர சேகரனை தனது அமிர்த கலைகளால் தழுவுகின்றான். இத்தலத்தின் சிறப்பு இது தான் அன்னாபிஷேகம் செய்யப்பட்ட இறைவனை சந்திரன் தனது அமுத தரைகளால் தழுவி பூஜை செய்கிறான். இவ்வாறு சந்திரன் வழிபடும் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரை பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் செந்தலையில் கூடி அர்த்த சாம பூஜையில் எம்பெருமானை வழிபட்டு நன்மை அடைகின்றனர்.

அன்னவாசல் - பூவுலகின் புண்ணிய வாசல்


திருவாரூர் மாவட்டம், குடவாசலில் இருந்து 3கி.மீ. தொலைவில், சேங்காலிபுரம் செல்லும் வழியில் இருக்கிறது அன்னவாசல் என்கிற அழகிய கிராமம். இந்த கிராமத்தில் கோயில் கொண்டு அருள்கிறார்கள் அன்னபூர்ணேஸ்வரரும் அன்னபூர்ணேஸ்வரியும். 

அன்னத்தை உண்டு வாழும் ஒவ்வொரு கலியுக மனிதனும் ஜீவனும் கட்டாயம் வழிபட்டாக வேண்டிய சிவத்தலமே அன்னவாசல். அன்னம் என்றால் சோறு, சாதம் என்று மட்டும் பொருளல்ல. எந்த உணவால் ஒரு உயிர் ஜீவிக்கின்றதோ, அதுவே அதற்கு அன்னமாகிறது. தேனீ - தேன், பசு-புல், இலை, தழை, கிளி- பழங்கள் என்பதாக!

மகாபாரதத்தோடு நெருங்கிய பிணைப்பை உடைய சிவத்தலமிது. பீமனின் பேரனான பர்பரீகன் என்கிற ஷியாம், கிருஷ்ணரின் திருக்கரங்களால் அன்னசுத்தி மட்டுமல்லாமல், கண்ண முக்தியையும் தீர்க்கமாய்ப் பெற்ற பேற்றை உடைய திருத்தலம் இது.

அகல்யா, சீதா, தாரா, மண்டோதரி ஆகியோரோடு பிரசித்தி பெற்ற பஞ்சகன்யா மாதாக்களில் ஒருவராய் திரௌபதி அதியற்புத உத்தம நிலையை கிருஷ்ண பரமாத்மாவின் திருவருளால் அடைந்த புண்ணிய பூமியும் இதுவே. அதன் அற்புத சாட்சியாய் அரனின் ஆலயத்திற்கு அருகே இருந்து புராண நிகழ்வை ஞாபகப்படுத்தியபடி இருக்கிறது திரௌபதி ஆலயம். தன் நாட்டில் பஞ்சம் வராமல் இருக்க தசரத மகாராஜா இந்த அன்னவாசல் ஈசனை வழிபட்டிருக்கிறார் என்ற தகவல், இத்தலத்தின் கூடுதல் சிறப்பு.

பூவுலக மனிதர் தினமும் காலையில் ஜீவசக்தியோடு எழுவதும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேளை உணவும் நீரும் கிட்டுவதும் பெரும் புண்ணியத்தினால்தான். இதனால்தான் பிரபஞ்சத்தின் அன்னசக்தித் தலமான ‘அன்னவாசல் பூவுலகின் புண்ய வாசல்’ என கிருஷ்ண பரமாத்மா போற்றினார். அர்க்ய பூஜைக்கு மிகவும் உன்னதமான தலம் என்று கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு எடுத்துரைத்துப் பூஜையாற்றிய திவ்யமான தீர்த்த சக்தித் தலம் இது. பாண்டவர்களுடைய அர்க்ய பூஜைகளை ஏற்ற ஈஸ்வரன் இத்தீர்த்தத்தை ‘கிருஷ்ண குண்டம்’ என்று போற்றினார். கிருஷ்ணரோ இத்தலத்தில் சிவபூஜைகளை ஆற்றி, ‘சிவபுண்ணியத் தீர்த்தம்’ என்றும் இத்தீர்த்தத்தைப் போற்றி உள்ளார்.

வாழ்வில் கெட்ட காரியங்களால் புண்ணியம் விரயமாகாது இருக்கவும் குடும்பத்தார் நல் ஒழுக்கத்தோடு வாழவும் அன்னசுத்தி அவசியமாகும். மாதந்தோறும், இயன்றால் வாரந்தோறும் அன்னாபிஷேகம் ஆற்றி வழிபட்டு வருதல் வேண்டும். 

புண்ணியம் அவ்வளவாக இல்லாதோர்க்கு, வாழ்வில் பித்ருக்களின் ஆசியாகவும் புண்ணியம் வரக்கூடும். இதற்கும் பூலோகத்தின் புண்ணிய வாசலான அன்னவாசல் வழிபாடு பெரிதும் துணை புரிகிறது. இதையும் தெளிவுபட உணர்த்துவதே ‘அன்னவாசல் பூவுலகின் புண்யவாசல்’ என்ற தெய்வ வாக்கு.

முற்காலத்தில் மகத்தான நித்தியத் தர்ப்பணத் தலமாக அன்னவாசல் பிரசித்தி பெற்றிருந்தது. இத்தலத்தில் நித்திய அன்னாபிஷேகம், நித்தியத் தர்ப்பணத்திற்கென ஆயிரக்கணக்கானோர் தினமுமே குழுமுவர். இத்தகைய ஆனந்தமான ஆன்ம சக்தி நிறைந்த சத்சங்க வழிபாட்டு நிலை அன்னவாசலில் மீண்டும் நிலைக்க வேண்டும். நாட்டில் பஞ்சமே வராது என்கிற நிலையும் மக்களிடம் தர்மம் செய்யும் மனமும் மலர இத்தலம் மீண்டும் பொலிவு பெற வேண்டியது அவசியம். நல்ல உள்ளம் கொண்ட சிவத் தொண்டர்கள் இந்த கோயிலைப் புதுப்பிக்க திருப்பணியை ஆரம்பித்துள்ளார்கள்.

பொதுவாக அன்னம் எம்பெருமானின் மேனி முழுவதும் சாற்றுவது மிகவும் எளிமையான அலங்காரம். ஆனால் பல ஆலயங்களில் அன்னத்தில் எம்பெருமானின் ஒரு முகத்தையோ அல்லது ஐந்து முகங்களையோ அலங்காரம் செய்கின்றனர். சில ஆலயங்களில் அன்னத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள், பட்சணங்கள் ஆகியவற்றையும் படைத்து அலங்காரம் செய்கின்றனர். இன்னும் சில ஆலயங்களில் கருவறையின் படியிலிருந்தே படிப்படியாக ஆவுடை வரைக்கும் பலப் பல படிகள் அமைத்து அந்த படிகளிலே அனைத்து காய்கறிகளையும் பழங்களையும் பட்சணங்களையும் கொலுவாக அமைத்து அலங்காரம் செய்கின்றனர்.

காஞ்சியில் காமாக்ஷியம்மன் ஆலயத்தில் "அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கர பிராண வல்லபே ஞான வைராக்கிய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி" என்று நாம் வழிபடும் அன்னபூரணிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது,

இந்நாளில் உபவாசம் இருந்து மஹாபிஷேகம் செய்து பின் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்த பிரசாதத்தை உண்ணும் போது பக்தி புண்ணிய பலன்கள் சேர்கின்றன.

அன்னாபிஷேகக் காட்சி அளவற்ற இன்பம் தரக்கூடியது. அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வதால், அன்னதானம் செய்த புண்ணியமும் கிடைக்கின்றது. அந்த சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில், வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை கண்டு தரிசித்து, ஆலயம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற நம்மால் முடிந்த உதவி செய்து நன்மையடைவோமாக.

அபிஷேக திரவியமும் பலன்களும்


ஐப்பசி மாதத்து பௌர்ணமியில் அன்னம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது போல ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் ஒரு சிறப்பான பொருள் கொண்டு அபிஷேகம் நடத்தப்படவேண்டும் என்றும் அவற்றிற்கான பலன்களையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவை:


மாதம் அபிஷேக
திரவியம் (பொருள்)
பலன்
சித்திரை மருக்கொழுந்து புகழ்
வைகாசி சந்தனம் மனை, வீடு, நிலம், புதையல்
ஆனி மா, பலா, வாழை கேட்ட வரம் கிட்டும்
ஆடி காராம் பசுவின் பால் பயம் நீங்கும்
ஆவணி வெல்ல சர்க்கரை சாபம் தோஷம் நீங்கும்
புரட்டாசி கோதுமை, பசுநெய் கலந்த வெல்ல அப்பம் அஷ்ட ஐஸ்வரியம்
ஐப்பசி அன்னம் கல்வி கலைகளில் தேர்ச்சி, ஞானம் கிட்டும்
கார்த்திகை பசு நெய், தாமரை நூல் தீபம் பழி தீரும், வழக்கு வெற்றி
மார்கழி பசு நெய், நறுமண வென்னீர் கண்டம் நீங்கி ஆயுள் கூடும்
தை கருப்பஞ்சாறு நோய் நீங்கி ஆரோக்கியம்
மாசி பசுநெய்யில் நனைத்த கம்பளி குழந்தை பாக்கியம்
பங்குனி பசுந்தயிர் மனைவி, மக்கள், உறவினர் உதவிநன்றி: ஸ்ரீ நடராஜ தீக்ஷிதர், தினகரன், தினமலர், கவிதாகோஷ்

No comments:

Post a comment