Contact Us

Name

Email *

Message *

Thursday 29 October 2015

துலா ஸ்நானம் - மாயூரம் "லாகடம்"

தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)

'காவேரி புராண'த்தில் இன்னொரு பாடத்தில் மாயவரத்தில் இருக்கப்பட்ட காவேரித் துறையான துலா கட்டத்துக்கு முக்யத்வம் கொடுத்திருக்கிறது. இப்போது அதை லாகடம் என்று ஜனங்கள் சொல்கிறார்கள். இது துலா கட்டம் என்பதன் திரிபுதான். துலா ஸ்நானத்துக்கு வரும் யாத்ரிகளுக்கு வசதியாகக் கட்டப்பட்ட படித்துறைதான் துலா கட்டம் (லாகடம்). மாயவரத்திலும் இன்னம் ஆறேழு காவேரிக் கரை க்ஷேத்ரங்களிலும் துலா கட்டங்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் அச்சடித்ததைப் போல் ஒரே ப்ளானில் கட்டப்பட்டிருக்கின்றன. துலாஸ்நான மகிமையைச் சொல்கிற இடத்தில், காவேரி புராணத்தில் ஒரு பாடத்தின்படி ஸ்ரீ ரங்கத்துக்கும் தர்மவர்மாவுக்கும் முக்யத்வம் தந்திருக்கிறதென்றால், இன்னொரு பாடத்தில் மாயவரத்துக்கும் அங்கே துலா ஸ்நானம் செய்து மோக்ஷம் அடைந்த ஒரு பிராம்மண தம்பதிக்கும் முக்யத்வம் தந்திருக்கிறது.

நாதசர்மா என்று அந்த பிராம்மணனுக்குப் பேர். அவருடைய பத்தினி அநவத்யை. விதிவத்தாக துலா மாஸம் தினந்தோறும் இவர்கள் மாயவரத்தில் காவேரி ஸ்நானம் செய்தே மோக்ஷம் அடைந்தார்கள் என்று சொல்லியிருக்கிறது.

இவர்கள் பல இடங்களுக்கு க்ஷேத்ராடனம் பண்ணினதாகச் சொல்லுமிடத்தில் கேதாரத்துக்கு (கேதாரிநாத்) போனார்கள், காசிக்குப் போனார்கள் என்று சொல்லியிருக்கிறது. இது இங்கே மாயவரத்தில மட்டுமே தெரிந்த கதை. காசி இங்கேயிருந்து ஆயிரம் மைலுக்கு அப்பால் இருக்கிறது.

காசியில் கங்கையில் இருக்கிற பல கட்டங்களில் ('காட்' என்று சொல்வார்கள்) 'கேதார் காட்' என்று ஒன்று இருக்கிறது. அந்தக் கேதார்காட்டில் அதைக் குறித்த ஸ்தல புராணம் சொல்லப்படுகிறது. அதிலே நாதசர்மா - அநவத்யை என்ற பிராம்மண தம்பதி ஸ்நானம் செய்த இடம் அது என்று வருகிறது!

நாதசர்மா கதை நம்மூர்க்காரர்களுக்கே அதிகமாகத் தெரியாது. ராமர், கிருஷ்ணர், ஹரிச்சந்திரன், நளன் முதலியவர்களைப் போல தேசம் முழுவதும் தெரிந்தவரில்லை அவர். அப்படிப்பட்ட ஒருவரைப்பற்றி இங்கே மாயவரத்தில் சொல்கிற புராணக் கதையும், ஆயிரம் மைல் தாண்டி காசியில் சொல்வதும் 'டாலி' ஆகிறது என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாயிருக்கிறது!

ஸ்தல புராணங்களை நம்புவதற்கில்லை என்று சொல்வது எவ்வளவு தப்பு என்பதற்கு திருஷ்டாந்தமாகத்தான் இதைச் சொன்னேன்.



நன்றி: காமகோடி

No comments:

Post a Comment