Contact Us

Name

Email *

Message *

Sunday 23 March 2014

ஸம்ஸ்கிருதமும் தமிழும்


தெய்வத்தின் குரல் (ஏழாம் பாகம்).

ஸம்ஸ்கிருத விரோதம்
 
ரு ஊரிலே ஏழைகள் 'பஞ்சம், பணம் வேணும்' என்று சீஃப் மினிஸ்டருக்கு, முதன் மந்திரி என்கிறார்களே அவருக்கு... இல்லை, இப்போது அதை முதலமைச்சர் என்று ஆக்கியிருக்கிறார்கள். எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது! ஸம்ஸ்கிருதத்தை அடித்துத் துரத்தி விட்டால் அதுவே தமிழ் வளர்ச்சி என்பதாக இப்போது ஒரு 'நல்ல' கொள்கை நடைமுறைக்கு வந்திருக்கிறது! அடித்துத் துரத்தும் தலைவர்களில் ஆரம்பித்து இப்படித் தனித் தமிழ் முழக்கம் செய்பவர்களில் எத்தனை பேருக்குத் தமிழிலக்கியத்தில் - தெய்வ ஸம்பந்தமான இலக்கியம் கூடாது என்றே வைத்துவிட்டாலும், 'ஸெக்யுலர் லிட்ரேசரா'கவே வைக்கப்பட்ட தமிழிலக்கியத்தில் திருக்குறள், திருக்குறள் என்கிறார்களே, அதில்கூடப் பரிச்சயம் இருக்கிறது என்று பார்த்தால், ஒரு பெர்ஸென்ட், இரண்டு பெர்ஸென்ட் தேறுமா என்பதே ஸந்தேஹம் என்று தெரிகிறது. ஆனாலும் ஸம்ஸ்கிருதத்தை அடித்துத் துரத்த வேண்டும் என்று மட்டும் அநேகமாக நூறு பர்ஸன்ட்காரர்களும் முஸ்தீபாக இருக்கிறார்கள்! அந்த ஸம்ஸ்கிருதம் என்னமோ இவர்கள் அடித்துத் துரத்தினதாக நினைக்கிற இடங்களிலும் இவர்களுக்கே தெரியாமல் வந்து பூந்து கொள்கிறது!

'அமைச்சர்' ஸமாசாரம் இப்படித்தான். 'மந்திரி (என்ற சொல்) ஸம்ஸ்க்ருதம். அது கூடாது' என்று 'அமைச்ச'ராக்கினால் அந்த 'அமைச்ச'ரும் 'அமாத்யர்' என்ற ஸம்ஸ்கிருத வார்த்தையின் திரிபுதான்! 'த்த', 'த்ய' என்பவை தமிழில் 'ச்ச' என்று மாறும். 'தகரத்துக்குச் சகரம் போலி' என்று புலவர்கள் விதியே காட்டுவார்கள். மைத்துனன் - மச்சினன், பித்தன் - பிச்சன் இத்யாதி பார்க்கிறோம். பேச்சு வழக்கிலே, 'வைத்து', 'புளித்து' என்ற மாதிரி உள்ள வார்த்தைகளை யெல்லாமே, 'வெச்சு', புளிச்சு' என்றெல்லாந்தானே சொல்கிறோம்? அந்த ரீதியில் தான் சப்தங்கள் மாறி மாறி ஸம்ஸ்க்ருத அமாத்யரே தமிழில் முதலில் அமர்த்தராகி அப்புறம் அமைச்சரானது.

ஸமீபத்தில் 'மனிதநேயம்' என்று ஒரு வார்த்தை உலாத்துகிறதாகப் பார்க்கிறேன். நல்ல வார்த்தைதான். காதுக்குக் கேட்கவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும் 'மனிதாபிமானம்' என்று இத்தனை நாளாகச் சொல்லி வந்ததில் 'அபிமானம்' என்ற ஸம்ஸ்கிருத வார்த்தை இருப்பது பிடிக்காமல்தான் இப்படி மாற்றியிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கும் போது பரிஹாஸமாகத்தான் இருக்கிறது ஏனென்றால், 'நேயம்' என்பதும் ஸம்ஸ்கிருத 'ஸ்நேஹ'த்தின் திரிபுதான்! ஸம்ஸ்கிருதம் என்பது இலக்கண சுத்தமான பாஷை. அதையே பேச்சுக் கொச்சையாக இருக்கும்போது ப்ராக்ருதம் என்பார்கள். அந்த ப்ராக்ருத பாஷையில் தான் ஸம்ஸ்கிருதத்தில் உள்ள நாடகங்களில் ஸ்தரீகள், படிப்பில்லாதவர்கள் ஆகியவர்கள் ஸம்பாஷிப்பார்கள். அதிலே 'ஸ்நேஹம்' என்பது 'நேயம்' என்று தான் வரும். 

அது போகட்டும், 'மனிதநேயம்' என்கிறதிலும் முதலில் மனித என்று வைத்துக் கொண்டிருக்கிறார்களே, அதுவும் ஸம்ஸ்கிருத 'மநுஷ்ய'வின் திரிபுதானே? இதே மாதிரிதான் 'நீதிபதி' என்பதிலும் 'நீதி' என்ற ஸம்ஸ்கிருத வார்த்தையை அப்படியே வைத்துக் கொண்டு, 'பதி' மட்டுந்தான் ஸம்ஸ்கிருதம் என்று நினைத்து விரட்டிவிட்டு 'நீதியரசர்' என்று போடுவதாகத் தெரிகிறது. இந்த 'அரச' என்பதும், இன்னும் 'அரைய', 'இராய' என்கிறதெல்லாமுங்கூட 'ராஜ' என்ற ஸம்ஸ்கிருத வார்த்தையின் திரிபுகள்தான். 'மன்னன்', கோ' என்கிறவைதான் 'ராஜா'வுக்கான சுத்தத் தமிழ் வார்த்தைகள்... ஒருத்தருக்கும் ஒரு ப்ரயோஜனமுமில்லாமல் இப்படியெல்லாம் வெறும் த்வேஷத்தில் செய்கிற கார்யங்கள் கடைசியில் பித்துக்குளித்தனமாகத்தான் முடிகின்றன.

திருவள்ளுவரின் உதாஹரணம்

தமிழை வளர்த்துக் கொடுத்தவர்களில் திருவள்ளுவரை மிஞ்சி ஒருத்தருண்டா? அவர் முதல் குறையே எப்படிப் பாடிக்கொடுத்திருக்கிறார்?

அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

என்று தானே பாடியிருக்கிறார்? அதிலேயே ஆதி, பகவன், உலகு என்று மூன்று ஸம்ஸ்க்ருத வார்த்தைகளைப் போட்டிருக்கிறார். 'உலகு' என்பது 'லோகம்' என்கிற ஸம்ஸ்க்ருதப் பதத்திலிருந்தே வந்தது. 'லோகம்' என்றால் நம்மால் நமக்கு வெளியிலே 'பார்க்கப்படுவது'. இங்கிலீஷ் 'லுக்'கும் அந்த தாதுவிலிருந்து வந்ததுதான். பார்க்கிற இந்த்ரியமான கண்ணுக்கு 'லோசனம்' என்று பேர் இருப்பதும் இந்தத் தாதுவின் அடியாகத்தான். 'லேபாக்' - 'பார்க்கப்படுவது' என்கிற அதே அடிப்படையில் தமிழ்ப் பேராகவே உலகத்துக்கு உள்ள வார்த்தை 'பார்'. 'வையம்', 'வையகம்' என்பதும் லோகத்துக்கு ஒரிஜினலான தமிழ்ப் பெயர். 'ஆதி பகவன் முதற்றே உலகு' என்பதற்குப் பதில் 'பழங் கடவுள் முதற்றே வையம்' என்று திருவள்ளுவர் தாராளமாகப் பாடியிருக்கலாம். 'மீட்ட'ரும் ஸரியாகவே இருந்திருக்கும். அப்படியிருந்தும், விசால மனஸ் படைத்த அந்தப் பெரியவர் பாஷா வித்யாஸங்களைப் பார்த்துக் கொண்டிருக்காமல் தம்முடைய நூலை ஆரம்பிக்கிற கடவுள் வாழ்த்தின் முதல் குறளிலேயே மூன்று ஸம்ஸ்க்ருத வார்த்கைளைப் போட்டிருக்கிறார். அவருடைய பெயரை எப்போதும் முழக்கிக் கொண்டிருக்கிற தமிழ் அன்பர்கள், தங்களுடைய அன்பு, தாங்கள் பெரிதாகச் சொல்லிக் கொள்கிற பகுத்தறிவோடு சேர்ந்திருக்க வேண்டுமானால் அவர் காட்டும் வழிப்படிதான் போகவேண்டும். திருவள்ளுவர் வாழ்த்துகிற அந்தக் கடவுள் - ஆதி பகவன் - தான் இந்த மனப்பான்மையை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

ஸம்ஸ்க்ருதம் தமிழ் வேரோடேயே சேர்ந்தது

ஆதி நூலான தொல்காப்பியத்திலிருந்தே 'வடசொல்' என்று புலவர்கள் சொல்கிற ஸம்ஸ்க்ருத வார்த்தைகளைக் கலந்து கொள்வதற்குத் தமிழ்ப் பெரியோர்கள் தயங்கவேயில்லை. தொல்காப்பியம் என்பதில் 'காப்பியம்' என்பதே காவ்யம் - காவியம் என்கிற ஸம்ஸ்க்ருத வார்தையிலிருந்து வந்ததுதான். 'கவி', 'கவிதை' என்கிறதெல்லாமும் ஸம்ஸ்க்ருத மூலத்திலிருந்து வந்ததுதான். 'இலக்கணம்', இலக்கியம்' என்ற இரண்டுமே கூட லக்ஷணம் - இலட்சணம், லக்ஷியம் - இலட்சியம் என்ற ஸம்ஸ்க்ருத மூலத்திலிருந்தே வந்தவைதான். சிலப்பதிகாரத்தில் 'அதிகாரம்' என்பது ஸம்ஸ்க்ருதம்தான். 'படலம்', 'சருக்கம்' (ஸர்கம்) என்கிற மாதிரி உள்ள ஸெக்ட்ஷன் பேர்களெல்லாம் ஸம்ஸ்க்ருதந்தான். 'மூலம்- உரை' என்பதில் 'மூலம்' என்பது ஸம்ஸ்க்ருதந்தான். இப்படிக் கணக்கு வழக்கில்லாமல் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆத்ம ஸம்பந்தமாக எடுத்துக் கொண்டாலோ கேட்கவே வேண்டாம் யோகம், ஜபம், தபஸ், - தவம்' என்கிறது 'தபஸ்'லிருந்து வந்ததுதான் - மந்த்ரம், தந்த்ரம், யந்த்ரம், ஆகமம், புராணம் போன்ற எத்தனையோ ஸம்ஸ்க்ருத வார்த்தைகளுக்குத் தமிழில் வார்த்தையே இல்லை. ஏனில்லை என்றால், நம்முடைய ஆதி காலத் தமிழ்ப் பெரியோர்களிலிருந்து ஆரம்பித்து எல்லோரும், 'அதுதான் தமிழோடு வேரிலேயே, வேரோடு வேராகச் சேருவதாக உள்ள ஸம்ஸ்க்ருதத்தில் வார்த்தைகள் இருக்கின்றனவே! அவை நமக்கும் ஸொந்தம்தானே? அவற்றிலிருந்து எடுத்துக் கொண்டால் போயிற்று!' என்று கொஞ்சங்கூட கல்மஷம் இல்லாமல் நினைத்து அப்படியே பண்ணியதால்தான் புதிதாகத் தமிழ் வார்த்கைள் உற்பத்தி பண்ணவில்லை. ஸம்ஸ்க்ருத வார்த்தைகளையே ' genius of the language' - 'ஒரு மொழியின் தனிப் பண்பு' - என்கிறதற்கேற்பத் தமிழிலே கொஞ்சம் மாற்றி ரூபம் பண்ணி - 'லக்ஷ்யம்' என்பதை 'இலக்கியம்' என்று ஆக்கின மாதிரிப் பண்ணி - தமிழிலே சேர்த்துக் கொண்டார்கள். வேடிக்கையாக, வேடிக்கையிலேயே வருத்தமும் தருவதாக ஒன்று கேள்விப்பட்டேன். அரசியலில் முக்யமாயிருக்கிற ஒருத்தருக்குத் தங்கள் கட்சியில் எவரோ 'விக்ஞாபனம்' என்று எழுதி விட்டதைப் பார்த்து ஒரே கோபம் வந்தவிட்டதாம். 'விண்ணப்பம்' என்று மாற்றிப் போடச் சொன்னாராம். ஆனால் இதுவும் முன்னே 'ஸ்நேஹம்' - 'நேயம்' சொன்னேனே அந்த மாதிரி ஒன்றுதான்! ஸம்ஸ்க்ருத 'விஜ்ஞாபனே'மே ப்ராக்ருதத்தில் 'விண்ணாபணம்' என்று வரும், அதுதான் தமிழ் விண்ணப்பம்'. 'விஞ்ஞான'த்தைத் தமிழில் 'விண்ணாணம்' என்பதும் ப்ராக்ருதத்தைத் தழுவித்தான். எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், தமிழ் பாஷைக்கேயான தனி genius -ஏ ஸம்ஸ்க்ருதத்தின் பேச்சு மொழியான ப்ராக்ருதத்தின் genius -ஓடு நகமும் சதையும் மாதிரிச் சேர்ந்துதானிருக்கின்றது என்று காட்டுவதற்குத் தான்!

எத்தனைதான் யத்தனம் பண்ணினாலும் அந்த ஸம்ஸ்க்ருத வேரைப் பிடுங்க முடியாது, முன்னேயே சொன்னாற்போல, நாம் தமிழ் என்றே நினைத்துக் கொண்டிருக்கிற பல வார்த்தைகளே ஸம்ஸ்க்ருதந்தான்! ஒரு பெரிய அறிவாளி பேசியிருந்தார்: "வடமொழி சவப் பெட்டியில் ஆணி அறைவோம்" என்று ஒரு தனித் தமிழன்பர் சொல்லியிருந்தார். அதைக் குறிப்பிட்டுத்தான் அந்த அறிவாளி பேசியது, அவர் என்ன சொன்னாரென்றால், "அந்த ஸம்ஸ்க்ருத த்வேஷக்காரர்கள் சொன்னதிலேயே மூன்று ஸம்ஸ்க்ருத வார்த்தைகள் இருக்கிறது. ஒன்று, 'சவம்'. இரண்டாவதாக, 'பெட்டி' என்பதும் 'பேடம்', 'பேடகம்' என்பதன் தமிழ்தான். மூன்றாவதாக, 'ஆணி'. வேதத்திலேயே உள்ள வார்த்தை 'ஆணி'. 'சவ'த்துக்கும் 'பெட்டி'க்கும் வேறே மூலமான தமிழ் வார்த்கைளும் உண்டு. அனால் 'ஆணி'க்கு தமிழ் வார்த்தையே இல்லை" என்றார். 'ஆணி' மாதிரி ஸகல ஜனங்களும் சொல்வதாக உள்ள ஏகப்பட்ட வார்த்தைகள் ஸம்ஸ்க்ருதமாக இருக்கின்றன. 'தச்சன்', 'கருமான்' என்கிறோமே, அவை 'தக்ஷன்', 'கர்மாரன்'தான். வேதத்திலேயே இருக்கிற ஸ்ரீ ருத்ரத்தில், ஈச்வரனே தக்ஷர்களாகவும், கர்மாரகர்களாகவும் இருக்கிறானென்று வருகிறது.

இயற்கையாகவே ரொம்பவும் ஸம்ருத்தியுடன் - புஷ்டியாக நிறைந்த வளர்ச்சியுடன், வளத்துடன் தமிழுக்கென்றே லோகம் கொண்டாடுகிற மாதிரி ஏராளமான வார்த்தைகள், Vocabulary உண்டாகத்தான் செய்தது. அப்படியிருந்தும் செயற்கையாகப் புது வார்த்தை உற்பத்தி பண்ணவேண்டாமென்றே அநேக இடங்களில், 'ஸம்ஸ்க்ருதமும் நமக்கு இயற்கைதான், 'second nature' என்கிறார்களே, அப்படித்தான் நம் வேரிலேயே பிரிக்க முடியாமல் நமதாக ஒன்றிப் போயிருக்கிற அந்த பாஷையிலிருப்பதையே நாமும் வைத்துக்கொள்வோம்' என்று நம் முன்னோர்கள் அபிப்ராயப்பட்டு அப்படியே செய்திருக்கிறார்கள்.

அப்படி வேராக இருப்பதைத்தான் இப்போது வேறாக நமக்கு வேறுபட்டது, வேண்டாதது என்று நினைத்துப் பிடுங்கிப் போடப் பார்க்கிறார்கள். வேரைப் பிடுங்கினால் என்ன ஆகும்? வேருக்கு 'மூலம்' என்று பேர். மூலத்தைக் கெடுத்தால் நிர்மூலமாக அல்லவா ஆகிவிடும்? அப்படிப்பட்ட உத்பாதத்தைத்தான் தமிழ் பாஷைக்கு ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்.

எல்லாரும் நல்லவர்கள்தான். ஏதோ தெரியாத்தனம், யாரோ இரண்டொருத்தர் தப்பாக நினைத்து, தங்களுக்கு இருக்கிற வசீகரத்தால் மற்றவர்களையும் தப்பில் இழுத்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் தமிழன்பர்கள், தமிழடியார்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்களே அந்த பாஷையின் வேரில் வெட்டுப் போடுவதும், தமிழ் மரபு, தமிழ் மரபு என்கிறவர்களே அந்த மரபை உண்டு பண்ணி, வளர்த்துக் கொடுத்தவர்களின் அபிப்ராயத்துக்கு நேர் மாறாகப் பண்ணுவதாகவும் நடந்து வருகிறது.

நாம் பதிலக்குக் கோபப்பட்டு ப்ரயோஜனமில்லை. சாந்தமாக எடுத்துக் காட்டிப் புரிய வைக்கவேண்டும். எல்லோருக்கும் நல்லறிவு உண்டாவதற்கு வாக்தேவியைப் பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும். வேதவ்யாஸர் என்றே பேருள்ளளவர் பண்ணின மஹாபாரதம், நம்முடைய முத்தமிழ் இரண்டையும் ஒரே மாதிரி மலையிலே எழுதி வைத்த விக்நேச்வரரிடமும், நமக்கு இரண்டு கண்மாதிரி உள்ள இந்த இரண்டு பாஷைகளை வைத்துச் சண்டை - சாடி உண்டாகாமலிருக்க பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

இனம் என்றும் பாஷை என்றும் பிரிந்து போகாமல் நாம் அத்தனை பேரும் ஒரே பார்வதி - பரமேச்வரர்களின் குழந்தைகளாக, பிள்ளையாருக்குத் தம்பி - தங்கைகளாக ஒன்று சேரவேண்டும். அவரையே பிரார்த்தித்துக் கொள்ளுவோம்.



நன்றி: 
http://www.kamakoti.org/tamil/7dk18.htm, 
http://www.kamakoti.org/tamil/7dk19.htm, 
http://www.kamakoti.org/tamil/7dk20.htm

No comments:

Post a Comment