Contact Us

Name

Email *

Message *

Sunday 3 August 2014

உபாகர்மா

து ஆவணி மாசத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் வருவதாலே எல்லாரும் ஆவணி அவிட்டம்னே சொல்லிக்கொண்டிருக்கோம். பார்க்கப் போனால் இதை உபாகர்மா என்றே அழைக்கவேண்டும். வேத அத்யயனம் என்பது ஒரு காலத்தில் தினமும் செய்யப்பட்டது. அதன் ஆரம்பம் உண்மையில் சிராவணமாசம் பெளர்ணமி தினத்தில் வேத பாடங்கள் ஆரம்பிக்கப் பட்டன. மேலும் நம்முடைய கல்வித் திட்டத்தில் வெறும் வேத அத்யயனம் மட்டுமில்லாமல் மற்றப் பாடங்களையும் சேர்த்தே கற்பித்தனர். அது இந்த வேத அத்யயனம் உத்ஸர்ஜனம் செய்து முடித்தவுடன் ஆரம்பம் ஆகும். உத்ஸர்ஜனம் செய்வது தை மாசத்தில் நடக்கும். நம்முடைய புராதனக் கல்வித் திட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. முதலில் ஆரம்பிப்பது ஐந்து மாசங்களில் நடக்கும் வேதபாடங்கள். வேத அத்யயனம் என்றே சொல்லலாம். இரண்டாவது பகுதி ஏழு மாதங்கள். அப்போ வேத அத்யயனம் செய்வதை உத்ஸர்ஜனம் என்றும் சொல்லும் பகுதி நேர முடிவுக்கு வந்துவிட்டு மற்றப் பாடங்களைப் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.

அதாவது முன்பெல்லாம் மலையாளிகள் கொண்டாடும் திருவோணம் நக்ஷத்திரத்திலேயே ஆவணி மாத பெளர்ணமி வந்து கொண்டிருந்திருக்கிறது. ஆவணி மாசம் ஸ்ரவண நக்ஷத்திரம் எனப்படும் திருவோணம் நக்ஷத்திரமும், பெளர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாளில் வேத பாடம் கற்க ஆரம்பிப்பார்கள். முன்னால் இப்படி வந்து கொண்டிருந்த பெளர்ணமி காலப் போக்கில் சில வருடங்கள் ஒரு நாள் தள்ளி அவிட்ட நக்ஷத்திரத்திலும் வர ஆரம்பித்தது. அப்போது யஜுர்வேதிகள் பெளர்ணமி திதியைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்களை ஆரம்பித்தனர். ரிக்வேதிகளோ சிராவண நக்ஷத்திரத்தைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்கள் ஆரம்பித்தனர். ஆனால் சாமவேதிகள் எப்போதுமே அமாவாசையையே கணக்கு வைத்துக்கொண்டனர். ஆகவே அவர்கள் ஒரு மாசம் தள்ளி ஆவணி அமாவாசையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரையுள்ள காலத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் பாடங்களை ஆரம்பித்தனர். ஹஸ்த நக்ஷத்திரம் மட்டுமின்றி அன்றைய தினம் பஞ்சமி திதியாக இருப்பதும் விசேஷம் என தர்ம சாஸ்திரங்கள் சொல்லுவதாய்த் தெரிகிறது. ஆனால் இப்போதெல்லாம் த்ரிதியையிலேயே ஹஸ்த நக்ஷத்திரம் வந்துவிடுகிறது.

உபாகர்மா என்றே இதற்குப் பெயர். ஆனால் இதை ஆவணி அவிட்டம் என்று சொல்லி நன்றாய்ச் சாப்பிட (போளி, ஆமவடையோடு) ஒரு பண்டிகையாக நாளாவட்டத்தில் மாற்றிவிட்டோம். தை மாசம் பிறக்கும் வரையில் வேதத்தை மட்டும் ஆசாரியர் கற்றுக் கொடுத்து சீடர்கள் சொல்லிக் கொள்வார்கள். தை மாதம் பெளர்ணமியிலோ அல்லது தை மாதத்து ரோகிணி நக்ஷத்திரத்திலோ இந்த அத்யயன காலத்தை முடிப்பார்கள். அத்யயன காலம் குறைந்த பக்ஷமாக நாலரை மாசமாவது இருக்கவேண்டும் என்பது விதி. ஆகவே தாமதமாய் ஆரம்பிக்கும் சாமவேதிகள் தை அமாவாசைக்குப் பின் வரும் பெளர்ணமியில் வேத அத்யயன காலத்தை முடிப்பார்கள். 

அடுத்த ஏழு மாசங்களுக்கு வேதத்தின் அங்கங்களான சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவற்றில் பாடம் நடத்துவதோடு ஏனைய வித்யைகளில் மாணாக்கர்களுக்கு எதில் ருசியும் தேவையும் இருக்கிறதோ அவற்றையும் கற்றுக் கொள்வார்கள்/கற்றுக் கொடுப்பார்கள். பின் மீண்டும் இந்த ஏழு மாசப் பாடங்கள் முடிந்ததும், அடுத்த வருடம் ஆவணி மாசம் இந்தப் பாடங்களை நிறுத்திவிட்டு மீண்டும் வேத அத்யயனம் ஆரம்பிப்பார்கள். இப்படிச் சுழற்சி முறையில் பாடம் கற்பிப்பார்கள். ஆனால் இப்போல்லாம், ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படும் அன்றே ஆரம்பித்து அன்றே முடிப்பதாகப் பாவனை பண்ணிவிட்டுப் பின் மறந்துடறோம்.

இதில் தன் வேதம் மட்டுமில்லாமல் மற்ற மூன்று வேதங்களையும் சேர்த்துக் கற்கும் மாணாக்கர்களும் இருந்திருக்கின்றனர். அதே போல் வேதாங்கம் கற்கும் நாட்களில் மற்ற வித்தைகள் மட்டுமின்றி இதர ஜாதியினருக்கான வித்தைகளையும் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர். மேலும் இந்த ஆவணி அவிட்டமும், பூணூல் மாற்றுவதும், உபநயனம் செய்து வைப்பதும் அந்தணர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணருமே இந்த உபாகர்மாவைச் செய்தனர் என்று வைதிகஸ்ரீ என்றொரு புத்தகம் சொல்கிறது. இப்போது விஸ்வகர்மா என அழைக்கப் படும் ஆசாரிகள் என்றும் அழைக்கப் படும் இனத்தவரும் செட்டியார்களில் சிலரும் இந்த ஆவணி அவிட்டத்தைக் கொண்டாடுகிறார்கள்.

No comments:

Post a Comment