Contact Us

Name

Email *

Message *

Wednesday 20 November 2013

சந்திரசேகரம் - Vol 5

'பறித்ததா, கொறித்ததா?’ என்று பெரியவர் கேட்ட கேள்வியில் இலக்கிய நயம் மட்டுமில்லை. இதயத்தின் நயமும் இருந்தது என்பது போகப்போக விளங்கத் தொடங்கியது. கடலையை முறத்தில் வைத்து எடுத்து வந்த அந்த நபர், பெரியவர் முன் திணறியபடி நின்றார். பின் அந்த கடலையை வயலில் உள்ள எலி வளைகளில் இருந்து எடுத்து வந்ததை மிகுந்த பயத்துடன் கூறினார்.

பெரியவர் முகத்தில் மெல்லிய சலனம்.

ஒரு துறவிக்கு ஆசையே கூடாது. அது அற்ப கடலைப்பயிர் மீதுதான் என்றாலும், அதிலும் சில சமயங்களில் இது போல சோதனைகள் ஏற்பட்டு விடுகின்றன.

எலி ஒரு பிராணி! வளைகளில் கடலைகளை சேமித்து வைத்துக் கொண்டு, அறுவடைக்குப் பிறகான நாட்களில், அது அதைச் சாப்பிட்டே உயிர் வாழ்ந்தாக வேண்டும். வயலுக்கு சொந்தக்காரனுக்கு வேண்டுமானால், அது எலியுடைய கள்ளத்தனமாக இருக்கலாம். அதற்காக எலிகளுக்கு பாஷாணம் வைத்து கொல்லவும் முற்படலாம். ஆனால், அன்பே வடிவான துறவி, எலியை ஒரு கள்ளப் பிராணியாகவா கருதுவார்? அதிலும், எலி எனப்படுவது கணபதியாகிய பிள்ளையாரின் வாகனம். அவரை வணங்கும்போது, நம் வணக்கம் எலிக்கும் சேர்த்துத்தான் செல்கிறது. இப்படி, வணங்கவேண்டிய ஒரு ஜீவனின் சேமிப்பில் இருந்து எடுத்து வந்திருந்த கடலையை பெரியவரால் சாப்பிட முடியவில்லை. மாறாக அந்த மனிதரிடம்,இதை எந்த வளையில் இருந்து எடுத்துண்டு வந்தீங்க? அந்த இடம் ஞாபகம் இருக்கா?” என்றுதான் கேட்டார். அவரும் ஆமோதித்தார். அடுத்த சில நிமிடங்களில், ஒரு முறத்தில் அந்த கடலையோடும் இன்னொரு முறத்தில் வெல்லப் பொரியோடும் அந்த இடத்துக்கு பெரியவரே போய் நின்றதுதான் ஆச்சரியம்.

வளை துவாரத்துக்கு முன்னாலே, அங்கிருந்து எடுத்ததோடு கொண்டு வந்திருந்த வெல்லப்பொரியையும் வைத்து விட்டு, மன உருக்கமுடன் அவர் பிரார்த்தனை செய்யவும், உள்ளிருக்கும் எலிகள் வெளியே தைரியமாய் வந்து, பெரியவர் படைத்த விருந்தை அனுபவிக்கத் தொடங்கின!

சூழ்ந்து நின்ற நிலையில் பார்த்த வர்களுக்கெல்லாம் ஒரே பரவசம். மெய்சிலிர்ப்பு!

‘மனிதனுக்கு அன்பும் கருணையும்தான் பிரதானம். துறவிக்கோ அது கட்டாயம் – அது இருந்துவிட்டால் ஓருயிர்க்குக் கூட அது புரியும்’ என்கிற செய்தியை, அன்றைய சம்பவம் சொல்லாமல் சொல்லி விட்டதே!

இந்தச் சம்பவத்தை கேள்விப்பட்ட நான், இதை ஒரு மிஸ்ட்ரியாக கருதுவதா, இல்லை மிக சகஜமான ஹிஸ்டரியாக எடுத்துக் கொள்வதா என்பதில் சற்று குழம்பிப் போனேன்.

பெரியவரைத் தவிர, எவராலும் இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்த முடியாது என்றும் நம்பினேன். இப்படி ஒரு கருணையை ஒரு தெரு நாயிடமும் அவர் காட்டிய சம்பவம் ஒன்றையும், இதைத் தொடர்ந்து நான் அறிய நேரிட்டது.

துறவிகள் வருடத்துக்கு ஒருமுறை, ஒரு நான்கு மாத காலம் சாதுர்மாஸ்ய விரதம் எனும் விரதத்தை அனுஷ்டிப்பதுண்டு. என்னதான் அது பொன்னாகவே இருந்தாலும், அதை துலக்கத் துலக்கத் தான் அதன் பிரகாசம் அதிகரிக்கும்.

துறவிகள் விஷயத்தில் இப்படிப்பட்ட விரதங்களும் அப்படித்தான்! மகா பெரியவரும் ஒரு கிராமத்தில் தங்கி, இந்த விரதத்தை மேற்கொண்டார்கள். இதனால் தவசிவமானது அந்த கிராமத்தைச் சுற்றிலும் பரவிடும். அதன் விளைவுகளை காலத்தால்தான் நாம் உணர முடியும்.

எவ்வளவோ பெரிய அறிஞர்களும், ஞானிகளும் மின் விளக்குக்குக்கூட விதியில்லாத கிராமப்புறங்களில்தான் பிறந்து வளர்ந்திருக்கிறார்கள். அவர்களின் பிறப்புக்கு பின்னாலே, துறவியர்கள் மேற்கொள்ளும் இப்படிப்பட்ட தவசிவங்கள் பெரிதும் காரணங்களாய் உள்ளன.

பெரியவர் அந்த கிராமத்தில் விரத மிருந்த சமயம், தினப்படி பூஜைகள் மற்றும் சம்பிரதாய சடங்குகளும் குறைவின்றி நடந்தன. முடிவில் மடத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அன்று பங்கேற்றவர்களுக்கும் மடத்திலேயே போஜனம் அளிக்கப்படும். அதை பிரசாதமாக கருதி உண்பது சான்றோர் வழக்கம்.

ஊருக்குப் பொதுவான தர்மத்தால் வந்த அன்னம் அது. மந்திரம் சேர்ந்து சாப்பிடக் கிடைப்பது ஒரு விசேஷம். அதைச் சாப்பிடப் போய், ஒரு துளி ரத்தம் அதனால் நமக்குள் பெருகினாலும் அது போதும். உடம்பால் இன்றைய வாழ்க்கை முறையில் நமக்கு ஏற்படும் தோஷங்கள் அடிபட்டுப் போய்விடும்.

இந்த அன்னத்துக்காக ஒரு தெருநாய் கூட தவமிருந்ததுதான் விந்தை! தினமும் மதியம் எல்லோரும் சாப்பிட்ட உடன், எடுத்து எறியப்படும் எச்சில் இலைகளைத் தேடிச் சென்று, அந்த நாய் சாப்பிடத் தொடங்கிவிடும். இலையைப் போடச் செல்லும்போதே பாய்ந்துவரும். குலைக்கும். அதன் பசி அதற்கு!

இந்த சப்தம் தினமும் பெரியவர் காதிலும் விழுந்தது. அதன் பசிக்குரல், அவர் மனத்தை உருக்கிவிட்டதாம். அப்போது, ஒரு தையல் இலையில் அவர் சாப்பிட ஒரு கைப்பிடி அவலோ, இல்லை உப்பில்லாத தயிரன்னமோ அவருக்கும் அளிக்கப்படுவது வழக்கம். தனக்கு தரப்பட்ட அந்த இலைப் பிரசாதத்தை, அப்படியே குலைக்கும் நாய்க்கு வைக்கச் சொல்லிவிட்டார் பெரியவர். அதற்கும் சோறு வைக்கச் சொல்லாமல், தன் சோற்றையே அவர் தரச் சொன்னதன் பின்னே, பல நுட்பமான விஷயங்கள் ஒளிந்துள்ளன.

நாயின் குலைப்பு பசி உணர்வை பெரியவருக்கு உணர்த்துகிறது. இதை வெல்வது கடினம். இந்த பாழாப்போன பசி, எச்சில் இலை என்றுகூட பார்க்காமல் நாயைத் தூண்டுகிறது.

இதுதான் மனிதர்களையும் ஆட்டிப் படைக்கிறது. இதனால்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள், ‘ஒரு சாண் வயிறே இல்லாட்டா – இந்த உலகத்தில் ஏது கலாட்டா?’ என்று பாடவும் காரணமாகிறது.

இதை வெற்றி கொள்ளாமல், துறவை வெற்றி கொள்வதும் கடினம் என்பதுதான், அவர் உணர்ந்த, உணர்த்த விரும்பிய உண்மை.

பெரியவர், தன் இலையையே தரவும், ஆடிப்போன மடத்து ஊழியர்கள், அதன்பின் நாய்க்கு முதலில் உணவு வைத்துவிட்டு, பிறகுதான் போஜனத்தை தொடங்கினர்.

அதன்பின், பெரியவர் முன் இலை வைக்கும்போது நாய் குலைக்கவில்லை. அந்த ஒரு நாயின் பசிக்கு வழி செய்தாகி விட்டது. ஆனால், உலகத்தில் கோடி கோடி உயிர்கள்… ஒரு உயிரும் உணவில்லை என்று வருந்தக்கூடாதே…?

இந்தப் பசியின் அருமையை பெரிதும் உணர்ந்த தலைவர்களில் ஒருவர்தான் எம்.ஜி.ஆர். அவருக்கும் பெரியவருக்கும் இந்த பசி விஷயத்தில் ஒரே எண்ணம் தான்!

எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த சமயம் – முதல்வராக பொறுப்பேற்பதற்கு முதல் நாள் ஒரு சம்பவம்! அப்போது மகாபெரியவர், மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் தங்கியிருந்தார். இதே சாதுர்மாஸ்ய விரதம்தான். எம்.ஜி.ஆரை வாழ்த்தி, ஆசி கூற விரும்பினார் பெரியவர். அதன் நிமித்தம் ஒரு பொன்னாடையுடன் காமாட்சியம்மன் பிரசாதத்தை வரவழைத்து ஆசீர்வாதத்துடன், அதை வைணவ சீலரான முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியார் வசம் ஒப்படைத்து, “இதை மடத்து ஆசீர்வாதமாக முதல்வரிடம் சேர்ப்பித்துவிடு” என்று கூறி அனுப்பிவித்தார்.

முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியாரும் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து காத்திருந்து, அந்த பிரசாதத்தை எம்.ஜி.ஆர். வசம் சேர்ப்பித்தார். பெரும் ஜனத்திரளுக்கு நடுவில் பிரசாதத்தை உரிய முறையில் சேர்க்க முடியுமா என்று சந்தேகம் இருந்தது. ஆனால், பெரியவர் கருணை அங்கே பரந்தாமன் எனும் அன்பர் மூலம் வழி நடத்தி பிரசாதத்தையும் சேர்த்துவிட்டது.

அவ்வேளையில், எம்.ஜி.ஆர் அவர்கள் லஷ்மி நரசிம்மாச்சாரியாரிடம் கூறியது ஒன்றுதான்: “மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நான் ஆட்சி செய்வேன்” என்று மட்டும் பெரியவரிடம் கூறி, என் பணிவான நமஸ்காரங்களையும் கூறிவிடுங்கள் என்றார்.

லஷ்மி நரசிம்மாச்சாரியாரும் மகிழ்வுடன் விடை பெற்றுக்கொண்டார். மறுநாள் எம்.ஜி.ஆர். பெரியவர் அணிவித்த சால்வையை அணிந்துகொண்ட பிறகே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

சதாராவிலிருந்து பெரியவர் புரிந்த ஆசிகளும், கருணையும், எம்.ஜி.ஆருக்குள் இயல்பாகவே இருந்த உதாரகுணமும் ஒன்றிணைந்தன. சத்துணவுத் திட்டம் எனும் மனிதநேய அரசியல் மொட்டவிழ்ந்தது.

காமராஜர் விதைத்தது; பெரியவர் கருணையாலே எம்.ஜி.ஆரால் பெரிதும் போஷிக்கப்பட்டது. எலியிடம் தொடங்கி, நாயிடம் தொடர்ந்து நாட்டில் வந்து முடிந்துவிட்டது பெரியவரின் கருணை.

பசிக்கொடுமைக்கு பெரியவர் விடுதலை காண விரும்பியதால்தான், ‘பிடி அரிசித் திட்டம்’ என்கிற ஒரு திட்டத்தையே கொண்டு வந்தார்.

தினமும் ஒரு கைப்பிடி அரிசியை பிறருக்காக என்று ஒவ்வொரு வீட்டிலும் எடுத்து வைத்து, அதை மடத்தைச் சார்ந்தவர்கள் வரும் போது தரவேண்டும். வீட்டுக்கு வீடு சேரும் இந்த அரிசியால், ஊருக்குள் ஒருவர்கூட பட்டினியின்றி இருக்க முடியுமே?

எப்பேர்ப்பட்ட உன்னதமான திட்டம்!

பெரியவர் இருக்கும் வரை பெரிதும் பேணப்பட்ட இந்த திட்டத்தை, இப்போது நினைவில்தான் வைத்திருக்கிறோம்; பெருமளவு செயலில் இல்லை.இந்தப் பட்டினி உணர்வு மட்டும் எப்படித்தான் பெரியவருக்கு தெரியுமோ?

ஒரு புலவர், தன் குடும்பத்தவருடன் செட்டிநாட்டுப் பகுதியிலிருந்து பயணிக்கும்போது, வழியில் எங்குமே சாப்பிடக் கிடைக்கவில்லை. பசியோ குடலைப் பிடுங்கித் தின்கிறது. நேரமோ நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அப்போது, புதுக்கோட்டை அருகே ஒரு ஊரில் மகாபெரியவர் தங்கி இருக்கும் அறிவிப்பு அவர் கண்களில் படுகிறது.

உடனே காரை அங்கு விடச் சொல்கிறார். குடும்பத்தவர்களோ, ‘நள்ளிரவாகி விட்ட நிலையில், பெரியவர் தங்கி இருக்கும் இடத்துக்குப் போய், அவரை சிரமப்படுத்துவது சரியில்லை’ என்கின்றனர்.

நாம் சிரமப்படுத்த வேண்டாம். காலை அவரை தரிசித்துவிட்டு செல்வோம். இந்தப் பட்டினி அவருக்கான விரதமாக இருக்கட்டும்‘’ என்கிறார் புலவர். காரும் அந்த ஊரை நெருங்கி விட்ட நிலையில், மணி ஒன்று!

ஊர் எல்லையிலேயே ஒரு பிராமணர் காத்திருந்து, வழிமறித்து நிறுத்தி, ‘நீங்கள் தானே புலவர்?’ என்று கேட்கிறார். புலவருக்கோ பெரும் வியப்பு…!



 நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

No comments:

Post a Comment