Contact Us

Name

Email *

Message *

Monday, 31 October 2016

அன்னை ஸ்ரீ ஆண்டவன் பிச்சி - வாழ்க்கைக் குறிப்பு.. இரண்டாம் பகுதி - சிந்தையில் முருகன்


1983ம் வருடம் எழுதிய தன் சுயசரிதையில் ஸ்ரீ ஆண்டவன் பிச்சி இவ்வாறு குறிப்பிடுகிறார்:

'என்னை இளவயதில் திருத்தணி முருகன் பூரணமாக ஆட்கொண்டு பாடும் திறமையும் கொடுத்தான். ஆண்டாள் ரங்கநாதருக்கு திருப்பாவை சூடியதைப்போல் தன்னைக்குறித்து தினம் ஒரு பாடல் பாடச்சொன்னான்.'

நான் பாடிய முதல் பாடலின் சாராம்சம் என்னவென்றால்.. முருகன் என் முன் நின்று தன்னுடைய பன்னிரண்டு தோள்களுக்கும் பாமாலை சூடச்சொன்னான். நீ பார்ப்பதற்கு சிறிய பிச்சி போல தோன்றினாலும், பக்தியுடன் என்னிடம் ஒன்றியிரு, உன் உள்ளம் எப்போதும் என்னிடம் பக்தியால் பொங்கி வழியும் என்று கூறினான்.

அப்போது எனக்கு பத்து வயதுகூட இல்லை. சரியாக பேசவும் வராது. ஆனால் முருகன் என்னை ஆட்கொண்டபின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் பாட அருளினான். சில நாட்கள் பாமாலை நீண்டதாக இருக்கும். என் திருமணத்திற்கு நீண்ட காலத்திற்கு முன்பே முருகன் என்னை ஆட்கொண்டுவிட்டான். முருகன் என் இதயத்தின் ரகசிய அறையில் நுழைந்தபின் வேறு யாருக்கும், எதற்கும் அங்கு இடமிருக்கவில்லை. இந்த உணர்வு இப்பாடலில் வெளிப்படுகிறது.

'இறைவனின் கருனை எனும் கடலில் மூழ்கி முருகன் எனும் முத்தெடுத்தேன்.'

சென்னை மயிலாப்பூரில் 6.9.1899 அன்று சங்கரநாராயண சாஸ்த்ரி - சீதாலக்ஷ்மி தம்பதியினருக்கு இரண்டாவது மகளாக பிறந்தவர் மரகதவல்லி. மூன்றாம் வருடத்தில் அவர் தாய் இறந்துவிட்டார். தந்தை சிறிது காலத்திலேயே மறுமணம் செய்துகொண்டார். ஆயினும் படிப்பிலும் ஆன்மிக சாதனையிலுமே நேரம் போனதால், தனது மனைவி மற்றும்  பெண்னை கவனிக்க நேரமில்லை அவருக்கு. அவர் சகோதரர் வேங்கடசுப்பையருடனே குழந்தைகள் பெரும்பகுதி நேரத்தை செலவிட்டனர். அவரும் மரகதவல்லியிடம் வாஞ்சையுடன் இருந்தார். இவ்விடத்திலிருந்து இந்த சுயசரிதை எழுதியவர் மரகதவல்லியை மரகதம்மா என்றே குறிப்பிடுவதால் நாமும் அவ்வாறே குறிப்பிடுவோம்.

தாத்தா தண்டலன் ராமகிருஷ்ணா ஒரு சமஸ்க்ருத அறிஞர், மற்றும் அவர்தம் குடும்பத்தில் பலர் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சியுடையவராய் இருந்தனர். தந்தை மற்றும் அவர் சகோதரர் வேங்கடசுப்பையர் இருவரும் பெயர்பெற்ற வக்கீல்களாக இருந்தனர். பாட்டி திருத்தணி முருகனிடம் மிகுந்த பக்தி கொண்டவர். பேத்திக்கு முருகப்பெருமானின் பெருமைகளை போற்றும் கதைகளை சொல்லி வளர்த்து வந்தார். மரகதம்மா அதிகம் பேசும் வழக்கம் இல்லாதிருந்தார். அக்காலத்தில் பெண்களை பள்ளிக்கு அனுப்பும் வழக்கம் இல்லாததால் அவர் தந்தை வீட்டிலேயே பாடம் படிக்க ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் மரகதம்மாவுக்கு படிப்பில் நாட்டமின்றி வகுப்புகளை புறக்கணித்ததால் அவர் தந்தை அவரை 'நிரக்ஷரக்குச்சி' என செல்லமாக அழைத்தார்.

மரகதம்மா தன் ஒன்பதாவது வயதில் இருபது வயதுள்ள ஸ்ரீ நரசிம்மன் அவர்களை மணந்தார். அவ்வருட நவராத்திரி சமயம் தாய் வீடு சென்றவருக்கு ஒரு அபூர்வமான காட்சி தோன்றியது. முருகப்பெருமான் பன்னிரண்டு வயது பாலகனாக தோன்றி  ''சரவணபவ' எனும் ஷடாக்ஷரி மந்திரத்தை உபதேசித்து 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தையும் அவர் நாக்கினில் தன் வேலினால் எழுதினார்.

இல்லற வாழ்க்கையை நடத்தி ஐந்து குழந்தைகளை பெற்றார் [குருசாமி (1917), சங்கர் (1919), கற்பகம் (1921), கணபதி (1923), மற்றும் சேஷாத்ரி (1924)]. கடைசி குழந்தை பிறந்த இரண்டு நாட்களில் அவருக்கு மறுபடியும் ஆண்டிக்கோலத்தில் முருகக்கடவுளின் காட்சி கிடைத்து அறநூறு பாடல்களை பாடி முடித்தார். தன் மகன் பசியில் பாலுக்காக அழும் குரல் கேட்டபின்தான் சுய உணர்வு பெற்றார். இது கண்டு மரகதம்மாவை கவனித்துவந்த செவிலியர் கடிந்து கொண்டு அவர் மாமியார் காவேரியம்மாளிடமும் சொல்லிவிட்டார். இந்நிகழ்ச்சி அவர்களிடையே சிறு மனக்கசப்புக்கு வழி வகுத்தது. முருகனை ஆண்டிக்கோலத்தில் துதித்தால் குடும்பமே ஆண்டியாகிவிடும், தவிரவும் குழந்தை பிறந்த தீட்டுக்காலத்தில் இறைவனை பாடுதல் கூடாது எனக்கூறி காவேரியம்மாள் மருமகள் எழுதிய பாடல் புத்தகங்களை மறைத்து வைத்தார். மேலும் முருகனைப்பற்றிப் பேசவோ பாடவோ கூடாது என அவர் வணங்கும் முருகன், கணவர் மற்றும் பிள்ளைகள் மீது உறுதியும் வாங்கிக்கொண்டார். சிந்தையில் முருகன் இருக்கையில் இவ்வாறு உறுதி கொடுப்பது அவசியமற்றது என்று மரகதம்மாவுக்குத் தெரிந்திருந்தது.

தொடர்ந்த இல்லற வாழ்வில் 1926ல் வேங்கடராமன் பிறந்தார். பிரசவத்திற்குப் பின் 'செப்டிசீமியா' எனும் நோய் தொற்றிற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மயக்க மருந்தை ஏற்க மறுத்து முழு உணர்வுடன் சிகிச்சையை செய்துகொண்டார். உடல் வலி தன்னை பாதிக்காத வண்ணம் அவர் மனம் பக்குவப்பட்டிருந்தது. அடுத்தடுத்து காமாக்ஷி (1928), பத்மா (1929) மற்றும் வாசுதேவன் (1936) ஆகியோர் பிறந்தனர். இவர்களுள் பத்மா மூன்று வயதிலேயே பாடல் புனைந்து காஞ்சி பரமாச்சார்யாளின் பக்தராக விளங்கினார். அவர் கண் பார்வை இழந்து, பரமாச்சார்யாளின் அனுக்ரஹத்தால் மீண்டும் பார்வை பெற்றார். 1936ம் வருடம் தனது எட்டாவது வயதில் தேவியின் திருவுருவச் சிலைக்கு பூமாலை தொடுத்து அணிவிக்கும்போது காலமானார். மகன் வாசுதேவன் நோய்வாய்பட்டு இறந்தார். மற்றொரு மகன் விபத்தில் சிக்கி மனம் பாதிப்படைந்து 1940ல் காலமானார். மற்ற பிள்ளைகள் வளர்ந்து அவரவர் துறையில் சிறந்து விளங்கினர்.

ஆனால் குடும்ப நிகழ்வுகள் எதுவும் உள்ளத்தில்  முருகனின் தரிசனம் கண்டு சமநோக்கு அடைந்த  மரகதம்மாவை பாதிக்கவில்லை. ஆன்மிக பாடல்கள் எப்போதும் போல அருவியாய் வந்தன. 1930ல் மாமியார் காலமான பின்பும் மரகதம்மா அப்பாடல்களை வாய்திறந்து பாடுவதில்லை. அவ்வாறு பாடினால் தனது கணவருக்கும் பிள்ளைகளுக்கும் தீங்கு நேரமோ என அஞ்சி தான் வணங்கும் முருகனிடமே முறையிட்டார். பின்பு தன் உள்ளத்தினின்று முருகன் மறைந்துவிட்டதை உணர்ந்தார். திரும்பவும் மனதினில் தோன்றும்படி முருகனிடமே இறைஞ்சினார். சில நாட்களுக்குப் பின் அவர் மனதில் ஒரு குரல் கேட்டது.. "நான் உன்னுள்ளேயே இல்லையா? வெளியில் ஏன் தேடுகிறாய்?.. உன் பார்வையை உள்நோக்கி என்னைக் காண்பாய்". அவ்வாறே உள்நோக்கியதும் தன்னுள்ளே மட்டுமின்றி எங்கும் முருகனே நீக்கமற நிறைந்திருப்பதைக் கண்டார். இயல்பு நிலைக்குத் திரும்பியதும் இந்த அனுபவம், குழந்தை கண்ணன் வாயில் உலகையே கண்ட யசோதையின் அனுபவத்தை தனக்கு நினைவூட்டியதாகக் கூறினார்.

(ஸ்ரீ ஆண்டவன் பிச்சி அவர்களின் முக்கிய வாழ்க்கைக் குறிப்புகள் கீழ்கண்ட வலை தளத்திலிருந்து (ஆங்கில மூலம்) இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.. இதன் தொடர்ச்சியாக மேலும் சில தகவல்கள் அடுத்த பதிவில்).

This post has come from a book entitled The Gift of God or Andavan Pichhai by Smt and Dr Krishna Rao. It was published by the Divine Life Society, Sivanandanagar, Uttar Pradesh, in 1983.

Source (English): http://sri-ramana-maharshi.blogspot.in/2008/06/andavan-pichhai_09.html

No comments:

Post a Comment