Contact Us

Name

Email *

Message *

Friday 6 December 2013

ஆருத்ரா தரிசனம்


மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம். தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்று அழைப்பர்.

மார்கழி மாதத்து பௌர்ணமியோடு திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் `திருவாதிரை' விழாவாக கொண்டாடப்படுகிறது. இதை "ஆருத்ரா தரிசனம்'' என்றும் அழைக்கின்றனர். ஆருத்ரா என்ற வடமொழிச்சொல் திரிந்து தமிழில் ஆதிரை ஆனது. அதோடு திரு என்ற அடைமொழியை பெற்று திருவாதிரை என்றானது. சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமாகும்.

திருவாதிரை நாளன்று நடராஜருக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.  இந்நாளில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் மிகவும் விசேஷம். சிவபெருமானுக்குரிய ஐந்து சபைகளில் பொற்சபை உள்ள இடம் சிதம்பரம் ஆகும்.

இத்தலத்தில் தான் தாருகா வனத்து ரிஷிகளின் செருக்கை அடக்க சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடினார்.  ருத்ர தாண்டவம் ஆடும் அளவிற்கு சிவபெருமானுக்கும், தாருகா வனத்து ரிஷிகளுக்கும் என்ன பிரச்சனை?

தாருகாவனம் என்ற வனத்தில் மிகவும் தவ வலிமை கொண்ட முனிவர்கள் இருந்தார்கள். நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள் முதலியவற்றைக் கற்றுணர்ந்த அவர்கள் அதன்படியே தங்களுடைய காரியங்களைச் செய்து வந்த போதிலும் எல்லாவற்றிற்கும் காரணமான ஈசுவரன் ஒருவன் இருக்கிறான் என்ற நினைவே இல்லாது, ஈசுவரத் தியானமில்லாமல் இருந்தனர்.

எனவே அவர்களுக்கு ஈசுவரத் தியானத்தை உண்டாக்கும் பொருட்டு, சிவபெருமான், திருமாலை நினைத்தார். நினைத்த மாத்திரத்தில் தன் முன் தோன்றிய திருமாலுடன் சேர்ந்து முனிவர்களை நல் வழிப்படுத்த விரும்பினார். சிவபெருமான், திருமாலை தாருகாவனத்தில் உள்ள முனிவர்களை மயக்கும் அளவிற்கு அழகிய பெண் வேடம் பூண்டு செல்லுமாறு கூறியதோடு, தானும் பிக்ஷாடன (பிச்சை எடுப்பவர்) வேடம் பூண்டு, நந்தி தேவரோடு தாருகா வனம் வந்தார்.

நந்தி தேவரை ஓரிடத்தில் இருக்கச் சொல்லிவிட்டு, சிவபெருமான் முனிவர்களின் குடில்களுக்கு அருகில் சென்று பிச்சை கேட்பவரைப் போல, அங்கும் இங்கும் சுற்றி கொண்டிருந்தார். அவரின் அழகில் மயங்கிய முனிபத்தினிகள் (முனிவர்களின் மனைவிகள்) அவரின் மேல் மோகம் கொண்டு அவரை அடைய விரும்பி அவர் பின்னாலேயே சுற்றி வந்தனர். மறுபுறம் பெண் வேடமிட்டு வந்த திருமால் காம விகாரத்துடன் யாக சாலைகள் அமைக்கப்பட்டிருந்த இடங்களில் சுற்றி திரிந்தார்.

அங்கிருந்த இளம் முனிவர்கள் பெண்ணின் அழகில் மயங்கி, தவத்தை கைவிட்டு அவளின் காமரூபத்தை கண்டவர்களாய், அவள் பின்னாலேயே சுற்றி வந்தனர். இதைக்கண்ட வயது முதிர்ந்த முனிவர்களும், தங்களின் தவ நிலையிலிருந்து விலகாத மற்ற முனிவர்களும் கோபம் கொண்டும், தங்களுடைய இளம் முனிவர்களையும், பெண்களையும் காம விகாரத்தில் ஈடுபடச் செய்த இருவரையும் அழிக்க நினைத்தனர்.

அதற்காக அக்னியில் எதிரியை அழிப்பதற்காக அதர்வண வேதத்தில் சொல்லியிருக்கின்ற ஹோமத்தை வளர்த்தனர். ஹோமத்திலிருந்து முதலில் புலி பாய்ந்து வந்தது. அதை சிவபெருமான், தம்முடைய நகங்களால் இரண்டாகப் பிளந்து, அதன் தோலை ஆடையாக்கிக் கொண்டார். பின்னர் ஹோமத்திலிருந்து வந்த பாம்புகளை முனிவர்கள் ஏவ, அவை சிவபெருமானுக்கு அணிகலன்களாகின.

இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் முன்னினும் தீவிரமாக யாகத்தைச் செய்து அபஸ்மாரம் என்ற பெரிய பூதத்தை ஏவினார்கள். அதை தன் வலக்காலுக்கு அடியில் போட்டு அதன் மீது சிவபெருமான் ஏறி நின்றார். எதுவுமே பலிக்காத நிலையில் யாகம் வளர்த்த அக்னியை ஏவ, அதை தன் இடக்கையில் ஏந்தினார். தங்களுடைய அக்னியை இழந்த முனிவர்கள், கடைசி ஆயுதமாக வேத மந்திரங்களை ஏவினர்.

அவைகளைச் சிலம்புகளாக மாற்றி தன் பாதத்தில் அணிந்து கொண்டார். தங்களால் நெடுங்காலமாக செய்து வரப்பட்ட தவம், அக்னி, வேத மந்திரங்கள் முதலிய எதனாலும் சிவபெருமானை வெல்ல முடியாது போகவே தாங்கள் தோற்றுவிட்டதாக மட்டுமே முனிவர்கள் நினைத்தனர். எனவே அவர்களின் அறிவு கண்களைத் திறப்பதற்காக தன் சடைகள் எட்டுத்திக்கும் விரிந்தாட, அண்டங்கள் எல்லாம் குலுங்க, தாண்டவம் ஆடினார்.

அதைக்கண்ட முனிவர்கள், பிக்ஷாடன வேடமேற்று வந்திருப்பவர் சிவபெருமான் என்று அறிந்து தங்களின் தவற்றை பொறுத்தருள வேண்டினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்றி சிவபெருமான், தன்னுடைய ருத்ர தாண்டவத்தை ஆனந்த தாண்டவமாக மாற்றி அவர்களுக்கு அருள் புரிந்தார். மார்கழி மாதம் குளிர் அதிகமாக இருக்கும். எங்கும், எதிலும் குளிர்ச்சி தான்.


பதஞ்சலி முனிவருக்கு அருள்

பாற்கடலில் ஒரு நாள் மகாவிஷ்ணு திடீரென்று மகிழ்ச்சியில் திளைப்பதைக் கண்ட ஆதிசேஷன் அதற்குக் காரணம் கேட்டார். திருவாதிரை நாளன்று சிவபெருமான் நடேசனாக ஆடிய திருத்தாண்டவமே தனது மகிழ்ச்சிக்குக் காரணம் என்றார் திருமால். பரந்தாமனையே மெய்மறக்கச் செய்த அந்த நாட்டியத்தைத் தானும் காண ஆவல் கொண்டார் ஆதிசேஷன். பெருமாளும் ஆசியளித்தார். உடனே ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் பதஞ்சலி முனிவராக உருக் கொண்டு, பூலோகம் வந்து தவம் செய்யத் தொடங்கினா. தவம் உக்கிரம் அடைந்தபோது, பதஞ்சலி முனிவர் திடீரென்று கேட்ட குரலால் கண்விழித்தார். சிவபெருமான்  தோன்றி, உம்மைப் போலவே வியாக்ரபாதரும் திருநடனம் காணவேண்டி காத்திருக்கிறார். நீங்கள் இருவரும் தில்லையில் என் நடனத்தைக் கண்டு மகிழ்வீராக என்று கூறி மறைந்தார். அதன்படி பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாதரும் சிதம்பரம் திருத்தலத்தில் திருவாதிரை நாளில் திருநடனத்தைக் கண்டனர். எனவே மார்கழி திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து, சிவாலயம் சென்று, நடராஜ தரிசனம் கண்டால் நமது பாவங்கள் விலகி புண்ணியம் பெருகும் என்கின்றன புராணங்கள். 


உலகை இயக்கும் நடனம்

இந்த உலகமானது, நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என்ற பஞ்ச பூதங்களால் இயங்குகிறது. உலக இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பது இறைவனின் நடனம்தான். இறைவன் அசைவதால்தான் உலகமே இயங்குவதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வுலகின் மூச்சாக இருந்து எப்போது இயக்குபவராக இறைவன் உள்ளார். எனவேதான் அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்கின்றனர். நடராஜரின் ஆட்டம் நின்றுவிட்டால் உலகின் இயக்கம் நின்றுவிடும். சிவபெருமான் 108 நடனங்களை ஆடியிருக்கிறார். இதில் சிவன் மட்டும் தனித்து ஆடியது 48. சிதம்பரத்தில் நடராஜன் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவர் என்கின்றன புராணங்கள். இதனையே பார்க்க முக்தி தரும் தில்லை என்கின்றனர். நம் ஆன்மாவை சிவகாமியாக எண்ணி, நடராஜரின் நடனத்தை காணவேண்டும் என்பது ஐதீகம். 

சேந்தனார் வரலாறு

சேந்தனார் ஓர் விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார்.

ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேள்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார். சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் திலைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார். கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். ஆனால் அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.

எம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.

சேந்தனார் இறைவன் அருளால் "மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது. சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானுக்கு  களிபடைக்கபடுவதாகச் சொல்லப்படுகின்றது.

திருவாதிரை நோன்பு (விரதம்)

திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர்.


திருவாதிரைக் களி

‘திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பது பழமொழி. எனவேதான் மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி தின்று மகிழ்கின்றனர். அதன்பலன் அளவிடற்கரியது. திருவாதிரை விரதம் இருப்பவர்கள் களி செய்து படைக்கும் வரை வெறும் வயிற்றுடன் தியானிப்பதோடு, சிவாலயம் சென்று நடராஜரைத் தரிசித்து வருவது சிறப்பு என்கின்றன புராணங்கள்.
 

சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் (2013)

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா மகா தரிசனம் விழாவிற்கான கொடியேற்றம் வரும் டிசம்பர் 9ம் தேதி நடக்கிறது.

டிசம்பர் 7ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. தொடர்ந்து 9ம் தேதி காலை சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

இதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்தி புறப்பாடு செய்து கோவில் உள் பிரகாரம் வலம் வந்து கொடிமேடை அருகே எழுந்தருளி காலை 9:00 மணிக்கு உற்சவ கொடி ஏற்றப்படுகிறது. இரவு சுவாமி மற்றும் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடக்கிறது.

முக்கிய விழாவான 13ம் தேதி சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தெருவடைச்சானும்; 17ம் தேதி காலை 7:00 மணிக்கு திருத்தேரோட்டமும் நடக்கிறது.

தொடர்ந்து சுவாமி அம்பாள் ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் இரவு 8:00 மணிக்கு எழுந்தருளி, ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது.

தொடர்ந்து 18ம் தேதி ஆருத்ரா தரிசனத்தையொட்டி ஆயிரங்கால் மண்டபம் முகப்பு ராஜசபையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு மகா அபிஷேகம் அதிகாலை 4:00 மணிக்கும்; மகா தீபாராதனை காலை 6:00 மணிக்கும் நடக்கிறது. 6:30 மணிக்கு சுவாமி - அம்பாள் திருவாபரண அலங்கார காட்சியும்; 10:00 மணிக்கு சித்சபையில் கோவில் தீட்சிதர்களின் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது.

பகல் 2:00 மணிக்கு ஆருத்ரா மகா தரிசனம் நடக்கிறது.  அதைத் தொடர்ந்து, 19ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, முத்துப்பல்லக்கு வீதியுலாவும்; 20ம் தேதி ஞானப்பிரகாசம் குளத்தில் நடராஜர் சமேத சிவகாமசுந்தரி தெப்பல் உற்சவம் நடக்கிறது.

No comments:

Post a Comment