Contact Us

Name

Email *

Message *

Wednesday, 26 June 2013

சந்திரசேகரம் - Vol 2

நமது மதத்தில் எனக்கு மிகப்பிடித்த விஷயம் என்று நான் கருதுவது, ஒருவரை பார்க்கும்போதே அவரைப் பற்றி நாம் சில அடிப்படை விஷயங்களையாவது அறிந்துகொள்ள முடிகிறதே அதைத் தான்…!  அதை என்றால் எதை?

நெற்றித்திலகம், கழுத்துத் தாலி, காலில் மெட்டி, வகிட்டுக் குங்குமம், – இவைகள் ஒருவரின் பக்திச் சார்வை, அதிலும் அவரது மார்க்கம் சைவமா, வைணவமா என்பதைக்கூட பளிச்சென்று நமக்கு புரிய வைத்துவிடும்.

இம்மட்டில் ஆண்களைவிட, பெண்களுக்குத்தான் அவர்களின் தாலி மற்றும் மெட்டியால் பெரும்பாதுகாப்பு ஏற்பட்டு, அவர்களை அது பாதுகாப்பதாகவும் நான் நம்புகிறேன். இவள் மணமானவள் என்பது தெரிந்த மாத்திரத்தில், வாலிப ரசனை வாலைச் சுருட்டிக் கொள்வதும், அவள் தாயாகப் போகிறவள் அல்லது தாயாகிவிட்டவள் என்றுணர்ந்து, அவள் வரையில் ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கிக் கொள்வதையும் பலரிடம் பார்த்திருக்கிறேன்.

இம்மட்டில் பெண்ணுக்கு குங்குமம், ஆணுக்கு விபூதி, திருமண் என்கிற அடையாளங்களை ஒரு பழக்கமாகவும் வழக்கமாகவும் ஆக்கி அளித்திருக்கிற அந்த ஆன்மிக நெறிப்பாட்டின் பின்னாலே, ஒரு பெரும் பொருள் இருக்கிறது. இதற்கான விடையை நான் எவ்வளவோ பேரிடம் கேட்டிருக்கிறேன். யாரும் நெற்றியில் தரிக்கும் விபூதிக்கோ, இல்லை திருமண்ணுக்கோ என் நெஞ்சம் நிரம்பும் வண்ணம் ஒரு பதிலைச் சொன்னதில்லை.

கண்ணதாசன் மட்டும் தன் அர்த்தமுள்ள இந்து மதத்தில் ஓரளவு சொன்னார்.

ஒவ்வொரு முறை விபூதியை தரிக்கும்போதும், ஒவ்வொரு இந்துவும், இந்த உடம்பும் ஒருநாள் ‘இந்த விபூதிச் சாம்பல் போல் ஆகப்போகிறது’ என்பதை உணர்ந்து கொள்கிறான். திருமண்ணோ இந்த உடம்பை மண் தின்னப்போகிறது என்று சொல்லாமல் சொல்கிறது. எனவே, ‘நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கை வாழும் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அர்த்தமுள்ள செயல்பாடுகளுக்கு ஒதுக்கி அடக்கத்துடனும் ஆரவாரம் இல்லாமலும் வாழவேண்டும்’ என்று விபூதி, திருமண்ணுக்கு அவர் சொன்ன பொருள் ஏற்புடையதாக இருந்தது.

பெரியவரோ, இம்மட்டில் வெகு ஆழமான விளக்கத்தை அளித்திருக்கிறார். அதை நான் அறிய நேர்ந்தபோது, என் நெற்றித் திருமண்ணை ஒரு சார்புக்குறியாக மட்டும் நான் கருதவில்லை. நம் சான்றோர்களின் ஆழமான பேரறிவை எண்ணி வியந்து போனேன்.

‘விறகினை அக்னி எரித்து சாம்பலாக்குகிறது. இறுதியில் அந்த சாம்பலே பஸ்மமாக மிஞ்சுகிறது. அதேபோல ஞானம் என்கிற நெருப்பு மனித வாழ்வின் கர்மங்களை எல்லாம் எரித்து பஸ்மமாக்குகிறது’ என்கிறான் கண்ணன் கீதையில்… கண்ணனின் கருத்துப்படி பார்த்தால், ஞானத்தின் தோற்றம்தான் பஸ்மம்; அதாவது விபூதி! இதைச் சுட்டிக்காட்டி தன் கருத்தைக் கூற முன் வரும் பெரியவர், வெகு அழகாக அதற்காக அஸ்திவாரமிடுகிறார்.

‘பல வர்ணங்களைக் கொண்ட பொருள்களைக் காண்கிறோம். ஆனால், அவை அவ்வளவும் எரிந்தபின் மாறிவிடுகின்றன. கடைசியில் வெளுத்துப் போவிடுகின்றன. நாம் சாயம் வெளுத்துப் போய்விட்டது என்கிறோம். சாயம் என்பது வேஷம். வேஷம் போனபின் இருப்பதே மெய். என்றால், மெய்யான ஆத்மாவின் வடிவம் தூய வெண்ணிறம் – வடிவம் கொடுத்தால் அது விபூதி. பொயானது இந்த தேகம். இதன் மேல் விபூதியை பூசிக் கொள்கிறோம். ஒரு நாள் இதுவும் எரிந்து, இறுதியில் இந்த வெண்ணிற விபூதியை சார்ந்து நிற்கிறது.  ஆக, விபூதி நாம் யார் என்பதையும், நம் முடிவு எப்படிப்பட்டது என்பதையும் முதலிலேயே சொல்லிவிடுகிறது’ என்கிறார்.

அப்படியே திருமண்ணுக்கும் விளக்கம் தருகிறார். வைஷ்ணவர்கள் துளசிச் செடியின் அடி மண்ணைத்தான் திருமண் என்று இட்டுக்கொள்வார்கள். அதை உடம்பின் பன்னிரெண்டு இடங்களில் இட்டுக்கொள்வார்கள். அப்படி இட்டுக்கொள்ளும்போது, விஷ்ணுவின் நாமங்களை (பெயரை) கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, மதுசூதன, த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ஹ்ருஷிகேச, பத்மநாப, தாமோதர என்று சொல்லிச் சொல்லி இட்டுக்கொள்வார்கள்.  இப்படி நாமங்களைச் சொல்லி இட்டுக்கொண்டதுதான் பின்னாளில், ‘நாமம் போடுவது’ என்றாகிவிட்டது’ என்கிறார்.

என்ன ஒரு நேர்த்தியான வியாக்யானம்! பெரியவரின் இந்த கருத்தை தெய்வத்தின் குரல் வாயிலாக அறிந்த பிறகு விபூதி, திருமண்ணைப் பார்க்கும்போதெல்லாம் அவர் சொன்ன ‘சாயம் வெளுத்துவிட்டது’ உதாரணமும், நாமம் சொல்லிப் போட்டது ‘நாமம் போடுவது’ என்றாகிவிட்டதும் நினைவுக்கு வரும்.

அடுத்து பெரியவரின் விளக்கத்தில், விநாயகரையும் சரஸ்வதியையும், நான் விளங்கிக் கொண்டதை கூறியாக வேண்டும்.  சின்ன குழந்தையாக இருக்கும்போதே நமக்கு மிக அணுக்கமாகி விடுகின்ற தெய்வங்கள் இந்த இருவர்தான். ‘ஆனை உம்மாச்சி’ என்று விநாயகப் பெருமானை நமக்கு நம் பெற்றோர்கள் அறிமுகம் செய்து வைப்பார்கள். யானை முகத்துடன் கூடிய அந்த தோற்றமே நம்மையும் வெகுவாக கவர்ந்து விடும்.

அடுத்து இவருக்குத்தானே ஆல மரத்தடி, அரச மரத்தடி, ஆற்றங்கரை என்று எங்கு பார்த்தாலும் இடம்? இதில் பிள்ளையார் சதுர்த்தி வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். களிமண்ணை எடுத்து வைத்து பிள்ளையார் பிடிக்க பாடாபட்டு, ஆனால் எப்படியோ கிட்டத்தட்ட ஒரு வடிவத்தை உருவாக்கிப் பிடித்துவிடுவேன்.

அத்தனை சிரமப்பட்டு பிடித்த பிள்ளையாருக்குத்தான் பிறகு பூஜைகள். அதிலும், பிள்ளைகளுக்கு மிகப்பிடித்த கொழுக்கட்டை, அவல், பொரி, வெல்லம் வகையறாக்கள்!  எனவே, பிள்ளைகளின் மனம் கவர்ந்த தெய்வம் யாரென்றால் பிள்ளை யார்தான் முன் நிற்பார். பரீட்சை எழுதும் போது பிள்ளையார் சுழி என்று பேப்பரின் தலையில் ஒரு சுழி சுழித்த பிறகே பாடங்களுக்கும் விடை ஆரம்பமாகும்.

இப்படி பால்ய பிராயத்தில் மனம் நிரம்பிய தெய்வமாக திகழும் பிள்ளையாருக்கு எதனால் யானைத் தலை? அடுத்து அவர் ஏன் தொந்தியும் தொப்பையுமாக இருக்கிறார் என்றெல்லாமும் கேள்விகள் எழுமே? இதற்கு புராண ரீதியாக எவர் சொன்ன பதிலும் கவரவில்லை. பெரியவர் சொன்ன பதில் மட்டும் பசை போட்டு ஒட்டிக் கொண்டது.  விநாயக மூர்த்தியிடம் சின்னச்சின்ன விஷயங்களிலும் கூட நிறைய தத்துவங்கள் இருக்கின்றன.

இவருக்கு தேங்காய் உடைப்பது எதற்காக?

விக்னேசுவரர் தம் தந்தையான ஈசுவரனைப் பார்த்து, ‘உன் சிரசையே எனக்கு பலி கொடு’ என்று கேட்டுவிட்டாராம். எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்தது எதுவோ, அதை தியாகம் செய்தால்தான், கணபதிக்கு ப்ரீதி உண்டாகிறது. அப்படி தியாகம் பண்ணுவதற்கு நம்மை தயார் படுத்தத்தான், ஈசுவரன் தன்னைப் போலவே மூன்று கண்களை உடைய தேங்காயைப் படைத்தானாம். அதை நாம் பிள்ளையாருக்கு உடைக்கும்போது, அவர் கோரிக்கையும் நிறைவேறுகிறது. அடுத்து, தேங்காய் ஓடு நான் எனும் அகங்காரத்தை குறிக்கும். பக்தியின் பேராலே அதை உடைத்து நொறுக்கும்போது, உள்ளே அமிர்த ரசமாக, இளநீர் வெளிப்படுகிறது!’ என்று தேங்காய் உடைப்பதற்கு சூட்சும காரணத்தைக் கூறும் பெரியவர், பிள்ளையாரின் ரூபத்துக்கு தரும் விளக்கம்தான் அற்புதமானது.

‘கணபதியை காட்டிலும் சரீரத்தில் பருமனான ஸ்வாமி வேறு யாரும் இல்லை. சிரசு யானையின் தலை. பெரிய வயிறு பெரிய உடம்பு. அவருக்கு ஸ்தூல காயர் என்றும் பெயர் உண்டு. மலை போல் இருக்கிறார். ஆனாலும் அவர் சின்னக்குழந்தை! சரி, குழந்தைக்கு எது அழகு? நன்றாக சாப்பிடுவதுதான். ‘கொழுக் மொழுக்’கென்று இருக்க வேண்டும். அதனால்தான் அவரும் அப்படி இருக்கிறார்.

இப்படிப்பட்டவருக்கு மிகச்சிறிய மூஞ்சூறுதான் வாகனம். அந்த மூஞ்சூறால் இத்தனை கனமானதை தாங்க முடியுமா? என்று கேட்கலாம். ஆனால், அது தாங்கப் போதானே அது வாகனமானது. எப்படி?

தன்னை தாங்குபவர்களுக்கு, அவர் பாரமில்லாமல் இலேசாகிவிடுகிறாராம். அதை இப்படியும் சொல்லலாம். கணபதியை மனத்தில் வைத்தால் மனது லேசாகிவிடும்.!’  - இப்படி தோற்றம், வாகனத்துக்கு எளிய விளக்கத்தை வாழ்வியல் தன்மைகளோடு பொருத்திக் கூறும் பெரியவர், அந்த யானை முகத்துக்கு விளக்கம் தருகிறார்.

ஒவ்வோர் பிராணிக்கும், அதன் ஒரு அங்கத்தால் சிறப்பு உண்டு. ஆட்டுக்கு நெற்றி, மயிலுக்கு தோகை, மானுக்கு வால்… இந்த வரிசையில் யானைக்கு சிறப்பு அதன் தந்தத்தில். அதனால்தான் பிள்ளையார், இந்த தந்தத்தை ஒடித்து மகாபாரதம் எழுதினார். இன்னொரு சமயம் அந்தத் தந்தத்தாலேயே அசுரன் ஒருவனை கொன்றார்.

இப்படி தன் தந்தத்தை ஆயுதமாக, பேனாவாக ஆக்கிக் காட்டியவர். இப்படிப் பட்டவரை எத்தனை முறை பார்த்தாலும் நமக்கும் அலுப்பு தட்டுவதில்லை. ஆகாய சந்திரன், சமுத்திரம், யானை இதைல்லாம் அலுப்பு தட்டுவதில்லையே… இவரைப் பார்த்தால் மட்டும் எப்படித் தட்டும்?

பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும். மனது நிரம்பும் – ஆனாலும் பாரமாகாமல் லேசாகிவிடும். இப்படிப்பட்டவருக்கு எதிரில் நின்று நாம் தோப்புக்கரணம் போடுகிறோமே… அதற்கு யார் காரணம் தெரியுமா? மஹாவிஷ்ணுதான்!

இதை ஒரு விளையாட்டுக் கதையாக கூறுகிறார் பெரியவர். ஒரு முறை மஹாவிஷ்ணுவை பார்க்க வந்த மருமகப் பிள்ளையான பிள்ளையார், விஷ்ணுவின் கையில் இருந்த சக்கராயுதத்தை பார்த்து பரவசமாகி, அதை எடுத்துக்கொண்டு விளையாடத் தொடங்கிவிட்டாராம்.

ஆயுதங்களுக்கெல்லாம் ஆயுதமான சக்கராயுதம், பிள்ளையாருக்கு விளையாட்டுப் பொருள் எனும்போது, பிள்ளையார் எத்தனை பெரிய சக்தி வாய்ந்தவர் என்றும் கருத வேண்டியுள்ளது. எத்தனை குழந்தை மனம் என்றும் எண்ண வேண்டியுள்ளது.

மகாவிஷ்ணு, அதை திரும்பப் பெற கெஞ்சிப் பார்க்கிறார். அசுரர்களை ஓடஓட விரட்டும் அந்த ஆயுதம், பிள்ளைச்சாமி என்பதால் அதுவும் சேர்ந்து விளையாடுகிறது. அதட்டிப் பிடுங்கவும் விஷ்ணுவுக்கு மனம் வரவில்லை. இறுதியில் பிள்ளையார், சக்கரத்தை தன் வாயில் போட்டுக்கொண்டு ‘எங்கே எடுத்துக்கோ பார்க்கலாம்’ என்று துள்ளிக் குதிக்கிறாராம்.

மகாவிஷ்ணுக்கு உடனே ஒரு உபாயம் தோன்றியதாம். கண்ணனாக அவர் செய்யாத குறும்பா? குறும்புக்கு இலக்கணம் படைத்த விஷ்ணு, விநாயகரின் குறும்பையும் விநயமாக அணுக முடிவு செய்கிறார்.

விநாயகரை கலகல வென்று சிரிக்க வைத்துவிட்டால் போதும். வாயிலிருந்து சக்கரம் வெளியே விழுந்து விடும். அதற்காக தன் காதுகளைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுந்து கெஞ்சுவதுபோல பாவிக்கவும், பிள்ளையார் கலகலவென்று சிரித்தாராம். சக்கரமும் உருண்டு கீழே விழுந்திட விஷ்ணு எடுத்துக்கொண்டாராம்.

தோர்பி கர்ணம் என்று இதற்குப் பெயர். தோர்பி என்றால் கைகள் – கர்ணம் என்றால் காது.  ‘கைகளால் காதைப் பிடித்துப் போட்டதால் தோர்பிகரணமாயிற்று. அதுவே தோப்புக்கரணமாகிவிட்டது’ என்று பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவதன் பின்புலத்தில், பெரியவர் சொன்ன இந்த கதையில் விஷ்ணுவே விநாயகருக்கு கட்டுப்படுவது, உடன் விளையாடுவது என்பதெல்லாம் மானுடபாவனைகள்! சூட்சுமப் பொருள் விநாயகர் ப்ரணவ ஸ்வரூபி. ‘ஓம்’ என்றும் எழுத்தின் வடிவம். இந்த ஓம் எனும் ஒலியில் இருந்தே, இன்று நாம் பேசும் பேச்சுக்களும் எழுத்துகளும் உருவாயின. தோப்புக்கரணம் போடும்போது, நமக்குள் இருக்கும் அந்த கல்வி, ஞானம் பிள்ளையார் சிரித்தமாதிரி கலகலவென்றாகி மகிழ்ச்சி தருமளவு, ஒரு மலர்ச்சி ஏற்படும் என்பதுதான். இங்கே நாம்தான் விஷ்ணு. அதாவது, அந்த பரமாத்மா வேறு நாம் வேறு இல்லை. அவனில் இருந்து வந்த நாம், நம்முள் இருக்கும் அவன் என்று இதைக் கொள்ள வேண்டும். சக்கரம் சுழலச் கூடியது. காலமும் சுழலக் கூடியது; நில்லாதது. எனவே, சக்கரம் காலம் என்று நாம் பொருள் கொண்டு, இந்த கதைக்குள் புகுந்தால் வியப்பு மேலிடும்.

பேருண்மைகளை தத்துவமாக எழுதி வைத்தால், அதை என்றாவது எவராவது திருத்தியும், மாற்றியும் எழுதிவிட சாத்தியம் அதிகம். கதையாக்கி விட்டால், எவரும் உட்புகுந்து திரித்திட இயலாது.

எனவேதான், நமக்கான பேருண்மைகள் இப்படி கதைச் சம்பவங்களாக ஒளித்து வைக்கப்பட்டன. அதை பெரியவர் போன்றவர்கள், துளியும் தன்னை மையப்படுத்திய மேதைத் தன்மையின்றி, யதார்த்தமாயும் எளிதாகவும் கூறிடும் போது, புரியவேண்டிய அவ்வளவு பேருக்கும் எளிதாகப் புரிந்துவிடுகிறதே!

இப்படித்தான் எனக்கும் விபூதி புரிந்தது; திருமண் புரிந்தது; விநாயகப் பெருமானும் புரிந்தார்; தோப்புக்கரணமும் புரிந்தது.  அடுத்து பெரிய அளவில் புரிந்தவள், அந்தக் கலைவாணி என்கிற சரஸ்வதி!நன்றி: தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

No comments:

Post a Comment