Contact Us

Name

Email *

Message *

Friday 18 December 2015

தெய்வ உபாஸனை - தேவதா ரூப வர்ணனை

"உன் உபாஸனா தெய்வம் உன்னோட பேசும்" - ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள்.

பொதுவாக நிர்குண, ஸகுண ப்ரம்ம உபாஸனை என்பது வழக்கத்தில் உள்ளது. தேவி, விஷ்ணு இருவரும் ஸகுண ப்ரம்ம உபாஸனையில் வருகிறார்கள். சிவபெருமானை நிர்குண பிரம்ம உபாஸனையில் ஆராதிப்பர்.

ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீராமர், நரஸிம்ஹர், இவ்வாறெல்லாம் பெருமானின் வடிவழகை மனம் குளிர உணர்வில் கண்டு வழிபடுவது ஒரு வகை.

பகவத் ஆராதனையில், உருவத்தை உள்ளத்தில் இருத்தி உணர்வை அதில் பொருத்தி அதனோடு ஒன்றி லயிப்பது ஒரு முறை. இதற்கு, அந்த தெய்வத்தின் வடிவம், வடிவழகு உள்ளிட்டவை மனத்தில் தோன்றவேண்டும்.

நாம் புறக்கண்ணில் காணும் அழகுப் பொருள்களை அகக்கண்ணில் கண்டு மகிழும் தெய்வத்துக்கு பொருத்திப் பார்த்து, உவமை நயத்துடன் உருவ அழகை தியானித்து லயிப்பது ஒரு கலை.

வடிவென்று வந்துவிட்டால், அழகும் வர்ணனையும் மிக உயர்ந்த அளவில் இருக்க வேண்டும். ஒப்புவமை கூற இயலாத அழகு என்று ஒரு வார்த்தையில் சொல்லி விடலாம்தான். ஆனால், எப்படி கவிகளின் சமத்காரத்தை வெளிப்படுத்துவது? தேவதையின் சிறப்பை உள்ளே புகுத்துவது?

இது, சாக்த வழிபாட்டிலும் சரி, வைஷ்ணவத்திலும் சரி.. மிக மிக அவசியமான ஒன்றாகிவிடுகிறது. ஆழ்வார்களின் பாசுரங்களில் காணும் ஒப்புவமை அழகு ஒரு வித சுவை. ஆதிசங்கரரின் மற்றும் அபிராம பட்டரின்  அம்பிகை வழிபாட்டில் காணும் உவமை அழகு ஒரு தனிச்சுவை!

உவமையை மட்டுமே கொண்டு தேவதையை அணுகக் கூடாதுதான்.. ஆனால், அந்த உவமை அந்த தேவதையின் உச்சத்தை நம் உள்ளத்தில் ஏற்றி விட்டிருக்கும்!

பொதுவாக, ஆலயங்களில் நாம் தெய்வத்தின் திருவுருவை வணங்கும்போது, கற்பூர ஆரத்தி காட்டுவர். விவரம் அறிந்த அர்ச்சகராக இருப்பின், கற்பூர ஜோதியை இறை மூர்த்தத்தின் தலை முதல் பாதம் வரையில் சுற்றிக் காட்டி அந்த அழகை பக்தர்கள் அனுபவிக்க வைப்பர். இதன் முக்கிய சங்கதி… தேவதையின் தலை முதல் பாதம் வரையிலான அழகை நாம் அனுபவிக்க வேண்டும் என்பதே!

இதனை கவிதையாக்கும்போது, வர்ணனைகளைப் புகுத்தி எழுதுவது மரபு. அது தலை முதல் பாதம் வரை என்றால், கேசாதிபாத வர்ணனை என்றும், பாதம் தொடங்கி தலை வரை வர்ணிப்பது என்றால் பாதாதிகேச வர்ணனை என்றும் கூறப்படும்.

குறியும், குணங்களும் அற்ற சுத்த வஸ்துவாகிய பரம்பொருளை, கண் காணும் பிரபஞ்ச வடிவாகவும் குணங்களுடையதாகவும் அடையாளப் படுத்தி வழிபடும் உபாஸனா மார்க்கங்கள் ஸநாதன தர்மத்தின் தனித்துவமிக்க வழிபாட்டு முறைகள்.

ஏதவன் ஊர்? ஏதவன் பேர்? ஆர் உற்றார் ஆர் அயலார்?
ஏது அவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்? என்று கேட்டு,

ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டோமோ! 

என்று விடையும் சொல்கிறது திருவாசம். 

தெய்வ வடிவங்களின் பல்வேறு சிறப்பியல்புகளை அவற்றின் திருநாமங்களாகப் போற்றிப் பாடும் சகஸ்ரநாமங்கள் மற்றும் அந்தாதி வகை பக்தி நூல்கள் பழங்காலத்திலேயே பிரபலமாக இருந்தது தெரிய வருகிறது.

கேசாதிபாதம் என்னும் சொல் துதிகளின் தொடர்பாக ஏற்பட்டது. இறைவனையோ இறைவியையோ துதி செய்யும்போது துதிகளின் ஆரம்பத்தில் பொதுவாகவே "தேவதா ரூப வர்ணனை" அல்லது அந்த தேவன்/தேவியின் உருவம் வர்ணனை செய்யப்பட்டிருக்கும். அது பெரும்பாலும் உச்சந்தலையிலிருந்து தொடங்கி பாதம்வரை ஒவ்வொரு அங்கமாக வர்ணிக்கப்பட்டிருக்கும். இதைத்தான் கேச ஆதி பாத அந்த = கேசாதிபாதாந்த வர்ணனை என்று சொல்வார்கள்.

தேவதைகளை தியானம் செய்வதில் கேசாதி பாதாந்தமும் பாதாதி கேசாந்தமும் என இரண்டு முறையும் உண்டு. இங்கே ஆண் தெய்வமானால், அதாவது புருஷ ரூபமானால், பாதாதிகேசாந்த வர்ணனையே மரபாகக் கடைப் பிடிக்கப்படுகிறது. விஷ்ணுவுக்கான வர்ணனை ஸ்தோத்திரத்தை ஆதிசங்கரர் பாதாதிகேசாந்த வர்ணனையாகவே படைத்தார். ஆனால், ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி தேவிக்கு, கேசம் ஆதி பாதம் அந்தமாக வர்ணனை செய்தார் பகவத்பாதர். எனவே சௌந்தர்யலஹரி மற்றும் லலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பாளின் வர்ணனை கேசம் தொடங்கி, பாதம் வரையிலான அழகை அருமையாகக் காட்டி அவ்வாறே தியானம் செய்யச் சொல்கிறது. அபிராம பட்டரும்  அபிராமி அந்தாதியில்  இவ்வாறே பாடுகிறார்.

ஆனால், சிவபெருமானின் வர்ணனை, ஆதிசங்கரரால் இரண்டு வகையிலும் கையாளப்பட்டிருக்கிறது. சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபமாக அவர் இருப்பதால், இரண்டு விதமாகவும் தியானிக்கப்படுகிறது. எனவே, சிவபெருமானுக்கு பாதாதிகேசாந்தம், கேசாதிபாதாந்தம் என இரண்டு ஸ்தோத்திரங்கள் இயற்றினார் பகவத்பாதர்.  ஸ்ரீருத்ர மஹாந்யாசத்திலும் இவ்வழிபாடு உண்டு.

அங்கலக்ஷண விவரணங்கள் அனைத்தும் சர்வ சாதாரணமாகவே குறிப்பிடப்படுகின்றன. நிர்க்குணமான மனம் இருந்தாலே இத்தகையதொரு விருப்பு வெறுப்பற்ற மனநிலையில் ஸ்லோகங்களைப் படைக்க முடியும்.



நன்றி: தினமணி (மூலம்), http://www.tamilhindu.com

No comments:

Post a Comment