கோயில் என்றாலே சைவ அடியார்களுக்கு தில்லை சிற்றம்பலமே கண் முன் தோன்றும். தில்லையுள் ஆடுகின்ற பரமனை அன்று முதல் இன்று வரையில் என்றென்றும் பக்தியால் பாடி பரவசம் அடைந்த பெரியோர்கள் பாடல்களை இசைத்தும் ஆடிப் பாடியும் மகிழ்ந்துள்ளனர். அப்பர் பெருமான் சிற்றம்பலத்தை அடைந்தவுடன் மெய்மறந்து பாடுகின்றார்.
"பக்தனாய் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ
எத்தினாற் பத்தி செய்கேன் என்னை நீ இகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை அம்பலத்தாடுகின்ற
அத்தாவுன் ஆடல் காண்பான் அடியேனேன் வந்தவாறே"
என்று பாடுகின்றார்.
தில்லையம்பலத்தில் ஆடும் ஜோதி ஒருத்தராலும் அறிய வொன்னாத திருவுடை ஜோதி.
அவரது நிருத்தத்தை காண வந்ததாக "நிருத்த நான் காண வேண்டி நேர்பட வந்தவாறே"
என்று பாடுகிறார். அக்கோயிலில் உள்ள சிவபெருமான் அந்தியும் பகலும்
ஆடுகின்றார். அந்தப் பரமனின் திருவடிகளை "கருத்திலே கொண்டு ஆடிப் பாடி
கூடுவன் குறிப்பினாலே" என்று கூறுகிறார். மண் உண்ட மாயவனும் மலரவனும்
மண்ணினாலும் விண்ணுண்ட திருவுருவம் அது என்று கூறுகிறார். இவற்றிலிருந்து
தில்லை அம்பலத்து ஆடும் அரனது உருவம் பரஞ்சோதி என்றும், ஞானப் பிழம்பு
என்றும், அந்த ஞான ஒளி அறியாமையாகிய பந்தத்தை அழிக்கும் என்றும் ஆன்றோர்
கூறுவர். ஞானப் பிழம்பான அறிவு தோன்றும் போது அறியாமையாகிய இருள்
அகல்கிறது. "அவித்யயா மிருத்யும் தீர்த்வா வித்யயா அம்ருதம் அஸ்னுதே"
என்பது உபநிஷத். ஆதலின் சிவபெருமானை ஆடுகின்ற அண்ணலை அப்பர் பெருமான்
"பரமனே பரமயோகி" என்று கூறுகிறார்.
நடராஜ தத்துவத்தை ஆகமங்கள்
"யோகானந்த தாண்டவம்" என்று கூறும். யோகத்தில் எல்லையிலே தோன்றும் ஆனந்த
தாண்டவமே ஆடவல்ல பெருமானின் வடிவம் என்பது கருத்து. பண்டைய காலந்தொட்டே
தில்லையில் வேத மரபில் வழிபாடு திகழந்துள்ளது என அப்பர் பெருமான்,
ஞானசம்பந்த பிள்ளை, சுந்தரமூர்த்தி ஆகியோரின் தேவாரப் பாடல்களால் அறிய
முடிகிறது. "தினைத்தனை வேதம் குன்றாத் தில்லை சிற்றம்பலம்" என்று அப்பர்
கூறுவார். மேலும் "செந்தீயார் வேள்வி ஓவாத் தில்லை" என்றும் கூறுகிறார்.
"கற்று ஆங்கு எரி ஓம்பி கலியை வாராமே செற்றார் வாழ் தில்லை" என்று
சம்பந்தப் பெருமான் பாடுவார். அன்றிலிருந்து இன்று வரையில் அம்மரபு
பின்பற்றப்படுகிறது.
சிவபெருமானை "வேதவித்து" என்றும் "வேத
நாயகன்" என்றும் "வேதத் துண்டம்" என்றும் தேவாரம் கூறும். தத்துவங்களில்
இறுதியான "ஞானபாகம்" ஆகிய வேதாந்ததின் உருவம் "வேத துண்டம்" நடராஜப்
பெருமான் என்பது கருத்து. நடராஜப் பெருமானை சாம வேதமாகி நிற்கிறார் என
"சாமத்து வேதமாகி நின்றதோர் சுயம்பு" என்று அப்பர் கூறுகிறார். "நால்
வேதத்து உருவான்" என்றும் தேவாரம் கூறுகிறது. இந்தப் பரம்பொருள்
வாக்குக்கும் மனதிற்கும் அப்பாற்பட்ட தூயன். ஜோதி வடிவமானது.
"யதோ
வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ" என்பது உபநிஷத். இதையே அப்பர்
பெருமான் "நால்வேதத்து ஆறு அங்கம் நனுகமாட்டா சொல்லானை" என்று கூறுகிறார்.
மற்றொரு இடத்தில் "ஆறங்க நால்வேதத்து அப்பால் நின்ற பொருளானே" என்றும்
பாடுகிறார். வேள்வி வேட்கும் அந்தணர்களின் தீப்பிழம்பாகிய வடிவமே சிவனின்
ஜோதி வடிவாகத் திகழும் உருவம் என்று அப்பர் "ஓதிய ஞானமும், ஞானப் பொருளும்,
ஒளி சிறந்த வேதியர் வேதமும், வேள்வியும் ஆவன" என்று பாடுகிறார். "விழா
ஒலியும் வேள்வி ஒளியும் ஆவான்" என்றும் கூறுகிறார். சிவபெருமானே அந்தணர்களை
வேள்வி வேட்கச் செய்தவர் என்பது அப்பரின் கருத்து. "விண்ணினை விரும்ப
வைத்தார், வேள்வியை வேட்க வைத்தார்" என்று கூறுகிறார். "வேதத் தொழிலார்
விரும்ப நின்றார்" என்பதும் அப்பர் வாக்காம். ஆதலின் தான் அவரை
"அந்தணராவார் ஆகுதியின் மந்திரத்தார்" என்று பாடுகிறார். ஆதலின் வேதத்தின்
ஞான முடிவே சிவன் வடிவு. ஆனந்த தாண்டவம் அண்ணலின் வடிவு என்பது அப்பர்
பெருமானின் கருத்து என அறிகிறோம்.
சிவபெருமான் "முத்தமிழும்
நான்மறையும் ஆனவன்" என்றும் அப்பர் பெருமான் பாடுவார். இது "ஓசை
ஒலியெல்லாம் நீயே ஆனாய்" என்பதின் உருவகம் ஆகும். நடராஜப் பெருமானை
"நாதாந்த தாண்டவமூர்த்தி" என்று கூறும் மரபு உண்டு. அவரது கையிலே இருந்த
துடியில் இருந்து தோன்றியது சப்தம். சப்தத்தின் உருவாய் உலகைக் காண்கிறோம்.
உன்னதத் தத்துவங்களைக் காண்கிறோம். அதையே "சப்தபிரும்மம்" என்கிறோம். அந்த
பிரும்மம் ஆகிய பரம்பொருளே நடராஜ உருவம். அவர் கரத்திக்கும் உடுக்கையில்
இருந்து தோன்றும் சப்தம் உலகத்தைத் தோற்றுவிக்கிறது.
சைவ
வழிபாட்டில் "ருத்ரம்" என்றும் "சதருத்ரீயம்" என்றும் அழைக்கப்படும் வேத
மந்திரங்கள் இன்றியமையாதவை. இவற்றை பயின்று உன்னத நிலையை அடைந்தவர்
"ருத்ரபசுபதி நாயனார்" என்பவர். ருத்ர மந்திரங்கள் நடராஜப் பெருமானுக்கு
அபிஷேகம் செய்யும் போது எப்பொழுதும் ஓதுதல் மரபு. இம்மந்திரங்கள் தமிழக
கோயில்களிலே பண்டைய நாள்தொட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. "இருக்கோதி
மறையவர்கள் வழிபட்டு ஏத்தும்" என்று அப்பர் பெருமான் குறிப்பதைக் காணலாம்.
இதன் அடிப்படையில் அப்பர் பாடியுள்ள சில சொற்றொடர்கள் பொருள் விளக்கம்
பெறுகின்றன. எடுத்துக்காட்டாக சிவபெருமானை அப்பர் "பாலனாய் வளர்ந்திலாத
பாண்மையானே" என்று பாடுகிறார். இதற்கென்ன பொருள் என்று நாம் வியப்போம்.
சதருத்ரீயத்தில் சிவ பெருமான் "அபகல்பாயச" என்று குறிக்கப்பட்டுள்ளார்.
அபகல்ப என்றால் "இந்திரியங்கள் வளர்ந்திலாத பாலன்" என்று சாயனார் தமது
உரையில் கூறுகிறார். அப்பர் பெருமான் கூறும் "பாலனாய் வளர்ந்திலாத
பாண்மையானே" என்ற சொற்றொடர் ருத்ரத்தில் வரும் "அபகல்பாயச" என்பதின்
பொருளாகும். அதே போன்று மற்றொரு சொற்றொடரையும் காண்கிறோம். அப்பர் சிவ
பெருமானை "சுலாவாகி சுலாவுக்கோர் சூழல் ஆகி" என்று கூறுகிறார். நீரிலே
தோன்றும் சுழலையும், சுழலின் வேகத்தையும் இது குறிக்கும். "சீப்யாயச" என்று
சிவபெருமானை வேதம் கூறுவதின் பொருள் இதே. இதே போல் ருத்ரம் சிவபெருமானை
"சரஸ்யாயச" என்றும் கூறுகிறது. இதை அப்பர் பெருமான் "ஏரி நினைந்தனைய
செல்வன் கண்டாய்" என்று பாடுகிறார். இது போல் சிவபெருமானை வேதமும் தமிழ்
மறைகளும் உருவகித்து அவ்வுருவின் வழியாய் ஆனந்தக் கூத்தாடும் பரனாகி
தோன்றுவதே தில்லை அம்பலத்தில் ஆடும் நடராஜப் பெருமானின் உருவம் ஆகும்.
நான்கு வேதங்களும், ஆறு அங்கங்களும், பதினெட்டுப் புராணங்களும்,
இருபத்தெட்டு ஆகம நூல்களும், இன்ன பிற நூல்களுமாய் அமைந்த உருவமே தில்லை
அம்பலமாகும். இந்திய நாட்டில் எத்தனை வகையான நூல்கள், எந்தை பரமனை எடுத்து
இயம்ப இயற்றப்பட்டனவோ அத்தனை நூல்களும் சேர்ந்து ஒருமித்து உருவகிக்கக்
காணப்படுவது தில்லை அம்பலம் என்னும் ஞானக்கோயில். இந்தக் கோயிலிலே ஆடும்
கூத்தப் பெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும்
ஐம்பெரும் தொழில்களைப் புரிகின்ற அண்ணல் ஆக, அன்னை சிவகாமி அருகிலே
அமர்ந்திருக்க பரந்த வெளியிலே இவ்வுலகையெல்லாம் உய்விக்க ஆடுகிறார். இதையே
ஆடவல்ல பெருமான் என்றும், ஆனந்த தாண்டவம் என்றும், ஞானக்கூத்து என்றும்,
பொன்னம்பலம் என்றும் கூறுகின்றோம்.
இந்த பரம்பொருளை "ஆரியன்
கண்டாய் தமிழன் கண்டாய்" எனபார் அப்பர் பெருமான். இந்திய நாட்டின்
தத்துவங்கள் அனைத்தும் உருவான பெருமாள் நடராஜப் பெருமாள். இந்தியாவின்
வடபால் சிறப்பாக காஷ்மீரத்தில் தோன்றிய சைவம் "பைரவர்" என்று ஞானத்தை
கூறும். காஷ்மீரத்தில் நூல்களுக்கே பைரவம் என்ற பெயர் உண்டு.
"விஞ்ஞானபைரவம்" என்பது ஒரு நூலின் பெயர். பைரவக் கடவுள் ஞானத்தின் உருவமாக
காஷ்மீர் சைவத்தில் குறிக்கப்படுகிறார். தக்கயாகப் பரணியில் பைரவ கடவுளின்
வணக்கம் வருகிறது. அதில் அஞ்ஞானமாகிய இருளை அகற்றி ஒளியை அணிந்து ஆடுகின்ற
ஜோதியாக பைரவ கடவுள் போற்றப்படுகிறார்.
தில்லை சிற்றம்பலவர் கோயிலில்
பைரவ கடவுளுக்கும் சிறந்த வழிபாடு நடைபெறுகிறது. அதுவே "சொர்ணகாலபைரவர்"
என்று போற்றப்படுகிறது. இது யோக மார்க்கத்தோடு தொடர்புடைய வழிபாடு ஆதலின்
பதஞ்சலி முனிவருடைய தொடர்பும் இங்கு உள்ளது சிறப்பாகும்.
தில்லை
அம்பலவாணரின் கோயிலின் மேல் ஒன்பது கலசங்கள் ஸ்தூபி குடங்கள் உள்ளன. இவற்றை
நவசக்தி என்று பண்டைய நூல்கள் குறிக்கின்றன. ஒன்பது வகையான சக்திகளை
இக்கலசங்களிலே ஆவகித்து வணங்குகின்றனர். நடராஜப் பெருமானின் வழிபாட்டில்
நவதத்துவங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. இவை சிவலிங்கத்தில் அடிப்பகுதியில்
இருந்து படிப்படியாக மேலே உருவகிக்கப்படுகின்றன. பிரம்மன், விஷ்ணு,
ருத்ரன், மஹேசன், சதாசிவன், பரபிந்து, பரநாதம், பராசக்தி, பரமேச்வரன் என்ற
ஒன்பது தத்துவங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக வழிபடப் படுகின்றன. இந்த ஒன்பது
தத்துவங்களுக்கும் மேலாக அகண்ட வெளியில் அனைத்தின் தோற்றமாக விளங்குவது
"பரமானந்த தாண்டவம்" என்று "மகுடாகமம்" என்னும் நூல் கூறுகிறது. இந்த
பரமானந்த தாண்டவமூர்த்தியே நடராஜர் வடிவம் என்பர்.
நான் உன்னையே
நினைந்து கொண்டிருப்பேன். அவ்வாறு நினைந்து கொண்டே என் ஆவி கழிப்பேன்.
மறைந்த பின்னும் நீ என்னை மறந்து விடாதே. முக்கண்ணா என்று அப்பர் சுவாமிகள்
கூறுவது சிவபக்தியின் சின்னமாகக் கருதப்படுகிறது.
முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும் மூவுலகுக்கு
அன்னையும் அத்தனுமாவாய் அழல்வணா நீ அல்லையோ
உன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததற்பின்
என்னை மறக்கப் பெறாய் எம்பிரான் உன்னை வேண்டியதே
என்று பாடும் அப்பர் வாக்கு இதன் பிரதிபலிப்பே.
இப்பரம்பொருள் உள்ளவரை நமக்கு எவ்விதப் பயமும் தேவையில்லை. கடும் பஞ்சம்
தோன்றி மலையெல்லாம் வெதும்பி கடல்நீர் எல்லாம் சுருங்கி பல நெடுங்காலம்
மழையின்றி போனாலும் பயப்படத் தேவையில்லை. பொற் குன்றம் என்று கூறும்
மேருவான இவ்வண்ணல் இருக்கிறார் என
கல்நெடுங்காலம் வெதும்பி கருங்கடல்நீர் சுருங்கி
பன்நெடுங்காலம் மழைதான் மறக்கினும் பஞ்சமுண்டென்று
என்னெடுஞ் சூளறும் அஞ்சல் நெஞ்சே இமையாத முக்கண்
பொன்னெடுங்குன்றம் ஒன்றுண்டு கண்டீர் இப்புகலிடத்தே
சில ஆண்டுகளுக்கும் முன்னர் காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு சங்கராசார்யார்
ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடராஜப் பெருமானுடைய தூக்கிய திருவடிக்கு
வைரத்தினால் திருவடி செய்து சார்த்தினார்கள். கூத்தபிரானுடைய ஐம்பெரும்
தொழில்களிலே உயிர்களுக்கு அருளும் தொழிலை இத்திருவடிகளே புரிபவை ஆதலின்,
அவற்றின் ஒலி உலகெங்கும் வியாபித்து நிற்க வைரத்திருவடியை ஸ்ரீ ஜயேந்திரர்
அவர்கள் செய்து சார்த்தினார்கள். இதைக் குஞ்சிதபாதம் என அன்போடு அடியார்கள்
அழைப்பர்.
விண்ணிலே தோன்றும் சூரியன், சந்திரன், அக்னி, தாரைகள்
ஆய் ஒளிமயமாகத் தோன்றும் அனைத்துமே பரஞ்சோதியும், பரமானந்த தாண்டவ
மூர்த்தியின் உருவமே. எண்திசைகளையும், கீழுலகும், மேல் உலகாயும் திகழும்
இப்பரனை அப்பர் பெருமான் பரமாகாசம் என்று அழைக்கிறார். பரமாகாசம் என்றாலும்
பரமானந்தம் என்றாலும் ஒன்றுதான். ஆகசத்திலிருந்து தான் அனைத்து
உருவங்களும் தோன்றுகின்றன. ஆகாசத்தில் அனைத்து உலகங்களும் வாழ்கின்றன.
ஆகாசத்தில் அனைத்து உருக்களும் லயமடைகின்றன என்று உபநிஷத் கூறுகின்றது.
"ஆகாசம்" என்பதும் "ஆனந்தம்" என்பதும் ஒன்றே ஆதலின் பரமாகாசத்தில்
நடைபெருவது பரமானந்த தாண்டம்.
ஸ்ரீ கண்டர் என்ற ஒரு பெரியவர்
சோழர்காலத்தில் இருந்தார். அவர் வியாசருடைய பிரும்ம சூத்திரங்களுக்கு
பாஷ்யம் எழுதியிருக்கிறார். அதற்கு "ஸ்ரீகண்ட பாஷ்யம்" என்று பெயர்.
அனைத்து வேதங்களும், உபநிஷத்துக்களும் சிவபெருமானே "பரபிரம்மம்" என்று
கூறுகின்றன என்பது அவர் சித்தாந்தம். அம்மரபை "சிவாத்வைதம்" என்று கூறுவர்.
அவர் தமது பாஷ்யத்தில் "ஆகாசம்" என்றால் "பிரகாசிப்பது" என்று பொருள்.
ஆதலின் ஆகாசம் எனில் "சிதம்பரம்" என்பது பொருள் என்று "ஆகஸ இதி சிதம்பர
ப்ரகிருதி ஹி உச்சயதே" என்று கூறுகிறார். ஆகாசம் எனில் "சிதம்பரம்" என்பது
அவர் கருத்து.
தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் தில்லை நடராஜப்
பெருமானுக்கு பெரும் பணிகள் செய்வதை தமது பாக்கியமாக கருதினார்கள். பல
அணிகளை பொன்னாலும், வைரத்தாலும், முத்தாலும் செய்து அலங்கரித்து வணங்கி
மகிழ்ந்தார்கள். குலோத்துங்க சோழனுக்கு "நரலோக வீரன்" என்ற ஒரு சேனாபதி
இருந்தான். அவன் பல திருப்பணிகளைச் செய்துள்ளான். அப்பணிகளை நூறு பாடல்களாக
கல்லில்வெட்டி வைத்துள்ளான். அவை சம்ஸ்கிருத மொழியிலும், தமிழ் மொழியிலும்
உள்ளன. அவற்றில் ஒன்று அவன் பல அணிகலன்களை செய்ததைக் கூறுகிறது.
குலோத்துங்க சோழனுக்கு முன்னர் ஆண்ட வீரராஜேந்திர சோழன் தில்லை அம்பலக்
கூத்தருக்கு "திரைலோக்யாச்ரயம்" என்ற ஒரு சிறந்த அணி செய்தளித்தான் என
கன்யாக்குமரிக் கல்வெட்டு கூறுகிறது. இராஜராஜ சோழன் தான் கட்டிய தஞ்சை
பெரும் கோயிலில் உரைகின்ற பரமனுக்கு பல அணிகலன்களை செய்தளித்ததை குறிக்கும்
இடத்தில் திருமுடி செய்ததையும் கூறுகிறான். திருப்பட்டிகை, முத்து வளையல்,
திருமாலை, ஸ்ரீசந்தம், வீரப்பட்டம், கண்டநாண், பாசமாலை, மாணிக்கத்தாலி,
ஸ்ரீபாஹுவலயம், பதக்கம், ரத்னகடகம், பவழக் கடகம், நவரத்தின மோதிரம்,
ப்ருஷ்டகண்டிகை, திருவடிநிலை, முதலியன கொடுத்துள்ளான். அவ்வாறு அவன்
கொடுத்த "ஸ்ரீமுடியில்" 124 பளிங்கும் 71 வைரமும் 32 பொத்தியும் 334
முத்தும் இருந்தன. அதன் நிரை எறக்குறைய 50 கழஞ்சு எடை. அது செய்வதற்கு
அன்று அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எண்பத்தாறு பொற்காசுகள் ஆயிற்று.
இராஜராஜன் எடுத்த தஞ்சைப் பெருங்கோயிலில் தக்ஷிணமேருவிடங்கன் என்னும்
ஆடவல்லார் நடராஜர் உருவம் இருந்தது. அதற்கு ராஜராஜனுடைய தமக்கையான
வல்லவராயன் வந்தியதேவன் பிராட்டியார் குந்தவையார் பல அணிகள் செய்து
கொடுத்தாள். அவற்றில் நடராஜாவுக்கு வைக்க "திருமகுடம்" ஒன்று செய்து
கொடுத்தாள். அது "வைரமுடி". அதில் 859 வயிரம் இருந்தது. மாணிக்கமும்
முத்துக்களும் இருந்தன. அது செய்வதற்கு 5000 பொற்காசுகள் ஆகின.
அக்காலத்தில் வயிரம், மாணிக்கம், முத்து போன்றவற்றை ஆய்ந்து வெவ்வேறு
வகைகளாகப் பிரித்து அறியும் வல்லுநர் இருந்தனர். உதாரணமாக வயிரம்
"மட்டத்தாரை" என்றும், "மட்டத்தாரைச் சவக்கம்" என்றும், "மட்டத்தாரை
சப்படி" என்றும், தூய்மையான வைரம் என்றும் பிரிக்கப்பட்டிருந்தன.
வயிரங்களில் பொறிவும், முறிவும், ரத்தபிந்துவும், காகபிந்துவும்,
வெந்தனவும் இருந்தன. மாணிக்கத்தில் ஹளஹளம் என்பது ஒருவகை, கோமளம் மற்றொரு
வகை, நீலகந்தி தளம் என்பவை பிற வகைகள். இவற்றில் குழிவு, பிரஹரம், வெஜ்ஜம்,
லஸுநி, த்ராஸம், கற்பற்று, முதலிய உண்டு என்று கல்வெட்டுக் கூறுகிறது.
மாணிக்கத்தில் காணப்படும் சின்னங்களை வேறு படுத்தும் பெயர்கள் இவை. அதுபோல்
முத்துக்களில் வட்டம், அனுவட்டம், ஒப்புமுத்து, குறு முத்து, நிம்பொளம்,
பயிட்டம், பழமுத்து, இப்பிபற்று அராவின, சிவந்த நீர், குளிர்ந்த நீர், எனப்
பலவைககள் உண்டு.
அக்காலத்தில் அணிகள் செய்தளிக்கும் போது அது
செய்ய எத்தனை தங்கம் ஆயிற்று. எத்தனை வைரம் மாணிக்கம் முத்து பயன்பட்டன.
அது செய்ய எவ்வளவு செலவாயிற்று. என்றும் கல்வெட்டில் குறித்து
வைக்கப்பட்டன. என்ன விலை என்பதும் குறிக்கப்படும்.
தில்லை நடராஜப்
பெருமானுக்கு இப்பொழுது செய்தளிக்கப் படும் வைர முடியில் பல்லோரும்
பங்குகொள்ள வேண்டும் என்பது ஆசார்ய சுவாமிகளின் அவா. நாட்டியக் கலையை ஈந்த
அண்ணலின் தலையை அலங்கரிக்க நாட்டிய கலையில் வல்லவர் பலரும் ஆடவல்லப்
பெருமானிடம் பக்திபூண்ட பல்லோரும் பொன்னும், பொருளும் கொடுத்து
பங்குபெற்றுள்ளனர். பரதம் வல்ல பெண்கள் பலர் ஒவ்வொருவரும் ஒரு பவுனாக
அளித்துள்ளனர். தில்லைப் பெருமக்களும் அமைச்சர் பெருமக்களும் இதற்கு பொன் அளித்து இப்பணியில் பங்கேற்றுள்ளனர்.
ஆடவல்ல பெருமானே அருள் பிழம்பு வடிவானவர். ஞானத்தின் சுடர். உலகெல்லாம்
அவரது ஒளி பிரகாசித்துக் கொண்டிருப்பதால் தான் உலகம் அனைத்துக்கும் மையமான
இடம் இதுவே என சைவப் பெரியோர் வணங்குவர். அந்தப் பெருவொளிக்குச் சூட்டும்
வைரமுடி உலகெங்கும் பிரகாசித்து அருள் பாலிக்கும் அற்புத ஒளியாகும்
என்பதும் ஐயமில்லை.
டாக்டர். இரா. நாகசாமி, தமிழ்நாடு தொல்பொருள் துறை இயக்குனர் (ஓய்வு)
No comments:
Post a Comment