Contact Us

Name

Email *

Message *

Sunday, 30 June 2013

விஸ்வரூப தரிசனம் - நான் கடவுளுடன் வாழ்ந்தேன்.

1993—ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 7—ஆம் தேதி அன்று நானும் எனது மனைவி லக்ஷ்மியும் பெரியவாளைத் தரிசித்து, வரப்போகும் எங்கள் மகன் குருப்ரசாத்தின் திருமணத்திற்கு ஆசீர்வாதம் பெறுவதற்குக் காஞ்சீபுரம் சென்றிருந்தோம். மடத்தை அடைந்தவுடன், பெரியவாள் அன்றும் அதற்கடுத்த நாளும் தரிசனம் தருவதற்கில்லை என்று அறிந்தோம். இருந்தாலும், 11-30 முதல் 12 மணி வரை, நாங்கள், அவர் வழக்கமாக தரிசனம் தரும் இடத்தில் வரிசையாக, நின்றோம். பிறகு, ஸ்ரீ விஜயேந்த்ரசரஸ்வதி ஸ்வாமிகள் செய்த சந்திரமௌளீஸ்வரர் பூஜையைப் பார்த்துவிட்டு, பிரஸாதம் பெற்றுக்கொண்டு, எங்கள் மருமான் ஸ்ரீ சந்த்ருவின் வீட்டிற்குச் சென்றோம்.

மதிய உணவு ஆன பிறகு, சுமார் 4-30 மணிக்கு, அதிருஷ்டவசமாக, பெரியவாள் மாலை தரிசனம் கொடுப்பாரோ என்ற நம்பிக்கையில், மடத்திற்குத் திரும்பச் சென்றோம். விஷயம் அறிந்தவர்கள் அது சாத்யமில்லை என்று கூறி விட்டனர். சுமார் 5-30 மணிக்கு, எங்கள் பிரார்த்தனைக்குப் பலன் கிடைத்தது. பெரியவா, சொல்ப சமயத்திற்கு தரிசனம் தருவார் என்று அறிந்தோம். சில நிமிஷங்கள் கிடைக்காதா என்று இருந்த எங்களுக்குப் பதினைந்து நிமிஷங்கள் தடையின்றி தரிசனம் கிடைத்தது. பெரியவாளுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு ஸ்வாமிகள் என்னிடம் வந்து சொன்னார், ”பெரியவாளோட நூறாண்டு நிறைவு வைபவத்தின் போது, ஒரு புஸ்தகம் வெளியிடலாமென்றிருகிறோம்; பெரியவாளோடு நெருங்கிப் பழகியவர்கள் எழுதிய கட்டுரைகள் அதில் பிரசுரமாகும்; அதில நீங்களும் உங்கள் அனுபவங்களை எழுத வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார். அந்த ஸ்வாமிகளை முதலில் எனக்கு யாரென்று தெரியவில்லை; அவர்தான் ‘மேட்டூர் ஸ்வாமிகள்’ என்று பிற்பாடு தெரிந்து கொண்டேன்.

‘உங்கள் அனுபவங்களை’ என்ற வார்த்தைகளைக் கேட்டவுடன், என் மனம் பல வருஷங்களுக்கு முன்பு ஒரு இரவு நேரத்திற்குத் தாவிச் சென்றது; 1957—ஆம் வருஷம்; இடம்---ஓரிக்கை கிராமம்.; என்றைக்கும் என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவத்தைக் கொடுத்த இரவு; பெரியவாளின் விஸ்வரூப தரிசனம் கிடைத்த இரவு. அன்றைய தினம் அவருக்கு மிகவும் busy –ஆக இருந்த நாள். இரவு சுமார் 9—மணிக்கு எல்லா அணுக்கத் தொண்டர்களையும் பக்தர்களையும் சின்ன காஞ்சீபுரத்திற்குபோகும்படி சொல்லிவிட்டார்.. ஒரு அணுக்கத்தொண்டரிடம “சுந்தரராமன் மட்டுமே இங்கு இருக்க வேண்டும்” என்றார். அதற்கு அவர், “சுந்தரராமன் இன்னும் சாப்பிடவில்லை” என்றார்..

“அவன் இதற்குள் சாப்பாட்டை ‘skip’ பண்ண பழக்கமாயிருக்குமே” ------பெரியவா.

நான் ஒன்றும் சொல்லவில்லை. இதெல்லாம் ஆன பின், பெரியவா, களைப்பாக இருப்பதாகவும் குளிப்பதற்கு என்னை வெந்நீர் தயார் செய்யும்படியும் கூறினார். அந்தப் பழைய வீட்டின் உள்முற்றத்தில் ஒரு மூலையில் ஒரு பானையில் வெந்நீர் சூடாகிக் கொண்டிருக்கும் போது, , அவர் அந்த முற்றத்தின் நடுவில் ஒரு கௌபீனம் மட்டும் அணிந்து கொண்டு அமர்ந்திருந்தார்..அந்த முற்றத்துக் கூரையில் இருந்த சில இடைவெளிகளின் வழியாக வந்த மங்கலான நிலா வெளிச்சம் மட்டும்தான் இருந்தது..

“உனக்கு என்னுடைய ஆரம்பக் கால கதை தெரியுமா?”------பெரியவா கேட்டார்.

“எனக்கு கொஞ்சங்கூட தெரியாது”------நான்.

இதனைத் தொடர்ந்தது ஒரு முப்பது நிமிஷ நேரம், பெரியவாளின் பேச்சு. என்னிடம் அந்த சமயத்தில் ஒரு டேப் ரிகார்டர் இல்லையே என்று வருந்தினேன். ஆனால், இது நடந்த வருஷம் தவிர மற்றது எல்லாம் அப்படியே பசுமையாக நினைவில் இருக்கிறது. அது 1958—ஆக இருக்கலாம்.. ஆனால் தேதியும் நாளும் நினைவில்லை.. என்னுடைய கல்லூரி விடுமுறையின் போது அங்கு சென்றிருந்தேன்.. அதற்கு முப்பத்திநாலு வருஷங்களுக்குப் பிறகும் அவர் சொன்னதின் முக்கியமான விஷயங்கள் ஞாபகமிருக்கின்றன. நான் அப்பொழுது சிறிய பிராயத்தினனாக இருந்ததால் என்னுடைய ஞாபகசக்தி அத்தனை நன்றாக இரூந்திருப்பதற்கிலை என்றும் இப்பொழுது நான் அதைப் பற்றி சொல்வது மிகைப்படுத்தி சொல்லப்பட்டிருக்கம் என்றும் வாசகர்கள் நினைக்கலாம். ஆனால், ‘உண்மையும் ; ஒருவருடைய அனுபவமும் காலத்தினால் என்றும் மாறுவதில்லை’ என்பது சான்றோர் வாக்கு. நான் சொல்வதில் உண்மையல்லாததோ, மிகைப்படுத்தியதோ, தவறுதலோ இல்லையென்பது என் துணிபு.

பெரியவாளுடனும் மற்றவர்களுடனுமான என்னுடைய ஸம்பாஷணைகளும், மற்றும் என்னுடைய எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் உருக்கொடுத்ததும், என் தாய் மொழி தமிழிலேதான். என்னால் முடிந்த அளவு, மிகவும் ஜாக்கிறதையாக, அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தந்திருக்கிறேன்.. இந்த பீடிகையோடு, அவர் என்னிடம் சொன்ன வரலாற்றின் முக்கிய குறிப்புகளை------என் மனத்தில் ஆழப்பதிந்து விட்ட குறிப்புகளை-------இப்போ சொல்கிறேன்.

பதின்மூன்று வயதில் அவர் காஞ்சி மடத்தின் பீடாதிபதிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சில நாட்களில், மடத்தின் மிக மோசமான நிலைமையை அறிந்து கொண்டார். மடத்தில் பணி புரிபவர்கள் எதிலும் அக்கறை இல்லாமல் இருந்தனர். மடம் கடனில் மூழ்கியிருந்தது. மடத்திற்குச் சொந்தமான நிலங்களை நிர்வகித்துக் கொண்டிருந்தவர்கள், அவைகளிலிருந்து வந்த வருமானத்தில் குறைந்த பக்ஷ அளவும் கூட மடத்திற்குக் கொடுப்பதில்லை. பக்தர்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். மடத்தின் தினப்படி செலவுகளுக்குக் கூட, பக்தர்களிடமிருந்தகாணிக்கைகள் வரவில்லை.------ஒரு சமயம் மடத்திற்குச் சொந்தமான ஒரு தங்கத் தட்டை அடகு வைத்துத் தினப்படி செலவை சமாளிக்குமளவுக்கு நிலைமை மோசமாக இருந்ததாக மடத்தில் நீண்ட நாளாகப் பணி புரியும் ஒரு தொண்டர் வாயிலாக அறிந்தேன்.

பின் அவருடைய முதல் தேச யாத்திரையைப் பற்றிக் கூறினார். இந்த யாத்திரையின் போது அவர் சந்தித்த பல கஷ்டங்களைப் பற்றி மிகவும் உணர்ச்சி வசமாகக் கூறினார். ஒரு இடத்தில், அவரை மிகவும் ஏளனமாகவும் கேவலமாகவும் பேசினர்; ஏனென்றால், அவருடைய யாத்திரையின் போது நிறைய பெண்கள் அவரைத் தொடர்ந்ததுதான். இந்த யாத்திரையின் போது, தேசத்தைப் பற்றியும், தேசத்தின் கஷ்டங்களைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து கொண்டதாகக் கூறினார். ஆங்கிலேயரின் ஆட்சி, மஹாத்மா காந்தி, சுதந்திரப் போராட்டம் ஆகியவகளை எல்லாம் பற்றி நன்கு அறிந்தார். இந்தியத் தாய்நாட்டைப் பற்றிய அவருடைய ஆழமான உணர்ச்சிகள் என் மனதை ஆழமாகத் தொட்டது.. இந்த என் சொந்த அனுபவத்தால் அவரை இந்நாட்டின் மிக உயர்ந்த தேசபக்தராகவும் ஒரு உண்மையான இந்தியனாகவும் நான் மதித்தேன்.

இனி என்னுடைய மறக்க முடியாத அனுபவத்தின் கருவுக்கு வருவோம்.. வென்னீர் தயாரக இருந்தது; இந்த சங்கடமான அவருடைய ஆரம்பகால அனுபவத்தின் நினைவிலிருந்து அவரைத் திருப்ப, நான் அவரிடம் கூறினேன், “நீங்கள் பீடம் ஏறியவுடன் இருந்த நிலைமை, இப்பொழுது என்னுடைய நிலைமையைவிட மோசமாக இருந்திருக்கும் போல இருக்கிறதே”

அவர் தொடர்ந்தார், “இப்போ என்னையும், மடத்தையும் பத்தி புகழ்ச்சியாக எழுதறா. என்னோட பீடாரோஹண ஆரம்பகால கஷ்டங்களைப் பத்தி யாருக்கும் தெரியலை போலருக்கு. யாரும் அதைப்பத்தி எழுதறதில்லை. ஆனா எனக்கு அதுகள்தான் நன்னா ஞாபகத்தில் இருக்கு.. நீ என்னைப் பத்தி எழுதறப்போ, என்னோட ஆரம்ப கால கஷ்டங்களைப் பத்தி எழுதணும்”---என்று தன் பேச்சை முடித்தார்.. எங்களுடைய ஸம்பாஷணை இப்படி முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்ல

நான் பெரியவாளிடம் உடனே சொன்னேன், “பெரியவா இப்போ என்னோட விளையாடறேள்; கேலி பண்றேள்.. நான் ஒண்ணுமே இல்லை. எதையும் எழுதுவதற்கு, குறிப்பாக, உங்களைப்பற்றி எழுதுவதற்கு, எனக்கு ஒருக்காலும் ஸந்தர்ப்பம் வரப்போவதில்லை, “

குளிப்பதற்குத் தயாராகிக்கொண்டே சொன்னார், “நீ கட்டாயமாக எழுதத்தான் போறே; நானும் பார்க்கத்தான் போறேன்.”

குளியல் முடிந்து, சிறிது நேரம் தியானத்திற்குப் பிறகு, மறுபடியும் தொடர்ந்தார், “ஒனக்கு ரொம்ப பசியாயிருக்குமே! நா ஒன்னை வாரத்தில ஒரொரு நாள் ஒரொரு ஆத்தில சாப்பிட வெச்சுட்டேன். ஒனக்கு இந்த ஏற்பாட்டில இஷ்டம் இல்லேன்னு எனக்குத் தெரியும். ஆனா, நீ ஒன்னோட கலாசாலைப் படிப்ப முடிச்சு நான் பார்க்க ஆசைப்படறேன். நீ ஒன்னோட ‘க்ளா’சுக்கு அவசரமா கிளம்பறச்சே, அன்னிக்கு நீ சாப்பிடற வீட்டுல சாப்பாடு ‘ரெடி’’ யா இல்லேன்னா. சாப்பிடாமையே நீ ‘க்ளா’சுக்குப் போவே. முதல்லியே, அதுதான் சொன்னேன், ‘உனக்குத்தான் இப்போ சாப்பாட்டை ‘மிஸ்’ பண்ணிப் பழக்கமாயிருக்குமே’ ன்னு.. இப்போ நீ பசியோட இருப்பேன்னு எனக்குத் தெரியும்.. இங்கே ஒண்ணும் இல்லே.. பாலில ஊறவெச்ச அவல் கொஞ்சம் கொண்டுவந்து வெச்சிருக்கா.. வா! ரெண்டு பேரும் சாப்பிடலாம்.”

நான் ஒரு இலை கிடைக்குமான்னு பார்த்தபோது, என் வலது கையை நீட்டி, உள்ளங்கையை விரிக்கச்சொன்னார். ஒரு கைப்பிடி அவலை அதில் வைத்து, சாப்பிடச்சொன்னார். . அவர் முதலில் சாப்பிட ஆரம்பிக்கட்டும் என்று நான் காத்திருந்த போது, என்னை முதலில் சாப்பிடச்சொன்னார். . எனக்கு இரண்டு கைப்பிடிகள் கொடுத்தபின் அவரும் சாப்பிட்டார்! எனக்கு மயக்கம் வரும்போல் இருந்தது (dazed) இருவரும் சாப்பிட்டுக்கோண்டருக்கையில், நான் அவருடைய ஒளிவீசும் முகத்தையே உற்றுப் பார்த்தவண்ணமிருந்ன். அவருடைய மனசில் என்ன எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. அவருடைய முகத்தில் அனைத்துக் கடவுள்களின் உலகத்தைப் பார்க்கிற ஒரு ப்ரத்யேக உணர்ச்சி என்னுள் எழுந்தது!. அவர் எனக்கு தன் விஸ்வரூப தரிசனத்தைத் தந்தருளுகிறார் என்று நினைத்தேன். என்னுடைய அன்றைய உன்னத அனுபவத்தை இப்படித்தான் விவரிக்க முடியும்.

பிக்ஷை முடிந்ததும், ஒரு நீண்ட தியானத்திற்குச் சென்று விட்டார். அவரைக் கவனித்துக்கொண்டே, என் எண்ணம் ஓடியது, ‘மடத்துக்கு இது ஒரு நல்ல நேரம், அவருடைய புகழும் ஓங்கியிருந்த சமயம்; இப்போது எதற்காக, எதன் மேல் இவ்வளவு தீவிரமாக தியானம் செய்கிறார்?’

அன்றைய இரவுக்குப்பின், “எனக்கு எப்பொழுதும் அந்த கஷ்டமான நாட்களே ஞாபகம் இருக்கும்”; “நீ எழுதத்தான் போறே, நான் பாக்கத்தான் போறேன்” என்ற அவருடைய வாக்குகளே என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தன. அவர் தந்த அந்த அவலுக்குப் பிரதியாக என்னால் அவருக்கு ஏதேனும் செய்ய முடியுமா? என்று என்னையே நான் கேட்டுக் கொண்டேன்.

நான் அவரை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. அப்பொழுது அவ்வளவு அறிவு முதிர்ச்சி இல்லாமல் இருந்திருப்பேனோ என்னமோ? அவருடைய நினைவிலேயே கழிந்த முப்பது வருஷங்களுக்குப் பின் இப்பொழுதும், அந்த என் நிலைமையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. இப்பொழுது நினைத்துப் பார்த்தால், இப்போதை விட அப்போதுதான் முதிர்ச்சி அதிகம் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சில வருஷங்களுக்கு முன் அவரைப் புரிந்து கொள்ளும் வீண் முயற்சியைக் கைவிட்டேன்.

ஆனால், அவர் அரவணைத்திருந்த, முக்கியமான, அவசியமான கொள்கைகள் எனக்குத் தெரியும்.. அவைகளைக் கூடிய வரையில் அனுசரிக்க முயன்று கொண்டிருக்கிறேன். நான் பெரியவாளுடன் பழகியதைக் கண்ட பலரும், முக்கியமாக, சிறு வயதினர், “ அவர் ஏதேனும் அற்புதங்கள் நிகழ்த்தியதை நீ பார்த்திருக்கிறாய என்று கேட்பதுண்டு. அவர்களுக்கெல்லாம் என்னுடைய ஒரே பதில், “ நானே அவருடைய அற்புதங்களில் ஒன்றுதான்”

- டாக்டர் டி.சுந்தரராமன்


நன்றி: மாதங்கி

No comments:

Post a Comment