Contact Us

Name

Email *

Message *

Saturday, 22 June 2013

ஐந்தொழில் (பஞ்ச க்ருத்யம்)


ஆடி னாய்நறு நெய்யொடு பால்தயிர் அந்த ணர்பிரி யாதசிற் றம்பலம்
நாடி னாய்இட மாநறுங் கொன்றை நயந்தவனே
பாடி னாய்மறை யோடுபல் கீதமும் பல்ச டைப்பனி கால்கதிர் வெண்டிங்கள்சூடி னாய்அரு ளாய்சுருங் கஎம் தொல்வினையே.

(தி.3 .1 பா.1)

சிதம்பரம், சிற்றம்பலம்.

`ஓம்' என்ற பிரணவத்தை முதலில் சொல்லிய பிறகே வேதம் ஓத வேண்டும் என்பது வடமொழி வேத மரபு.

அதைப் போலவே தமிழ் வேதமாகிய திருமுறைகளைப் பிரணவ வடிவாயுள்ள "திருச்சிற்றம்பலம்" என்ற சொற்றொடரைச் சொல்லியபிறகே ஓதவேண்டும் என்பது தமிழ்வேத மரபு.

"சித்பரவியோமமாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி" என்பது சேக்கிழார் திருவாக்கு. "சித்பரவியோமம்" என்பது அறிவாகாயம் எனப்படும். அதுவே பிரணவ வடிவம். அதுவே திருச்சிற்றம் பலமுமாம். சித் - அறிவு. அம்பரம் - ஆகாயம், எனவே சிதம்பரம் என்பது அறிவாகாயம் எனப்பெறும்.

அறிவு என்பது பதியறிவையே குறிக்கும். பசு, பாச அறிவைக் குறியாவாம். சிற்றம்பலம் - சிறுமை அம்பலம். சிற்றம்பலம்- இதுவும் ஞானாகாயப் பெருவெளியையே குறிக்கும். சிதம்பரம் எனினும் சிற்றம்பலம் எனினும் ஒக்கும்.


ஐந்தொழில் நடனம்:

இச்சிற்றம்பலத்திலே நடனமிடும் பெருமானே நடராஜப் பெருமான். இவருடைய நடனம் "பஞ்ச கிருத்திய பரமானந்த தாண்டவம்" எனப் பேசப்பெறும். ஐந்தொழில் நடனத்தையே வடமொழியில் இப்படிக் கூறுவர்.


இவருடைய நடனத்தால் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களும் ஆனந்தமாக நடைபெறுகின்றன.

படைத்தல், அவர்தம் வலதுமேல் கரத்தில் உள்ள உடுக்கை ஒலியால் நிகழ்கிறது.

காத்தல், அவர்தம் வலதுகீழ்க் கரமாகிய அபயகரத்தால் நிகழ்கிறது.

அழித்தல், அவர்தம் இடது மேல்கரத்தில் உள்ள அக்கினியால் நிகழ்கிறது.


மறைத்தல், முயலகன்மீது அவர் ஊன்றிய வலது திருவடியால் நிகழ்கிறது.

அருளல், அவர்தம் தூக்கிய திருவடி என்றும், குஞ்சிதபாதம் என்றும் பேசப்பெறும் இடது திருவடியால் நிகழ்கிறது.


ஊன நடனம்:

ஐந்தொழிலால்தான் உயிர்கள் பிறந்தும், வாழ்ந்தும், இறந்தும் பலகோடி பிறவிகள் எடுக்கின்றன. எடுப்பதால் பிறவிதோறும் சிறிது சிறிதாக வளர்ச்சியடைகின்றன. வளர்ச்சி அடைய அடைய ஆசாபாசங்கள் சிறிது சிறிதாக அகல்கின்றன. ஆசாபாசம் அகலவே முத்திப்பேற்றை அடையத் தகுதி பெறுகின்றன. ஆசாபாசங்களில் உழன்று நிற்கும் நிலையில் ஆன்மாக்கள் பெத்த நிலையில் உள்ளன. அஃதாவது கட்டு நிலையில் உள்ளன. இவ்வான்மாக்களைப் பக்குவப்படுத்தும் நடனத்தை ஊன நடனம் என்பர்.


ஞான நடனம்:

பிறவியில் அருவருப்புற்று இனிப் பிறவி வேண்டாம் என்ற மனோநிலை எய்திய ஆன்மாக்கள் முத்தான்மாக்கள் எனப்பெறுவர்.

அவர்களை ஈடேற்றம் செய்வதற்குப் புரியும் நடனம் "ஞான நடனம்" எனப்பெறும்.

முன்சொல்லிய நடராஜப் பெருமானின் வலது மேற்கரத்தில் உள்ள உடுக்கை ஒலி, முன்பு பெத்த காலத்தில் உலகைத் தோற்றுவித்தது. அதே ஒலி இப்பொழுது முத்தான்மாக்களின் மாயையை உதறுகிறது.

இடது மேல் கரத்தில் உள்ள அக்கினி வல்வினையைச் சுட்டு அழிக்கின்றது.

முன்சொன்ன அதே வலதுபாதம் முயலகனாகிய ஆணவத்தை அமுக்குகிறது.

முன்சொன்ன அதே இடதுபாதம் ஆகிய குஞ்சிதபாதம் முத்தான்மாக்களாகிய உயிர்களைப் பிறவிக்கடலினின்றும் அருளால் எடுக்கிறது.

குஞ்சிதபாதமாகிய ஆடியபாதம், பிறவிக் கடலினின்றும் எடுத்த உயிர்களை, அத்திருவடியினின்றும் நெகிழ்ந்து விடாமல், அவ்வருள் திருவடியிலேயே பேரின்பம் நுகர, பெருமானின் வரதகரமாகிய இடதுகரம் தூக்கிய திருவடிக்குமேல் வளைந்து நின்று, தூக்கிய திருவடியில் ஆன்மாக்களை அழுத்தி, பேரின்ப வீட்டைப் பெறச் செய்கிறது.


ஒன்றில் இரண்டு:

நடராஜப் பெருமான் ஒரே ஆட்டத்தில் ஊன நடனம், ஞான நடனம் என்ற இருவேறு நடனங்களையும் நிகழ்த்தி, பெத்தான்மாக்களின் ஆசைகளை ஊன நடனத்தால் நிறைவேற்றியும், அநுபவித்து உவர்ப்புத் தோன்றி, வீடுபேற்றில் விருப்புத் தோன்றும் முத்தான்மாக்களுக்கு ஞான நடனத்தால் வீடுபேற்றை நல்கியும் அருள் புரிகிறார்.

இவற்றையெல்லாம் நமக்குத் தெளிவாக விளக்கியுள்ள உண்மை விளக்கம் என்ற சித்தாந்த நூலில் உள்ள இரு பாடல்களையும் காண்போம்.


ஊனமும், ஞானமும்:

ஊனம் என்பது குறைவைக் குறிப்பது. குறைவுடைய உடல் தோற்றத்தையும், பஞ்ச பூத உலகத் தோற்றத்தையும் குறிப்பது. ஊனம்- குறைவு; தசை.

ஞானம் என்பது நிறைவைக் குறிக்கும்.

குறைவுடைய உயிர்களை நிறைவு செய்தற்பொருட்டு முதலில் ஊன நடனம் புரிந்து, அவ்வுயிர்களை முத்தான்மா நிலைக்கு உயர்த்துவதால் அது ஊன நடனம் எனப்பெற்றது.

முத்தியில் விருப்புற்ற அவ்வுயிர்களை ஈடேற்றம் செய்யப் புரிவதே ஞான நடனம். உயிர்களின் மாயையை உதறி, வல்வினையைச் சுட்டு, ஆணவ மலத்தை அமுக்கி, தூக்கிய திருவடியால் உயிர்களைப் பிறவிக் கடலினின்றும் எடுத்து, அவ்வாறு எடுக்கப்பெற்ற உயிர்களைத் திருவடியிலேயே வரத கரத்தால் அப்பேரின்பத்திலேயே திளைக்கச் செய்வதும், பேரா இன்பப் பெருவாழ்வாம். முத்தி நிலையைப் பெறுமாறு செய்வதும் ஞான நடனமாம்.


ஊன நடனப் பாடல்:

தோற்றம் துடியதனில் தோயும்திதி அமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமாம்
ஊன்றுமலர்ப் பதத்தே உற்றதிரோதம் முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு

-திருவதிகை மனவாசகங் கடந்தார்
ஞான நடனப்பாடல்:


மாயைதனை உதறி, வல்வினையைச் சுட்டு,மலம
சாயஅமுக்கி, அருள்தான் எடுத்து - நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல்
தானெந் தையார் வரதந் தான்

-திருவதிகை மனவாசகங் கடந்தார்


பிறவிக் கடலினின்றும் கரையேறும் ஆர்வமுள்ள முத்தான்மாக்களைப் பெருமானுடைய அருளாகிய இடதுபாதம் எடுக்கிறது.

பெருமானுடைய இடது கீழ்க் கரமாகிய வரதகரம் அருள் வெள்ளத்திலே அமுக்கி பேரானந்தம் உறச் செய்கிறது. இதனால் வரதம் என்பதே சிறந்த பாடம். பரதம் என்பது பாடம் அன்று. வரதம்- அருளல்.


இரு பேரரசர்கள்:

சைவ உலகில் இரண்டு இராஜாக்கள் உள்ளனர். ஒருவர் நடராஜா, மற்றொருவர் தியாகராஜா.

நடராஜாவே ஊன நடனம், ஞான நடனம் என்னும் இரு நடனமும் செய்தபோதிலும், ஞான நடனத்தைப் புலப்படுத்தவே, தியாகராஜாவாகத் திருவாரூரில் எழுந்தருளினார். அவர் அமரர் நாட்டிலிருந்த ஐஸ்வர்யங்களை எல்லாம் உதறி, ஆரூர் நுண் மணலையே இடமாகக் கொண்டு தியாகராஜாவாகத் திருவாரூரிலே வீற்றிருக்கிறார்.

நடராஜப் பெருமான் செய்யும் நடனம் ஆனந்த நடனம். தியாகராஜா செய்யும் நடனம் அசபா நடனம். இது மூச்சுக் காற்றால் நிகழ்வது.

நடராஜர் நின்று ஆடுகிறார். இவர் இருந்து ஆடுகிறார்.

நடராஜர் நடனம் போக நடனம், போகம் என்பது இன்ப துன்ப அனுபவம். தியாகராஜர் நடனம் யோக நடனம். யோகம் என்பது துன்பக் கலப்பில்லா இன்ப அநுபவம்.

அவர் நடனம் பிறவியைத் தொடுவது. இவர் நடனம் பிறவியை விடுவது.

எனவேதான் நடராஜப் பெருமானை, "ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள, அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையேயாக, குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமேயாக, இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில், தனிப்பெருங்கூத்தின், வந்த பேரின்ப வெள்ளத்துள், திளைத்து, மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்த" சுந்தரரை விரைவில் விடுவிப்பது கருதியே "திருவாரூருக்கு நம்பால் வருக" எனத் தியாகேசர் அழைத்தார் போலும்.

நடராஜ மூர்த்தியும், சத்து - உள்ளது. சித்து - அறிவு. ஆட்டம்- ஆனந்தமாய் உள்ளவர்.

தியாகராஜ மூர்த்தியும் சத்து சித்து ஆனந்தமாய் உள்ளவரே.

இருப்பினும், நடராஜமூர்த்தி உலக போகங்களை உயிர்கட்கு அருத்தி பக்குவப்படுத்துபவராகவும், தியாகராஜ மூர்த்தி உலக போகங்களைத் துய்த்து உவர்ப்புத் தோன்றிய முத்தான்மாக்களை - பக்குவப்பட்ட உயிர்களை- ஈடேற்றம் செய்பவராகவும் கொள்ளலாம்.

சுந்தரர் யோகநெறி விளக்க வந்தவர் என்ற குறிப்பும், திருவாரூர் மூலாதார க்ஷேத்திரம் என்ற குறிப்பும், அருணகிரி நாதரின் ஆதாரத் தொளியானே, ஆரூரிற் பெருமாளே என்ற குறிப்பும், `உயிராவண மிருந்து உற்று நோக்கி, உள்ளக் கிழியின் உரு எழுதி, உயிர் ஆவணம் செய்திட்டு உன் கைத்தந்தால், உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி, அயிராவணம் ஏறாது ஆன் ஏறேறி, அமரர் நாடாளாதே ஆரூர் ஆண்ட, அயிர் ஆம் வண்ணமே என் அம்மானே, நின் அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே' என்ற அப்பர் குறிப்பும் இக்கருத்தை ஓராற்றால் புலப்படுத்துவது காணலாம்.


ஆசை தீரக் கொடுப்பார்:

மேலும் இரண்டாம் திருமுறையில் உள்ள திருக்கடவூர் மயானத்து "வரிய மறையார்" எனத் தொடங்கும் திருப்பதிகத்துள்,

பாசமான களைவார் பரிவார்க்கமுதம் அனையார்
ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல்விடைமேல் வருவார்
காசைமலர்போல் மிடற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பேசவருவார் ஒருவர் அவர்எம்பெருமான் அடிகளே

(தி.2 .80 பா.7)


என்ற பாடல், பெத்தான்மாக்களுக்குள்ள ஆசைகள் தீருமாறு போகப் பொருளைப் பலகாலும் கொடுத்து, அவர்களது ஆசைகள் தீருமாறு செய்வது ஊன நடனம் செய்யும் பேருதவி.

பாசமான களைதலும், பரிவார்க்கு ஆரா அமுதாய் அருளலும், அஃதாவது பேரின்பப் பெருவாழ்வைப் பெறுவித்தலும் ஞான நடனம் செய்யும் பேருதவி. இதனைத் தியாகராஜப் பெருமான் செய்கிறார்.

இருநடனத்தையும் நடராஜப் பெருமானே செய்தருள்கிறார் எனினும், ஞான நடனத்திற்கென்று ஒரு தனிமூர்த்தியாகத் தியாகராஜா திகழ்கிறார்.


மூன்றாம் திருமுறை - முதல் பதிகம்:

ஒன்று, இரண்டு திருமுறைகளின் முதலில் தொடங்கும் பதிகம் சீகாழியைப் பற்றியதாகவே பல பதிப்புக்களிலும் பதிப்பித்து உள்ளனர். மூன்றாம் திருமுறையில் அவ்வாறின்றி, சிதம்பரப் பதிகமாகிய `ஆடினாய் நறுநெய்யொடு பால்தயிர்' என்று தொடங்கும் தில்லைப் பதிகத்தை முதலில் அமைத்துள்ளனர். இப்பதிப்பிலும் அவ்வண்ணமே பதிப்பிக்கப் பெற்றுள்ளது.

`ஆடினாய்' என்ற சொல், நெய், பால், தயிரை அபிஷேகப் பொருளாக ஆட்டிக் கொண்டாய் என்பதோடு, நடனம் ஆடினாய் - அதனால் உலகுயிர்களை ஈடேற்றம் செய்தாய்-என்ற குறிப்பும் அதில் உள்ளதை உரையாசிரியர் குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது.

கூத்தப்பிரான் பஞ்ச கிருத்திய பரமானந்தத் தாண்டவம் ஆடுகிறார். ஆடுதற்கு ஏற்ற இடமாக, சிற்றம்பலத்தை விரும்பித் தேர்ந்தெடுத்துள்ளார். இக்கருத்தை, `சிற்றம்பலம் நாடினாய்' என்பதனால் தெளிவுபடுத்துகிறார் திருஞானசம்பந்தர்.

நடராஜப் பெருமான் `நாடி' ஏற்ற இடமாதலின், அது சந்தானாசாரியருள் ஒரு ஆசிரியருக்குப் பெயராகவே அமைந்து விட்டது. சித்தர்காடு சிற்றம்பலம் நாடியார் என்ற பெயர் இந்த அடிப்படையிலேயே அமைந்துள்ளது.


நன்றி: திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் 26 ஆவது குருமகா சந்நிதானம்














No comments:

Post a Comment