Contact Us

Name

Email *

Message *

Wednesday, 12 June 2013

மஹாஸ்வாமிகளை உருக வைத்த நிகழ்ச்சி - வில்வ இலைகளை வைத்து விட்டுப் போனது யார்?

ஒரு முறை காஞ்சி மஹா ஸ்வாமிகள், ‘தக்ஷிண கயிலாயம்’ எனப்படும் ஸ்ரீசைல க்ஷேத்திரத்துக்குப் பரிவாரங்களுடன் திவ்ய தரிசன யாத்திரை மேற்கொண்டார்.

யாத்திரை கர்னூலை அடைந்ததும், நகர எல்லையில் ஆச்சார்யாளுக்குப் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.அங்கு பஜனை மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்ட ஸ்வாமிகள், தனக்கு முன்பாகக் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களிடம் ‘ஸநாதன தர்ம’த்தைப் பற்றி தெலுங்கில் உரை நிகழ்த் தினார். முடிவில் அனைவருக்கும் ஆசியும் பிரசாதமும் வழங்கி விட்டு யாத்திரையைத் தொடர்ந்தார்.

கர்னூல் எல்லையைத் தாண்டி கொஞ்ச தூரம் சென்றதும், தூற ஆரம்பித்த வானம், அடைமழையாகப் பொழிய ஆரம்பித்தது. ஒதுங்க இடமில்லை. ஸ்ரீமடத்தைச் சேர்ந்த பக்தர்கள் அனைவரும், உடன் வந்து கொண்டிருந்த ‘சிவிகை’யில் (பல்லக்கு) ஏறி அமரும் படி ஸ்வாமிகளைப் பிரார்த்தித்தனர். ‘போகி’களும் (பல்லக்கு சுமப்பவர்களும்) வேண்டிக் கொண்டனர். ஆச்சாரியாள் உடன்படவில்லை.


‘‘நீங்க அத்தனை பேரும் நனைஞ்சுண்டே வரச்சே நான் மாத்திரம் பல்லக்குல வரணுமா... வேண்டாம் ... வேண்டாம் . நானும் இப்படியே வரேன்!’’ என்று கூறிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தார் ஸ்வாமிகள். கூப்பிடு தூரத்தில் சிவன் கோயிலொன்று தென்பட்டது. அனைவருடனும் அந்த ஆலயத்துக்கு விஜயம் செய்தார் ஸ்வாமிகள். பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு நிகழ்ந்தது. அனைவரும் சரீரத்தைத் துடைத்துவிட்டு, மாற்று வஸ்திரம் அணிந்து கொண்டனர். தரிசனம் முடிந்தபோது மழை முழுமையாக விட்டது. யாத்திரை தொடர்ந்தது.

சுமார் ஏழெட்டு மைல் கடந்ததும் செழிப்பான ஒரு ஜமீன் கிராமம் தென்பட்டது. அந்தக் கிராமத்து மக்கள் அனைவரும் தத்தம் குழந்தை குட்டிகளுடன் ஊர் எல்லையில் பூர்ண கும்ப மரியாதையுடன் மஹா ஸ்வாமிகளை வரவேற்றனர். பின், அந்த ஊர் ஜமீன்தார் ஸ்வாமிகளிடம் பவ்யமாகப் பிரார்த்தித்தார்: ‘‘எங்க கிராமத்துலே ஸ்வாமிகள் திருப்பாதம் பட்டு, புனிதமாகணும். இங்கே கொஞ்ச நாள் தங்கியிருந்துட்டுப் போகணு ம். பூஜை புனஸ்காரங்கள் பண்றதுக்கு வசதியா பெரிய சத்திரம் ஒண்ணு இருக்கு. பக்கத்திலேயே சுத்தமான புஷ்கரணியும் இருக்கு.’’

கிராமமே கீழே விழுந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்தது. அவர்களின் ஆத்மார்த்த பக்தி யைப் பார்த்த ஆச்சார்யாள் நெகிழ்ந்தார். இருபத்தோரு நாட்கள் அங்கு தங்கப் போவதாக அநுக்கிரஹித்தார். கிராமமே மகிழ்ந்தது.

அடுத்த நாள் காலையில் அந்தக் கிராமமே விழாக் கோலம் பூண்டிருந்தது. சத்திரத்தில் ஸ்ரீசந்திரமௌலீஸ்வர பூஜைக்கு ஏற்பாடுகள் நடந்தன. ஆச்சார்யாள் ஸ்நானத்துக்காக அருகிலிருந்த புஷ்கரணிக்குச் சென்றிருந்தார். அப்போது ஸ்ரீமடத்தின் வயதான காரியஸ்தர், பூஜா கைங்கர்யம் பண்ணுகிற இளைஞர்களிடம் கவலையுடன் கேட்டார்:

‘‘ஏண்டாப்பா! பூஜைக்கு ‘ஸம்ருத்தி’யா (நிறைய) புஷ்பம் ஏற்பாடு பண்ணி வெச்சிருக் கேள். ஆனா, ‘வில்வ’ பத்திரத்தையே காணுமே. அது இல்லாம பெரியவா எப்டி சஹஸ்ர நாமார்ச்சனை பண்ணுவா?’’

அந்த இளைஞர்கள் கைகளைப் பிசைந்த படி நின்றிருந்தனர். காரியஸ்தர் விடவில்லை. ‘‘ஏண்டாப்பா. இப்டி பேசாம நின்னுட்டா வில்வ பத்ரம் வந்து சேர்ந்திடுமா என்ன? போங்கோ... வாசல்ல போய், கிராமத்து ஜனங் கள்ட்ட, ‘பெரியவா பண்ற சந்திர மௌலீஸ்வர பூஜைக்கு வில்வ பத்திரம் வேணும்’னு சொல்லி, மூணு தளத்தோடு பறிச்சு மூங்கில் கொடலைல (கூடை) போட்டுக் கொண்டுவரச் சொல்லுங்கோ. பெரியவா தங்கியிருக்கிற வரைக்கும் வில்வதளம் தேவைன்னும் சொல்லுங்கோ. தெலுங்கு தெரிஞ்சவாள வெச்சுண்டு பேசுங்கோ. அப்டியும் தெரியலேன்னா, நம்மள்ட்ட ஏற்கெனவே பெரியவா பூஜை பண்ணின ‘நிர்மால்ய’ (பூஜித்த) வில்வம் இருக்குமே... அதைக் கொண்டு போய் காட்டி, பறிச்சுண்டு வரச் சொல்லுங்கோ!’’ என்று அவசரப்படுத்தினார்.

தெலுங்கு தெரிந்த ஒருவருடன், நிர்மால்ய வில்வ தளங்களுடன் வாசலுக்கு வந்தனர் இளைஞர்கள். அங்கு நின்றிருந்த ஊர் ஜனங்களிடம் நிர்மால்ய வில்வ தளங் களைக் காட்டிய அவர், விஷயத்தைச் சொல்லி, ‘‘இன்னும் அரை மணி அவகாசத்துக்குள் வில்வ பத்திரம் வந்தாகணும். உதவி பண்ணுங்கோ!’’ என்றார். ‘இந்த மாதிரி ஒரு காம்புல மூணு இலையோடு உள்ள மரத்தை நாங்க பார்த்ததே இல்லை!’ என ஊர்மக்கள் கூறினர். அந்த ஊர் வேத பண்டிதர்களும், ‘இங்கே வில்வ தளமே கிடையாது’ என்றனர்.

ஸ்வாமிகள் ஸ்நானம் முடித்து வந்தார்கள். நடுக் கூடத்தில் பூஜா சாமான்களெல்லாம் தயாராக இருந்தன. அவற்றை நோட்டம் விட்ட மகா பெரியவா கேட்ட முதல் கேள்வி: ‘‘ஏண்டாப்பா! அர்ச்சனைக்கு வில்வம் ஏற்பாடு பண்ணி வெச்சுட்டேளா?’’

மடத்துக் காரியஸ்தர் மென்று விழுங்கினார்.

‘‘ஏன்... என்ன விஷயம்? வில்வ பத்ரம் கெடைக் கலியோ இந்த ஊர்ல...?’’ என்று கேட்டார் ஆச்சார்யாள். காரியஸ்தர் மெதுவாக, ‘‘ஆமாம் பெரியவா. இந்த ஊர்ல வில்வ மரமே கெடயாதுன்னு ஊர்க்காராளும் வேதப் பண்டிதாளும் சொல்றா’’ என்றார் தயக்கமாக.

ஸ்வாமிகள் தனக்குள் சிரித்துக் கொண்டார். அப்போது காலை மணி 10:30. ஸ்வாமிகள் வேகமாக சத்திரத்தின் கொல்லைப்புறத்தை நோக்கி நடந்தார். பசுமாட்டுத் தொழுவத்துக்குள் பிரவேசித்தார். அங்கிருந்த கருங்கல் பாறை ஒன்றில் ஏறி அமர்ந்து, தியானத்தில் ஆழ்ந்து விட்டார். ‘பூஜைக்கு வில்வ பத்ரம் இல்லாததால இன்னிக்கு ஸ்ரீசந்திர மௌலீஸ் வரருக்கும் பெரியவாளுக்கும் பிக்ஷாவந்தனம் நின்னு போயிடுமோ’ என்று கவலைப்பட்டனர், ஸ்ரீமடத்து முக்கியஸ்தர்கள். காரியஸ்தருக்குக் கண்களில் நீர் தளும்பியது. ஜமீன்தார் காதுக்கும் தகவல் எட்டியது. அவர், தன் ஆட்களை விட்டு வில்வ பத்திரத்தைத் தேடச் சொன்னார். ஏமாற்றமே மிஞ்சியது. 

மணி 11.30. அனைவரும் கவலையுடன் தொழுவத்தருகே நின்றிருந்தனர். பூரண மௌனம். கருங்கல் பாறையில் மஹா ஸ்வாமிகள், தியானத்தில் வீற்றிருந்த காட்சி, கயிலாய பர்வதத்தில் வீற்றிருக்கும் சாட்சாத் ஸ்ரீபரமேஸ்வரனையே நினைவூட்டியது. திடீரென வாசல்புறத்திலிருந்து, கையில் ஒரு பெரிய குடலையை (நீண்ட கூடை) தலையில் சுமந்து வந்தான் ஸ்ரீமடத்தைச் சேர்ந்த பக்தன் ஒருவன். அவன் முகத்தில் ஏக சந்தோஷம். குடலையைக் கூடத்தில் இறக்கினான். என்ன ஆச்சரியம்... அந்தக் குடலை நிறைய வில்வ பத்திரம்! அதைப் பார்த்த அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி. அதே நேரம், தியானம் கலைந்து கீழே இறங்கினார் ஸ்வாமிகள்.

காரியஸ்தரைப் பார்த்து ஸ்வாமிகள் கேட்ட முதல் கேள்வி: ‘‘சந்திரமௌலீஸ் வர பூஜைக்கு வில்வம் வந்து சேந்துடுத்தோல்லியோ? பேஷ்... உள்ளே போவோம்!’’

கூடையிலிருந்த வில்வ தளங்கள் சிலவற்றைக் கையில் எடுத்துப் பார்த்தார் ஸ்வாமிகள். பச்சைப் பசேலென மின்னின அவை. ஆச்சார்யாள், காரியஸ்தரிடம், ‘‘துளிக்கூட இதழ்கள் பின்னமாகாம சிரத்தையா இப்டி யார் பறிச்சுண்டு வந்தா? ‘இந்தப் பிராந்தியத்லயே வில்வ மரம் கிடையாது’னு சொன்னாளே... இத எங்கே பறிச்சதுனு கேட்டுத் தெரிஞ்சுண்டேளா?’’ என்று கேட்டார். காரியஸ்தர் வில்வம் கொண்டு வந்த இளைஞனைத் திரும்பிப் பார்த்தார். ஸ்வாமிகளிடம் அந்த இளைஞன், ‘‘பெரியவா...நா யதேச்சையா வாசல் பக்கம் போனேன். கீழண்ட கோடியில பந்தக்கால் கிட்ட இந்தக் கூடை இருந்தது. போய்ப் பார்த்தா முழுக்க முழுக்க வில்வ தளம் பெரியவா!’’ என்றான்.

உடனே பெரியவா, ‘‘அது சரி. அங்கே, யார் கொண்டு வந்து வெச்சானு கேட்டயா நீ?’’ என்று வினவினார்.

‘‘கேட்டேன் பெரியவா. அங்கிருந்த அத்தன பேரும் எங்களுக்குத் தெரியாதுனுட்டா...’’

‘‘அப்டீன்னா யார்தான் கொண்டு வந்து வெச் சிருப்பா?’’ என்று சிரித்தபடி வினவினார் ஆச்சார்யாள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. பூஜை பண்ண வேண்டிய இடத்தை நோக்கி நகர்ந்த ஆச்சார்யாள், புன்னகையோடு திரும்பி, ‘‘ஒருவேள நம்ம சந்திரமௌலீஸ்வரரே கொண்டு வந்து வெச்சிருப் பாரோ?’’ என்று கூறி பூஜைக்கு ஆயத்தமானார். பசுமையான அந்த வில்வ தளங்களால் ஸ்வாமிகள் ஸ்ரீசந்திர மௌலீஸ்வரருக்கு அர்ச்சனை செய்த காட்சி, அனைவரையும் பரவசப்படுத்தியது. பூஜை முடிந்ததும்,பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை நேரத்தில் தெலுங்கில் ஸ்ரீமத் ராமாயண உபந்யாஸம் நிகழ்த்தினார் ஆச்சார்யாள். அந்தக் கிராமமே கேட்டு மகிழ்ந்தது. அடுத்த நாள் காலையில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பஜனை கோஷ்டி ஒன்று சத்திர வாசலில் பக்திப் பரவசத்துடன் ஆடிப் பாடி பஜனை நிகழ்த்தியது. ஊரே கல்யாணக் கோலம் பூண்டிருந்தது. ஆச்சார்யாள், மடத்தைச் சேர்ந்த சில ருடன் புஷ்கரணிக்குச் சென்றார்.


கொல்லைப்புறத்தில் ஏதோ வேலை யில் இருந்த காரியஸ்தர், முந்தின தினம் வில்வக் கூடையைச் சுமந்து வந்த ஸ்ரீமடத்து இளைஞனிடம் கேட்டார்: ‘‘ஏண்டாப்பா. இன்னிக்கும் நெறய வில்வம் வேணுமே! நீ கைராசிக் காரனா இருக்கே! இன்னிக்கும் பந்தக்கால் கிட்ட யாராவது வில்வம் கொண்டு வந்து வெச்சுட்டுப் போயிருக்காலானு பாரேன்!’’

உடனே வாசலுக்கு ஓடினான் இளைஞன். என்ன ஆச்சரியம்! முந்தைய நாள் போலவே ஒரு பெரிய ஓலைக் கூடை நிறைய வில்வ தளம்! இளைஞனுக்கு சந்தோஷம். கூடையுடன் கூடத்துக்கு வந்தவன், அதை இறக்கி வைத்துவிட்டு ஸ்ரீகார் யத்திடம் (மேலாளர் போன்றவர்), ‘‘இன்னிக்கும் அதே எடத்ல கூடை நிறைய வில்வம்! யாரு, எப்போ வெச் சுட்டுப் போனானு தெரியலே!’’

ஸ்ரீகார்யத்துக்கு வியப்பு. ‘ஏன் இப்டி ஒத்தருக்கும் தெரியாம ரகஸ்யமா வந்து வெச்சுட்டுப் போறா’ என எண்ணிக் குழம்பினார். ஆச்சார்யாள் திரும்பினார். கூடத்தில் பூஜைக்குத் தயாராக வில்வம். அவற்றை நோட்டம் விட்ட ஸ்வாமிகள், பின்புறம் திரும்பி அர்த்தபுஷ்டியுடன் ஸ்ரீகார்யத்தைப் பார்த்தார். ‘‘ஆமாம் பெரியவா... இன்னிக்கும் வாசல்ல அதே எடத்ல வில்வக் கூடை வெச்சிருந்தது! ஒருத்தருமே ‘தெரியாது’ங்கறா!’’ என்று கூறி ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தார்.

சந்திரமௌலீஸ்வர பூஜையைப் பூர்த்தி செய்தார், ஸ்வாமிகள். பிக்ஷையை முடித்துக் கொண்டு ஏகாந்தமாக அமர்ந்திருந்தபோது, ஸ்ரீகார்யத்தை அழைத்தார். அவரிடம், ‘‘நாளக்கி கார்த்தால சுருக்க ஏழுந்திருந்து நீ ஒரு கார்யம் பண்ணணும். கூட இன்னும் யாரயாவது அழச்சுண்டு வாசப் பக்கம் போ. ஒருத்தருக்கும் தெரியாம நின்னு கவனி. யாரு வில்வக் கூடய வெச்சுட்டுப் போறானு கண்டுபிடி. எங்கிட்ட அழச்சுண்டு வந்துடு... நீ ஒண்ணும் கேக்க வாண்டாம். என்ன புரிஞ்சுதா?’’ என்று சிரித்தபடி கூறினார். ஸ்ரீகார்யம், நமஸ்கரித்து விட்டு நகர்ந்தார்.


அன்று மாலையும் வழக்கம்போல் ஸ்வாமிகளின் ஸ்ரீமத் ராமாயண உபந்யாசம் நடந்தது. மொத்த கிராம முமே திரண்டு வந்து, கேட்டு மகிழ்ந்தது. மூன்றாவது நாள் விடியக் காலை நேரம். சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த பஜனை கோஷ்டிகளெல்லாம் சத்திர வாசலில் கூடி பாடிக் கொண்டிருந்தனர். ஸ்ரீகார்யம், இரண்டு கைங்கர்யபரர்களுடன் வாசல் பந்தலை ஒட்டியிருந்த ஒரு பெரிய ஆலமரத்து மறைவில் நின்று உன்னிப்பாகக் கவனித்துக் கொண் டிருந்தார். மணி 8.30. கீழண்டைப்புறம் சத்திரத்தையட்டிய மாந்தோப்பிலிருந்து தயங்கியபடி வெளிப்பட்டான் ஒரு சிறுவன். அவன் தலையில் பெரிய காய்ந்த ஓலைக் கூடை. தலையில் கட்டுக் குடுமி. அழுக்கடைந்த வேஷ்டியை மூலக் கச்சமாகக் கட்டியிருந்தான். அங்குமிங்கும் திரும்பிப் பார்த்து விட்டு, ஒரு பந்தக்கால் அருகே கூடையை மெதுவாக இறக்கி வைத்துவிட்டு, நைஸாக வந்த வழியே திரும்ப முற்பட்டான். ஓடிப் போய் அவன் முன் நின்றார், ஸ்ரீகார்யம். அவரைப் பார்த்ததும் அவனுக்குக் கை, கால்கள் நடுங்க ஆரம்பித்தன. உடனே ஸ்ரீகார்யத்தின் கால்களில் விழுந்து வணங்கினான் அவன். அவர் கேட்டார்: ‘‘ரெண்டு நாளா நீதான் இந்த வில்வ கூடைய ஒருத்தருக்கும் தெரியாம வெச்சுட்டுப் போறயா?’’

‘ஆமாம்’ என்பது போல ஆட்டினான்.

உடனே ஸ்ரீகார்யம் அவனிடம், ‘‘சரி... சரி... நீ போய் நன்னா குளிச்சுப்டு, ஒங் குடுமிய நன்னா முடிஞ்சுண்டு, நெத்தியிலே என்ன இட்டுப்பியோ அத இட்டுண்டு... மத்யானத்துக்கு மேல இங்க வா! ஒன்ன பெரிய சாமிகிட்ட (ஆச்சார்யாள்) அழச்சிண்டு போறேன். ஆசீர்வாதம் வாங்கிக்கலாம். இப்டி அழுக்கு வேஷ்டி இல்லாம பளிச்சுனு வா. என்ன புரியறதா?’’ என்றார். ‘புரிகிறது’ என்ற பாவனையில் தலையை ஆட்டி விட்டு ஓடி விட்டான்.

ஸ்வாமிகளிடம் சென்று நடந்ததை விவரித்தார் ஸ்ரீகார்யம். சந்தோஷத்துடன், ‘‘பேஷ்... பேஷ்... அவன் ரெண்டு மூணு நாளா பெரிய உபகாரம்னா பண்ணிண்டு வரான். வரட்டும். ஆசீர்வாதம் பண்ணி பிரசாதம் குடுப்போம்!’’ என்று கூறிவிட்டு ஸ்நானத்துக்குக் கிளம்பினார்.


மதியம் 3.00 மணி. அந்தச் சிறுவன் சொன்னபடி வந்து சேர்ந்தான். தயங்கியபடியே முற்றத்துச் சுவர் ஓரம் நின்றிருந்த அவனைக் காட்டி, ஸ்வாமிகளிடம் ஏதோ கூறினார் ஸ்ரீகார்யம். அவனை கிட்டே வரும்படி ஸ்வாமிகள் அழைத்தார். அருகே வந்தவன், சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்துவிட்டு, கை கட்டி நின்றான். அவனது தோற்றத்தைப் பார்த்த ஆச்சார்யாளுக்கு சிரிப்பு வந்து விட்டது. எண்ணெய் தடவி வாரி முடிந்த கட்டுக் குடுமி. மூலக்கச்சமாக வெள்ளை வேஷ்டி கட்டி இருந்தான். நெற்றி, உடம்பில் விபூதிப்பட்டை. பளிச்சென்றிருந்தான். அவனை முற்றத்தில்
அமரும்படி சைகை காட்டிச் சொன்னார் ஸ்வாமிகள். அவன் அமரவில்லை.

‘‘பேரு என்ன?’’ ஸ்வாமிகள் தெலுங்கில் கேட் டார்.

அவன், ‘‘புரந்தரகேசவலு’’ என்று ஸ்பஷ்டமாகத் தமிழில் பதில் சொன்னான். உடனே ஆச்சார்யாள் ஆச்சர்யத்தோடு, ‘‘பேஷ்... நன்னா தமிழ் பேசறியே நீ!’’ என்று கேட்டுவிட்டு, ‘‘என்ன... என்ன பேரு சொன்னே?’’ என்று மீண்டும் கேட்டார்.

‘‘புரந்தரகேசவலுங்க!’’ _ நிறுத்தி நிதானமாகக் கூறினான் சிறுவன்.

‘‘தமிழ்ல பேசறியே நீ?’’ என்று புருவங்களை உயர்த் தினார் ஆச்சார்யாள்.

‘‘எங் கதையை நீங்க கேக்கணும்ங்க சாமி...’’ அவன் கண்களில் நீர் கோர்த்தது.

‘‘பேஷா... சொல்லு... சொல்லு...’’ _ அவனை உற்சாகப்படுத்தினார் ஸ்வாமிகள். புரந்தரகேசவலு சொல்ல ஆரம்பித்தான்:


‘‘எனக்கு சொந்த ஊரு மதுர பக்கத்ல உசிலம்பட்டிங்க. நா பொறந்த ரெண்டு வருசத்துக்குள்ளே ஒடம்பு சரியில்லாம எங்கம்மா எறந்துட்டாங்க. அதுலேருந்து எங்கப்பாதான் என்னய வளத்துனாரு. எனக்கு ஆறு வயசாகும்போது என்ன கூட்டிக்கிட்டு பொளப்பு தேடி இந்தப் பக்கம் வந்தாரு. இந்த ஊரு ஜமீன்ல மாடு மேச்சு பராமரிக்கற வேல கெடச்சிச்சுங்க. நா படிக்க பள்ளிக்கூடம் போவலீங்க. எங்கப்பாருட்ட நெறயா படிச்சிருக்கேன். எங்கப்பாருக்கு பாட்டுன்னா உசிரு. புரந்தரதாசரு... திருவையாறு தியாகராஜ சாமி பாட்டெல்லாம் ரொம்ப நல்லா பாடுவாரு. எனக்கும் சொல்லி வெச்சிருக்காரு. நானும் பாடுவேன். அந்த ஆசயிலதான் என் பேர புரந்தரகேசவலுனு வெச்சிருக்காரு. இப்ப அவுரு இல்லீங்க. மோச்சத்துக்கு போய் ரண்டு வருசம் ஆயிடிச்சி. நா இப்ப ஜமீன் மாடுங்களை மேச்சு பராமரிக்கிறேன். ஜமீன்ல சோறு போட்டு சம்பளம் தர்றாங்க. இப்ப எனக்கு பன்னண்டு வயசாவுது சாமி.’’

இதைக் கேட்டு நெகிழ்ந்தார் ஸ்வாமிகள். ‘‘அது சரி... ‘இந்த சுத்து வட்டாரத்லயே வில்வ மரம் இல்லே’னு எல்லாரும் சொல்றச்சே ஒனக்கு மட்டும் எங்கேருந்து இவ்ளவு பில்வம் கெடச்சுது?’’ என்றார் ஆச்சரியத்தோடு.

புரந்தரகேசவலு பவ்யமாகச் சொன்னான்: ‘‘இங்கருந்து மூணு மைல் தள்ளிருக்கற மலை அடி வாரத்தில நெறயா புல்லு மண்டிக் கெடக்குது சாமி. அங்கதான் எங்கப்பாரு காலத்துலேருந்து மாடு மேக்கப் போவோம். அங்க மூணு பெரிய வில்வ மரங்க இருக்கு! அப்போ எங்கப்பாரு அந்த எலைங்கள பறிச்சாந்து காட்டி, ‘எலே புரந்தரா... இந்த எலை பேரு வில்வம். இதால சிவபெருமானுக்கு பூச பண்ணுனா அம்புட்டு விசேஷம்டா. பாத்து வெச்சுக்க’னு சொன்னாரு. அது நெனப்லய இருந்துச்சு சாமி. முந்தா நாளு நம்ம மடத்துக்காரவங்க இந்த எலய காட்டி, ‘நெறய வேணும்’னு கேட்டப்ப புரிஞ்சு போச்சு. ஓடிப் போயி ஓலக்கூடயிலே பறிச்சாந்து வெச்சேன்...மாடு மேக்கிற பையன் கொண்ணாந்ததுனு தெரிஞ்சா பூஜைக்கு ஏத்துக்க மாட்டீங்களோனு பயந்துதான் யாருக்கும் தெரியாம வெச்சிட்டுப் போனேன். இதான் சாமி சத்தியம்!’’


மேலும் நெகிழ்ந்த ஆச்சார்யாள் சற்று நேரம் மௌனம் காத்தார். பிறகு, ‘‘புரந்தரகேசவலு... ஒனக்கு என்ன வேணும்... என்ன ஆசைன்னு சொல்லு. அத மடத்லேர்ந்து பூர்த்தி பண்ணச் சொல்றேன்!’’
என்றார் வாஞ்சையுடன்.

உடனே புரந்தரகேசவலு, ‘‘சிவ... சிவா!’’ என்று சொல்லி கன்னத்தில் போட்டுக் கொண்டு பேசினான்: ‘‘சாமி. எங்கப்பாரு, ‘புரந்தரா... நாம இந்த ஒலகத்துல எதுக்குமே ஆசப்படக் கூடாது. ஆனா, ஒண்ணே ஒண்ணுக்கு மட்டும் ஆசப்படணும்!’னு சொல்லிட்டே இருப்பாரு. எனக்கு இப்ப ரெண்டே ரெண்டு ஆச இருக்கு. நீங்க உத்தரவு தந்தீங்கன்னா ஒரு ஆசய இப்ப சொல்றேன். இன்னொண்ண நீங்க இந்த ஊர்லேர்ந்து பொறப்பட்டு போற அன்னக்கி சொல்றேன் சாமி...’’என்று நமஸ்கரித்து எழுந்தான். அவன் கண்களிலிருந்து பொலபொலவென்று நீர்.

உருகிப் போனார் ஸ்வாமிகள். ‘‘சொல்லு... சொல்லு, ஒனக்கு என்ன ஆசைனு’’ என்று உற்சாகப்படுத் தினார். அவன் தயங்கியபடி, ‘‘வேற ஒண்ணுமில்லீங்க சாமி. எங்கப்பாரு எனக்கு, நெறய புரந்தரதாச சாமி, தியாகராச சாமி பாடுன பாட்டெல் லாம் சொல்லிக் குடுத்திருக்காரு... நீங்க இங்கே தங்கி இருக்கற வரை ஒங்க முன்னாடிநா பாடணும் சாமி! நீங்க கேட்டு அருள் பண்ணணும்!’’ என்று வேண்டினான். அதைக் கேட்டுப் பரம மகிழ்ச்சி அடைந்தார் ஆச்சார்யாள்.

‘‘புரந்தரகேசவலு! அவசியம் நீ பாடு... நா கேக்கறேன். எல்லாரையும் கேக்கச் சொல்றேன். நித்யம் மத்யானம் சரியா மூணு மணிக்கு வந்துடு. ஒக்காந்து பாடு. சந்திர மௌலீஸ்வர ஸ்வாமி கிருபை ஒனக்கு கிடைக்கட்டும்! க்ஷேமமா இருப்பே நீ!’’ என்று ஆசீர்வதித்தார்.


மகிழ்ந்து போனான் புரந்தரகேசவலு. ஆச்சார்யாள் விடவில்லை. ‘‘அது சரி, புரந்தரகேசவலு. அந்த இன்னொரு ஆசை என்னன்னு சொல்லேன்... கேப்போம்!’’ என்றார்.

‘‘இந்த ஊரவிட்டு நீங்க பொறப்படற அன்னிக்கு அத ஒங்ககிட்ட வேண்டிக்கிறேன் சாமி!’’ என்று மரியாதையோடு பதில் சொன்னான் அவன். ஸ்வாமிகள் அவனுக்குப் பிரசாதமும் அழகான துளசி மாலை ஒன்றையும் ஸ்ரீகார்யத்தை விட்டுக் கொடுக்கச் சொன்னார்.

வாங்கி, கழுத்தில் போட்டுக் கொண்ட புரந்தரகேசவலுக்கு பரம சந்தோஷம். நமஸ்கரித்து விட்டுப் புறப்பட்டான். அடுத்த நாள் முதல் சரியாக மதியம் மூன்று மணிக்கு வந்து அமர்ந்து தனக்குத் தெரிந்த ஸ்ரீதியாகராஜஸ்வாமி கீர்த்தனைகளையும், ஸ்ரீபுரந்தரதாசர் பாடல்களையும் பாடஆரம்பித்தான். ஸ்வாமிகள் அமர்ந்து ரசித்துக் கேட்டார். அவன் குரல் மிக இனிமையாக இருந்தது. அவன் பாடும்போது ஏற்படுகிற உச்சரிப்புப் பிழைகளை, சரியாக உச்சரித்துத் திருத்தினார் ஸ்வாமிகள்.

அன்று இருபத்தோராம் நாள். ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜையைப் பூர்த்தி செய்து, பிக்ஷையை ஸ்வீகரித்துக் கொண்டு அந்த ஊரைவிட்டுப் புறப்பட்டார் ஸ்வாமிகள். சத்திரத்தைவிட்டு வெளியே வந்த ஆச்சார்யாள், தம்மை வழியனுப்ப கூடியிருந்த ஜனங்கள் மத்தியில், ஆசி உரை நிகழ்த்தினார். அதைக் கேட்ட அனைவரின் கண்களிலும் நீர் பெருகியது. பரிவாரங்களுடன் மெதுவாக நடக்க ஆரம்பித்த ஆச்சார்யாள் திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவராகத் திரும்பி நின்று சத்திரத்தைப் பார்த்தார். அங்கே வாசல் பந்தக் காலைக் கட்டியணைத்தவாறு, கேவிக் கேவி அழுதபடி நின்றிருந்தான் புரந்தரகேசவலு.

அவனை அழைத்து வரச் சொன்னார் ஸ்வாமிகள். ஓடி வந்தான். மண்ணில் விழுந்து நமஸ்கரித்து எழுந்தான். அவனைப் பார்த்து வாஞ்சையோடு சிரித்த பரப்பிரம்மம்.


‘‘புரந்தரகேசவலு! ஒனக்கு இருக்கற பக்தி, சிரத்தை, ஞானத்துக்கு நீ க்ஷேமமா இருக்கணும். அது சரி... நா பொறப்படற அன்னிக்கு இன்னொரு ஆசைய சொல்றேன்’னு சொன்னயே! அது என்னப்பா?’’

புரந்தரகேசவலு சொன்னான்: ‘‘எங்கப்பாவோட மாடு மேய்க்கிற நேரத்ல அவுரு சொல்வாரு சாமி... ‘புரந்தரா. கடவுள்ட்ட நாம என்ன வேண்டணும் தெரியுமா? கடவுளே, எனக்கு மறு பொறவி (பிறவி) வாணாம். நா மோச்சத்துக்கு போவணும். நீ கருண பண்ணுனு ம் வேண்டிக்கணும். அதுக்கு நாம சத்தியம் தர்மத்தோடு வாழணும். நீ மகானுங்க யாரையாச்சும் எப்பனா சந்திச்சின்னா, அவங்க கிட்ட மோட்சத்த வாங்கிக் குடுங்கனு வேண்டிக்க’... அப்டீனு சொல்வாருங்க சாமி. எனக்கு அந்த மோட் சத்தை நீங்க வாங்கிக் கொடுக்கணும் சாமி!’’

பன்னிரண்டு வயதுச் சிறுவனின் நாவிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியப்பட்டது அந்த பரப்பிரம்மம். பிறகு சிரித்தபடி, ‘‘கவலைப்படாதே. உரிய காலத்லே ஒனக்கு பகவான் அந்த மோக்ஷ பிராப்தியை அநுக்கிரகம் பண்ணுவார்!’’ என்று ஆசீர்வதித்துவிட்டு, அந்த ஊர் ஜமீன்தாரைக் கூப்பிட்டு, ‘‘இந்த புரந்தரகேசவலுவைப் பற்றிய விஷயம் எதுவாக இருந்தாலும் அதை ஸ்ரீமடத்துக்கு உடனே தெரிவிக்க வேண்டும்’’ என்று கூறிவிட்டுக் கிளம்பினார். அனைவரும் ஊர் எல்லை வரை வந்து ஸ்வாமிகளை வழியனுப்பி வைத்தனர்.


பல வருஷங்களுக்குப் பிறகு. ஒரு நாள் மத்யானம் இரண்டு மணி இருக்கும். ஸ்ரீ காஞ்சி மடத்தில் பக்தர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்த ஆச்சார்யாள் திடீரென்று எழுந்து மடத்தை விட்டு வெளியே வந்து வேகமாக நடந்தார். அனைவரும் பின்தொடர்ந்தனர். ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் புஷ்கரணிக்கு வந்தவர், ஸ்நானம் பண்ணினார். பிறகு, ஜலத்தில் நின்றபடியே கண் மூடி ஏதோ ஜபிக்க ஆரம்பித்தார். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை ஸ்நானம் பண்ணி ஜபம். இப்படி மாலை ஆறு மணி வரை ஏழெட்டு தடவை பண்ணினார்.

ஸ்வாமிகள் கரையேறி படிக்கட்டில் அமர்வதற்குள் மடத்தைச் சேர்ந்த ஒருவர் வேகமாக ஓடி வந்து நின்றார். ‘என்ன?’ என்பது போல அவரைப் பார்த்தார் ஆச்சார்யாள். உடனே அவர், ‘‘கர்னூல்லேருந்து ஒரு தந்தி. ‘புரந்தரகேசவலு சீரியஸ்’னு இருக்கு! யார்னு தெரியல பெரியவா’’ என்றார்.

ஸ்வாமிகள் அங்கிருந்தவர்களிடம், ‘‘அந்தப் புரந்தர கேசவலு இப்போ இல்லை! சித்த முன்னாடிதான் காலகதி அடஞ்சுட்டான். நா அவா ஊர்ல போய்த் தங்கியிருந்து கிளம்பற அன்னிக்கு, ‘எனக்கு நீங்க மோட்சம் வாங்கிக் கொடுக்கμம்’னு கேட்டான். ‘சந்திரமௌலீஸ்வர ஸ்வாமி கிருபைல ஒனக்கு அது கெடைக்கும்’னேன். திடீர்னு அவனுக்கு ஏதோ விஷக் காச்சல் ஏற்பட்டுருக்கு. மோட்சத்தயே நெனச்சுண்டு அவதிப்பட்ருக்கான். கிரமமா அவன் மோட்சத்துக்குப் போய்ச் சேரணும்னா இன்னும் ஆறு ஜன்மா (பிறவி) எடுத்தாகணும். 

எப்படியாவது அவன் மோட்சத்தை அடையணும்கிறதுக்காகத்தான் ஜபம் பண்ணி பிரார்த்திச்சேன். புரந்தரகேசவலு ஒரு நல்ல ஆத்மா!’’ என்று சொல்லிவிட்டு, விடுவிடுவென்று ஸ்ரீ மடம் நோக்கி நடக்க ஆரம்பித்தார் மஹா ஸ்வாமிகள்!  குளத்தின் படிக்கட்டில் நின்றிருந்த மடத்து ஆசாமிகள் பிரமித்துப் போயிருந்தனர்!


நன்றி:  அமரர் ஸ்ரீ ரா.கணபதி அவர்களின் தெய்வத்தின் குரல் தொகுப்பு.

No comments:

Post a Comment