அது 1988ஆம் வருடம். தொழிலை அபிவிருத்தி செய்ய வங்கியில் இருந்து கடன் கேட்டிருந்தோம். கொஞ்சம் உதாசீனமாகப் பதில் கிடைத்தது. இதை தந்தையிடம் சொல்லவேயில்லை.
திடீரென்று அப்பா, அம்மா இருவரும் காஞ்சிபுரம் போகலாம் என்று அழைத்த உடன் கிளம்பினேன். பெரியவாளைத் தரிசனம் செய்ய, 300க்கும் அதிகமானோர் நின்றிருக்க, நாங்கள் கடைசியில் நின்றிருந்தோம்.
திடீரெனப் பெரியவா வழிவிடச் சொல்லி கூட்டத்தை சைகை செய்தார். வழி கிடைத்தவுடன் கடைசியில் நின்றிருந்த எங்களை அருகில் வரும்படி அழைத்தார். மெய் பதற அவர் முன் சென்று நின்றோம்.
“என்ன வேண்டும்?” என்று இரண்டு முறை கேட்டார்.
நாங்கள், “எதுவும் வேண்டாம்” என்று, பவ்யமாகத் தலை அசைத்தோம்.
மூன்றாவது முறை கோபமாகக் கேட்டார்.
உடனே “பிரசாதம் வேண்டும்” எனக் கூறினோம்.
உடனே, தனது திருவடிகளில் அணிந்திருந்த பாதுகைகளை எடுத்து, தாமரை மலரை அதன் மேல் வைத்து எங்களிடம் கொடுத்தார்.