1951 ஆகஸ்ட் 28, காயத்ரி ஜபம். மரகதம்மா அன்று சமையலை தான் கவனித்துக் கொள்வதாகக் கூறி சமையல் செய்பவரை வீட்டில் உள்ள மற்ற ஆண்களுடன் காயத்ரி ஜபம் செய்ய அனுப்பினார். நைஷ்டிக பிரம்மசாரியான அவர் காபி போடுவதற்காக ஒரு பெரிய பாத்திரம் நிறைய தண்ணீரை அடுப்பில் வைத்துவிட்டு மாடிக்கு சென்றுவிட்டார். கொல்லைப்புறத்தில் உள்ள பூஜையறை முற்றத்தில் கோலம் போடுவதற்காக மரகதம்மா சென்றார். அங்கேதான் அனைவரும் அமர்ந்து பஜனை செய்வது வழக்கம். அங்கு இரு மரங்களுக்கிடையே ஒரு மேடை இருந்தது. முற்றத்தின் கதவை திறந்ததும் கண்ட காட்சியானது அவரை சிலையாக்கியது. தன் கண்களையே அவரால் நம்பமுடியவில்லை. அங்கே மேடையில் தண்டபாணியின் கையை பிடித்துக்கொண்டு சாக்ஷாத் ஸ்ரீ ரமண பகவானே தான் எப்போதும் அமர்ந்திருப்பதுபோல் சாய்ந்து உட்கார்ந்திருந்தார்.
"என்னை பேய் என்றெண்ணி பயந்துவிட்டாயோ?.. அருகே வா, சென்ற முறை என்னை சந்திக்க வந்தபோது நீ பேச விரும்பியதை இப்போது தடையின்றி பேசலாம்..வந்து தண்டபாணியின் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொள்" என அழைத்தார்.
மரகதம்மாவும் பகவானை நமஸ்கரித்து அமர்ந்தார். பல தத்துவங்களை விளக்கிய பின் அவருக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்தார். பெண்ணாகிய தான் அவ்வுயரிய மந்திரத்தை உச்சரிக்கத் தயங்கினார். ஆயினும் பகவான் தன் கூடவே அம்மந்திரத்தை சொல்லவைத்தார். பெரும்பான்மையான உபதேசங்கள் பகவான் கண்கள் மூலமே செய்யப்பட்டன.
மறுபடியும் பகவானை நமஸ்கரித்து அவர் கால்களை தொட முயன்றார், ஆனால் இயலவில்லை. பகவான் சிரித்து, "உன் ஸ்தூல உடம்பால் இந்த சூக்ஷ்ம உடலை உணர முடியாது" என்றார். தன் தலை மீது கைவைத்து ஆசீர்வாதம் செய்ததை அவரால் உணரமுடிந்தது. தான் விரும்பினால் தொட முடியும் என்று உணர்த்தினார்.
இந்த காட்சி மறைந்தது. தான் எத்தனை நேரம் அவ்வுயரிய உணர்வில் இருந்தோம் என்று தெரியவில்லை. நமஸ்கரித்த நிலையிலேயே சமாதி நிலைக்கு சென்றுவிட்டார். அன்று வெள்ளிக்கிழமை. கணவரும் பிள்ளைகளும் அவரை சமையலறையிலும் பூஜையறையிலும் தேடி கடைசியில் முற்றத்தில் பஜனை மேடையருகே மயங்கிய நிலையில் கண்டனர். வீட்டுக்குள் எடுத்துச்சென்று ஊசி போட்டு மருத்துவம் செய்தும் பலனில்லை. அடுத்த இரண்டு நாட்களுக்கு அதே நிலையில் இருந்தார்.
ஞாயிறு காலை பத்து மணிக்கு வழக்கம் போல பஜனை குழுவினர் வந்தனர். திருப்புகழ் மணி அம்மா எங்கே என்று கேட்டு மற்றும் சிலருடன் சென்று அவரை சமாதி நிலையில் கண்டு அருணகிரிநாதரின் கந்தரநுபூதியை உரத்த குரலில் ஆரோஹரா கோஷத்துடன் பாராயணம் செய்தனர். அம்மா மெல்ல கண் விழித்து மற்றோர் உதவியுடன் எழுந்து உட்கார்ந்தார். மணி குங்குமம் இட்டு அவர்தம் சமாதி அனுபவம் என்ன என்று கேட்டார்.
மரகதம்மாவிடமிருந்து ஒரு பாடல் வெடித்துக் கிளம்பியது. அதில், தான் ஆறு படிகள் ஏறி அண்ணாமலை ஜோதியை பார்த்ததாகச் சொன்னார். மேலும் சென்றபோது அங்கு ஒன்றுமில்லை எனவும் தான் அதில் கலந்துவிட்டதாகவும் கூறினார். அதுபற்றி மேலும் கேட்டபோது அவரால் பேச முடியாது மீண்டும் சமாதி நிலைக்கு சென்றுவிட்டார். பிற்காலத்தில் பகவான் ரமணரின் அருளினால் ஆறு நிலைகள் குறித்து விரிவாக 'சஷ்டிமாலை' எனும் பாடல் தொகுப்பை பாடியருளினார்.
திருப்புகழ் மணி அவர்கள்தான் அம்மாவின் பாடல்களை முதலில் பதிப்பித்தவர். அவர்தம் குரு பின்னவாசல் ஸ்வாமி சமாதி ஆவதற்கு முன் நான் எந்த வடிவிலேனும் உனக்கு காட்சி கொடுப்பேன்" என்று கூறியிருந்தார்.
மரகதம்மா முதன் முதலில் ஒரு சிவராத்திரியன்று மணி அவர்களை சந்திக்கச் சென்றபோது, தான் வேலையாக இருப்பதாகவும் மறுநாள் வந்து பார்க்கவும் சொன்னார். அன்று இரவு கனவில் குரு தோன்றி கடிந்துகொண்டார். "நான் எந்த வடிவில் வந்தாலும் என்னை தெரிந்துகொள்வேன் என்று சொன்னாயே, இன்று காலை உன்னிடம் வந்தபோது தெரிந்துகொள்ளாது வேலையாக இருப்பதை சொல்லி அனுப்பிவிட்டாயே" என்று கூறினார்.
முன்பு ஸ்ரீ சைலம் சென்றபோது மரகதம்மாவுக்கு 'ஷடாக்ஷரி' மந்திர உபதேசம் செய்திருந்தார் மணி. அதனால் மணியை தன குருவாக ஏற்றுக்கொண்டார். அது இப்போது ஞாபகம் உள்ளதா என கேட்டபோது, தான் ஸ்ரீ சைலம் சென்றதில்லையே என்று கூறினார். முருகனே வந்து மணி அவர்களின் ரூபத்தில் தனக்கு உபதேசம் செய்ததை மரகதம்மா உணர்ந்துகொண்டார். ஆனால் தனது குரு மரகதம்மாவின் வடிவில் வந்ததால் அவரை தன் குருவாகக் கொள்வதாக மணி கூறினார். ஒருவக்கொருவர் குருவாகக் கொண்ட விசித்திரமான நிலை இது.
1950களின் ஆரம்பத்தில் மரகதம்மா பஜனை குழுக்களால் கொண்டாடப்பட்ட பிரபலமாக இருந்தார். அவர் இயற்றிய 'உள்ளம் உருகுதையா' என்ற பாடலை டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் இசையமைத்து பாடி வெளியிட்டதும் இசைத்தட்டுகள் அமோகமாக விற்றுத் தீர்ந்தன. அவர் வீட்டில் ரசிகர்கள் எப்போதும் குவிந்ததால், மரகதவல்லியின் கணவர் தான் அந்த பரபரப்பு இல்லாமல் இருக்க அவரை பிள்ளைகளுடன் தாற்காலிகமாக புது தில்லியில் வசித்து வரச்சொன்னார்.
1954ல் ரிஷிகேஷ் சென்று ஸ்வாமி சிவானந்தாவை சந்தித்தபோது மரகதம்மாவின் உள்ளே இருந்த யோகி ராமகிருஷ்ணா, தான் சமாதியாவதற்கு முன் தவறவிட்ட சந்நியாசத்தை இப்போது கோரினார். கொண்ட கொள்கையில் விடாது நிற்கும் சீடனைக் கண்டு ஸ்வாமி மகிழ்ந்தார். அவ்வாறே அவருக்கு 1954ல் சந்நியாசம் வழங்கப்பட்டது. ஸ்வாமி தனது அங்கியையும் பாதுகையையும் மரகதம்மாவுக்கு வழங்கி கௌரவித்தார். சந்நியாசினியாகவே தம் குடும்பத்துடன் வாழவும் அனுமதித்து அவரை சென்னை அனுப்பினார். இருப்பினும் அவர் கணவருக்கு இதில் சம்மதமிருக்கவில்லை.
யோகி ராமகிருஷ்ணா தனது மனைவியின் சாபத்தினால் ஒரு பெண்ணின் உடலில் (மரகதம்மா) புகுந்து வாழ்வதை ஸ்வாமி சிவானந்தா ஏற்று சந்நியாசமும் அளித்துள்ளார். இதை ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகளும் ஏற்றார் என்பதற்கு மரகதம்மா சந்நியாசம் பெற்றும் தனது குடும்பத்துடன் வசிக்க அனுமதித்தார் என்பது உறுதிசெய்கின்றது. தனது திருவாக்கால் "ஆண்டவன் பிச்சி" என பெயரிட்டார். ஓருடலில் வசித்த இரு யோகிகளின் ஜீவன்கள் பற்றி அவர் பெரும் மதிப்பு வைத்திருந்தார். இதற்கு முன் ஓருடலில் வாழ்ந்தவர்கள் ராஜா விக்ரமாதித்யர், திருமூலர், ஆதி சங்கரர் மற்றும் அருணகிரிநாதர் ஆவர் என கூறியுள்ளார்.
மரகதம்மா மறுபடியும் ரிஷிகேஷ் சென்று பல ஆண்டுகள் வாழ்ந்தார். தனது 89ம் வயதில் கடுமையாக நோய்வாய்பட்டு சென்னை வந்தார். தனது குடும்ப வீட்டில் 1990 நவம்பர் மாதம் இறைவனடி சேர்ந்தார்.
1983ல் தன் சுயசரிதையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்...
"முருகன் என் மனதில் நிரந்தரமாக குடிகொண்டு நினைவிலும் கனவிலும் தன்னை உணரவைத்தான். 1908ம் வருடம் என்னுள் நுழைந்தது முதல் கண்ணை இமை காப்பதுபோல என்னைக் காக்கின்றான். எல்லாவற்றிலும் வியாபித்து அனைத்து உறவாகவும் இருக்கின்றான். அனைத்து உயிரிலும் தன்னை வெளிப்படுத்தி நேசிக்கச் செய்தான். ஒரே சூரியன் கடலில் பலவாக பிரதிபலிப்பதைப் போல ஒரு பரமாத்மா பல ஜீவாத்மாக்களாக பரிமளிப்பதை உணர்ந்தேன். அமைதியான கடலில் சந்திர பிம்பம் பிரதிபலிப்பதைப் போல எனது மனம் அமைதியாக இறைவனை பிரதிபலிக்கிறது.
அவனே எல்லாவற்றுக்கும் ஆதாரமான ஓம் எனும் பிரணவம். அவனே தடைகளை நீக்கும் கணேசன். அவனே பல தெய்வங்களாக அருள்கிறான். அவனே மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரம் வரை குண்டலினி சக்தியாக எழுகிறான். முருகனே என்னை ஆட்கொண்டு என் வாழ்வை முழுமையாக காத்து வந்துள்ளான். மீதமுள்ள சிறிது காலமும் என்னை அமைதியாக அவன் திருவடிகளில் ஒருமையாக வைத்திருக்கவேண்டும். நான் பணிவோடும் அன்போடும் அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும்
முக்காலமாகவும் உள்ளவன் அழியக்கூடிய உடம்பினில் குடியிருந்து அவற்றை தன் தாளத்திற்கு ஆட வைக்கிறான். அவனே நடனமாடுபவன். இந்த பிரபஞ்சத்தையும் அணுவையும் நிறைக்கிறான். அவனே இந்த உடம்பைக்கொண்டு இக்கதையை வெளிக்கொணர்கிறான். இல்லையெனில் எப்படி எதையும் செய்ய இயலும்?"
(ஸ்ரீ ஆண்டவன் பிச்சி அவர்களின் முக்கிய வாழ்க்கைக் குறிப்புகள் கீழ்கண்ட வலை தளத்திலிருந்து (ஆங்கில மூலம்) இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது).
This post has come from a book entitled The Gift of God or Andavan Pichhai by Smt and Dr Krishna Rao. It was published by the Divine Life Society, Sivanandanagar, Uttar Pradesh, in 1983.
Source (English): http://sri-ramana-maharshi.blogspot.in/2008/06/andavan-pichhai_09.html
No comments:
Post a Comment