வாழ்வில் நல்ல திருப்பத்தைத் தரும் திருத்தலம், பணம் நிரம்பி வழியும் உண்டி, அற்புத ருசி தரும் லட்டு, லட்சக்கணக்கான மொட்டைத் தலைகள், கோவிந்தா என்று உருகும் கோஷம், ஜருகண்டி என்று தேசியமயமாகிவிட்ட வார்த்தை!
நமக்கெல்லாம் இப்படித் தெரிந்த திருப்பதியைவிட அந்த ஸ்தலத்தின் பிரமாண்டத்தை வெகு சிறப்பாக வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஒரே ஒரு குண்டையும் வீசியிருக்கிறார். திருப்பதி கருவறையில் இருப்பது பாலாஜி அதாவது மகாவிஷ்ணு அல்ல என்று, 13 வருடங்கள் திருப்பதியில் கோயிலுக்குப் பக்கத்திலேயே வசித்த இந்தப் புத்தக ஆசிரியரின் வயது 85.. கர்ப்பக்கிரகத்தின் மிக அருகாமையில் உள்ள புனிதமான குலசேகரப் படிக்கட்டிலிருந்து 1945-களில் அபிஷேகத்தைப் பார்த்தவர்.
என்ன சொல்ல வருகிறார்? புத்தகத்தின் சாராம்சத்தை கீழே படியுங்கள் பிறகு நேரில் அவரை கண்டு எடுத்த பேட்டியைப் படிக்கலாம்.
திருப்பதி திருமலையில் இருக்கும் தெய்வத்துக்குப் பெயர் இல்லை. திருவேங்கடமுடையான் என்பது காரணப் பெயர். திருவேங்கடத்துக்குச் சொந்தக்காரர்; அதன் உரிமையாளர். திருவேங்கடமுடையான் என்ற பெயரை வடமொழியில் சொல்வதானால், வேங்கடேஸ்வரர் என்று சொல்லலாம். அதாவது, வேங்கடத்துக்கு உரிமையாளர் ஈஸ்வரர்.
கபாலீஸ்வரரை, மயிலாப்பூர்க்காரர் என்று எவரும் சொல்வதில்லை. மதுரையில் இருக்கும் கடவுளை மதுரைக்காரர் என்று சொல்வதில்லை. மன்னார்குடியில் இருக்கும் பெருமாளை ராஜகோபால ஸ்வாமி என்றுதான் சொல்கிறோம். மன்னார்குடிக்காரர் என்று சொல்வதில்லை. தில்லையில் இருக்கும் கடவுளை நடராஜர் என்றுதான் சொல்கிறோம். சிதம்பரத்துக்காரர் என்று சொல்வதில்லை. பின் ஏன் இவரை மட்டுமே திருவேங்கடமுடையான் என்று காரணப்பெயரால் சொல்கிறோம். அவருக்கென்று பெயர் இல்லையா?
நம் முன்னோர்களான வேதகால ரிஷிகளும், தமிழ்நாட்டுச் சித்தர்கள், அகஸ்தியர் போன்றவர்களும் இவர் யார், சிவனா, விஷ்ணுவா, சக்தியா, முருகக் கடவுளா என்று தெரியாமல் வியந்திருக்கிறார்கள்.
தாளப்பாக்கம் அன்னமய்யா, இவர் பேரில் 32,000 பாடல்களைப் பாடினார். அப்பேர்ப்பட்ட அவருக்கே திருவேங்கடமுடையான் யார் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
எச்.எம்-.வி. கேசட் நிறுவனத்தார் 'பாலாஜி பஞ்சரத்னம்' என்ற கேஸட் வெளியிட்டார்கள் முதன்முதலாக எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் தாளப்பாக்கம் அன்னமய்யா பாடல்களை அதில் பாடினார்கள். அதில் ஒன்றான 'எந்த மாத்ரமு' பாடலின் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
எந்த அளவுக்கு யார் உன்னை நினைத்தால் அந்த அளவுக்கு மட்டும்தான் நீ
உள்ளுக்குள்ளே எண்ணிப் பார்த்தால் மாவுக்குத் தகுந்த அப்பளம் இருக்கும்!
வைஷ்ணவர்கள் உன்னை அன்புடன் விஷ்ணுவாக நினைப்பார்கள்;
வேதாந்திகள் உன்னைப் பரப்பிரம்மமாகச் சொல்லுவார்கள்;
சைவர்கள் சிவனென்று நினைப்பர்,
ஆதி பைரவர் என்று காபாலிகர்கள் அடித்துச் சொல்வார்கள்;
சாக்தர்கள் நீ சக்தி ரூபம் என்று நினைப்பார்கள்
தர்சனமார்க்கத்தில் வந்தவர்கள் அவர்கள் எண்ணப்படி துதிப்பார்கள்
இதே மாதிரிதான் திருவையாறு தியாகய்யர், பூர்விகல்யாணி ராகத்தில் 'நீ யார்? சிவனா, விஷ்ணுவா, சக்தியா – யாரென்று தெரியவில்லையே' என்று திருவேங்கடமுடையானைத் தரிசனம் செய்தபிறகு பாடி இருக்கிறார். ஆகவே மற்ற தெய்வங்கள் மாதிரி இவருக்குத் தனிப்பெயர் கிடையாது.
திருமலைக் கோயிலில் இருப்பது திருவேங்கடமுடையான் சிலை. இந்தச் சிலை விஷ்ணு சிலை இல்லை. அதனால் திருப்பதியிலிருக்கும் கடவுளை சீனிவாசன் என்று அழைப்பது சரியில்லை. ஆகவே சீனிவாசன் என்ற பெயர் ஏழுலையானுக்குப் பொருந்தாது.
திருவேங்கடமுடையான் விக்ரகத்தில் விஷ்ணு அம்சம் 30 சதம்தான். மீதமுள்ள 70 சதவிகிதம் சிவாம்சமும், அம்பாள் அம்சமும் ஆகும். உலகத்திலேயே ஏழுமலையான் சிலையில்தான் யோக, போக முத்திரைகள் இருக்கின்றன. இவை ஸ்ரீ அலர்மேல் மங்கையின் அம்சங்கள். மற்ற ஊர்களில் இருக்கும் சீனிவாசன் சிலைகளில் கிடையாது. ஸ்ரீ அலர்மேல் மங்கையும் ஏழுமலையானும் சேர்ந்து ஒன்றாக திருவேங்கடமுடையான் சிலையில் இருக்கிறார்கள்.
500 வருஷமாக, திருவேங்கடமுடையான், விஷ்ணுதான் என்று சொல்லப்பட்டு, இப்போது நம்பப்படுகிறது.
ஸ்ரீ சிவாய சுப்ரமண்ய ஸ்வாமிஜி அமெரிக்கர்; வெள்ளைக்காரர். இந்து மதத்திற்கு விரும்பி மதம் மாறியவர். இவருக்கு அமெரிக்காவில் பல இடங்களில் ஆசிரமங்கள் இருக்கின்றன. பல செல்வாக்கான அமெரிக்கர்கள் இவரின் சிஷ்யர்கள். இவர் சில வருஷங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தார். இவருடன் ஒரு பிரபல கனடா நாட்டுக் கணிப்பொறி நிபுணரும் வந்திருந்தார். இவர்கள் திருப்பதி, இராமேஸ்வரம் கோயில்களுக்குச் சென்று வந்தார்கள். அதன்பின் இவர்கள் சென்னையில் ஒரு கருத்தரங்கு நடத்தினார்கள். இந்தக் கருத்தரங்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல சிற்ப சாஸ்திர அறிஞர்களான – கணபதி ஸ்தபதி, முத்தையா ஸ்தபதி போன்றோர் கலந்துகொண்டார்கள். இந்தக் கருத்தரங்கின் முடிவுகளை ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிட்டிருக்கிறார்கள். அதில் கணிப்பொறி உதவியுடன் கிராஃபிக்ஸ் போடப்பட்டு விஷ்ணு மூர்த்தத்திற்கு எத்தனை விதமான தோற்றங்கள் ஏற்படுத்தமுடியும் என்பது ஆராயப்பட்டது. 24 வகைத் தோற்றங்கள் விஷ்ணு மூர்த்தத்திற்கு செய்யமுடியும் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த 24 வகைத் தோற்றத்தில் திருவேங்கடமுடையான் திருமேனி வரவில்லை.
இவரது சிலையில் எல்லா தெய்வங்களின் அம்சங்களும் உள்ளன. இவரது தலைப்பகுதி (சிரஸ்) சிவபெருமானுடைய அம்சங்களோடு இருக்கிறது. அலைஅலையாய் புரளும் சடை, இரண்டு கைகளிலும் நாகாபரணங்கள், பக்கவாட்டில் செருகிய காதுகள், காதில் காதணிகள் – அதாவது தோடுடைய செவியன் என்பது பொருந்தும். அதேபோல் இடுப்பு வரை செல்லும் சடைமுடி – இவை எல்லாம் அந்தத் திருமேனியில் இருக்கின்றன. தேவாரத்தில் சிவபெருமானுடைய தோற்றத்தைப் பற்றிக் குறிப்புகள் வருகின்றன. அவையாவும் அப்படியே இச்சிலைக்குப் பொருந்தி இருக்கின்றன.
ஆழ்வார்களும், திருவேங்கடமுடையானிடம் காணப்படும் சிவாம்சத்தை விவரித்துள்ளனர்.
பேயாழ்வார்-
தாழ்சடையும் நீண்முடியு மொண் மழுவுஞ் சக்கரமும்
சூழரவும் பொன்னாணுந் தோன்றுமால் – சூழும்
திரண்டருவி பாயுந் திருமலைமே வெந்தைக்கு
இரண்டுருவு மொன்றா யிசைந்து
என்றும்,
பூதத்தாழ்வார்-
பொன் திகழுமேனிப் புரிசடையம் புண்ணியனும்
நின்றுலகளந் தாய நெடுமாலும் – என்றும்
இருவரங்கத் தாற்றிவ ரேனும் – ஒருவன்
ஒருவனங்கத் தென்று முளன்
என்றும் பாடியுள்ளனர்.
பேயாழ்வார், பூதத்தாழ்வார் போன்றவர்கள் தாங்கள் எப்படி திருவேங்கடமுடையானைத் தரிசித்தார்களோ, அப்படியே உள்ளது உள்ளபடி பாடினார்கள். திருவேங்கடமுடையானிடம் சிவாம்சம் உண்டு என்று உறுதி செய்தனர்.
திருவேங்கடமுடையான் திருமேனியில் சங்கு – சக்கரம் கிடையாது. அவை செயற்கை. அதாவது உலோகத்தில் செய்து, விக்ரகத்தில் பொருத்தியிருக்கிறார்கள். அதாவது திருவேங்கடமுடையானுக்கு நாமமும் செயற்கை; சங்கு சக்கரமும் செயற்கை. இந்த ரகசியம் வெளியில் கசியாமல் 500 வருடங்களாக பாதுகாக்கப்படுகிறது.
திருவேங்கடமுடையான் ஆஜானுபாகுவாக இருக்கிறார். அவருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறு விக்ரகம் தேவைப்பட்டது. ஆகவே, மூலவர் திருமேனிபோல் ஒரு சிறு விக்ரகம் கி.பி.966ஆம் ஆண்டில் வெள்ளியில் செய்யப்பட்டது. இந்தச் சிறு விக்ரகத்திற்கு, பல்லவக் குறுநில மன்னன் சக்தி விடங்கனின் அரசி காடவன் பெருந்தேவி சில நகைகளையும் தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தாள். ஜூன் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை கி.பி.966-ல் இது நடந்தது. இந்தச் செய்தி 8.6.966 கல்வெட்டில் விவரமாக இருக்கிறது. இந்தக் கல்வெட்டு திருமலைக் கோயிலில் வடக்குப் பிராகாரத்தில் தமிழ் எழுத்தில் 16 வரிகளில் இருக்கிறது. 10 விதமான நகைகள், திருமுடி, 23 வைரங்கள், 16 முத்துக்கள் கொண்ட தோடுகள், அட்டிகை, ஒட்டியாணம், 4 வளையம், காரை முதலிய நகைகள், மொத்த எடை 47 கழஞ்சு பொன். இந்தச் சிறு திருவேங்கடமுடையானுக்கும் சங்கு – சக்கரம் கிடையாது. மூலவரின் அமைப்பிலேயே வார்க்கப்பட்டதனால் சங்கு சக்கரம் கிடையாது.
விஷ்ணு அம்சம் திருவேங்கடமுடையானிடம் இருக்கிறது. ஆனால் இது முழு விஷ்ணு கோயில் இல்லை. விஷ்ணு கோயில்களில், மகாலஷ்மி சந்நிதி இருக்கும். இங்கு இல்லை. சுதர்சன ஆழ்வாருக்கு மற்ற கோயில்களில் சந்நிதி இருக்கும்; இங்கு இல்லை. மற்ற கோயில்களில் ஆழ்வார்களுக்குச் சந்நிதி இருக்கும். இங்கே இல்லை. கருடாழ்வார் சந்நிதியே 1512-ல்தான் கட்டப்பட்டது. அனுமன் சிலை 1860-ல் வைக்கப்பட்டது. மற்ற விஷ்ணு கோயில்களில், ஒன்று தென்கலை நாமம் போடப்பட்டிருக்கும். அல்லது வடகலை நாமம் போடப்பட்டிருக்கும், ஆனால் இங்கு உள்ள நாமம் வடகலையும் இல்லை; தென் கலையும் இல்லை, நாமமே இல்லாத திருவேங்கடமுடையானின் ஓவியங்கள், (300 வருஷம் பழமையானவை). இப்போது இருக்கின்றன. மற்ற விஷ்ணு கோயில்களில், ஒன்று பாஞ்சராத்ர பூஜை முறையோ வைகானச மார்க்க முறையோ பின்பற்றப்படும். இங்கே பஞ்சராத்ரமும் இல்லை; வைகானசமும் இல்லை. இதை நான் சொல்லவில்லை. கோயில் பிரதான அர்ச்சகரே இதுபற்றிப் புத்தகம் வெளியிட்டிருக்கிறார். 108 விஷ்ணு ஸ்தலங்கள், அதன் முக்கியத்துவத் தகுதியின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் திருமலைக்கு முதலில் இடம் இல்லை. ஆகவே இது முழு விஷ்ணு கோயில் இல்லை.
சிவன், விஷ்ணு அம்சங்கள் தவிர, திருவேங்கடமுடையானின் திருமேனியில் அம்பாள் அம்சங்களும் உள்ளன. சிம்ம வலாடம், யோக முத்திரை, போக முத்திரை, வரத முத்திரை, கட்டிய விலம்பித முத்திரைகள், பாதத்தில் மெட்டி, கொலு-சு, தண்டை ஆகியவையெல்லாம் இருக்கின்றன. இவை யாவும் ஸ்ரீ அலர்மேல் மங்கையின் அடையாளங்கள். கட்டிய விலம்பித ஹஸ்தம் அம்பாளுக்கே உரியது. விஷ்ணுவு-க்கு கிடையாது. காஞ்சி காமாட்சி, திருவிடை மருதூர் மூகாம்பிகை, கன்னியாகுமரி பகவதி அம்மன், திருவையாறு தர்மசம்வர்தினி, மயிலாடுதுறை மூகாம்பிகை ஆகிய தெய்வச் சிலைகளில் கட்டிய விலம்பித ஹஸ்த முத்திரையைக் காணலாம். கேரளாவின், பாரதபுழா ஆற்றின் கரையில் உள்ள பகவதி அம்மன் சிலை அப்படியே திருவேங்கடமுடையான் மாதிரி தோற்றமளிக்கிறது.
திருவேங்கடமுடையானின் திருமேனியிலுள்ள இந்தப் பெண் அம்சங்களை யாரும் மறுக்க முடியாது. மறைக்க முடியாது. நம் கண்களால் பார்க்கலாம். தவிர சில பூஜைகளும் அம்பாள் கோயில் பூஜை முறைகளை ஒத்திருக்கிறது. திருவேங்கடமுடையானுக்கு வெள்ளிக்கிழமை அபிஷேகம். வஸ்திரம் 21 முழம் புடவை, மஞ்சள் அபிஷேகம், நவராத்திரியில் பிரும்மோற்சவம் முதலியன நடத்தப்படுகின்றன. பிரதி வெள்ளிக்கிழமைகளில் வில்வம் அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்பட்டது. இப்போது மார்கழி மாத அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. வில்வம் சிவனுக்கு உரியது.
சிவராத்திரியன்று, ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவருக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சார்த்தப்பட்டு வீதியுலா நடைபெறுகிறது.
எல்லா விஷ்ணு கோயில்களிலும், விஷ்ணு சகஸ்ரநாமம்தான் அர்ச்சனையின்போது சொல்லப்படுகிறது. ஆனால் திருமலைக் கோயிலில் அப்படியில்லை. வேங்கடேச சகஸ்ரநாமம்தான் சொல்லப்படுகிறது. வேங்கடேச சகஸ்ரநாமத்தில் முதல் வார்த்தை வேங்கடேசாய நம: அடுத்த வார்த்தை விரூபாக்ஷாய நம: விரூபாக்ஷன் என்பது சிவனின் பெயர். சோழப் பேரரசு உள்ளவரை, திருவேங்கடமுடையானுக்கு நெற்றியில் நாமம் இல்லை. சங்கு சக்கரம் கிடையாது.
அதே மாதிரி வெறுங்கை வேடன் என்பது திருவேங்கடமுடையானின் பவித்ரமான பழைய பெயர். வேடன் என்பவன் உயிர்களைப் பறிப்பவன், அதாவது சம்காரத் தொழில் செய்பவர் சிவன், திருவேங்கடமுடையான் உயிர்களைப் பறித்து, ஆன்மாக்களுக்கு மோட்சம் கொடுக்கிறார்.
எந்த ஓர் இந்துக் கடவுளுக்கும் கையில் ஏதாவது ஓர் ஆயுதம் சிலையில் வடிக்கப் பெற்றிருக்கும்.எந்த சாத்வீக சாந்தமான தெய்வத்தின் சிலையிலும் ஓர் அயுதம் இருக்கும். ஆனால் திருவேங்கடமுடையானின் சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. நிராயுதபாணி. ஆகவே திருவேங்கடமுடையானுக்குப் பழைய தமிழ் இலக்கியத்தில் வெறுங்கை வேடன் என்று பெயர்.
முடியிறக்குதல் ஒரு முக்கியமான நேர்த்திக் கடன். முடியிறக்குதல் பிரபல முருகன் கோயில்களாகிய திருப்பரங்குன்றம், பழனி போன்ற கோயில்களில்தான் உண்டு. விஷ்ணு கோயில்களில் இல்லை.
ஆகவே திருவேங்கடமுடையான் தன்னிடத்தே சிவன், விஷ்ணு, அம்பாள், முருகன் அம்சங்களைக் கொண்டிருக்கிறார்.
1801-ம் வருஷம் திருமலைக்கோயிலை ஆங்கிலேயர்கள் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டனர். அப்போது திருப்பதி, செங்கல்பட்டு கலெக்டர் பொறுப்பில் இருந்தது. அதன், முதல் கலெக்டர் ஜியோ ஸ்ட்ராட்டன், திருமலைக் கோயில் நிர்வாகப் பொறுப்பை ஏற்குமுன் ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து, திருமலைக்கோயில் பற்றிய எல்லா விவரங்களையும் சேகரித்து, ஓர் அறிக்கை தயார் செய்தார். அந்த அறிக்கைக்கு 'சவால்-இ-ஜவாப்' என்று பெயர். இந்த அறிக்கை எல்லா கோர்ட்டுகளிலும் முக்கியமான ஆவணமாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. இந்த விசாரணைக் கமிஷன் முன்பு கோயில் அர்ச்சகர்கள், ஸ்தானட்டாகள், ஜீயர், அய்யங்கார் போன்றோர் ஆஜராகிப் பதில் அளித்தார்கள். கேள்வியும் பதிலும் வருமாறு:
கமிஷன் கேள்வி 18: வேங்கடேச்வரரின் உண்மை ஸ்வரூபம் எது?
பதில்: வேங்கடேச்வரர் மூலப் பரம்பொருள்.
கேள்வி 30: உலகத்தில் எவ்வளவோ கோயில்கள் இருக்கும்போது, ஏன் இந்தக் கோயிலுக்கு மட்டும் பணம் மற்றும் பல காணிக்கைகள் பெரிய அளவில் வருகிறது?
பதில்: ஆதிசங்கரர் இந்தக் கோயிலுக்கு வந்தார். ஒரு யந்திரத்தையும், ஆகர்ஷண சக்கரத்தையும் கடவுளின் பத்ம பீடத்தில் அமைத்தார். அதனால் பணவரவு இருக்கிறது.
இங்கு பாலா ஸ்ரீஅலர்மேல்மங்கை வீற்றிருக்கிறாள், மரியாதை நிமித்தம் பாலாவை பாலாஜி என்று அழைக்கிறோம்.
திருமலைக் கோயிலில் 1180 கல்வெட்டுகள் இருக்கின்றன. இதில் 50 கல்வெட்டுகள்தான் தெலுங்கு, கன்னட மொழியில் இருக்கின்றன. மீதம் 1130 கல்வெட்டுகள் தமிழில்தான் இருக்கின்றன. இவற்றில் ஒரு கல்வெட்டில்கூட ஸ்ரீதேவி, பூதேவி, பத்மாவதி பெயர்கள் இல்லை. ஸ்ரீ அலர்மேல் மங்கையின் பெயர் மட்டுமே உள்ளது. அப்படியானால், கீழ்த் திருப்பதிக்கு ஏழு கிலோ மீட்டர் தொலைவில் திருச்சானூரில் இருக்கும் தெய்வம் யார்? சோழர் காலத்தில் அந்த ஊருக்குச் சுகபுரி அல்லது சிரத்தானூர் என்று பெயர். அங்கே பரமேசுவர விண்ணகரம் என்ற பெயரில் ஒரு விஷ்ணு கோயிலும், ஒரு சிவன் கோயிலும் இருந்தன. இந்தக் கோயில் கி.பி.1310-ல் மாலிக்காபூர் படையெடுப்பின்போது இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அதன் இடிபாடுகள் இன்னமும் இருக்கின்றன. பிறகு அந்தப்பகுதி நெசவாளர்களான, பத்மசாலியர் தங்கள் குலதெய்வமான பத்மாவதி தேவிக்குக் கோயில் கட்டினார்கள். சுமார் 50 வருடங்களுக்கு முன்புவரை இந்த ஊருக்குப் பெயர் திருச்சானூர்தான். அதன்பிறகு அலர்மேல்மங்காபுரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அங்கு இருக்கும் கோயிலில் உள்ள தெய்வம் ஸ்ரீ அலர்மேல் மங்கை இல்லை பத்மாவதி!'
Source: http://balhanuman.wordpress.com via http://www.suriyakathir.com/
No comments:
Post a Comment