உ
திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
பொது மொழி
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
திருநெல்வேலி பேட்டை
(சம்ஸ்கிருதம்)
பரதகண்டம் ஒரு பெரிய நாடு. அது முற்காலத்தில் பல்வேறு
அரசுகளுடையதாயிருந்தது. அவையெல்லாம் ஒழிந்தன. அக்கண்டத்தை ஒரே அரசு
கைக்கொண்டது. அது ஆங்கில அரசு. இப்போதிருப்பதும் அதுவே. அக்கண்டம் பல
மொழிகளையும் உடையது. அவையெல்லாம் பழையன ஆனால் அவை மறையவில்லை. ஒரேமொழி
வழங்கும் நிலைக்கு அக்கண்டம் இன்னும் வந்திலது; இனியும் வராது.
அம்மொழிக்காரருட் சிலரோ பலரோ ஒரே யிடத்திற் கூடுவர். அவ்வின்றியமையாமை
அடிக்கடி நேரும். சுயம்வரமண்டபங்களை யறிக. அவற்றிற் கூடுபவர் தம்முட்பேசி
உறவாடாமலிருக்க முடியாது. அப்பொருட்டு அவர்க்கெல்லாம் ஒரு பொதுமொழி
இருந்தே தீர வேண்டும். அது தான் சம்ஸ்கிருதம். தமயந்தியின்
சுயம்வர்த்தில் வந்த பல்வேறுமொழி மக்களும் அம்மொழியிலேயே பேசிக்கொண்டனர்.
அவ்வுண்மையை ஹர்ஷர் நைஷதத்திலும் அதிவீரராம பாண்டியர் நைடதத்திலும்
விளக்கியுள்ளார். இருவரும் வித்துவத் தலைவர், அரசச் சிரேட்டர்.
சம்ஸ்கிருதம் பதினெட்டுமொழிக் காரருக்கும் உரியது. இடைக்காலத்தில் அதன்
பயிற்சி தமிழரிடங் குன்றியது. ஆகையால் அது வடமொழியென்று பிற்காலத்
தமிழராற் கூறப்பட்டது. சேனாவரையர் முதலியோர் அவ்வுண்மையை உடன்படுகின்றனர்.
அதனால் சம்ஸ்கிருதம் தமிழருக்கும் உரியதென்பது சித்தம். அவ்வுரிமை
மற்றவருரிமையிற் றாழ்ந்ததுமன்று.
பல மொழிகளில் உலகவழக்கு
இலக்கியவழக்கு என இரண்டு வகையுண்டு. இலக்கியவழக்குச் செய்யுள்
வழக்கெனவும்படும். சம்ஸ்கிருதத்திலும் அவை உள, ஆண்டு உலக
வழக்கைப்பிராகிருதமென்ப. அதுவே பேச்சு வழக்குப் பகுதி. செய்யுள் வழக்கே
சம்ஸ்கிருதம். நாளிதுவரை எல்லாமொழிக்காரரும் முயன்று படிப்பது
சம்ஸ்கிருதமே. சம்ஸ்கிருதந் தவிர வடநாட்டிற் பல மொழிகள் உள.
சம்ஸ்கிருதத்தையும் பிராகிருதத்தையும் அடியாகக் கொண்டு அவை தோன்றின.
அவற்றுள் ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு கூட்டத்தாருக்குச் சொந்தமாயிற்று. அவர்
பேச்சு வழக்குக்கள் அதிலேயே நிகழ்ந்தன. நிகழவே பிராகிருதங்
கைவிடப்பட்டது. அது நசிந்தது. சம்ஸ்கிருதம் பல்கலைக் களஞ்சியம். ஆகலின்
அதுமட்டில் எல்லாராலும் போற்றப்பட்டுவருகிறது.
தமிழுக்கென ஒரு
சமயமில்லை. தெலுங்குக்கு வங்கத்துக்கு மற்றமொழிகட்கு எனவும் அ·தில்லை.
சமயத்தை மொழி பற்றியழைப்பது மடமை. இடம் பற்றி யழைப்பது போலும் அது.
பரதகண்டத்திலுள்ள எல்லாமொழியினரும் சில சமயங்களையே தழுவுகின்றனர்.
உதாரணமாகச் சைவத்தை எடுத்துக்கொள்க. அச்சமயம் இமசேதுவரை பரவியது.
எல்லாமொழியினருள்ளும் அச்சமயிகள் உலர். எல்லாமொழிச் சைவருக்கும்
பொதுப்பிரமாணமாயுள்ள நூல்கள் சம்ஸ்கிருதத்திற்றானிருக்கின்றன. பிறமொழிச்
சைவப் பெரியாரெல்லாம் தமிழ்ச் சைவருக்கு அப்பாலும் அடிச்சார்ந்தார்.
எல்லாமொழிச் சைவரும் ஒருவரை யொருவர் அறிதல் வேண்டும். அவர் தம்முள்
அளவளாவி ஒன்றுபட வேண்டும். அப்பொருட்டுச் சம்ஸ்கிருதப் பயிற்சியே
அவர்க்கெல்லாந் துணையாவது. அப்போதுதான் சைவபரிபாலனம் நன்கு நடைபெறும்.
சுயராச்சியங் கிடைத்த பிறகு அவர் ஏமாற்றப்பட்டார். அவருக்குக் கிடைக்க
வேண்டிய பங்கு தவறாது. ஆகவே சமய வளர்ச்சிப் பொருட்டு இன்றியமையாது
பயிலத்தக்க பொதுமொழியாகவும் சம்ஸ்கிருதம் இருந்து வருதல் காண்க.
சம்ஸ்கிருதம் பார்ப்பன மொழி, அதைத் தமிழர் கற்றல் கூடாது என்றல்
பார்ப்பனர் கொள்கை. சம்ஸ்கிருதம் மிலேச்ச மொழி, அதைத் தமிழர் கற்றல்
வேண்டாம் என்றல் தனித் தமிழ் விருப்பர் கொள்கை. தமிழர் சம்ஸ்கிருதம்
படிப்பதை அவ்விருவகையினரும் விரும்பார். அவர் தர்ம் அது.
ஆங்கிலம் அங்கிலேயருக்கே சொந்தம். அது ஒரு காலம். பிற்காலத்தில் அம்மொழி
அவரால் மாத்திரம் விருத்தியடையவில்லை. உலகெங்குமுள்ள மற்ற மொழிக்காரருள்
எத்தனையோபேர் அதிற் பேசினர்; சிறந்த பல நூல்களை ஆக்கினர். அதனாலும் அது
சிறக்கலாயிற்று. ஆகையால் இனி அது ஆங்கிலேயரின் மொழியாகாது. உலகுக்கே அது
பொதுவிற் சொந்தம். இக்கருத்து இப்போது எங்கும் பாவிவருதல் காண்க.
அப்படியே சம்ஸ்கிருதம் பார்ப்பனருக்கே சொந்தமாகட்டும். அது அந்தக் காலம்.
நெடுங்காலத்துக்கு முன்னரே அம்மொழியும் பரதகண்டத்தளவில் ஆங்கிலம்
போலாய்விட்டது. பார்ப்பனர் அ·தறிந் தடங்குவது உத்தமம்.
பரதகண்டம் சுயராச்சியம் அடையும். அவ்வரசு நடைபெற வேண்டும். அப்பொருட்டு
ஒரு பொதுமொழி இருப்பது நலமே. சம்ஸ்கிருதமே அம்மொழியாகலாம். சமயஞானம்
பொதிந்தது அது. அரசை நடத்தும் ஞானம் அதில் இல்லாமலாபோம்? இவ்வாங்கில அரசை
நடத்தும் ஆங்கிலம் இலக்கிய வழக்குடையது. படித்தவர் தான் அரசை
நடத்தவல்லார். அவருக்குப் பிராகிருதங்கள் ஏன்? ஆகவே சம்ஸ்கிருதந்தான்
கட்டாயபாடமாதற் குரிய தென்க. அது கட்டாயமானால் தமிழர் பாக்கியசாலிகளே.
தமிழச் சைவருக்கு அது பெரும்பாக்கியமாகும்.
தமிழில் இலக்கணம்
இலக்கியம் தருக்கம் சமயம் தத்துவம் எல்லாமுண்டு. அந்நூல்களிலெல்லாம்
சம்ஸ்கிருதச் சொற்களும் தொடர்களும் இலக்கணமுடிபுகளும் கலந்திருக்கும்.
அக்கலப்பு ஏறியுங் குறைந்து மிருக்கலாம். தனித் தமிழ் விருப்பர்
அந்நூல்களுக்கு முழுப்பொருள் காண்பதெப்படி? பொருளறிய வாராத நூல்கள் சாவது
நிச்சயம். அக்கொலையை அவரே செய்தவராவர். அவர் சமய நூல்களை இப்போது
அநேகமாய்த் தொடுவதில்லை. அவற்றிலுள்ள சம்ஸ்கிருதப் பகுதிகளுக்குப்
பொருள்காண முடியாமையே அதற்குக் காரணம். அதனால் அவர்பாற் சமயப்பற்றுஞ்
சூனியமாகி அவரை விலங்கியல் கவிகின்றது. அந்நிலை இரங்கத்தக்கது.
அந்நூல்கள் போற்றப்படவேண்டும். அந்த அளவிற் காவது சம்ஸ்கிருதப் பயிற்சி
அவருக்கு முக்கியம். பார்ப்பனர் அப்பயிற்சியைத் தமிழருக்கு ஊட்டமாட்டார்.
அவ்வளவு கருணாசாலிகளல்லர் அவர். தமிழர் எந்த அளவிற்குச் சம்ஸ்கிருதம்
பயிலாத மாட்டிகளா யிருக்கின்றனரோ அந்த அளவிற்குப் பார்ப்பனரே நலம் பெறுவர்.
தீங்கு தமிழருக்கேயாம். ஹிந்தி கட்டாயபாட மாக்கப்படுகிறது. தமிழர்
சம்ஸ்கிருதம் படிப்பதற்காக வன்று அது. தாம் சம்ஸ்கிருதத்தை நேரே
கற்பிக்கும் பாடசாலைகளில் தமிழ்மாணவரை மணக்கசப்பின்றிச் சேர்த்துக்கொள்வதே
அப்பார்ப்பனரின் பரந்தநோக்கத்துக்குப் போதுமானது. ஹிந்தி யெதிர்ப்பாளர்
அதை யறிக.
தமிழர் பல சமயிகளாயிருக்கின்றனர். கிறஸ்தவர்
இசுலமியர் முதலியோர்க்குச் சம்ஸ்கிருதத்திற் சமயப் பிரமாண சாத்திரங்கள்
கிடையா. அவர் அம்மொழியை வெறுக்கலாம்; பயிலா தொழியலாம். அதனால் அவரடையும்
நஷ்டம் ஒன்றுமில்லை. அதனாற் சைவராதியோரும் அவரோடு சேர்ந்துகொள்கின்றனர்.
அவருக்கோ அம்மொழியிற் சமயப் பிரமாண சாத்திரங்கள் பலவுள. அதனை அவர் அறிதல்
வேண்டும். அம்மொழியை வைதல் அவருக்குத் தகாது. அதனை அவர் பயிலாதொழிவதுந்
தப்பு. சகவாச தோஷத்தால் அவர் நஷ்டமடையாதிருப்பாராக.
இப்போது
பரதகண்டம் இசுலாமியரும் நிறைந்தது. அவருக்கும் ஹிந்துக்களுக்கும்
பொதுவானது அந்நாடு. அவ்விருதிறத்தினரும் அதை ஆளவேண்டியவர். மொழியும்
அவருக்குப் பொதுவாயிருப்பது வேண்டப்படுவதே. ஆனால் சம்ஸ்கிருதம்
அவ்விருவகையாருக்கும் பொதுவாயிருக்க முடியாது. ஆயினுமென்?
அவ்விருதிறத்தார்க்கும் பொதுமொழி எதுவுங் கிடையாது. இசுலாமியருக்குட் பொது
உருது. ஹிந்துக்களுக்குட் பொது சம்ஸ்கிருதம். எப்படியோ இரண்டு பொது மொழி
கட்கிடனாயிற்றுப் பரதகண்டம். அதை மாற்றுவது அசாத்தியம். ஆயினும்
அக்கஷ்டத்துக்கு நிவிர்த்தியும் உண்டு. அ·திரண்டு விதம். ஒன்று
பெருமையற்றது. இன்னொன்று அத்தனை மோசமானதன்று. உருதுவை ஹிந்துக்களுங்
கட்டாயம் படிக்க வேண்டும். அல்லது சம்ஸ்கிருதத்தை இசுலாமியருங் கட்டாய்ம்
படிக்க வேண்டும். இசுலாமியர் பெளருஷமுடையார். அவர் சம்ஸ்கிருதந்
கட்டாயப்படிப்புக் கிசையார். ஹிந்துக்களிடம் பெருளருஷங் குறைவு. அவரே
உருதுக்கட்டாயப் படிப்பில் தள்ளப்படுவர். பெருமையற்ற நிவிர்த்தி இது.
ஹிந்துக்களும் பெளருஷமுடையாராயின் உருதுவும் சம்ஸ்கிருதமும் பொது
மொழிகளாகலாம். அதனாற் சில இடையூறுகள் ஏற்படத்தான் செய்யும். அவை சில
துவிபாஷிகளால் நிவிர்த்தியாதல் கூடும். இது மோசமற்ற நிவர்த்தி.
கிறிஸ்தவராதியோர்க்கு அவ்விரண்டும் அயல்மொழிகள். அவற்றுள்
தமக்கிஷ்டமானதொன்றை அவர் கட்டாயம் பயில்க. அவர் பெளருஷம் அதனாற் குறையாது.
(ஹிந்தி உருது ஹிந்துஸ்தானி)
இக்காலத்தில் பரதகண்டத்துக்குப் பொதுவாகற் பாலதென ஒரு மொழி
தெரிந்தெடுக்கப்பட்டுளது. அதை ஹிந்தி யென்பர் ஒரு சாரார். உருதுவென்பர்
இன்னொரு சாரார். ஹிந்துஸ்தானியென்பர் பிறிதொரு சாரார். அம்மூன்று
பெயர்களும் முன்று வேறு மொழிகளுக்குரியனவா? ஒரே மொழிக்குரியனவா? என்பது
ஆராய்ச்சி. சில மாதங்களுக்கு முன்வரை அம்மூன்று சொற்களும் ஒரு மொழியைச்
சுட்டும் பெயர்களெனப்பட்டன. தமிழ் நாட்டில் இந்தியெதிர்ப்புத் தோன்றியது.
மூன்றும் வெவ்வேறு மொழிகளின் பெயரென்பது வெளியாயிற்று.
சாமானிய ஹிந்துக்கள் சாமானிய விஷயங்களைப் பேசிக் கொள்வதற்குச்
சமஸ்கிருதத்திலிருந்து கடின பதங்களை நீக்கிஎடுக்கப்பட்ட சாமானிய் பதங்களிந்
தொகுதியே ஹிந்தி யென்கிறார் சிலர். சென்னை முதன் மந்திரி ராஜகோபாலச்சாரி
ஹிந்தியை "Cooked up Sanskrit" என்று சொன்னதன் கருத்து அதுவே.
அரபியும் பாரசீகமுந் தெரிந்தவர் பரதகண்டத்துக்கு அரசராய் வந்தனர்.
அவருக்கு இந்நாட்டுமொழி தெரியாது; இந்நாட்டுமொழி ஹிந்தி; அவருக்கு ஒரு
சமரசமொழி வேண்டப்படுவதாயிற்று; அவ்வின்றியமையாமையால் அம்மொழியுந்
தோன்றியது. அதுவே உருது; அது அவர்க்கும் இந்நாட்டு மக்களுக்கும்
கருத்துக்களை வெளிப்படுத்திக்கொள்ள உதவியது; ஆகவே உருதுவென்பது அரபி பாரசிக
ஹிந்தியென்பவற்றின் சேர்க்கையால்விளைந்தமொழி; இந்நாட்டுமக்களையும்
அவ்வந்தேறிகளையும் ஒன்றுபடுத்தியது அது; அந்த உருதுவே பிற்காலத்தில்
ஹிந்துஸ்தானியெனவும் பட்டது என்கிறார் சிலர். "Urdu was a 'Compromise
Language; born of the necessity of the rulers - who knew Arabic and
Persian, but not the language of the country, Hindi-developing a means
of communication with the people of the land. Urdu then was born of the
intermixture of these languages and was a means of unifying the people
of the country and the new comers. In course of time, it became what
was known as Hindustani" என்று சரோஜினி சொன்னதை 17-12-1938 ஹிந்திவிற்
காண்க.
ஹிந்துஸ்தானியைப் பற்றிப் பலர் பலவாறு பேசுகின்றனர்.
ஹிந்துஸ்தானி இரண்டுவிதம்; ஒன்று உருது ஹிந்துஸ்தானி, இன்னொன்று ஹிந்தி ஹிந்துஸ்தானி யென்கிறார் சிலர்.
"A recognised language means any one of the following languages,
namely, Gujarati,... Urdu or Hindi Hindustani" என்று பம்பாய்ச் சட்டசபை
விவாதத்துக் கெடுத்துக் கொண்டதை 18-8-1938 ஹிந்துவிற் காண்க.
ஹிந்தி ஹிந்துஸ்தானியென்பது கிடையாது, அது காங்கிரசாற் புதிதாகத்
தொடங்கப்பட்டது என்கிறார் ஆர்.என். மாண்ட்லிக் என்பவர். "As to Hindi
Hindustani, it was newly started by the Congress and did not really
exist" என்று அவரி விவாதிப்பதை அந்த ஹிந்துவிற் காண்க.
உருதுவே ஹிந்துஸ்தானி யென்கிறார் சரோஜினி. முன் வாக்கியம் காண்க.
உருது ரேக்டா ஹிந்தி ஹிந்துஸ்தானி யென்பன ஒரு மொழிக்கே பெயர்;
பரதகண்டத்து மக்களும் அங்குப்ப்டையெடுத்துவந்த இசுலாமியரும் அளவளாவினர்;
அதனால் அம்மொழி தோன்றியது; பரதகண்டமே அதற்குப் பிறப்பிடம்; ஆனாற் பாரசீகம்
அரபி முதலிய அயல்நாட்டு மொழிகளிலிருந்தும் ஹிந்துக்களின் பல்வேறு
மொழிகளிலிருந்தும் எடுக்கப்பட்ட பல சொற்களின் கலவையே அது என்கிறது மாஜி
ஜில்லா ஜட்ஜ் ஆர்.எஸ். சங்கர ஐயர் என்பவர் எடுத்துக்காட்டிய புத்தகமொன்று.
அது "The dialect called Zaban-i-urdu, 'Rektha, Hindi or Hindustani, was
formed through the intercourse of the Muhammadan invaders of India with
the people of the country; and though its structure is chiefly Indian,
yet the materials of which it is composed are taken abundantly almost at
pleasure, from the Persian, Arabic and other foreign languages as well
as from the various dialects peculiar to the Hindus" என்று சொல்லுவதை
7-1-1939 ஹிந்துவிற் காண்க.
இந்தியும் ஹிந்துஸ்தானிதானென்கிறது அப்புத்தகம்.
அரபி பாரசீகக் கலவையில் இந்திமாத்திரங்கூடி உருதுவாயிற்றென்கிறார்
சரோஜினி. அக்கலவையில்ல் வேறு அயல்நாட்டு மொழிகளும் இந்துக்களின் வேறு பல
மொழிகளுங் கூடி அதுவாயிற்றென்கிறது அப்புத்தகம்.
உருதுவைப்
படைமொழி, ஹிந்துஸ்தானியைப் பொதுமக்கள் மொழி என்கிறார் அந்த ஐயர். அவர்
அந்த இந்துவில் "Urdu is a miltary language. Hindustani is the general
people's language" என்பது காண்க.
உருது வென்ற பதமே படைமொழி
யென்ற பொருளுடையது; ஹிந்துஸ்தானியென்பது முசுலீம் உலகிற்கே தெரியாதமொழி
யென்கிறார் ஸர்.எ.எம்.கே.தெஹ்லாவி யென்பவர். "Urdu meant a camp language.
Among the Muslims, Hindustani was not known at all" என்று அவர் சொன்னதை
18-8-1938 இந்துவிற் காண்க.
இந்துஸ்தானியே படைமொழி
யென்கிறார் கே. சந்தானம் என்பவர். அவர் "It was perhaps not known that
every European army officer must learn Hindustani. That was compulsory.
That was because an army could not be controlled without unity of
language" என்றதை 9-1-1939 இந்துவிற் காண்க.
இந்துஸ்தானியும்
உருதுவும் வெவ்வேறு மொழிகளென்கிறார் சிலர். இந்துஸ்தானியை உருப்படுத்த
உருதுவைச் சிதைக்கவேண்டுமென்று சொல்லப்படுகிறது; அது இரங்கத்தக்கதென்பது
அவர் கருத்து. அலகபாத்தில் அகில இந்திய உருதுதினம் கொண்டாடப்பட்டது. ஸர்
டெஜ்பகதூர் சாப்ரு தலைமை வகித்தார். அதில் நிகழ்நத "Resolutions were
passed advocating the cause of the Urdu language and regretting the
attempts to annihilate Urdu under the cover of promoting Hindustani"
என்று நிகழ்ச்சியை 22-12-1938 இந்துவிற் காண்க.
இந்துஸ்தானி
யென்கிற மொழி இப்போது கிடையாது; அது காங்கிரஸ்தலைவர்களின் மனக்கோட்டையிற்றா
னுண்டு என்கிறது அகில இந்திய முசிலீம் லீக், "Hindustani is actually a
non-existant language, which exists only in the middle of Congress
leaders. The living languages are Hindi and Urdu" என்பது அக்கமிட்டியின்
அறிக்கை. 25-12-1938 இந்துக் காண்க.
இந்துஸ்தானி யென்கிற
மொழி இப்போதில்லை; ஆனாலும் அதை உண்டாக்கிக் கொள்ளலாம் என்கிறார் காந்தி.
காங்கிரசுக் கொள்கையும் அதுவே. காசியில் திரட்டப்பட்ட இந்தி அகராதியிலுள்ள
உருதுச் சொற்களையும் ஊஸ்மேனியாவில் திரட்டப்பட்ட உருது அகராதியிலுள்ள
இந்திச் சொற்களையும் தெரிந்தெடுத்து அவற்றின் அகராதியொன்றை மெளல்வி அப்துல்
ஹக் சாஹப் என்பவர் வெளிப்படுத்தியிருக்கிறார்; இந்துஸ்தானி அகராதி அதுவே
யென்று காந்தி காங்கிரசுக்குச் சிபார்சு செய்திருக்கிறார். புது
வார்த்தைகள் வேண்டுமானால் அவற்றை உண்டாக்க அபுல் கலாம் அசாத் ராஜேந்திர
பாபு வென்னுமிவர்களின் கூட்டம் ஏற்பட வேண்டுமென்ற யோசனையும் அவராற்
சொல்லப்படுகிறது, அதனை "I understand that Maulvi Abdul Haq Saheh has
produced a dictionary which has taken all the Urdu words that are to be
found in the Benares Hindi Lexicon and Hindi words from the Osmania
Lexicon. I have recommended to the Congress the adoption of the Maulvi
Saheb's dictionary. And for new words I have suggested a board composed
of Maulana Abdul Kalam Azad and Rajendra Babu" என்று 28-1-1939
இந்துவில் அவர் சொன்னதாற் காண்க. பாட்னாவில் ஒரு கமிட்டி கூடியது. அது
சர்க்காரால் நியமிக்கப்பட்டது. பொது இந்துஸ்தானி மொழியை உண்டாக்கவேண்டு
மென்பதே அதன் நோக்கம். "The Committee...appointed by the Government of
Bihar... with a view to finding out ways and means for evolving a common
Hindustani language...met...." என்றது 20-12-1938 ஹிந்து. ஹிந்தியிலும்
உருதுவிலும் பரிபாஷைகள் இருக்கின்றன. அவற்றிற்கு நேரான பரிபாஷைகளை
ஹிந்துஸ்தானியிலும் ஆக்க வேண்டும். எப்படி ஆக்குவது? அதை யோசிக்கவே
அக்கமிட்டி கூடியது. "The Committee is understood to have considered the
question of coining Hindustani technical terms with Hindi and Urdu
equivalents" என்றதையும் அந்த ஹிந்துவிற் காண்க.
ஹிந்துஸ்தானி
வேறு ஹிந்திவேறு என்கிறார் பி.எல்.ராலியராம் என்பவர். இந்திய
கிறிஸ்தவரின் அகில இந்திய மகாநாடொன்று சென்னையிற் கூடியது. அதில் அந்த
ராம் "In his opinion Hindi could not become the national language as the
Muslims would not accept the same. Hindustani, which was the language
of the common people of Northern India, was the only tongue that could
be the lingua franca" என்று பிரசங்கித்தார். 31-12-1938 ஹிந்துவைக்
காண்க. சென்னைச் சட்டசபையில் பஷிர் அமது என்பவர் "The attempt made in the
United and Central Provinces was to teach a new language called Hindi
which could not be understood either by the Urdu speaking people or the
Hindustani-speaking people. That was bound to fail. The question was
different so far as this Province was concerned... But he could not see
the logical connection between the spread of Hindustani and the
killing....... of any aspect of Tamil. It was open to Muslims to give
an impetus to Urdu and the Tamilians to give an impetus to Tamil" என்று
பேசினார். அது 19-3-1939 ஹிந்துவில் வந்துளது. சென்னை மாகாணத்திற்
கட்டாயமாக்கப்படுவது ஹிந்தியன்று, உருது தான்; இசுலாமியர் அதைக்கற்கலாம்;
தமிழர் தமிழைக் கற்கலாம்; சண்டை வேண்டாம் என்று அப்பேச்சுக் குழப்புகிறது.
இங்கு உண்மையில் ஹிந்துஸ்தானிப்பேராற் கட்டாயப்படுத்தப்படுவது
ஐக்கியமாகாணத்திலும் மத்தியமாகாணத்திலும் கட்டாய பாடமாக்கச் சர்க்காரால்
முயன்றும் முடியாமற் போன ஹிந்தியே. ஹிந்துஸ்தானி வேறு உருது வேறு என்கிற
மற்றொரு செய்தியும் அப்பேச்சில் தெரிகிறது.
சம்ஸ்கிருதச்
சிதைவிலிருந்து உண்டானது ஹிந்தி. அரபி பாரசீக ஹிந்தி முதலியவற்றின் கலவை
உருது. பல பேர் பலபடியாகக் கூறி ஒருவராலும் இன்னதென்று கண்டு கொள்ள
முடியாதது ஹிந்துஸ்தானி. இவையே அம்மும்மொழிகளாதலறிக.
ஹிந்தி
தேசபாஷையாக வேண்டுமென்பது ஹிந்துமகாசபைக்கு விருப்பம். அச்சபை நாகப்பூரிற்
சவர்க்கார் என்பவரின் தலைமையிற் கூடிய போது "On a motion from the chair,
the Mahasabha resolved to accept Hindi derived from Sanskrit as the
national language of India and condemned the Congress policy in
declaring Hindustani as the lingua franca of India in craven fear of the
Muslims" என்று செய்த தீர்மானத்தை 31-12-1938 ஹிந்துவிற் காண்க.
முசிலீம் லீக்கின் நோக்கம் உருது தேசபாஷையாக வேண்டுமென்பது. காங்கிரஸ்
ஹிந்துஸ்தானியைத் தேசபாஷையாக வேண்டுமென்பது. காங்கிரஸ் ஹிந்துஸ்தானியைத்
தேசபாஷையாக்க வேண்டுமென்கிறது.
(ஹிந்தி)
ஹிந்தியைப்
பரத கண்டத்திற்பலர் பேசுகின்றனரென்று சொல்லப்படுகிறது. அப்பலர் எத்தனை
கோடிய ராயினுமாகுக. யாருக்கு அம்மொழி சொந்தம்?
அதைப்பேசுகின்றவருக்கெல்லாம் அது சொந்தமா? இல்லை. அதைத்தவிர வேறொரு
மொழியைச் சொந்தமாகக் கொள்ளாதவருக்கே அது சொந்தமாகற்பாலது. அதற்கு அத்தகைய
சொந்தக்காரர் பத்துக்கோடி இருபது கோடியராகவா இருக்கின்றனர்? மற்ற
மொழிகட்குச் சொந்தக்காரர் சிலகோடியரேயிருத்தல் போல் அதற்குச்
சொந்தக்காரருஞ் சிலகோடியரேயிருப்பர்.
சம்ஸ்கிருத சாமானிய
பதங்களின் சமூகத்தாலாகிய ஹிந்திப் பயிற்சியால் அச்சம்ஸ்கிருதத்திலுள்ள
விசேடபதங்களையும், அவற்றின் மூலம் விசேட விஷயங்களையும் அறியமுடியுமா?
அவற்றை அறிய வேண்டாமா? சம்ஸ்கிருதப்பயிற்சியே அவ்வாசையை நிறைவேற்றி
வைக்கவல்லது. அதன் சாமானியபத சமுகஹிந்தி மிகை. ஒவ்வொரு மொழிக்குரிய
மாகாணத்திலும் இசுலாமியர் இருப்பர். அவருக்கு அந்த மொழியே சொந்தம். அவர்
அதை அபிமானிக்கக் கடன்பட்டவர். ஆனால் அந்த மொழிகளிலெலாம் அநேகமாய்
இசுலாமியக்கலைகள் இரா. தமிழிற்சீராப்புராணம் ஒன்று தான் காணப்படுகிறது.
அப்படித் தான் மற்றமொழிகளிலுமிருக்கும். அவருக்கோ சமயப்பற்று அதிகம்.
நாடு மொழி யிவற்றின் பற்று அதற்குக் கீழ்ப்பட்டதே. அவர் சமயக்கலை அரபியில்
மிக்குளது. உருதுவிலும் போதுமானவரை உண்டு. ஆகவே ஹிந்தி மாகாணத்திலுள்ள
இசுலாமியரும் உருதுவைத்தான் விசுவசிப்பர். அம்மொழிப் பயிற்சியாற்றான்
பலமொழி மாகாணங்களிலுமுள்ள இசுலாமியருக்குள் ஒற்றுமை உண்டாகும். அங்ஙனமாக
இந்திப் பயிற்சி அவர்க்கு வீண்.
ஹிந்துஸ்தானியென்ற பெயரால்
இப்போது கட்டாயப்படுத்தப்பட்துவது இந்தியே. உருதுவைக் கட்டாயப்படுத்துவது
இசுலாமியருக்கு உவப்பைத் தரக்கூடியது. இந்துவென்பது ஒரு கூட்டத்தின்
பெயர். ஒரு மதப்பெயரன்று. அவருக்குச் சொந்தமொழிகள் பல. சமயக்கலை
நிரம்பியமொழி சம்ஸ்கிருதம். அதுவே இந்துக்களை ஒற்றுமைப்படுத்தவும் வல்லது.
ஆகலின் அவ்விரண்டையும் அவர் போற்ற வேண்டும். சம்ஸ்கிருதமே
அரசப்பொதுமொழியுமாகலாமென்ற நம்பிக்கையும் அவருக்குண்டு. இந்தி ஒரு
மாகாணத்துக்கே சொந்தம். அதைப்படிக்கும்படி மற்றமாகாணத்தாரும் ஏன்
வற்புறுத்தப்படவேண்டும். அ·தநீதி.
(உருது)
உருது இக்கண்டத்தின் அக்காலத்து இசுலாமிய அரசமொழி. ஆகலின் அதை இந்துக்களுங்
கற்கலாயினர். இப்போது ஆங்கிலம் படிக்கப்ப்டவில்லையா? அப்படியே
உருதுப்படிப்பும் அப்போது இந்துக்களுக்கு அவசியமாயிற்று. இசுலாமிய அரசர்
அயல்நாட்டினர். அவர் நலத்தின் பொருட்டு ஆயது உருது. அது அயல்
நாட்டுமொழிகளின் விளைவு. அயல்நாட்டுச் சமயக்கலைகளையே அது கொண்டது.
இந்நாட்டுமொழிகளின் கலவையும் சமயக்கலைகளும் அதில் மிகக்குறை. அத்தகைய
உருதுவை இந்துக்கள் ஏன் படிக்க வேண்டும்?
இசுலாமிய அரசு
வடநாட்டிற்றான் அதிக ஆதிக்கமுடையதாயிருந்தது. அதனால் அங்கு இந்துக்களிற்
சிலர் இசுலாமியராயினர். ஆகாத இந்துக்கள் இசுலாமியமொழியாகிய உருதுவைக்
கற்றனர். அவருக்கு அக்கல்வி நிர்ப்பந்தத்தால் ஏற்பட்டிருக்க வேண்டும்.
தென்னாட்டில் இசுலாமிய ஆதிக்கம் குறைவு. சில தென்னாட்டு மக்கள் மத மாற்றம்
மட்டிற் செய்தனர். உருதுவைத் தென்னாட்டு இசுலாமியரும் படித்திலர்.
இந்துக்கள் படித்திலரென்று சொல்ல வேண்டுவதில்லை. மொழியளவிலாவது
தென்னாட்டினர் சுதந்திர மக்களாயிருந்து வருகின்றனர். அந்தச்
சுதந்திரத்திற்கும் இப்போது இழுக்கு வரப்பார்க்கிறது. உருதுவாதிமொழிகளைத்
தென்னாட்டினர்பாற் கட்டாயப்படுத்துவது அவரை அவமானப் படுத்துவதேயாகும்.
வடநாட்டு இந்துக்கள் தமக்குவந்துள்ள அவமானத்தை நீக்கிக் கொள்ள முயல்வது
பொருத்தம். அல்லது அவர் அதைத் தம்மளவில் வைத்துக் கொள்ளட்டும்.
உருதுவில் இந்தியாதி இந்துமொழிச் சொற்களுங் கலந்துள்ளன; அதனால் அது
இந்துஸ்தானியெனவும்படும். படவே அது இந்துக்களுக்குஞ் சொந்தமாதல் கூடும்
என்கிறார் சிலர். ஆங்கிலத்திலும் இந்தியாதிமொழிச் சொற்கள் கலந்துள்ளன.
அதனால் ஆங்கிலமும் இந்துஸ்தானியாகலாமா?
உருது அயல்நாட்டு
மொழிகளின் விளைவானாலும் இந்துஸ்தானத்திற் பிறந்தது; ஆகையால் அதற்கு
இந்துஸ்தானி யென்ற பெயர் பொருந்தவே செய்யும்; இந்துக்கள் அப்பிறப்பிடம்
பற்றியாவது அதனைத் தம் மொழியாகக் கோடலாம் என்கிறார் சிலர். தமிழ்நாடு
தமிழை வைத்து அப்பெயர் பெற்றதா? தமிழ் தமிழகத்தை வைத்து அப்பெயர் பெற்றதா?
தமிழைவைத்தே தமிழ்நாடு தமிழ் நாடெனப்பட்டது. இது பழமொழியியல். சில
புதுமொழிகளுக்கு மாத்திரம் இடம்பற்றி பெயர் ஏற்படலாம்.
இந்துஸ்தானத்திற்றேன்றியதனாலேயே உருதுவின் அயன்மை மறைந்துவிடாது. மேலும்
இந்துஸ்தானத்திற் பல மொழிகள் உண்டாயிருக்கின்றன. அவை உருதுவுக்குக்
காலத்தால் முந்தியனவுமாம். அவற்றில் ஒன்றாவது இந்துஸ்தானியெனப்படவில்லையே.
உருதுவை மாத்திரம் இந்துஸ்தானியென்று ஏன் சொல்ல வேண்டும்?
இந்துஸ்தானியென்ற பெயரை அதற்குச் சூட்டிவிட்டால் இந்துக்களும் அதைத்
தம்மொழியென மயங்கி ஏற்றுக்கொள்வர். அப்பால் அவர் அதைப்படித்து அதிலுள்ள
இசுலாமியக் கலைப்பயிற்சியால் இசுலாமியராதல் கூடும். இசுலாமிய அரசின்
சூழ்ச்சி அது. அப்போது இசுலாமியர் உருதுவை ஹிந்துஸ்தானி யென்றனர்.
ஹிந்துக்கள் அதைக் கேட்டு ஏமாறினர். இப்போது ஹிந்துக்கள் ஹிந்தியை
ஹிந்துஸ்தானி யென்கின்றனர். ஆனால் இஸ்லாமியர் அதைக்கேட்டு ஏமாறவில்லை.
ஆகவே உருதுவை ஹிந்துஸ்தானி யென்றல் ஹிந்துஸ்தானத்தையே அயல்நாட்டினர்க்குக்
காட்டிக்கொடுத்ததாகும். மேலும் ஹிந்து ஹிந்துஸ்தானி ஹிந்துஸ்தானம்
இந்தியா வென்பவற்றின் பொருள்தானென்னை? திருடன் திருடன்மொழி திருடனிடம்
என்பனவே அது. இசுலாமியர் அ·தறியாதவரல்லர். உருதுவுக்கு ஹிந்துஸ்தானியென்ற
பெயர் வருவதை அவர் உடன் படவுஞ்செய்யார். ஹிந்து முதலியவற்றின்
பொருளையறிந்த ஹிந்துக்களுக்கே அப்பெயர்கள் துச்சமாகும். அப்பெயர்களில்
இந்நாடு வெறுப்புக்கொண்டிருப்பதைச் சத்தியமூர்த்தியும் "It was regrettable
that a controversy had been raised over the name Hindustan and the
introduction of Hindustani, which was nothing but a language introduced
by the Muslim rulers in India" என்று தெரிவிக்கிறார் 31-12-1938 இந்துவிற்
காண்க.
(ஹிந்துஸ்தானி)
உருதுவில் நூற்றுக்கு
எழுபதுவீதம் பாரசீக அரபி பதங்கள் விரவியுள்ளன; இந்தியில் அதேவீதம்
சம்ஸ்கிருத பதங்கள் விரவியுள்ளன; அக்கலப்பு வேற்றுமையே உருதுவும் இந்தியும்
வெவ்வேறு மொழிகளாயினதற்குக் காரணம்; அக்கலப்புக்கள் நீங்க வேண்டும்;
நூற்றுக்கு முப்பதுவீதமுள்ள சொற்களே அவ்விருமொழிகளிலுஞ் சேரக்காணப்படுபவை;
அவையெல்லாஞ் சாமானிய பதங்கள்; அவற்றைத் திரட்டுக; இசுலாமியர்
இந்தியிலிருந்து எளிதிலறிந்துகொள்ளக் கூடிய சம்ஸ்கிருதபதங்களையும்
இந்துக்கள் உருதுவிலிருந்து எளிதிலறிந்துக்கொள்ளக்கூடிய அரபி பாரசிக
பதங்களையும் அத்திரட்டோடு சேர்த்து ஒரகராதியாக்க வேண்டும்; கடினபதங்கள்
அறவே நீக்கப்படவேண்டும்; அந்த அகராதியே இந்துஸ்தானி அகராதி; அதிலுள்ள
சொற்களைக் கொண்டு எழுதப்படுவனவே இந்துஸ்தானிப் புத்தகங்கள்; அச்சொற்களைக்
கொண்டு பேசப்படுவனவே இந்துஸ்தானிமொழி; கட்டாயபாடமாக்கவேண்டுவது அது தான்;
அதுவே இந்தியும் உருதுவும் சம்மேனித்தல் என்பது என்கிறார் காந்தி.
இக்கொள்கைப்படி இந்துஸ்தானி யென்றமொழி இப்போதில்லை, இனித்தான்
உண்டாகவேண்டுமென்பது விளங்குகிறது. அதை உண்டாக்கும் வேலை முன்காட்டிய
பீஹார் சர்க்காரின் கமிட்டியைச் சேர்ந்தது. இல்லாத ஒரு மொழி உண்டான
பிறகன்றோ அதைக் கட்டாயப்படுத்த முயல வேண்டும்? தமிழ்நாட்டை இப்போதே
அமர்க்களமாக்குவானேன்?
இந்துஸ்தானியை உண்டாக்க இந்தியையும்
உருதுவையும் சிதைக்கவேண்டுமென்கிறார் காந்தி. இந்தியின் சொருபமழிவதால்
இந்துக்களுக்கு நஷ்டமில்லை. அவர் கலைகளெல்லாம் சம்ஸ்கிருதத்திற்
கிடக்கின்றன. அம்மொழி பரதகண்டத்துக்கே சொந்தம். இந்துக்கள் அம்மொழியைப்
படித்து அக்கலைகளை யறியலாம். இசுலாமியரின் தெய்வமொழி அரபி. பாரசீகமும்
அவரால் மதிக்கப்படுவதே. ஆயினும் அவை பரதகண்டத்துக்கு வெளியிலுள்ளன.
பரதகண்டத்து இசுலாமியருக்கு இசுலாமியக் கலைகள் நிரம்பியதாய்ப்
பரதகண்டத்திலுள்ள் மொழி உருதுவே. அதிலுள்ள அரபி பாரசீக கடினபதங்கள்
எடுக்கப்பட்டால் இசுலாமியக்கலைகள் பாதகமுறுவது திண்ணம். அதனால் அவர்
சூனியமாகிய இந்துஸ்தானியைப் படிக்க விரும்பார். அது பொதுமொழியாதல்
யாங்ஙனம்? ஸர் டெஜ் பஹதூர் ஸாப்ரூ தலைமையில் நடந்ததென்று காட்டப்பட்ட
தீர்மானத்தைக் காண்க.
தமிழருக்கு இந்தி உருது இந்துஸ்தானிகள்
புதியவை. அவர் அவற்றுள் எதன் சொரூபத்தையும் அறியமாட்டார். வடநாட்டாரே
அதனை அறியக்கூடியவர். அங்கு ஒரு மாகாணமும் இந்துஸ்தானியைக்
கட்டாயமாக்கவில்லை. அன்றியும் அம்மொழி முளைக்கும் போதே அங்குள்ள
இசுலாமியர்; அதன் மேற் சீறுகின்றனர். "Hindustani ... is mischievously
alleged to be a combination of Urdu and Hindi written in Devanagri and
Persian script...Behind the false and hypocritical love for a combined
form of Hindi and Urdu for the national language of India there appears
to be a sinister and unholy propaganda for the elevation of Hindi and
elimination of Urdu. Muslims cannot allow their language to be
crucified...." என்று எஸ்.ஹைதர் இமாம் என்பவர் பாட்னாவிற் கூடிய அகில
இந்திய முசிலீம் மாணவர் மகாநாட்டில் வரவேற்புக் கமிட்டித் தலைவராயிருந்து
கூறியுள்ளார். 29-12-1938 மதராஸ் மெயில் பார்க்க. அந்த நகரில் அகில
இந்திய ஷியா மாநாடு கூடியது. ஸர் ரஸா அலி என்பவர் தலைமை வகித்தார். அவர்
தலைமைப் பேச்சில் காங்கிரசு இந்துஸ்தானியென்ற பெயரைச் சொல்லிக் கொண்டு
சம்ஸ்கிருத மயமாகிய இந்தியையே பொதுமொழியாக்க முயல்கிறது. அதிற்
சந்தேகமில்லை, அதை நம்புதற்கு ஆதாரங்கள் உள, உருதுவைச் சொந்தமொழியாகவுடைய
முசிலீம்கள் அம்முயற்சியை ஆதரிக்கக்கூடாது என்ற கருத்துக் காணப்படுகிறது.
"If ... attempts were made to introduce a common language, the choice
might fall on the highly Sanskritised Hindi which seems to have an
irresistible lure for many votaries of the Congress.... Indeed, the
scheme has been viewed with the greatest suspicion and alarm by the
Muslim community which believes that the scheme, if put into operation,
would give a death blow at Urdu as the principal language of the
province. It cannot be said that the Muslim objection is based purely
on distrust. As far as I am able to judge the scheme in its present
form has failed to obtain the support of the Muslim community" என்ற
30-12-1938 மதராஸ் மெயில் காண்க. டில்லியில் ஜேமியத் உல் உலமா இ ஹிந்த்
மகாநாடு கூடிக், காங்கிரசு இந்துஸ்தானியில் அதிகமான சம்ஸ்கிருத பதங்களைச்
சேர்த்துப் பிரயோகித்து வருவதைக் கண்டித்துளது. "Finally a protest was
made against the increasing use of Sanskrit words in the Hindustani
language. The jamiat pointed out that this tendency, if not
discouraged, would lead to further suspicious among Muslims against the
Congress" என்று 7-3-1939 ஹிந்துவில் வந்திருப்பது காண்க. சென்னை
மந்திரியாகிய யாருப் ஹாஸன் அங்கண்டனங்களையெல்லாம் உடன்படுகிறார். ஆனாற்
சென்னை மாகாணம் அச்சண்டைகளை நீக்கி இந்து முசல்மான்களைச் சமாதானம்
பண்ணிவிட்டது போல் அவர் மழுப்பவும் செய்கிறார். "In North India, there
was controversy of Hindi-Urdu and the Madras Government has solved it by
printing the textbooks in both languages side by side" என்ற அவர்
பேச்சை 28-2-1939 இந்துவிற் காண்க. இரண்டு மொழிகளில் ஒரே பாடப்புத்தகத்தை
அச்சிட்டுவிட்டால் இரண்டு மொழிகளும் ஒரு மொழியாய் விடுமா? இரண்டு மதஸ்தரும்
சமாதானமாய் விடுவரா? தமிழ் நாட்டில் எந்தப்பெயரைச் சொல்லி
எந்தப்பொருளையும் புகுத்தலாம்போலும். தமிழர் ஏழையரோ?
இந்தியும் உருதுவும் ஒரேமொழி, அது நாகரியிலெழுதப்பட்டால் இந்தி,
பாரசீகத்திலெழுதப்பட்டால் உருது என்று முத்லிற் சொல்லப்பட்டது. இந்தி வேறு
மொழியென்ற வுணமை வெளியானதும் அச்சொல் மறைந்தது. இப்போது உருதுவும்
இந்துஸ்தானியும் அவ்வாறு சொல்லப்படுகிறது. பாரசிகத்தில் எழுதப்படுகிற
உருதுவுக்கே இந்துஸ்தானியென்ற பெயருண்டு. எழுந்து வேற்றுமையால் ஒரு மொழி
பெயராலும் வேறுபடுமா? சம்ஸ்கிருதத்துக்குச் சொந்த எழுத்துக் கிடையாது.
அதை வட நாட்டார் நாகரியெழுத்திற் பயிலுவர். தமிழர் கிரந்த எழுத்திற்
பயிலுவர். தெலுங்கர் தெலுங்கெழுத்திற் பயிலுவர். மற்றமொழிக்காரரும்
தத்தம் மொழியெழுத்திலாவது அவ்வெழுத்துப்போன்ற எழுத்தை ஆக்கி அதிலாவது
பயிலுவர். நாகரியெழுத்தும் சில மாகாண்ங்களிற் பேதிக்கும். இப்படிச்
சம்ஸ்கிருதமொன்றே எழுத்துவேற்றுமையுடைய மொழி. அவ்வேற்றுமைபற்றி
அம்மொழிக்கு வெவ்வேறு பெயர்களுண்டா? இல்லை. அதனை யறிவாருக்கு உருதுவை
நாகரியெழுத்துப் பற்றி இந்துஸ்தானி யென்றல் பொருந்தாது. உருதுவுக்குப்
பாரசீகமே சொந்த எழுத்து. இந்துக்கள் அம்மொழியைத் தம் நாகரியி
லெழுதிக்கொண்டிருக்கலாம். மேலும் உருதுவிலுள்ள சில ஒலிகளுக்கு நாகரியில்
எழுத்தில்லை. அவ்வொலிகளை நாகரியில் சிதைத்துத் தான் எழுத வேண்டும். ஒரு
மொழியைப் படிக்கும் முறை அது தானோ?
உருதுவின் யாப்பியல்
பாரசிகத்தைத் தழுவியது. இந்தியின் யாப்பியல் அதனோடு மிக மாறுபட்டது.
22-1-1939 இந்துவில் The oldest Urdu Poem என்ற தலைப்பில் "It is written
in a language which contains about seventy percent Hindi words and yet
it is Urdu - the Urdu of those days - for it contains so many Persian
words and follows the rules of Persian prosody, which is a clear
departure from the Hindi method of writing poetry" என்று வருவது காண்க.
இந்தியும் உருதுவும் இலக்கணப்பகுதியில் வித்தியாசப்படும் போது அவை
சம்மேளிக்கு மென்பது கனவே, காங்கிரசார் இந்துஸ்தானிக்கு ஒரு அகராதியைக்
கற்பித்தது போல் ஒரு இலக்கணத்தையுங் கற்பிக்க வேண்டும். அது எங்கிருந்து
எப்படித் திருடப்படுமோ? அந்தத் தலைப்பே "But, alas, their noble
intentions in evolving Urdu have been foiled by the present-day
Persianised Urdu on the one hand and Sanskritised Hindi on the other,
which, on the contrary, have created a seemingly unbridgable gulf
between the two sister communities" என்று விசனித்து இந்தியும் உருதுவும்
சம்மேளிக்கமுடியாதென்பதை உறுதிப்படுத்துகிறது. ஆனால் காக்கிநாடாவில் நடந்த
ஆந்திர இந்திப் பிரசாரகமகாநாட்டில் எஸ்.வி.சிவராமசர்மா என்னும் இந்தி
ஆசிரியர் "People in the south have to take their due place in the
building of the national language. Claims are being put forward from
different corners in support of Urdu, Sanskrit and Hindi separately,
without any idea of evolving a common vocabulary grammar, terminology
and script. Andhras are best fitted for the purpose as their language
includes words of Sanskrit, and many other languages" என்கிறார்.
30-12-1938 மதராஸ் மெயில் பார்க்க. தெலுங்கு பலமொழிக் கலவை.
அக்கலவைமொழியிற் பெருமிதங்கொள்பவர் தெலுங்கர். உண்மையிற் பெருமையுடையது
தனிமொழியா? கலவைமொழியா? கலவைமொழியாயின் தனிமொழியாகிய சம்ஸ்கிருதம் பெருமை
குன்றியதாய் முடியும். முடியவே மற்றொரு தனிமொழியாகிய தமிழின் பெருமையும்
அறியவாராது. அது சொல்லாமலே விளங்கும். கலவைமொழிப் பெருமையாற் றம்மை மறந்த
அத்தெலுங்கர் இந்துஸ்தானி மொழியை உண்டாக்குஞ் சக்தி தமக்கு அதிகம்
உண்டென்கிறார். தெலுங்கு புதுமொழிதானாயிற்று; பொது மொழியாகவில்லை.
அப்படியே இந்துஸ்தானி யொன்று உண்டானாலும் அது புதுமொழி யாகுமே தவிரப்
பொதுமொழியாகமாட்டாது. தெலுங்கர் அதனை அறிக.
இந்நாட்டிற்
பழமொழிகளும் உண்டு. புதுமொழிகளும் உண்டு. தமிழுஞ் சம்ஸ்கிருதமும்
பழமொழிகள். தெய்வசம்பந்தமும் உடையன அவை. தெலுங்கு, மலையாளம், இந்தி
முதலியன புது மொழிகள். தமிழின் சிதைவு சம்ஸ்கிருத சம்பந்தத்துடன்
தெலுங்கும் மலையாளமுமாயிற்று. கொச்சைத் தமிழே அச்சத்தெலுங்கென்பாரும்
உளர். அச்சம் தெலுங்குமொழியிற் சுத்தமென்னும் பொருளது. அம்மொழிகளிலுள்ள
தமிழ்ச் சொற்களையும் சம்ஸ்கிருதச் சொற்களையும் நீக்கிவிட்டால்
அம்மொழிகளுக்குச் சீவனங் கிடையாது. ஒருக்கால் அவை சீவித்தாலும்
அம்மொழிக்காரருக்கு அவமானமே வருவதாகும். அவ்வளவு நாகரிகமற்றன அவை. அவை
உண்டாகுமுன் மலைநாடுந் தெலுங்குநாடுந் தமிழ் நாடாகவே யிருந்தன.
புதுமொழிகள் உண்டாக உண்டாக நாடுகள் பிரியும். மக்களொற்றுமை குலையும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மொழியுண்டாகி ஒருவன் பேசுவது மற்றவனுக்கு
விளங்காமல் எல்லா மக்களும் ஒற்றுமையற்று நாசமாவார். இதற்கிசைந்த ஒரு
செய்தியைப் பைபில் ஆதி 11-ஆம் அத்தியாயத்திற் காண்க. ஆகவே புதுமொழிகளை
உண்டாக்க வேண்டாம். அது நியாயமாகாது. காந்தியும் காங்கிரசும் அதனை ஓர்க.
நாடுசீர்ப்பட வேண்டுமானால் நாகரிகமற்ற மொழிகள் ஒழிய வேண்டும். காந்தி
நினைக்கும் இந்துஸ்தானியாதி புதுமொழிகள் தோன்றுதல் கூடாது. அறிஞர் அதை
விரைந்து தடுக்க வேண்டும்.
கல்வி மனிதவியல். ஒருவன் எந்த
அளவுக்குப் படிக்கவிரும்புகிறானோ அந்த அளவுக்கு அவன் வசதி பெற வேண்டும்.
அவ்வசதியை உண்டாக்கி கொடுப்பது அரசு. எந்த அரசும் குறிப்பிட்ட அளவில்
ஒருவன் படிப்பைத்தடுத்துவைத்தல் தவறு. வேறு பல காரணங்களைக் கருதி அது
தடுக்கலாம். ஆயினும் அத்தடை அவ்வரசின் நோக்கமாயிருத்தல் கூடாது. சென்னை
மாகாணத்தார் இந்தியை எழுதப்படிக்க மாத்திரங் கற்றுக்கொண்டாற்போதுமென்று
அம்மாகாணத்தரசு சொல்லுகின்றது. அவ்வறிவு ஆங்கிலத்தில் Working Knowledge
எனப்படும். கல்வி மந்திரியாகிய வி.ஜே. வார்க்கியென்பவர் 2-3-1939
இந்துவில் "All that they wanted was that the childern of Madura and
Trichinopoly should be able to talk with northerners and so have easy
communication so that the future ministers coming from the different
parts of our country might be able to speak in a language of our own
with self-respect and so that they could understand the language. That
was what was meant by a working knowledge of Hindustani" என்று
அவ்வறிவை விளக்குகிறார். அது சென்னையரசின் நோக்கமாக இருக்க முடியாது.
சென்னை மாகாண மக்களை ஏமாற்றுஞ் சொல்லே அது. பின்னுள்ள மக்கள் இந்தியைப்
பூரணமாகக் கற்கவேண்டுமென்ற எண்ணத்திற்கு அவ்விளக்கம் விதையேயாகும்.
ஆரம்பத்தில் ஆங்கில அரசை இக்கண்டத்தில் நடத்தக் குமாஸ்தாக்கள்
வேண்டப்பட்டனர். குறைந்த சம்பளக் குமாஸ்தக்கள் போதும். அச்சம்பளத்துக்கு
இங்கிலாந்திலிருந்து யாரும் வரமாட்டார். பரத கண்டத்து மக்களுக்குங் கொஞ்ச
ஆங்கில மொழியறிவுகொடுத்துவிட்டால் அவருக்குள்ளேயே அக்குமாஸ்தாக்கள்
கிடைக்கக்கூடும். ஆங்கிலேயர் பரதகண்டத்தார்க்கு ஆங்கிலங் கற்பிக்கத்
தொடங்கிய போது கொண்ட நோக்கம் அதுவே. ஆனால் இப்போது இந்நாட்டில் ஆங்கிலமொழி
எப்படியிருக்கிறது? இங்குள்ள எல்லாமொழிகளுக்கும் அது அரசாகமிளிர்கின்றது.
அப்படியே இந்திக்கல்வியுங் கொஞ்சமிருந்தாற் போதுமென்று ஆரம்பத்தில்
சொல்லப்படும். அப்பால் அதனாட்சியும் இம்மாகாணத்தில் தப்பாது. இம்மாகாண
மொழிகள் ஆங்கிலத்தால் ஒளியிழப்பது போல் இந்தியாலும் ஒளியிழக்கவே செய்யும்.
தமிழர் ஆங்கிலத்திலும் இந்துஸ்தானியிலுஞ் சிறந்த கவிகலாகவேண்டுமென்ற
எண்ணம் தம்மவர்க்கில்லை யென்றும் அந்த மந்திரி இந்துவிற் சொல்கிறார் "They
did not want to raise poets in English and Hindustani from TamilNad"
என்பது அது. எத்தனையோ தமிழர் ஆங்கிலம் படித்து அம்மொழியிற் சிறந்த
நூலாசிரியராக இருந்திருக்கின்றனர். அப்படியே அவர் இந்தியைப்படித்தால்
தாமாகவே கவிகளாகலாம். காங்கிரசாருக்கு அந்நோக்கம் இருப்பதும்
இல்லாதொழிவதும் ஒன்றே. அவர்க்கு அந்நோக்கமில்லை யென்பது ஒரு சூழ்ச்சி.
இந்தியிற் கவியாகுந் தமிழனை அவர் தண்டிபாரா? அதற்கு எந்தக் கிரிமினல்
சட்டம் பிரயோகிக்கப்படும்? சென்னை அஸம்பிளித் தலைவராகிய புலுசு
சாம்பமூர்த்தி ஒவ்வொரு மாகாணத்து மொழியிலும் உள்ள இலக்கியங்கள் இந்தியிற்
பெயர்க்கப்படவேண்டுமென்கிறார். Mr. Sambamurthi said that the great
cultural heredity of all provincial languages should be infused into
Hindi which should be enriched in all aspects"....He "said that Andhra
historical dramas should be written in Hindi. He announced that a prize
should be awarded to the best writer of a Hindi drama relating to
Andhra History" என்ற 30-12-1938 மதராஸ் மெயில் காண்க. அங்ஙனம்
பெயர்க்கவல்ல மற்றமொழிக்காரன் இந்தியிற் கவிஞானகவும் இருக்கலாமன்றோ?
வார்க்கி அவனைத் தண்டிக்க முதலில் ஏற்பாடு செய்க.
இந்து
முசிலீம் ஒற்றுமையை உண்டாக்கவல்ல மொழியே பரதகண்டத்திற் பொதுமொழியாக வல்லது;
அது தனக்குச் சொந்தமல்லதாரும் அங்கீகரிக்கத்தக்கதாயிருக்கவேண்டும்
என்கிறார் அம்மந்திரி. இந்துஸ்தானியைக் குறிப்பதாகும் அது. A common
language "must be such that it could not only serve the purpose of
Hindu-Muslim unity but also one which could be easily adopted by the
rest of India which did not speak that language" என்று அவர் சொன்னதை அந்த
இந்துவிற் காண்க. சாத்தன் ஒரு இந்து. இசுமாயில் ஒரு முசிலீம். இருவருந்
தமிழர், நேசர். அவர் தெலுங்கு நாட்டிற்குப் போகின்றனர். ஒரு இபுராஹீம்
எதிர்ப்படுகிறான். அவன் ஒரு தெலுங்கு முசிலீம். அவனுக்கும் சாத்தனுக்கும்
சண்டை உண்டாகிறது. இசுமாயில் சாத்தனுடன் சேர்வனா? இபிராகீமுடன் சேர்ந்து
கொள்வனா? சாத்தனைவிட்டு இபுராகீமுடன்றான் சேர்வான் அவன். அச்சமயத்தில்
தமிழ்மொழி இசுமாயிலையும் சாத்தனையும் ஒன்றுப்படுத்தாது. இசுலாமிய மதமே
அவ்விருமொழி முசிலீம்களையும் ஒன்றுபடுத்திவிடும். இவ்வுண்மையை எங்கும்
என்றும் எவரும் நேரிற் காணலாம். தமிழுக்குள்ள யோக்கியதையே
இந்துஸ்தானிக்குமுண்டு. இந்துஸ்தானி ஒரு மொழி முசிலீமையும் இன்னொரு மொழி
முசிலீமையும் ஒன்று படுத்தவல்லதா? ஒரு மொழி இந்துவையும் இன்னொரு மொழி
இந்துவையும் கூட்டிவைக்கவல்லதா? ஒரு மொழி முசிலீமையும் இன்னொரு மொழி
இந்துவையும் சேர்த்துவைக்க வல்லதா? ஒன்றையும் அது செய்யமாட்டாது. ஒரு மொழி
முசிலீமையும் இன்னொரு மொழி முசிலீமையும் இந்துஸ்தானியிலுள்ள இசுலாமிய்
சமயக்கலைகளே கூட்டிவைக்கும். அச்சாமர்த்தியம் அம்மொழியைச் சாராது.
வடநாட்டில் இந்துஸ்தானியைப் பேசும் இந்து முசல்மான்கள் அடிக்கடி தம்முட்
சண்டையிட்டுக் கொள்வது யார்க்குந் தெரியும்.
மாகாண அரசை நடத்த
மாகாண மொழிகளும் சர்வமாகாண அரசையும் தேச அரசையும் நடத்த இந்தியும் சர்வதேச
அரசை நடத்த ஆங்கிலமும் அவசியம் என்கிறார் காந்தி. Mr.Gandhi foresaw the
possibility of provincial languages retaining their local use and Hindi
becoming the inter-provincial and national language, while English would
maintain its international position. என்பதை 20-4-1935 இந்துவிற்
காண்க. பரத கண்டத்துக்குக்குத் தேச பாஷை கிடையாது. இந்தி இரண்டொரு
மாகாணங்களுக்கே சொந்தம். ஆகையால் அது இந்துஸ்தானி முதலியவெல்லாம் மாகாண
மொழிகளே. அவை மற்ற மாகாணங்களுக்கு அந்நியம். ஆங்கிலம் பயில்வது
பரதகண்டத்துக்கு அவமானமெனச் சொல்லப்படுகிறது. அப்படியே அயல்
மாகாணத்துமொழிகளைக் கட்டாயத்தாற் பயில்வதும் அவமானமாகும். இந்தி
முதலியவற்றை மற்ற மாகாணங்கள் இனித் தான் பயில வேண்டும். ஆங்கிலம்
முன்னமேயே பரதகண்டமெங்கும் பரவிவிட்டது. அம்மொழிப்பயிற்சி இந்து
முசிலீம்களுக்குள் ஒற்றுமையை உண்டுபண்ணாவிட்டாலும் வேற்றுமையை
உண்டுபண்ணாது. சர்வதேச பாஷையென ஒன்றில்லை. ஆங்கிலத்துக்கு அப்பெருமை
வந்தது. அது பரதகண்டத்துக்குத் தேச பாஷையாகவும் ஏனிருத்தல் கூடாது? நன்றாக
இருக்கலாம். இக்கண்டத்தில் மாகாண மொழிகளிலும் சர்வமாகாண தேச சர்வதேச அரசு
ஆங்கிலத்திலும் நடைபெறல் குற்றமாகாது. பாரதமக்களுக்கு அதனாற் பல
தொல்லைகள் நீங்கும். பல நலன்கள் பெருகும்.
ஒருநாடு
முன்னுக்கு வரவேண்டும். அதற்கொரு பொது மொழியிருப்பது விரும்பத்தக்கது
தான். ஆனாற் பரதகண்டம் ஒரு நாடா? அது ஒரு கண்டம். அதிற் பல நாடுகள்
பலமொழிகள் பல சமயங்கள் பல சாதிகள் பல சமூகங்கள் இருக்கின்றன. இந்நிலையில்
அதற்கொருபொதுமொழி அமையுமா? பரதகண்டத்துக்கு ஒரு பொதுமொழி தேடுவதும் ஒன்று.
சொந்தமொழிப்பற்று அந்நியமொழிக் கட்டாயத்தை உவர்ப்பிக்கவே செய்யும்.
ஐரோப்பாக்கண்டத்துக்கு லத்தீன் போன்றது பரத கண்டத்துக்கு சம்ஸ்கிருதம். பல
மொழிகளுள்ள கண்டத்தில் அரசப் பொதுமொழியிருப்பது துர்லபம். இருந்தாலும்
அவ்வரசிருக்கும் வரையே அதன் பொதுமொழிக்கும் ஆயுள். அது போனால் இதுவும்
போய்விடும். "In Europe in the Middle Ages, there was a common language
current in all countries, the lingua franca of Europe. From Spain to
Russia and Sweden to Italy, all countries used that language for mutual
communication and for common contact. None of them felt that their own
language or literature was in jeopardy...." என்கிறார் சரோஜினி.
17-12-1938 இந்துக் காண்க. ஐரோப்பாவில் இடைக்காலத்தில் ஒரு பொதுமொழி
இருந்த்து; ஸ்பெயின் முதல் ரஷ்யாவரை சுவீடன் முதல் இத்தாலி வரை
எல்லாதேசங்களும் சமாசாரப் போக்குவரத்துக்கும் சம்பந்தத்துக்கும் அம்மொழி
வழங்கிவந்தன; அதனால் அவ்வத்தேசத்தாரின் சொந்த மொழியாவது
அம்மொழியிலக்கியமாவது பாதகமடையவில்லை என்பது அதன் கருத்து. அப்படி ஒரு
பொதுமொழி யிருந்ததா? அதற்காதாரமென்ன? அப்பொதுமொழி யிலக்கியம் ஒன்றாவது
இப்போது அகப்படுமா? அவையெல்லாம் சந்தேகம். விவகாரத்தின் பொருட்டு
அப்பொதுமொழி யிருந்த தென்பதை உடன்படலாம். இப்போது அம்மொழி எங்கே? அ·து ஏன்
செத்தது? எல்லாத் தேசங்களையும் ஒன்றுபடுத்தி வந்ததாகச் சொல்லப்பட்ட அதற்கு
அழிவு வரலாமா? பலவகை மொழியினரை ஒன்றுபடுத்தி ஒரே அரசின் கீழ் இருந்தும்
ஆற்றல் பொதுமொழிக்கு இராதென்பது அதனால் விளங்கவில்லையா? ஆகையால்
பொதுமொழியென்பது சொல்லிக்கொண்டு ஒரு திறத்தார் மொழியை இன்னொருத்திறத்தார்
தலையிற் சுமத்த வேண்டாம். இது தான் பொதுமொழி யென்று புதுமொழியை உண்டாக்க
வேண்டாம். அவரவர் சொந்த மொழியையே அவரவர் பயிலட்டும். அதனையே அவர்க்கு
கட்டாய பாடமாக்குக. அதனுடன் உருதுவை இசுலாமியருக்கும் சம்ஸ்கிருதத்தை
இந்துக்களுக்குங் கட்டாயமாக்கலாம். மற்ற மொழிகளை இட்டபாடமாக்குவதே முறை.
முற்றும்
நன்றி: சிவஞான சுவாமிகள் (முகநூல்) - https://www.facebook.com/ShivagnanaSwamigal
No comments:
Post a Comment