Contact Us

Name

Email *

Message *

Saturday, 25 May 2013

சந்திரசேகரம் - Vol 1

ராமானுஜரும், கபீர்தாசரும் குருநாதரைத் தேடி அலைந்ததையும் பின் அவர்களை அடைந்த விதத்தையும் தெரிந்து வைத்திருந்த நான், உரிய ஆன்மிக குருநாதரை வரித்துக்கொள்ளாமல் லௌகீகமா வாழ்ந்து வந்த நாளில், என் மனத்துக்குள் ஐயம் போக்கும் ஒரு குருநாதனாய் காஞ்சி மகாபெரியவர் படிமமெடுத்தது என் ஜாதக விசேஷம் என்று கருதுகிறேன். ஒவ்வொருவர் மனத்துக்குள்ளேயும் எவ்வளவோ கேள்விகள்.

எல்லாவற்றுக்குமாய் தெளிவான விடை கிடைத்துவிடுகிறது? அதிலும் நமது ஆன்மிக நெறி, ஆச்சரியமூட்டும் நெறி. ஒன்றான இறைவனுக்கு இங்கே பல தோற்றங்கள். ஒன்றுக்கு ஆறு மார்க்கங்கள். அன்பே வடிவான நமது இறைவனின் கைகளில் சூலாயுதம், சங்கு, சக்கரம், கதை என்று போர் வீரன்போல் ஆயுதங்கள்!

இந்த இறையனார்கள் போக, ரிஷிகள், முனிகள், சித்தர்கள் என்று ஒரு கூட்டம். இதுபோக வேதங்கள், இதிகாசங்கள் புராணங்கள் – அவைகளுக்குள்ளோ ஆயிரமாயிரமாய் பாத்திரங்கள். அதனால் எனக்குள்ளே பலவித கேள்விகள்! இதை நான் யாரிடம் கேட்பேன். முதலில் பெற்றவர்களிடம்தான் கேட்போம். நானும் கேட்டேன். என் தந்தையார் ஒரு கர்மயோகி. வயிற்றுப் பாட்டின் நிமித்தம் அலுவலகம் போவதும், வீடு திரும்பலில் களைத்து உறங்குவதும்தான் அவர் வாழ்க்கை. நடுவில் சில மந்திரங்களைச் சொல்லி, சுவாமி படம் முன் நின்று பூஜைகள் செய்வார். அவ்வளவுதான்!

நான் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் ஒரு தெளிவான பதிலைக் கூற, அவருக்கு தெரியவில்லை. இப்படி எல்லாம் கேள்விகள் கேட்கலாம் என்பதேகூட அவருக்கு புதிதாக இருந்தது. ஏனென்றால், அவர் கேள்விகளற்ற ஒரு பயபக்தி உடையவராக மட்டுமே இருந்தார். தாத்தாவுக்கு கோயிலில் பெருமாளின் முன் மணியாட்டி பூஜை செய்வதுதான் உத்தியோகமே.  அவரிடமும் கேட்டேன். இவர் கொஞ்சம்போல பதில் சொன்னார்.  

தாத்தா இந்த பெருமாள் எங்க இருக்கார்?” என்று கேட்டதற்கு, 

வைகுண்டத்துல” என்றார்.

அது எங்க இருக்கு?”

ஆகாசத்துல…”

நீ போயிருக்கியா?”

போகணும்னுதான் தினமும் இங்க மணி அடிக்கறேன்…”

அப்ப மணி அடிச்சாதான் போக முடியுமா?”

உனக்கு எதுக்கு இப்ப இந்த கேள்வி?”

போகட்டும். அவர் எப்படி தைரியமா அஞ்சு தலை பாம்பு மேல படுத்துண்டுருக்கார்…?”

இதோ பார் இப்படி எல்லாம் கேட்கக்கூடாது… உனக்கு வயசாகும்போது எல்லாம் தானா புரியும். இப்ப சொன்னா புரியாது” என்று வாயை கட்டிவிட்டார்.
நானும் தற்காலிகமா அடங்கினேன். ஆனால், மனத்துக்குள் பதிலுக்கான தவிப்பு தொடர்ந்தபடியே இருந்தது. பெருமாளிடம் மட்டுமா? சிவபெருமானிடமும்தான்… மற்ற தெய்வங்களிடமும் ஏராளமான கேள்விகள்… ஒரு தெளிவின்றி, எனக்கான கேள்விகளுக்கு விடையுமின்றி பக்தி செலுத்துவது என்பது நெருடலாய் இருந்தது.

ஒழுங்கா பெருமாளை சேவி… இல்லன்னா கண்ணைக் குத்திடுவார்…” என்று சற்று மிரட்டலா ஒரு பதில் எனக்கு சொல்லப்பட்ட போது, ‘அவர் என்ன ரவுடியா?’ என்றுதான் கேட்கத் தோன்றியது.

போதாக்குறைக்கு பள்ளிக் கூடத்தில் ஜான்சன் என்று ஒரு நண்பன். இவன், ‘இயேசுநாதர்தான் உலகின் ஒரே கடவுள்’ என்றான். அப்துல்கரீம் என்கிற இஸ்லாமிய நண்பனோ ‘அல்லாவே எல்லாம்’ என்றான்.  அனேகமாக எல்லோருடைய இளமைப் பருவமும் இந்தியாவில் இப்படித் தான் இருந்திருக்க முடியும்.  காலமும் உருண்டது.  ஒருவரிடம்கூட பொட்டில் அடித்த மாதிரியான தெளிவான பதில் இல்லை. பலர் வரையில் பக்தி ஒரு பழக்க வழக்கமாகவே வந்துவிட்டது.

‘நெற்றிக்கு எதற்கு திலகம்? பிராமணனுக்கு மட்டும் எதற்கு பூணல்? பெண் கழுத்தில் மட்டும் ஏன் மாங்கல்யம்? குலதெய்வம் என்று தனியாக ஒன்று எதற்கு? அதற்கு ஏன் நாம் மொட்டை போடுகிறோம்? இந்த காதையும் மூக்கையும் குத்திக்கொள்ளாவிட்டால் என்னாகி விடும்?’

- இப்படி பொதுவான கேள்விகளுக்கு கூட பலருக்கு விடை தெரியவில்லை.
ஆனால், இந்த மாதிரி கேள்விகளுக்கு மட்டுமல்ல… என்னுள் எழும்பியிராத கேள்விகளுக்கும்கூட, ஒருவரிடமிருந்து விடை கிடைக்கத் தொடங்கியது. அதற்கு காரணம், கல்கி வார இதழ் என்றுதான் கூற வேண்டும்.

ஆம்… அதில்தான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து மகா பெரியவரின் ‘தெய்வத்தின் குரல்’ பிரசுரமாகி வருகிறது. அவர் பேசியதில் இருந்து அரைப்பக்கம், கால் பக்கம் என்று ஒரு ஓரமாய் பிரசுரித்து வந்த விஷயம் கண்ணில் பட்டது. அப்பா தவறாமல் கல்கிக்கு சந்தா கட்டிவிடுவார். கடைகளுக்கு வருவதற்கு ஒருநாள் முன்பாகவே தபாலில் வந்துவிடும். அப்பா சொல்லாத பதிலினை, பெரியவர் மூலம் கல்கி சொல்லியது. நானும் கல்கி வந்தவுடன் முதலில் அதையே வாசிக்கலானேன். ஒரு வாரமா? இரு வாரமா?
பல வருடங்கள் – அதாவது, 1970ல் இருந்து 1994 வரை… தெய்வத்தின் குரலால் நான் மெல்ல மெல்லத் தெளிந்தேன். ஆசாரமான வைணவ குடும்பத்தில் பிறந்துவிட்டபோதிலும், அந்த மகானிடமே மனது போப்போ நின்றது. அவரது லாங்வேஜ் எனப்படும் பாஷை மிகமிகப் பிடித்துப்போனதும் ஒரு காரணம்.
அவர் எதைப் பேசி முடித்தாலும் முடிவில் ‘நாராயணா நாராயணா!’ என்றே முடிப்பதால், அவரை வைணவத்துக்கு அன்னியமாகவோ எதிராகவோ கருதவே முடியவில்லை.

இத்தனை தூரம் மனத்தில் நிரம்பி விட்டவரை, நேரில் தரிசிக்கும் வாய்ப்பு தான் ஒருமுறைகூட வாக்கவில்லை; தரிசிக்கும் எண்ணமும் பெரியதாக தோன்றவில்லை; லௌகீகமான வாழ்க்கைப் போக்கும் ஒரு காரணம். காலம் இப்படியே போய்விடுமா என்ன?

1993ஆம் வருடம் மார்கழி மாதம் என்பதாக ஞாபகம். குளிர வேண்டிய அந்த மாதத்தில், பெரும் புயலும் மழையும் ஏற்பட்டு ஊரே மழைக்காடாக இருந்த வேளையில், எனக்கும் டைஃபாடு காய்ச்சல் ஏற்பட்டது.

இந்த காய்ச்சலை மீறிக்கொண்டு, காஞ்சிபுரம் சென்று மகாபெரியவரை தரிசிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் தோன்றியது. ஏன்? எதனால்? என்றெல்லாம் தெரியாது. என் அம்மா மற்றும் மனைவியிடம் கூறவும் அவர்கள் வெறித்தனர். ‘இந்த உடம்போட காஞ்சிபுரத்துக்கா…?’ என்றும் கேட்டு முறைத்தனர். ‘உங்களுக்கு என்ன ஆச்சு… இப்பபோ பெரியவரை பார்க்கணும்னா என்ன அர்த்தம்?‘’ என்று கேட்டாள் மனைவி.  என்னமோ தெரியலை… தரிசிக்கணும்னு தோண்றது” என்றேன்.  உடம்பு குணமாகட்டும். அடுத்த மாதம் போகலாம்” என்றாள் மனைவி!  ஆனால், நான் அதை காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை.  நீங்கள் யாரும் வர வேண்டாம். நான் போகிறேன்” என்று வைராக்யமாய் புறப்பட நான் முயலவும், வேறு வழியில்லாமல் என் அம்மா, மனைவி, மகள் என்று நாங்கள் நான்குபேர் புறப்படத் தயார் ஆனோம்.

எனக்கு ராஜப்பா என்று ஒரு நண்பர். தற்செயலாக என்னைப் பார்க்க வந்தவர், ‘நானும் என் மனைவி உமாவும் கூட வருகிறோம்” என்றார். நான்குபேர் ஆறு பேராகிவிட்டோம். வெளியிலோ மழை நிற்கவில்லை. அதனால் என்ன என்பது போல, நான் மேற்கொண்ட குரு தரிசன யாத்திரைக்குள் நம்பமாட்டாத அதிசயங்களும் அரங்கேறத் தொடங்கின.

என் வீட்டுக்கு நூறு மீட்டர் தொலைவில் இருந்தது டவுன்பஸ் நிறுத்தம். பஸ் டிரைவர் தப்பித்தவறிகூட நிறுத்தத்தைத் தவிர, வேறு எங்கும் நிறுத்தமாட்டார். அப்படிப்பட்டவர், நான் வாசலுக்கு வந்த நொடி பஸ்ஸை நிறுத்தி ஏற்றிக் கொண்டார்.

திருவள்ளுவர் பஸ் நிலைய வாசலில் இறங்கி, செங்கல்பட்டு செல்லும் பஸ்ஸை பிடிக்கும் எண்ணத்தோடு நடந்தபோது, ஒரு திருவள்ளுவர் பேருந்து எதிரில் வந்தது. அதில் செங்கல்பட்டு செல்லவும் இடம் இருந்தது. ஒரு ஆச்சரியம்போல, ஆறுபேர் ரிசர்வ் செய்துவிட்டு என்ன காரணத்தாலோ வந்திருக்கவில்லை. அந்த இடம் அப்படியே எங்களுக்கு கிடைத்தது.

செங்கல்பட்டில் இறங்கி அங்கிருந்து காஞ்சிபுரம் செல்ல விழைந்தபோது, காஞ்சிமடத்து வேன் வந்திருந்து, ஆச்சரியமளித்தது. மடத்தில் உள்ள நீலகண்டயர், நான் குடியிருந்த வீட்டு உரிமையாளருக்கு சம்மந்தி. எனவே, வெண்ணீர் குளியல் – மருந்து கஷாயம் என்று அவர் பார்த்துக் கொண்டார். அதன்பின் சற்றே ஜுர உடம்போடு பெரியவரைத் தரிசிக்கப் புறப்பட்டேன்.

முதன்முதலாக தரிசிக்கப் போகிறோம். வெறும் கையோடா போவது என்று வெளியே பூக்காரியிடம் பூ கேட்டேன். ஒரு மல்லிகைப் பூ பந்தையே தந்துவிட்டாள்.

என் மனைவி, அம்மா, ராஜப்பா, அவர் மனைவி எல்லாம் குளித்து தயாரானபடி இருக்க, நான் மட்டும் தனியே பெரியவர் அமர்ந்திருக்கும் இடம் நோக்கி, மல்லிகை பந்துடன் சென்றேன்.

சுவரில் சற்று சாந்தபடி, கால்களை நீட்டி அவர் அமர்ந்திருக்க, அருகில் ஒருவர் என்றால் ஒருவர் இல்லை. முன்னால் ஒரு மூங்கில் தடுப்பு. அதை பிடித்தபடி நின்ற நான், பூவை என்ன செய்வது என்று தெரியாமல், அதை விரித்து, நீண்டு கிடக்கும் அவர் கால்களின் மேல் சாத்திவிட்டு நிமிர்ந்தேன். அடுத்த நொடி அந்தக் கால்கள் இப்படியும் அப்படியுமாக அசைந்து நின்றன.  யாருமே இல்லை. நானும் பெரியவரும் மட்டும்தான்…!  பேச விருப்பமாக இருந்தது. ஆனால், அவர் அமர்ந்திருந்த விதம், தோற்றம் தயக்கமளித்தது. மனத்துக்குள் பலவிதமான எண்ணங்களோடு அப்படியே நின்றுவிட்டேன். ஒரு அரை மணி நேரம் நின்றிருப்பேன். பின், என் மனைவி, மகள் மற்றும் ராஜப்பாவும் உமாவும் வந்திட தரிசனம் முடித்தோம்.

அப்படியே காமாட்சி அம்மன், வரதராஜர் என்று ஒரு ரவுண்டு. மாலை வரவும் செங்கல்பட்டு நோக்கி புறப்பட்டோம். காலை வந்த அதே வேன் செங்கல்பட்டில் எங்களை கொண்டுவிட்டது. முதல் நாள் வந்த அதே பஸ், அதே டிரைவர் – கண்டக்டர் செங்கல்பட்டில்! அடுத்த ஆச்சரியம்போல மதுரையிலும் முதல் நாள் ஏறிய அதே டவுன்பஸ், அதே டிரைவர்-கண்டக்டர். வீட்டு வாசலில் என்றால், வீட்டு வாசலில் இறக்கிவிட்டனர்.

எனக்கு உடல் நலமில்லை என்பதும், நான் குரு தரிசனம் மேற்கொள்ளப் போகிறேன் என்பதும் இவர்களுக்கெல்லாம் எப்படித் தெரியும்?  என் அம்மா, மனைவி, ராஜப்பா, உமா எல்லோருமே மிக ஆச்சர்யப்பட்டார்கள். ‘இது முழுக்க முழுக்க பெரியவரின் க்ருபை’ என்றனர். க்ருபையின் உச்சம் என்ன தெரியுமா?  காலடியில் நின்றிருந்த நிலையில், சொந்தமாக ஒரு வீடில்லாத வேதனையை நான் பிரதிபலித்திருந்தேன். ராஜப்பா தனக்கொரு பிள்ளையில்லாத குறையை பிரதிபலித்திருந்தார்.

அதன்பின் நான் புதுவீடு கட்டி குடியேறினேன். கிரகப் பிரவேசத்தில் ராஜப்பா எனக்கு உதவியாக சாப்பாடு பரிமாறும்போது தகவல் வருகிறது – உமாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக… ஒரே நாளில் இருவருக்கும் வரம்!  இதை தற்செயல் என்று கூறமுடியுமா?  மிக முக்கியமான ஒரு விஷயம். அந்த காய்ச்சலில் விழுந்தடித்துச் சென்று நான் தரிசித்துவிட்டு வந்த 30ஆம் நாள், மகா பெரியவர் முக்தியடைந்துவிட்டார். ‘குணமடைந்த பிறகு செல்வோம்’ என்று கருதியிருந்தால், பெரியவர் தரிசனமே கிடைத்திருக்காது!  இதை என்னவென்று சொல்வது?

மனத்துக்குள் குருவாய் கருதி உருகிக் கொண்டிருந்த எனக்கு கல்கி வழியாக விடை தந்தவர் – திருவடி தீட்சை தரவும் விரும்பி, அதற்கான விருப்பத்தை ஏற்படுத்தி பயணிக்க வைத்து அழைத்து அனுக்கிரகம் செய்திருக்கிறார் என்பதையன்றி வேறு எதைச் சொல்ல?


நன்றி: தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

No comments:

Post a Comment