Contact Us

Name

Email *

Message *

Wednesday, 18 September 2013

சந்திரசேகரம் - Vol 3

பூஜைகளில் மிக பிரபலமான ஒரு பூஜை இருக்க முடியும் என்றால், அது சரஸ்வதி பூஜையாகத்தான் இருக்கும். பள்ளிக்கூடம் பக்கமே தலைவைத்துப் படுக்காதவன்கூட, இந்த பூஜையை வருஷத்தில் ஒருநாள் வெகு விமர்சையாக கொண்டாடுவதைப் பார்த்திருக்கிறேன்.

இந்த நாளில் குப்பைகள் அகற்றப்பட்டு, ஒரு புதுப்பொலிவை உருவாக்கிக் கொண்டு, அவரவரும் அவரவர் தொழிலுக்கு பிரதானமான ஆயுதங்களையே அந்த சரஸ்வதியாக கருதிக்கொண்டு சந்தனம், குங்குமம் இட்டு பூஜித்து வரும் ஒரு அரிய தொழில் வணக்கச் செயல்பாடு, இந்த உலகிலேயே இந்தியாவைத் தவிர, வேறு எங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

சரஸ்வதிக்கு இத்தனைக்கும் கோயில்கள் அதிகம் இல்லை; தமிழ்நாட்டில் கூத்தனூர், ஆந்திராவில் பாஸர், வார்கல் என்று ஒரு சிலதான்! ஆனால், எழுதும் பேனாவும், எழுதப்படும் தாளும் சரஸ்வதியாக பார்க்கப்படுகிறது.

புத்தகங்களை மிதிப்பதோ, பேனா பென்சிலை காலால் எடுக்க முற்படுவதோ, பெரும்பாவமாக கருதப்பட்டு, அந்தத் தவறை நான் சிறு வயதில் செய்தபோது, காலிலேயே அடித்திருக்கிறாள் அம்மா.

கூடவே, ‘இப்படி எல்லாம் செய்தால் படிப்பு வராது… படிப்பு வராவிட்டால், தற்குறியாகி விடுவா. அதன்பின் வாழ்க்கையில் அநேக இடங்களில் தலைகுனிய வேண்டி வரும்’ என்று, அம்மா அன்று சொன்னபோது பெரிதாக புரியவேயில்லை. அது ஒரு மிகையான கருத்தாகத் தான் தோன்றியது.

ஆனால், மொழி தெரியாத ஒரு ஊரில் – நான் எத்தனை பெரிய எழுத்தாளனாக இருந்தபோதும், என்னை தற்குறியாக உணர்ந்தபோது அம்மா சொன்னது அஸ்திரம்போல் நின்றது.

நான், என் மனைவி, மகள் மூவரும் ராஜஸ்தான் வரை சென்று வந்தோம். அங்கே, சில இடங்களுக்கு பஸ்ஸில் பயணிக்க வேண்டி இருந்தது. ஆங்கிலம் தெரிந்தவர்களே அங்கு அவ்வளவாக இல்லை. ஊமை பாஷை பேசி சிரமப் பட்டபோதுதான், பிறமொழியறிவு என்பதும் எத்தனை முக்கியம் என்பது புரிந்தது.

என் மகள் ஹிந்தி படித்திருந்த காரணத்தால், அவள் உதவியால் தப்பிக்க நேர்ந்தது. இப்போதுகூட, தமிழில்தானே நான் ஒரு எழுத்தாளன்?

தமிழ் பேசுபவர்கள் என்ன ஒரு எட்டு கோடிபேர் இருப்பார்களா? உலக மக்கள் தொகையோ 700 கோடி! நம் பாஷை பேசுபவர்கள் உலக மக்கள்தொகையில் 
ஒரு சதவிகிதத்தவர்தான். இந்த ஒரு சதவிகிதத்திலும் அவ்வளவு பேரும் படித்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை. இதிலும் பாதிபேர்தான் தேறுவார்கள். அதாவது நான்கு கோடி பேர்! இவர்களிடம் மட்டுமே என் ஜம்பம் செல்லுபடியாகும் எனும்போது, உலகப் பொதுமொழி ஒன்றின் அறிவு நமக்கு எத்தனை இன்றியமையாதது என்பது புலனாகிறது.

இந்த மொழி, ஞானம், கல்வி எல்லாவற்றுக்கும் அதிதேவதைதான் சரஸ்வதி! இவளைப் பற்றிய பெரியவரின் வியாக்யானம் என் மனத்தில் பசைபோட்டு ஒட்டிக்கொண்ட ஒன்று.

‘சரஸ்வதி பூஜையானது சரத் காலத்தில் வருகிறது. சரத் காலத்தில் நிகழ்வதாலேயே இதற்கு சாரதா நவராத்திரி என்று பெயர்.

காஷ்மீரத்தில்தான் இவளுக்கான வழிபாடு பெரிதாக உள்ளது. அதனால் அங்கே ஒரு சாரதா பீடமே உண்டு. சரஸ்வதி வெள்ளை புடைவை உடுத்தி, சிரசிலும் சந்திர பிறையை அணிந்து, வீணையும் ஏடுடைய கையுமாக இருப்பவள்.

காஷ்மீரமும் பனியால் போர்த்தப் பட்டு வெண்ணிற மயத்தில் உள்ளது. தென்னகத்தில் காஞ்சிபுரம்தான் தென்னக காஷ்மீரம். இங்கே காமாட்சிதான் சரஸ்வதியாக சேவை சாதிக்கிறாள். அதனால் தான், காஞ்சி கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிற்று. பல்கலைகழகங்கள் எல்லாம் இங்கு உருவாகி சேவை செய்தன.

வடக்குக்கும் தெற்குக்கும் எப்போதும் நெருக்கமான பல தொடர்புகள் உண்டு.
அங்கொரு மதுரா – இங்கொரு மதுரை; அங்கொரு பாடலிபுத்திரம் – இங்கே திருப்பாதிரிப்புலியூர்; அங்கொரு காசி – இங்கே ஒரு தென்காசி; அங்கொரு காஷ்மீரம் – இங்கே காஞ்சி.

இப்படி பல ஒன்றுபட்ட தன்மை கொண்ட வடக்கிலும் தெற்கிலும் சரத் காலமான புரட்டாசி மாத காலத்தில்தான், ஒரே மாதிரி சீதோஷ்ண நிலை நிலவுகிற தாம். மற்ற பருவங்களில் கேரளாவில் மழை என்றால் இங்கு வெயில் வாட்டும். டெல்லியில் குளிர் வாட்டும்போது தமிழ் நாட்டில் அதன் சுவடே இருக்காது. மாறுபட்ட பருவங்கள் பல கொண்டதுதான் நம் நாடு. ஆனால், சரத் காலத்தில் உச்சியாகிய காஷ்மீரில் இருந்து பாதமாகிய கன்னியாகுமரி வரை பெரும்பாலும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை!

குறிப்பாக, காலைப் பொழுதும், மாலைப்பொழுதும் கலகலவென்று இருக்கும். மப்பும் மந்தாரமும் இருந்து மனத்தில் ஒரு மந்தம் தோன்றாது.

இப்படி ஒரு காலம்தான் தியானிக்க, பூஜிக்க ஏற்ற காலம்! அப்படி ஒரு காலத்தில் வாழ்க்கைக்கு ஆதாரமான ஞானம், கல்வி இரண்டுக்கும் அதி தேவதையானவளுக்கு நாம் விழா எடுக்கிறோம்.

இவள் நமக்கு தரும் கல்வி, வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமல்ல. நான் யார் என்னும் கேள்விக்குப் பின்னால் உள்ள பிறப்பின் ரகசியங்களை, பிரபஞ்ச உண்மைகளை அறியும் ஞானக் கல்வியும் கூட!

பெரியவர் இப்படி சரஸ்வதிக்கான விளக்கத்தில் காஷ்மீர் தொட்டு காஞ்சி வரை விவரிக்கும்போது, அதில்தான் எத்தனை அரிய தகவல்கள்!

சரஸ்வதி பற்றி சொல்லும்போது, தட்சிணாமூர்த்தியையும் விட்டுவிடாமல் ‘இருவருமே வெள்ளைவெளேரென்று இருக்கிறார்கள்’ என்கிறார்.

வெண்ணிறம் ஏழு வர்ணங்களில் சேராது; பரம நிர்மலமான சுத்த சத்வத்தை குறிப்பது. இதனுள் ஒளி ஊடுருவும்போது இது ஸ்படிகமாகிறது.
அதனால்தான் சரஸ்வதி, தட்சிணா மூர்த்தி இருவர் கரத்திலும் ஸ்படிக மாலை இருக்கிறதாம்!

தலையிலும் பிறை… அதாவது சந்திர கலை! எது வளருகிறதோ அதுதான் கலை. வித்தைக்கும் முடிவில்லை. அப்போது வளர்ச்சிதானே? அதுதான் குறியீடாக இருவர் சிரத்திலும் காணப்படுகிறது.

சரஸ்வதியே இன்னமும் படித்துக் கொண்டுதான் இருக்கிறாளாம். எவ்வளவு படித்தாலும் படித்தது கைமண் அளவாகவே இருக்கிறதாம்.

இந்தப் படிப்பு, அடக்கத்தை பணிவை, தராவிட்டால் அவ்வளவு தான்.

‘கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர்எனின்’ -

எனும் வள்ளுவரின் வாக்கு கூட, ‘பரமேஸ்வரனை பாதபூஜை பண்ணச் சொல்லாத படிப்பாலே ஒரு பயனும் இல்லை’ என்கிறதாம்.

சரஸ்வதியை தொட்டு இப்படி கொட்டிக் குவித்திருக்கிறார் பெரியவர். இதை எல்லாம் வாசித்துவிட்டு சரஸ்வதியை பார்க்கும்போது, எனக்குள் காஷ்மீரம் விரிகிறது. அங்குள்ள பண்டிதர்கள் தெரிகிறார்கள். சரத் காலம் பிரிகிறது. அவளே இன்னமும் படித்தபடி இருக்கிறாள் எனும் போது, நாம் எந்த மூலை என்று மனம் அடங்கி, இன்னமும் கற்றிடும் வேட்கைதான் அதிகரிக்கிறது.

நம் உருவ வழிபாடுதான் எத்தனை பொருளும் ஆழமும் கொண்டிருக்கிறது.

அடேயப்பா…!

பெரியவருக்கு பின் எவ்வளவோ சாது சன்னியாசிகள் வந்து விட்டார்கள். இன்னமும் வரப்போகிறார்கள். இவர்களெல்லாமே நமக்கான குருமார்கள். இவர்களைப் பின் தொடர வேண்டியது நம் கடமை.

ஆனால், இவர்களில் பலரிடம் நமக்கு நிறைய கேள்விகள் எழும்புகின்றன. இவர்களின் சில செயல்பாடுகள் நம்மை சலனப்படுத்துகின்றன. உண்மையில் யார் துறவி என்று ஒரு கேள்வி எழும்பி நின்று மனத்தில் முட்டுகின்றது.

சில துறவிகள் ஆன்மிக பில் கேட்ஸாகவே உள்ளனர். கோடிகள் அவர்களிடம் சாதாரணமாக புழங்குகின்றன. பாத பூஜைக்கு பல ஆயிரங்கள் என்று கட்டணம்.

இவ்வேளையில், ‘யார் துறவி? எது துறவு?’ என்கிற கேள்விக்கு இலக்கணமாக, பெரியவர் திகழ்ந்த ஒரு அரிய சம்பவம் நினைவுக்கு வருகிறது.

பெரியவர் அறுபது வயதை தொட்டிருந்த சமயம். 1968ம் வருடம் என்று எண்ணுகிறேன். பக்தர்கள் அவருக்கு தங்க கிரீடம் சூட்டி கௌரவிக்க எண்ணினார்கள்.

ஆந்திர மாநிலம், விஜய வாடாவில் பெரியவரின் இந்த வைபவத்தை ஒட்டி ஒரு தங்க கீரீடமும், இரண்டு லட்ச ரூபாய் காணிக்கையும் வழங்க தீர்மானித்திருந்தனர்.

இதுபற்றிய தகவல் பெரியவரை அணுகவுமே, அதற்கான வசூலை தடுத்துவிட்டார் பெரியவர். அவ்வேளையில் அவர் சொன்னதுதான் யார் துறவி – எது துறவு என்பதற்கு இலக்கணம்!

ஸ்தாபன பலம் என்று ஒன்று மிதமிஞ்சி ஏற்பட்டுவிட்டாலே, அதன் அதிபதியனாவன் ஆத்ம பலம் சம்பாதிக்க சிரமப்பட வேண்டியதில்லை என்னும் ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது. சன்னியாசி என்பவனை, ஒரு உடைமையுமில்லாத ஏகாங்கியாக, அவன் தன் ஊர் என்று சொல்லிக்கொள்வதற்குக்கூட, ஒரு இடம் இருக்க வேண்டாமென்று, சதா ஊர்ஊராக சஞ்சாரம் பண்ணும்படிதான் சாஸ்திரம் கூறியுள்ளது.

இருந்தும், சமூகத்துக்கு வழிகாட்ட ஒரு அமைப்பு தேவைப்பட்டு அதுதான் மடம் என்றானது. இதை ஒரு தவிர்க்க முடியாத தீமை (Necessary evil) என்றுதான் கூற வேண்டும்.தவிர்க்க முடியாத இந்தத் தீமையை நன்மையாக மாற்றிக்காட்டும் கடமையே சன்னியாசியின் கடமை. இந்தக் கடமையின் போது, அவனது ஆன்ம தபோ பலத்தைவிட, பணத்தின் பலம் பெரிதாகி விடாமல் அவன் பார்த்துக் கொள்ள வேண்டும்.காஞ்சிமடம் அவசியச் செலவுக்கே கஷ்டப்பட்ட காலம் உண்டு. ஆனால் சந்திரமௌலீஸ்வரர் கருணையாலே அந்த கஷ்டம் நீங்கியது. இந்த மாதிரி கஷ்டங்களை ஈஸ்வர சோதனையாகவே கருதினேன். உத்தமமா பார்த்துக்கொள்வது அவன்தான்; பணமல்ல.எனவே, எப்போதும் Nil Balance லேயே மடம் இருக்கும்படி ஜாக்ரதையாக நிர்வகித்து வருகிறேன். இன்று இரண்டு லட்சம் என்று சர்ப்ளஸ்ஸில் போகப் பார்த்தது. இதற்கு ‘ப்ளஸ்’ கூடாது என்று கருதுகிறேன். ஸ்வாமிவாரு தடுத்து விட்டாரே என வருத்தப்படவேண்டாம். பணத்தை வாங்கிக்கொண்டு, நான் பண்ணுவது ஆசீர்வாதமாக இருக்காது. அதற்காக பணமே வேண்டாம் என்று கூறவில்லை. நெருக்கடி ஏற்படும்போது, உங்களிடம்தான் பிட்சை கேட்டு நிற்பேன். தேவைக்குத்தான் பணம். சன்னியாசிக்கு பணத்தைவிட ஆத்மபலம்தான் பெரும் பணம்…!’ – இப்படிச் சொன்ன பெரியவர், அதன்பின் என்ன செய்தார் தெரியுமா?



நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

No comments:

Post a Comment