Contact Us

Name

Email *

Message *

Sunday, 22 September 2013

மஹாலயபஷம்

ப்புண்ணிய பாரத கண்டத்தில் பிறந்து வேத ஆகம விதிப்படி நடக்கின்ற நாம், நமது பிதுர்களுக்குச் செய்யக்கூடிய சிரார்த்த காரியங்களை முறைப்படி செய்ய வேண்டியது முக்கியமான கடமை ஆகும். மஹாளயபக்ஷத்தில் செய்வது சிறப்பானது. மஹாளயபக்ஷம் என்பது, புரட்டாசி மாதப் பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரை உள்ள காலமாகும்.

இதில் வரும் பரணிக்கு மஹா பரணி என்று பெயர். திரயோதசி திதிக்கு கஜசாயை என்றும்; அஷ்டமி திதிக்கு மத்தியாஷ்டமி என்றும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூன்று புண்ணிய காலங்களில் செய்யும் சிரார்த்த காரியங்கள் கயையில் செய்யும் சிரார்த்தத்திற்கு இணையானது. மேலும் அமாவாசை துவிதீய பாதம், பரணி துவாதசி, அஷ்டமி ஆகிய நாட்களில் திதி, நட்சத்திரம், வாரம் ஆகியவற்றால் ஏற்பட்ட தோஷங்களைக் கவனிக்கத் தேவையில்லை.

காருணிகர்கள் எனப்படுகின்ற பெற்றோர் அல்லாத சிறிய தகப்பனார், பெரிய தகப்பனார், தமையனார், தம்பி, அத்தை, அம்மான், பெரிய தாயார், சிறிய தாயாரின் சகோதரர்கள், அவர்களின் பிள்ளைகள், மனைவி, மாமனார், அக்காள் கணவன், மருமகள், மைத்துனர், குரு, எஜமான், நண்பர் மற்றும் நமக்குப் பிரியமான சகல ஜீவராசிகளுக்கும் மஹாளய பக்ஷத்தில் சிரார்த்தம் செய்ய வேண்டும். மேலும் முறையாக குருவிடம் தீட்சை பெறாமல் சுயமாக சந்நியாசம் பெற்றுக் கொண்டு காலமானவர்களுக்கு துவாதசியில்தான் சிரார்த்தம் செய்ய வேண்டும்; மற்ற திதிகள் ஏற்றதல்ல.

காலம் வராமல் காலனைச் சென்றடைந்தவர்களுக்கு (துர்மரணம் அடைந்தவர்களுக்கு) சதுர்த்தசி திதியில்தான் சிரார்த்தம் செய்ய வேண்டும்; மற்ற திதிகள் ஏற்றதல்ல.

புரட்டாசி பௌர்ணமிக்குப்பின் பிரதமையிலிருந்து அமாவாசை வரை உள்ள 15 நாட்களும் புண்ணிய காலம்தான். ஆகவே காருண்ய பித்ருக்களுக்கும், வாரிசு அல்லாதவர்களும், நமது தாய்- தந்தைக்கும் மேல் குறிப்பிட்டபடி மஹாபரணி, கஜசாயை, மத்தியாஷ்டமி, துவிதீய பாதம் ஆகிய காலங்களில் தர்ப்பணம் செய்தால் முன்சொன்னபடி கயையில் செய்த புண்ணியம் கிடைக்கும்.

மேலும் இந்த சிரார்த்த காரியம் செய்யும் பொழுது விஸ்வேஸ்வரனையும் விஷ்ணுவையும் காலபைரவரையும் ஆராதனை செய்தல் மிகவும் உத்தமம். நாம் நமது முன்னோர்களான மூன்று தலைமுறைக்கும் சேர்த்து சிரார்த்தம் செய்யும்பொழுது, பித்ரு தேவதைகளின் பரிபூரண ஆசிகளும் சகல விதமான சௌபாக்கியங்களும் கிட்டுவதோடு, துன்பம் அணுகாமல் இன்பமாக வாழ அருள்வார்கள். மேலும் காலபைரவரின் அஷ்டோத் திரம் கூறுவதால் சகல நன்மைகளும் அடைந்து நல்வாழ்வு கிட்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தகுதி வாய்ந்த பிராமணர்களைக் கொண்டு சிரார்த்தத்தை சிரத்தையுடன் செவ்வனே செய்தல் வேண்டும்.

வஸ்திரம், அன்னம், ருத்ராக்ஷம், துளசி மாலை, பஞ்ச பாத்திரம், உத்திரணி, கிண்டி, பசு, பூமி, குடை, பாதரட்சை போன்றவற்றை தானம் செய்தால் நன்மை உண்டாகும்.

இவற்றைச் செய்ய இயலாதவர்கள் வில்வத்தை கையில் ஏந்தி தியானம் செய்து ஆற்றில் விடுவதும் உத்தமாகும்.

உத்திரவாகினியாக ஓடும் நதிகளில் சிரார்த்தம் செய்வது சிறப்பானது. மேற்கே துவங்கி கிழக்கு முகமாக வந்து கடலில் சங்கம மாகும் நதிகள், இடையில் சில இடங்களில் வடக்கு முகமாகத் திரும்பி ஓடும். அதுவே உத்திரவாகினியாகும். கும்பகோணத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மணஞ்சேரி என்கிற கிராமத் தையொட்டி, காவிரி நதி உத்திரவாகினியாக ஓடுகிறது. காஞ்சி மஹாபெரியவர் தனது மடத்து பட்டத்து யானைக்கு இங்கேதான் சிரார்த்தம் செய்தார். ஆகவே இந்த ஸ்தலம் கஜேந்திர மோக்ஷ ஸ்தலம் எனப்படுகிறது. இங்கே தர்ப்பணம் செய்வதும் சிறப்பானது.

மஹாளய பக்ஷத்தில் வரும் அமாவாசை தினம் சிரார்த்த காரியத்திற்கு மிகவும் உகந்த நாள்!

Also read: Mahalaya Paksha



நன்றி: தேப்பெருமாநல்லூர் சுந்தர சுவாமிகள்

No comments:

Post a Comment