Contact Us
Home » Archives for October 2019
Friday, 25 October 2019
Thursday, 17 October 2019
"அர்த்தமுள்ள இந்துமதம்" உருவானது எப்படி?
அர்த்தமுள்ள இந்துமதம் உருவானது ஒரு க்ராஸ் டாக்கினால் என்றால் ஆச்சரியமாயில்லை?
ஒரு நாள் கண்ணதாசன் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இடையில் க்ராஸ் டாக் ஒன்று வந்தது. நண்பர் அப்புறம் பேசுகிறேன் என்று போனை வைத்து விட்டார்.
கண்ணதாசன் தொடர்ந்தார்: “யாருங்க நீங்க?”
“நான் தான் தினமணி கதிர் ஆசிரியர் சாவி பேசுகிறேன். நீங்க யாரு?”
“நான் தான் கண்ணதாசன் பேசறேன்.”
“நீங்கள்ளாம் நம்ம பத்திரிகையிலே எழுதுவீங்களா?” சாவி ஆதங்கத்துடன் பேசினார்.
“ஏன் எழுத மாட்டேன். எழுதறேனே!”
சாவி உற்சாகக் குரலில் உடனே சொன்னார்: “தலைப்பை மட்டும் சொல்லுங்கள். இந்த வாரமே அட்வர்டைஸ் பண்ணிடறேன்.
சற்றும் தயங்காமல் பதில் சொன்னார் கண்ண்தாசன் “அர்த்தமுள்ள இந்து மதம்!” இப்படி உருவானது தான் அர்த்தமுள்ள் இந்துமதம்!
ஏறத்தாழ ஒரு மஞ்சள் பத்திரிகை ஆகி விட்ட தினமணி கதிர் பிழைத்தது. மக்கள் கண்ணதாசனின் ஒரு புதிய பரிமாணத்தைக் கண்டனர்; களி கொண்டனர்!
அருகிலிருந்த கண்ணதாசனின் உதவியாளர் இராம. கண்ணப்பன் வியந்து போனார். தன்னைக் கேட்காமல் எந்தத் தலைப்பையும் சொல்லாத கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் என்று தலைப்பைச் சொன்னது ஆச்சரியமாக இருந்தது.
இந்தத் தலைப்பு எப்படித் தோன்றியது?
“சென்ற வருஷம் கற்பகாம்பாள் கோவில்ல நடந்த கவியரங்கத்தில் பாடின கவிதையில் இருக்குதடா இந்தத் தலைப்பு.” என்று கண்ணப்பனிடம் கூறிய கவிஞர் அந்தக் கவிதையைப் பாடினார்.
“காடுபொடி யாகநட மாடுசிவன் தேவியர்கள்
காவல்கொள் வந்த நாடு
காசிமுதல் கன்னிவரை காணுமிடம் அத்தனையும்
கன்னிவிசா லாட்சி வீடு
ஆடவரில் தேவியர்கள் பாதியெனும் தத்துவமும்
ஆக்கியவ ரென்று பாடு
ஆதிமுதல் அந்தம்வரை அர்த்தமுள்ள இந்துமதம்
ஆசையுடன் தந்த ஏடு!”
மறுநாள் காலை அலுவலகத்தில் அர்த்தமுள்ள இந்துமதம் ஆரம்பமானது. தன் அனுபவத்தைக் குழைத்துப் புதுவிதமாக இந்து மதத்தை அவர் அறிமுகப்படுத்திய விதம் அனைவரது பாராட்டையும் பெற்றது. பல தொகுதிகளாக மலர்ந்தது அர்த்தமுள்ள இந்து மதம்!
அர்த்தமுள்ள இந்து மதத்தைப் படித்த ராஜாஜி மலர்ந்தார். ஆனால் அவருக்குக் கோபம் வந்தது. கல்கி ஆசிரியரிடம் இப்படிப்பட்ட் அருமையான கட்டுரைகள் நமது பத்திரிகையில் அல்லவா வரவேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்”
கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரன் சற்று திகைத்துப் போனார். ஏனெனில் கண்ணதாசன் ராஜாஜியைக் கடுமையாகத் தாக்கி வந்த காலம் அது!
ஆனால் ராஜாஜி பெருந்தனமையாக கவிஞரைக் கல்கியில் எழுத ஊக்குவிக்கிறார்.
ஆதாரம் : கண்ணதாசனின் அர்த்தமுள்ள அநுபவங்கள்.
இராம கண்ணப்பன் வெளியீடு: கங்கை புத்தக நிலையம், தி.நகர். சென்னை – 17.
நன்றி: tamilandvedas.com - https://bit.ly/2Mph95u