அண்மையில் ஒரு பெரும் பேராசிரியர் ஆற்றிய சொற்பொழிவுக்குச் சென்றிருந்தேன். அவரது சொற்பொழிவின் இடையில் திருத்தொண்டத் தொகை பற்றிய செய்தி வந்தது. அவர் இதிலுள்ள முதல் தொடரான தில்லை வாழ் அந்தணர் என்பது சிற்றம்பலத்தில் ஆடிக் கொண்டிருக்கும் பெருமானையே குறிக்கிறது. இத்தொடரில் “வாழ்” என்னும் சொல் முக்காலத்தையும் குறிக்கும் சொல். முக்காலத்தும் இருப்பவர் சிவபெருமானே; அதனால் அது அவரையே குறிக்கும். அது அங்கு அர்ச்சனை செய்து வரும் தீக்ஷிதர்களைக் குறிக்காது என்றார். என்னுடன் வந்த நண்பர் அவர் சொல்வது சரியா என்று கேட்டார்.
பேராசிரியர் சொன்னது சரியானதா என்று குறிப்புகளைப் புரட்டிப் பார்த்தேன். தேவார காலத்திற்கு முன்பிருந்தே அதாவது சுந்தரர் இந்த அடியைப் பாடுவதற்குப் பல நூற்றாண்டு காலத்திற்கு முன்பாகவே தில்லை மூவாயிரவர் தனிச் சிறப்புப் பெற்றிருந்தனர்.
திருஞானசம்பந்தப் பெருமான் அந்தணர் பிரியாத சிற்றம்பலம் என்று அவர்களைப் போற்றுவதைக் காண்கிறோம். குலசேகர ஆழ்வாரும், தில்லை கோவிந்தராசரைத் தில்லை மூவாயிரவர் ஏத்த அணிமணி யாசனத்திருந்த பிரான் என்று போற்றுவதைக் காண்கிறோம். அந்நாளில் தில்லையம்பலத்து தெற்றியில் இருந்த கோவிந்தராசரை தீக்ஷிதர்கள் பூசித்து வந்ததையே இத்தொடர் குறிக்கிறதென்பது ஆராய்ச்சியாளர் கருத்தாகும்.
பெரிய புராணத்தில் தில்லைவாழ் அந்தணர் சருக்கத்தில் தில்லை மூவாயிரவர் தீக்ஷிதர்களே என்னும் கருத்து தெளிவாக்கப்பட்டுள்ளது. மேலும், திருஞானசம்பந்தர் புராணத்தில் தில்லைவாழ் அந்தணர்களைத் திருஞானசம்பந்தர் சிவகணநாதர்களாகவே கண்ட குறிப்பும் உள்ளது.
இனி, சிற்ப உலகம் தீக்ஷிதர்கள் பற்றி என்ன சொல்கிறதென்று பார்ப்போம். சேக்கிழார் காலத்தை ஒட்டியே அமைக்கப்பட்ட ஆலயம் தாராசுரம் ஐராவதேசுவரர் ஆலயமாகும். இதில் ஸ்ரீவிமானத்தின் புறச்சுவரில் அறுபத்துமூவர் வரலாற்றை விளக்கு தொடர்சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் தில்லைவாழ் அந்தணரைக் குறிக்கும் வகையில் ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. இதில் பஞ்சாட்சரப் படிகள் காட்டப்பட்டுள்ளன. அதன் முன்புறம் மூவர் நிற்கின்றனர்.
ஆயிரத்திற்கு ஒருவர் வீதம் மூன்றாயிரத்துக்கு மூன்று தீக்ஷிதர் திருவுருவங்கள் காட்டப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இதே போன்ற காட்சியைத் திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் ஆலய அறுபத்துமூவர் சிற்பத் தொடரிலும், வடாற்காடு மாவட்டம் புரசை கயிலாசநாதர் கோயில் சிற்பத் தொடரிலும் காண்கிறோம்.
இவர்களுக்கு அடுத்து வந்த அருணகிரிநாத சுவாமிகளும் தில்லைத் திருப்புகழில் தில்லை மூவாயிரவரைக் குறிக்கின்றனர்.
இப்படி காலந்தோறும் மூவாயிரவர் பற்றிய குறிப்புகள் தெளிவாக இருந்த போதிலும், அண்மைக் காலத்துச் சொற்பொழிவாளர்கள் மூல நூலைப் படிக்காமல் மனம் போனபடி சொல்லி மக்களைக் குழப்பும் அரும்பணியைச் செய்து வருகின்றனர்.
இவர்களுடைய அரும்பணிகளால் அறுபத்துமூவர் வரிசையில் தொகையடியார்களை விலக்கி விட்டு பிரதிஷ்டை செய்வது போன்ற அபத்தங்களும் நடைபெற்று வருகின்றன. அன்பர்களும் சொற்பொழிவுகளைக் கேட்பதோடு நின்றுவிடாமல் மூலநூல்களைத் தேடிப் பிடித்து அவர்கள் சொன்னவற்றைச் சேர்த்துச் சிந்திக்கவும் வேண்டும்.
நன்றி : சிவசுந்தரி (தமிழ் தெய்வீகத் திங்கள் இதழ்)
No comments:
Post a Comment