"நாம் எதை நினைக்கிறோமோ அவை அனைத்தும் நடைபெறுவதில்லை. அப்படி நாம் நினைத்தபடி நடைபெறாத சமயத்தில், 'பகவத் சங்கல்பம்போல் நடைபெறுகிறது' எனக் கூறுகிறோம். அழிவையுடைய நாம் நினைக்கும் எண்ணங்களும் காரியங்களும் அதன் மூலம் ஏற்படும் சுகங்களும் அழிவை உடையவை. ஆகையால்தான் நாம் நினைத்தபடி நடக்கிறதில்லை. நாம் என்ன நினைக்கிறோம்? எப்போதும் சந்தோஷமாய் இருக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் எப்போதும் நாம் சௌக்யமாய் இருக்க முடிவதில்லை. ஆனால் அழிவில்லாத பகவானை நாம் நினைத்தால் நாமும் அழிவில்லாதவர்களாக ஆகிவிடுவோம். இவ்விதம் அழிவில்லாத தன்மையை அடைவதற்கும் எப்போதும் சந்தோஷமாய் இருப்பதற்கும் பகவானான ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியும் அவன் நாமாவான ராம நாமாவுமே முக்ய சாதனம். 'ரமயதீதி ராம:' என்பதனால் அனைவரையும் சந்தோஷப்படுத்துபவன் தானும் சந்தோஷமாகத்தான் இருப்பான். ஆகையால் தானும் சந்தோஷமாய் இருந்துகொண்டு அனைவரையும் சந்தோஷப்படுத்துபவன் ராமன். எல்லோரும் அழிவில்லாத ஸ்வரூபமான ராமனையும் அவன் நாமாவையும் நினைத்து, சொல்லி அழிவில்லாத ஆனந்தத்தை அடைவோம்."
- ஸ்ரீ காமகோடி ப்ரதீபம், 14.03.1963.
No comments:
Post a Comment