Contact Us

Name

Email *

Message *

Friday, 7 February 2014

மஹா சிவராத்திரி கிரிவலம்


தென்னாடுயை சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஞான நெறி காட்டு மலை
ஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை
அஞ்ஞானக் கங்குல் அகற்று மலை
அன்பருக்கு மெய்ஞானச் சோதி விளக்கு மலை 
ஞானத் தபோதனரை வா என்று அழைக்கு மலை – அண்ணாமலை

என்றெல்லாம் குரு நமசிவாயரால் போற்றப்படும் பெருமை கொண்ட மலை அண்ணாமலை. பகவான் ரமணரும் அண்ணாமலையைப் போற்றி ”அருணாசல அக்ஷர மணி மாலை”, “அருணாசல பஞ்சரத்னம்”, ”அருணாசலத் துதி ” போன்ற பதிகங்களை இயற்றியுள்ளார்.

இம்மலையின் தோற்றம் பற்றி பகவான்,

”ஆதிஅரு ணாசலப்பேர் அற்புதலிங் கத்துருக்கொள்
ஆதிநாள் மார்கழியில் ஆதிரையச் – சோதியெழும்
ஈசனைமால் முன்அமரர் ஏத்திவழி பட்டநாள்
மாசிசிவ ராத்திரியா மற்று” – என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈசன் இத்தலத்தில் ஜோதி வடிவாய் அவதரித்த நாள் மாசி மாதத்து சிவராத்திரி என்றால், அன்னை ஈசனை நோக்கித் தவமிருந்து இடப்பாகம் பெற்ற நாள் கார்த்திகை மாதத்து கார்த்திகை நன்னாள் ஆகும். இந்த நாளிலேதான் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இந்த நன்னாளில் மலையை ”கிரிவலம்” வருவது மிகவும் உயர்வானது. பல்வேறு நற்பலன்களைத் தர வல்லது. பகவான் ரமணரும் கிரிவலத்தை மிக உயர்வாகக் கூறியிருக்கிறார். ஆரம்ப காலத்தில் பகவான் ரமணரே தனியாகவும், பல சாதுக்களுடனும் கிரிவலம் வந்திருக்கிறார். ”இதை வெறும் மலை என்று நினைக்காதீர்கள், இதுவே அருணாசலம், இதுவே லிங்கம், இதுவே எல்லாம். நெருப்பை நாம் அறிந்து தொட்டாலும், அறியாமல் தொட்டாலும் அது சுடுவது நிச்சயம் போல, இந்த மலையை நாம் பக்தியுடன் வலம் வந்தாலும் சரி, அல்லது பக்தி இல்லா விட்டாலும் சரி, பலன் உண்டாவது நிச்சயம். வேக வேகமாக கிரிவலம் செல்ல வேண்டும் என்று அவசியமில்லை, நிறுத்தி, நிதானமாக, பக்தியுடன், பாராயணம் செய்து கொண்டு செல்ல வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் அவர், ”இந்த மலை வெளியே பார்ப்பதற்கு அசைவற்றதாய் இருக்கிறது. ஆனால் உள்ளே பற்பல யோகியர்களும், சித்தர்களும், தேவர்களும் சதா சர்வ காலமும் அருணாசலரை வணங்கித் தொழுதுகொண்டிருக்கின்றனர். மலைக்கு உள்ளே பற்பல குகைகளும், அருவிகளும் உள்ளன. அருணாசலேஸ்வரரே அருணாசல யோகியாய் இம்மலையின் வடப்புறத்தே ஒரு ஆலமரத்தின் கீழ் எழுந்தருளி தியானம் செய்து கொண்டிருக்கிறார்” – என்றும் பகவான் குறிப்பிட்டிருக்கிறார்.

அதுவே தலம் அருணாசலம் தலம்யாவிலும் அதிகம்
அது பூமியின் இதயம் அறி அதுவே சிவன் இதயப்
பதியாம் ஒரு மருமத்தலம் பதியாம் அவன் அதிலே
வதிவான் ஒளி மலையாநிதம் அருணாசலம் எனவே
- பகவான் ரமணர்.

இந்த நன்னாளில் நீராடி, நீறு பூசி, ஐந்தெழுத்து மந்திரத்தை விடிய விடிய ஓதி வருதல் சிறப்பு. சிவ புராணம் படித்தலும், திருமுறைகளைப் பாராயணம் செய்தலும் நற்பலனைத் தரும். அண்ணாமலை தலத்தை கிரிவலம் வருதல் அளவற்ற புண்ணியத்தைத் தரும். அன்னை பார்வதி தேவியுடன், முப்பத்து முக்கோடி தேவர்களும், சித்தாதி யோகியர்களும், முனிவர்களும் மஹா சிவராத்திரி அன்று கிரிவலம் வருவதாக ஐதீகம்.

No comments:

Post a Comment