காயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை...
தாய்க்கு சமமான தெய்வம் இல்லை
காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை
ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை
ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து சாஸ்த்திரங்களும் வலியுறுத்துகின்றன. மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிக சிறப்பானதாகும். வருடத்துக்கு 24 (அ) 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள் மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும். மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி "முக்கோடி ஏகாதசி" என்வும் அழைக்கப்படுகிறது.
ஏகாதசி விரத மகிமை
இராவணனின் கொடுமைகளை சகிக்கமுடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழிமாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர். பகவானும் பிரம்மதேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசி "முக்கோடி ஏகாதசி" எனவும் அழைக்கபடுகிறது .
திருமாலின் அவதாரமான ஸ்ரீ ராமனே பங்குனி மாதத்தில் விஜயா என்ற ஏகாதசி விரதத்தை இருந்து பின் கடலைக் கடந்து சென்று தசக்ரீவனை அழித்து இலங்கையை வென்றார் என புராணம் தெரிவிக்கின்றது. இந்த யோசனையை அவருக்கு பக்தாப்யர் என்ற முனிவர் கூறினார். இந்த ஏகாதசி விரதம் கோரிய பலன்களை தட்டாமல் தரும். மேலும் சீதா தேவியின் அருளையும் பெறலாம்.
ஒரு வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மஹாராஜாவை தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடிய வில்லை, அம்பரீஷ மஹாராஜாவை திருமாலின் சுதர்சன சக்கரம் காத்தது என பாகவத புராணம் தெரிவிக்கின்றது.
திருக்குறுங்குடி எனும் தலத்தில் பாணர் குலத்தைச் சேர்ந்த நம்பாடுவான் ஏகாதசியன்று எம்பெருமானை பாடி தானும் உயர்வுபெற்றதோடு தன்னை அழிக்கவந்த பிரம்மராக்ஷனுக்கும் சாப விமோசனத்தை அளித்ததை கைசிக புராணம் தெரிவிக்கின்றது.
ருக்மாங்கதன் எனும் மாமன்னன் இந்த விரதத்தை தானும் கடைப்பிடித்து தன்நாட்டவரும் பின்பற்றுமாறு செய்ததால் அவன் பெற்ற பெரும் பயனை ருக்மாங்கத சரித்திரம் தெரிவிக்கின்றது.
பீமன் ஒர் ஆண்டுமுழுவதும் இந்தவிரதத்தை செய்யமுடியாத நிலையில் ஆனி மாத சுக்லபக்ஷ ஏகாதசியாகிய நிர்ஜலா எனும் விரதத்தை மட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டின் முழுபயனையும் பெற்றதாக பத்மபுராணம் தெரிவிக்கின்றது.
பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும்கொண்டு எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும். குருக்ஷேத்திர போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்த நாள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏகாதசி விரத முறை
வேத சாஸ்திர ரீதியில் ஏகாதசி விரதித்திற்கு ஓர் முக்கியத்துவம் உண்டு. பகவத்கீதையில் பரமாத்மா 'திதியில் நான் ஏகாதசியாக இருக்கிறேன்' எனக் கூறுகிறார். ஏகாதசியில் விரதமிப்பது மிகவும் சிறந்தது. சிலர் இதை தவறாக கடைபிடிக்கிறார்கள். ஒன்றும் சாப்பிடாமல் இருப்பது மட்டுமல்ல விரதம். இதை முறைப்படி கடைப்பிடிப்பது விரதமாகும். உதாரணமாக ஏகாதசிக்கு முன்பு 3 நாட்கள், பின்பு 3 நாட்கள் என மொத்தம் 7 நாட்கள் விரதம் மேற்கொள்ளவேண்டும்.
முதல் நாள் எளிய உணவும், அடுத்த நாள் பழவகைகள் உணவாக எடுத்துக்கொள்ளவேண்டும். மூன்றாம் நாள் பழரசம் மட்டும் பருகவும். அதற்கு அடுத்த நாள் ஏகாதசி அன்று, எந்த உணவும் சாப்பிடாமல் இருந்தால் விரத தினமாகும். அதற்கு அடுத்த தினம் இதே போல படிப்படியாக உணவு நிலையை மாற்றவும். இதைக் கீழே உள்ள அட்டவணை விளக்கும்.,
திதி உணவு முறை
அஷ்டமி எளிய உணவு (பருப்பு மற்றும் நெய் கலந்த காரமற்ற உணவு)
நவமி சமைக்கப்படாத பழம் மற்றும் காய்கறிகள்
தசமி பழரசங்கள், எலுமிச்சை ரசம்
ஏகாதசி கோவில் சென்று துளசி தீர்த்தம் அருந்தி விரதம் துவங்கவும்
துவாதசி பழரசங்கள், எலுமிச்சை ரசம்
திரயோதசி சமைக்கப்படாத பழம் மற்றும் காய்கறிகள்
சதுர்தசி எளிய உணவு (பருப்பு மற்றும் நெய் கலந்த காரமற்ற உணவு)
இந்த உணவு முறையை கடைபிடிக்கும் சமயம் அந்த நாளில் திதி ஆரம்பிக்கும் நேரத்தை சரிபார்த்து ஆரம்பிக்கவும். ஒருநாளின் பிற்பகுதியில் கூட திதி ஆரம்பிக்கலாம். பஞ்சாங்க உதவியுடன் இதை பின்பற்றவும். இந்த விரத முறை மிகவும் படிபடியாக மற்றும் விஞ்ஞான ரீதியில் அனுகும் முறையாகும். வழக்கமாக திடீரென ஒரு நாள் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தால் நமது உடல் மற்றும் மனத்தடுமாற்றம் ஏற்படும். இதை தவிர்க்கவே இந்த முறை.
ஜோதிடரீதியில் விரதங்களின் தொடர்பை பார்ப்போம். 2 ஆம் பாவம் உணவு உண்பதை காட்டும். 6ஆம் வீடு உடல் நோய் குறிக்கும். விரதம் இருக்கும் சமயம் இதன் விரய பாவம் 1 மற்றும் 5 நடக்கும். 1,5 என்பது ஆன்மிக முன்னேற்றம் மற்றும் நோயற்ற வாழ்வை குறிக்கிறது. நாம் மனமுவந்து இதை செய்வதால் 1,5,11 என செயல்பட்டு சிறந்த வாழ்க்கையை காட்டும்.
விரத நாளான ஏகாதசி அன்று மௌன விரதம் இருப்பதும் நன்று. மௌன விரதம் இருந்தாலும் 1,5,11 என்ற வீடும் குரு மற்றும் சூரியன் சம்மந்தப்பட்டு வேலை செய்வதால் உடல் மற்றும் ஆன்ம முன்னேற்றம் உண்டு.
மேலும் ஏகாதசி அன்று, வளர்பிறை அல்லது தேய்பிறை என எந்த ஏகாதசியானாலும் சூரியனும் சந்திரனும் 120 டிகிரி அதாவது சரியான கோணம் என்ற நிலையில் இருப்பதால் கோள்கள் ரீதியாக இதற்கு முக்கியத்துவம் உண்டு. அன்று நமது உடல் மற்றும் மனது தெய்வ நிலைக்கு (மேல் நோக்கி) செல்ல தயாராகிறது.
நாம் உணவு உட்கொண்டு உணவை ஜீரணம் செய்ய கீழ்நோக்கி இழுப்பது பாவச்செயல் ஆகும். வட இந்தியாவில் இந்த ஏகாதசி விரதம் மிகவும் சிறப்பாகவும் மற்றும் அதிக கட்டுப்பாடுடனும் கடைபிடிக்கிறார்கள். ப்ரம்மச்சாரிகள், சன்யாசிகள், கர்பிணி பெண்கள், முதியவர்கள் விரதத்தை கடைபிடிக்க தேவை இல்லை என சாஸ்திரம் கூறுகிறது.
ஒரு முறை ஏகாதசி விரதம் இருந்தால் உங்கள் மனம் மற்றும் உடல் முன்னேற்றத்தை பார்த்து நீங்களே இதை கடைப்பிடிப்பதா அல்லது வேண்டாமா என முடிவுசெய்யலாம். ஒருவர் உடல் சுகமில்லாமல் இருந்தால் எந்த திதியானாலும் மேற்கண்ட முறையில் 7 நாட்கள் விரதம் இருந்தால் நோய் எளிதில் மாத்திரை உட்கொள்ளாமல் குணமாவதை காணலாம்.
ஏகாதசி அன்று செய்யக்கூடாதது
ஏகாதசி திதி, குறிப்பாக வைகுண்ட ஏகாதசி நாட்களில் தாய், தந்தைக்கு நினைவுநாள் (சிரார்த்தம்) வந்தால் அன்று நடத்தாமல் மறு நாள் துவாதசி அன்று நடத்தவேண்டும்.
ஏகாதசி அன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலிசெய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிக கீழான நரகத்திற்குசெல்வான்.
ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்துவிட வேண்டும்.
ஏகாதசி திதி, குறிப்பாக வைகுண்ட ஏகாதசி நாட்களில் தாய், தந்தைக்கு நினைவுநாள் (சிரார்த்தம்) வந்தால் அன்று நடத்தாமல் மறு நாள் துவாதசி அன்று நடத்தவேண்டும்.
ஏகாதசி அன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலிசெய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிக கீழான நரகத்திற்குசெல்வான்.
ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்துவிட வேண்டும்.
வைகுண்ட ஏகாதசி அன்றுதான், அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ணபரமாத்மா. எனவே இந்த நாளை 'கீதா ஜயந்தி' என கொண்டாடுகின்றனர். ஆகவே பகவத்கீதை தோன்றிய நாளான ஏகாதசியை மறக்காமல் கடைபிடித்தால் பரமனின் திருவடியை அடையலாம்.
நன்றி: ஸ்வாமி ஓம்கார்.
No comments:
Post a Comment