Contact Us

Name

Email *

Message *

Thursday, 1 August 2013

"தெய்வத்தின் குரல்" அமரர் திரு ரா.கணபதி

அப்பா சொல்லைத் தட்டமுடியாமல் ஓரிக்கைக்கு வந்தார் கணபதி. அங்கே பெரியவா இருந்த சின்ன அறையில் வெளிச்சம் கூட இல்லை. அவரும் ஏதோ காஷாயம் சுற்றிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். கணபதிக்கு அங்கே எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லை. என்ன இவர்... கோயில் வாசலில் இருக்கும் ஆண்டியைவிட சாதாரணமா இருக்காரே என்ற எண்ணம்!

அறைக்குள் நுழைந்தது முதல், வைத்த கண் எடுக்காமல் கணபதியைப் பார்த்துக்கொண்டிருந்த மகா பெரியவா, சிறிது நேரம் கழித்துப் 'போகலாம்’ என்று உத்தரவு கொடுத் ததும்தான் 'அப்பாடா’ என்றிருந்தது கணபதிக்கு.

இருந்தாலும், வீடு திரும்பிய பின்னரும் கணபதியின் மனசு பூராவும் பெரியவா நினைப்பே சுழன்று சுழன்று வந்தது. எங்கே திரும்பினாலும் பெரியவா இருக்கிற மாதிரி ஒரு பிரமை! 'பெரியவா என்னைத் தடுத்தாட்கொண்டு இருக்கார்னு புரிஞ்சுது. அதன் பிறகு என் வாழ்க்கையே திசை திரும்பிடுச்சு!’ என்று கூறியிருக்கிறார் கணபதி. அதன் பிறகு, 'கல்கி’ பத்திரிகையுடன் தொடர்பு ஏற்பட்டு, சதாசிவம், எம்.எஸ் தம்பதியின் கருணை வட்டத்தில் வந்து விட்டார். சில காலம் கழித்து, மடத்துக்கு மீண்டும் அறிமுகமாகி, பெரியவா சொல்வதைக் குறிப்பு எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

பெரியவா ஓரிடத்தில் சொன்ன சமாசாரத்தை இன்னோர் இடத்தில் தொடர்வார். பெரியவா பேச்சில் சயின்ஸ் இருக்கும்; வேதம் இருக்கும். கணபதி எல்லாவற்றையும் ஒன்று விடாமல் குறித்துக்கொள்வார். வேத வியாசருக்கு விநாயகர் அமைந்த மாதிரி, மகா பெரியவாளுக்கு ரா.கணபதி கிடைத்தார் னுதான் சொல்லணும். ஆசார நியம நிஷ்டை, தபஸ் எல்லாமே கணபதிக்குப் பழகிப் போச்சு. நைஷ்டிக பிரம்மசாரி. ராமகிருஷ்ண மடத்து 'அண்ணா’தான் அவருக்கு மந்திர குரு; உபதேசம் செய்து வைத்தவர்.

கணபதி அம்பத்தூரில் தங்கியிருந்த காலத்தில் அவர் அம்பாள் பூஜை செய்வதை பார்க்கணுமே... அவ்வளவு சிலிர்ப்பா இருக்கும். கேரள நம்பூதிரி ஒருவர் இந்த அம்பாள் விக்கிரகத்தைத் தலையிலேயே சுமந்துகொண்டு வந்து, சிதம்பரத்தில் இருந்த இவரது வீட்டில் சேர்ப்பித்தாராம். கேட்டதற்கு, 'இங்கேதான் கொடுக்கணும்னு அம்பாள் சொல்லிட்டா’ என்றாராம்.

கொஞ்ச காலம் புட்டபர்த்தியில் தங்கலாம் என்று அங்கே போனார் கணபதி. ஆனால், ஸ்ரீசாயிபாபா இவரைக் கூப்பிட்டு, 'தெய்வத்தின் குரலை’ எழுதுவதே உங்களின் பிறவிப் பணி. நீங்கள் தொகுக்கும் 'தெய்வத்தின் குரல்’ இந்து மதத்துக்கும் சனாதன தர்மத்துக்கும் பலமாக - உபநிஷத்துக்குச் சமானமாக இருக்கப் போகிறது’ என்று அருளினாராம்.

மகா பெரியவாளை ஸ்ரீராமர் என்றுதான் கணபதி சொல்வார். பெரியவாளுடைய நூற்றாண்டு விழாவின் போது, கணபதியை கௌரவம் பண்ணி சன்மானம் கொடுக்க... அதை அப்படியே ஓரிக்கை கோயிலுக்குக் கொடுத்துவிட்டார் கணபதி.

ஒரு சந்தர்ப்பத்தில், பெரியவா சரிதத்தைக் 'கல்கி’யில் எழுதத் தொடங்கினார். இரண்டு வாரம்தான் வந்திருக்கும். பெரியவா கணபதியைக் கூப்பிட்டனுப்பி, 'போறும் நிறுத்திடு’ன்னு சொல்லிட்டார். 'அதுக்குப் பதிலா, மடத்திலே எனக்காக எத்தனையோ பேர் இரவும் பகலும் உழைக்கறவா இருக்கா. அவாளைப் பத்தி எழுது!’ன்னார். 'அவர்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே’ என கணபதி தயங்கவும், 'தெரிஞ்சதை எழுது; தெரியாததை நான் சொல்றேன். 1907-ல் பைங்காநாடு கணபதி சாஸ்திரி எனக்கு வித்யா குருவா இருந்திருக்கார். அவரைப் பற்றி எழுது. பெரிய புராணம் மாதிரி, இதைத் திருத்தொண்டர் புராணம்னு எழுது’ என்று சொன்னாராம் பெரியவா. ஆனால், கடைசியில், மடத்தைச் சேர்ந்த ஏ.குப்புசாமி ஐயர் என்பவர்தான் அதை எழுதினார்.

'தெய்வத்தின் குரலை’ நான் உபன்யாசம் செய்வது இருக்கட்டும்... அதைப் படித்தவர்கள் யாரேனும் வாழ்க்கையில் சிறிதேனும் தங்களை மாற்றிக்கொண்டு இருக்கிறார்களா என்பதை அறிய, நானும் நண்பர் சிவராமனும் போகிற இடங்களில் எல்லாம் கவனித்துப் பதிவு செய்வது வழக்கம். அப்படியான சம்பவங்கள் நிறைய! 'தெய்வத்தின் குரல்’ ஏழு பாகங்கள் வெளியாகி இருக்கு. ஏழாவது வால்யூமை பெரியவா பார்க்கலை. கணபதி, இன்னும் இரண்டு வால்யூம்களுக்கு விஷயம் வைத்திருந்தார். 'அதையெல்லாம் எப்போது எழுதப் போகிறீர்கள்?’ என்று கேட்டபோது, கணபதி என்ன சொன்னார் தெரியுமா? 'என் புத்தியில் இருந்து எழுத வெச்ச பேய் மலை ஏறிடுத்து. இனிமே என்னால எழுத முடியாது!’ என்றார் தமாஷாக. மகா பெரியவா மாதிரியே கணபதிக்கும் அசாத்திய ஞாபக சக்தி. பத்து வருஷத்துக்கு முந்தி சந்தித்தவரைக்கூட, நினைவில் வைத்து விசாரிப்பார்.

ரா.கணபதி போதேந்திராள் சரிதத்தையும் 'காம கோடி ராம கோடி’ எனும் தலைப்பில் எழுதி வெளியிட்டிருக்கார். போதேந்திராள் 59-வது ஆசார்ய பீடம்; அவர் கோபி சந்தனம் இட்டுக் கொண்டிப்பார் எனப் புத்தகத்தில் எழுதியிருந்தார் கணபதி. 'அது தப்பு; திருத்தணும்!’ என்றாராம் பெரியவா. அத்துடன், 'விபூதி, ருத்ராட்சம் தவிர வேறெதுவும் அணிவதில்லை என்ற மடத்து சம்பிரதாயத்தை அவர்கள் (போதேந்திராள்) ரட்சித்துக் கொடுத்தார்கள். அதை ஜனங்க தெரிஞ்சுக்கணும்’ என்றும் அறிவுறுத்தினாராம்.

ஆதிசங்கரர் குறித்த 'ஜெயஜெய சங்கர’, ஸ்ரீரமணரைப் பற்றிய 'ரமணாயனம்’, மீராபாயின் வரலாற்றைச் சொல்லும் 'காற்றினிலே வரும் கீதம்’, பாபாவின் சரிதம் சொல்லும் 'ஸ்வாமி’, ராமகிருஷ்ண பரமஹம்சர்- விவேகானந்தர்- சாரதாமணி அம்மையார் பற்றி 'அறிவுக்கனலே, அருட் புனலே’ ஆகிய அற்புதமான நூல்களும் ரா.கணபதியின் படைப்புகளே! எனினும், 'தெய்வத்தின் குரல்’ ஒன்றுக்காகவே தமிழுலகமும் ஆத்திக உலகும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது'' - நெகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் கணேச சர்மா.

'ஒருமுறை நானும் பால்யூவும் ரா.கணபதி சாரும் பாபாவை தரிசிச்சுட்டு, புட்டபர்த்தியில் இருந்து ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தோம். மாலை நேரம் ஆனதும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார் கணபதி சார். நெற்றி நிறைய விபூதியுடன் அவரைப் பார்த்தபோது ஆதிசங்கரர் மாதிரி இருந்தது.

வழியில் ஓரிடத்தில் பயங்கரச் சத்தம். அசம்பாவிதம் எதுவும் இல்லை என்றாலும், எல்லோரும் பயந்துபோனோம். ஆனால், கணபதி சார் கொஞ்சம்கூட அசையவில்லையே! அப்படியரு யோக நிஷ்டையில் இருந்தார். இப்போது நினைத்தாலும் சிலிர்க்க வைக்கும் ஆச்சரியம் அது!'' என்று நெகிழ்கிறார் ஓவியர் மணியம் செல்வன்.

அறிஞர் அண்ணாவின் அன்னையார் மறைந்த தருணம்... மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாராம் பேரறிஞர். அந்த வாரம் கல்கி இதழில் 'ஜெயஜெய சங்கர’ தொடரில்... ஆதிசங்கரரின் தாயார் ஆர்யாம்பாள் மரணம் அடைவது பற்றி உருகி எழுதியிருந்தார் கணபதி. 'அதில் தாயை இழந்த சோகத்தை சங்கரர் அனுபவித்த விதம் குறித்து கணபதி எழுதியிருந்த விதத்தைப் படித்து நானும் நெகிழ்ந்துவிட்டேன்’ என அறிஞர் அண்ணா, பாரதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் 'தன் வரலாறு’ நூலில் பதிவு செய்திருக்கிறார். ஆம்... அனைத்துத் தரப்பினரையும் அசைத்துப் பார்க்கும் எழுத்து நடைக்குச் சொந்தக்காரர் ரா.கணபதி.

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.



நன்றி: https://www.facebook.com/srikanchikamakshi.kamakshi

No comments:

Post a Comment